திங்கள், 23 ஜனவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி பதினேழு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட தமிழகம் நோக்கி ஒரு பயணம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

POSITIONS ARE TEMPORARY; RANKS AND TITLES ARE LIMITED; BUT THE WAY YOU TREAT PEOPLE, WILL ALWAYS BE REMEMBERED.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி பதினேழு


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

பதினேழாம் விதி சொல்வது, "பிறரால் எளிதில் ஊகிக்க முடியாத அளவில், உன் செயல் முறைகளைச் சற்று ரகசியமாக வைத்துக்கொள்". 

 

மூல நூலில், இதை "KEEP OTHERS IN SUSPENDED TERROR: CULTIVATE AN AIR OF UNPREDICTABILITY" என்கிறார் எழுத்தாளர். 

 

"சில மனிதர்களிடம் மட்டும் ஏன் இந்த அதீத கவர்ச்சி இருக்கிறது?" என்று புரியாமல் நாம் குழப்பத்தில் ஆழ்வதுண்டு. 

 

அத்தகைய கவர்ச்சிக்குப் பின்னால் உள்ள எளிய இரகசியத்தையே இவ்விதி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

 

எவ்வளவு திறமைசாலி ஆனாலும், அவரது நடவடிக்கைகள் எளிதில் ஊகிக்கக்கூடியதாக இருக்குமானால், அவர்கள் மீதான மதிப்பும் ஈர்ப்பும் காலப்போக்கில் மெள்ள மெள்ளக் குறைவதையே காணலாம். 

 

அதனால்தான் சில தலைவர்கள், பிறரை ஆச்சரியப்படுத்தும் வண்ணம், சில விவாதத்தைத் தூண்டக்கூடிய வார்த்தைகளை அவ்வப்போது வெளியிடுவதையோ, சற்று விசித்திரமாக நடந்துகொள்வதையோ பார்க்க முடியும். 

 

"இவ்விதி, படிப்பதற்குச் சுவாரசியமாக இருக்கின்ற போதிலும், நடைமுறையில் நம் மீதான நம்பகத்தன்மையையும் காத்துக்கொண்டே எப்படி ஊகத்திற்கு அப்பாலும் செயல்பட இயலும்?" என்னும் கேள்விக்கான விடையை பின்வரும் உதாரணத்தால் அறியலாமா? 

 

சமீபத்தில் ஆசியக் கோப்பையை சிறப்பாக வென்ற இலங்கை கிரிக்கெட் அணி, 2008 ஆசியக் கோப்பையில் செய்த தந்திரம், இவ்விதிக்கு மிகவும் பொருத்தமானது. 

 

ஆரம்பப் போட்டிகளில், இந்திய அணியே மிக வலுவானதாகக் கருதப்பட்டதோடு, அனைத்து அணிகளையும் எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுவிட்டது. 

 

இறுதியாட்டத்தில் இலங்கை அணி, இதுவரை இந்தியா பார்க்காத அஜந்தா மெண்டிஸ் என்னும் புதுமுக சுழற்பந்து வீச்சாளரைக் களமிறக்கியது. 

 

முதல் ஒன்பது ஓவர்களில் இலங்கையை நாலா புறமும் சிதரடித்த இந்திய அணி, பத்தாவது ஓவரை முதன்முறையாக வீச வந்த மெண்டிஸை மிக அலட்சியமாக எதிர்கொண்டது. 

 

அந்த ஓவரிலேயே இந்திய மட்டைவீச்சு வரிசையின் முதுகெலும்பையே உடைத்ததோடு, ஆட்ட முடிவில் ஆறு முக்கிய இந்திய விக்கெட்களை சாய்த்து பெரும் அதிர்ச்சியை அளித்தார் மெண்டிஸ். 

 

அவரை அந்த ஆசியக் கோப்பையின் ஆரம்ப ஆட்டங்களிலேயே களம் இறக்கியிருந்தால், இந்திய அணி முன்பே சுதாரித்திருக்கும் என அறிந்தே இலங்கை இத்தகைய உத்தியைக் கையாண்டது. 

 

அவர் பந்துவீச்சின் மற்மங்களை, அவர் விரல் அசைவுகளிலிருந்தே ஊகிக்க இந்திய அணிக்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் பிடித்தன. 

 

மட்டை வீச்சாளர்களில் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், தனக்கு வரும் பந்துகளை எதிர்கொள்ள குறைந்தது மூன்று வழிகளை வைத்திருப்பார் எனவும் சொல்லப்படுவதுண்டு. 

 

இதுபோல, பலவகைப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் கையாளப்படும் விசித்திரமான தந்திரங்களால், ரசிகர்கள் கவரப்படும் சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம். 

 

எனவே, நமக்கான பணிகளை செய்து முடிக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளைப் பயின்று வைத்திருத்தலே, சவாலான சூழல்களில் மிகவும் பயனளிக்கும். 

 

உதாரணமாக, வலக்கையால் எழுதுபவர், ஓய்வு நேரத்தில் இடக்கையாலும் எழுதிப் பழகுதல் போன்ற மாற்றுவகைப் பயிற்சிகள், இவ்விதிப்படியான ஆற்றல் மிக்கவராக நம்மை மாற்றிவிடக் கூடும். 

 

விஞ்ஞானம் எவ்வளவு தூரம் வளர்ந்தாலும், கணிக்க இயலாத மாபெரும் கவர்ச்சிமிகு சக்தியாகத் திகழ்வது இயற்கையே. 

 

சமீபத்தில் சீனா, தன் நாட்டில் நிலவிய பஞ்சத்தைக் கையாள, ஐக்கிய அமீரகம் கையாளும் "கிளௌட் சீடிங்" என்னும் தொழில்நுட்பம் மூலம், அண்டை நாடான பாக்கிஸ்தானில் பெரும் வெள்ளத்தை விளைவித்துக்கொண்டிருந்த மேகத்தை இழுத்து மழை பொழியச் செய்தது. 

அதன் எதிர் விளைவாக, அவர்கள் எதிர்பாராத அளவு பெரு மழை பெய்ததோடு, கொடும் சூறாவளியையும் எதிர்கொள்ள நேர்ந்தது. 

 

இயற்கையின் இத்தகைய மர்ம விளையாட்டுகளைப் புரிந்துகொள்ள, இன்றைய தகவல் உலகம், எந்திரக் கற்றல் (Machine Learning) நுட்பத்தால் பெரும் தகவல் குவியலை அலசிக்கொண்டிருக்கிறது. 

 

தகவல்கள் பெருகப் பெருக, நாளடைவில் இயற்கை குறித்த முழு இரகசியங்களும் நம் கைக்குள் வந்துவிடவும் கூடும். 

 

நாமும் எந்திரக் கற்றல் தொழில்நுட்பம் போல, தொடர்ந்து சுற்றி நடப்பனவற்றைக் கவனத்தில் கொண்டு, மக்களின் தேவைகளுக்கேற்ப  நம்மை மேம்படுத்திக்கொள்வதே, இவ்விதி கூறும் செய்தியாகும். 

 

இங்கனம் செயல்படுகையில், நம்மை அறியாமல் செய்யக்கூடிய ஒரு தவற்றைக் குறித்தும், அதைத் தவிர்க்கும் வழிவகைகளையும் அடுத்த விதியில் சுவைக்கலாமா? 

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

11 கருத்துகள்:

  1. இது மாதிரி விதிகள் கத்தி மேல் நடப்பது மாதிரி.  இதற்கு முற்றிலும் மாறான ஒரு விதியை இவரே பின்னால் சேர்த்திருந்தால் ஆச்சர்யப்படமாட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கத்திமேல் நடப்பது போன்ற சவால்களே வாழ்வின் சுவாரசியத்தைக் கூட்டுபவை ஐய்யா.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
  3. ஒரு போட்டி என்று வந்தால் இந்த விதி மிக முக்கியமான ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி பத்மநாபன் சார்.

      நீக்கு
  4. உறவுகளுக்குள் என்றால் இதைத்தான் நம்ம பெரியவங்க, யாருக்கும் சொல்லாத் கண்ணு பட்டுரும்னு சொன்னாங்களோ!!! ஹாஹாஹாஹாஹா

    உறவுகளுக்குள் இது சில சமயம் பொருந்தும், சில சமயம் சில பிரச்சனைகளில் கொண்டுவிடும்.

    ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் கிரிக்கெட் போட்டிகள் போல் போட்டிகளுக்கு மிகவும் பயன்படும்.

    //விஞ்ஞானம் எவ்வளவு தூரம் வளர்ந்தாலும், கணிக்க இயலாத மாபெரும் கவர்ச்சிமிகு சக்தியாகத் திகழ்வது இயற்கையே. //

    கண்டிப்பாக...என்னதான் க்ளவுட் சீட்டிங்க் என்று வந்தாலும் இயற்கையை வெல்ல முடியுமா என்பது என் கேள்வி.

    நூலாசிரியர் கொடுக்கும் ஒவ்வொரு விதியையும் தனித்தனியாகப் பார்த்தால் உறவுகளுக்குள், வெளியுலகம் என்று பொருந்துமா பொருந்தாதா என்று விவாதிக்கத் தோன்றும். ஆனால் எல்லா விதிகளுமே இடம் ஏவல் பொருள் பார்த்து Lateral thinking பயன்படுத்தி யோசித்தால் பயன்படுத்த முடியும் என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....