செவ்வாய், 24 ஜனவரி, 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி இருபத்தி ஒன்று - அயோத்யா ஜி - ஜானகி மஹல்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

DON'T JUDGE EACH DAY BY THE HARVEST YOU REAP BUT BY THE SEEDS THAT YOU PLANT. - ROBERT LOUIS STEVENSON

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.  

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.  

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட். 

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு. 

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட். 

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்

 

பகுதி இருபது - அயோத்யா ஜி - தசரத் மஹல்



ஜானகி மஹல் உள்ளே…

 

அயோத்யாஜி நகரில் சரயு நதிக்கரை நோக்கிச் செல்லும் பிரதான சாலையில் வலப்புறம் ஒரு சந்தில் இருக்கிறது ஜானகி மஹல் எனும் இடம்.  பிரதான சாலையில் ஒரு பதாகை பார்த்ததும் சரி அதையும் பார்த்து விடுவோம் என்று அந்த சந்தில் திரும்பி நடந்தோம். சற்றே தொலைவு அந்த குறுகிய சந்தில், உலவும் மாடுகளைக் கடந்து நடந்த பிறகு வலப்பக்கத்தில் பெரிய பதாகை - ஜானகி மஹல் என்று அறிவிப்பைத் தாங்கி இருந்தது.  உள்ளே நுழைந்தோம்.  அழகான இடம் - ஓர் கோவிலுக்கான சூழல் சிறப்பாக இருந்தது.  நாள் முழுவதும் ராம நாமம் ஒலிக்கும் இடம்.  கூடவே இராம காதை குறித்த சொற்பொழிவுகள் அவ்வப்போது நடக்கும் எனத் தெரிகிறது. சொற்பொழிவு நடத்த ஒரு விற்பன்னர் வரும் சமயத்தில் குழுவாக வந்து, ஒரு வாரம், பத்து நாட்கள் என இங்கே தங்கி கோவில்களில் தரிசனம் செய்வதோடு  சொற்பொழிவுகளும் கேட்கலாம்.  ஒரு வாரம் நடக்கும் சொற்பொழிவு சப்தாஹம் என்று சொல்வதுண்டு.  இப்படி நிறைய சத்விஷயங்கள் நடந்தபடியே இருக்கின்றன இந்த இடத்தில்.



ஜானகி மஹல் பதாகை…

 

சின்னதாக கோவிலும் உண்டு.  அங்கே ராமர் குழந்தையாக இருக்கிறார். ராம் லல்லா - என்று அன்புடன் அழைக்கப்படும் இராமருக்கு தனி கோவில் இருப்பதால் அந்த கோவிலில், குழந்தை இராமர் விளையாட நிறைய பொம்மைகள் வைத்திருக்கிறார்கள். நம் வீடுகளில் குழந்தைகள் இருந்தால் என்னென்ன பொம்மைகள் இருக்குமோ அத்தனையும் அங்கே இருக்கிறது - பொம்மை கார் உட்பட! இறைவனை நாம் நினைத்தபடியெல்லாம் கொண்டாடுவது சிலருக்கு மட்டுமே கைவந்த கலை. அப்படியான விஷயம் இங்கே இந்த இராமர் கோவிலிலும் மதுரா, விருந்தாவன் போன்ற இடங்களில் கிருஷ்ணர் கோவில்களிலும் பார்க்க முடியும்.  நிறைய முறை இப்படியான விஷயங்களை பார்த்துப் பார்த்து ரசித்திருக்கிறேன்.  இறைவனை எல்லா வடிவங்களிலும் பூஜிக்க, சிந்திக்க முடிவது நல்ல விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது.  இப்படித்தான் பூஜை செய்ய வேண்டும் என விதிவகைகள் இருந்தாலும், நம்மில் ஒருவராக, நம் குழந்தையாக பாவித்து அவனை கொஞ்சுவது என்பது அதீத பக்தி என்றே தோன்றுகிறது. 

   

இங்கே இன்னும் ஒரு விஷயமும் சொல்ல வேண்டும். அயோத்யா நகரில் ஒரு நாளாவது தங்கி அங்கே ராம் ஜன்மபூமி, ஹனுமான் Gகடி, சரயு நதிக்கரையில் ஆரத்தி போன்றவற்றை பார்க்க வேண்டும் - ஒவ்வொரு இடமும் நின்று நிதானித்து பார்க்க வேண்டிய இடங்கள் என்பதால் ஓரு இரவு மட்டுமாவது அயோத்யா நகரில் தங்குவது நல்லது என்பதால், அது குறித்த ஒரு தகவலை இங்கே சொல்ல நினைத்தேன்.  அது மட்டுமல்லாது எந்த புண்ணிய க்ஷேத்திரம் சென்றாலும் ஒரு இரவு மட்டுமாவது அங்கே தங்குவது சிறப்பான விஷயம்.  அதிக நாட்கள் தங்குவது உங்கள் விருப்பம்.  சரி அயோத்யா நகரில் தங்குவதற்கு என்ன வசதிகள் இருக்கிறது? பார்க்கலாம்.

  

அயோத்யா ஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் இந்த நகரில் நிறைய தங்குமிடங்கள் மட்டுமல்லாது DHதரம்ஷாலாக்களும் உண்டு. அப்படி ஒரு DHதரம்ஷாலா, ஜானகி மஹல், வளாகத்தில் ஜானகி மஹல் ட்ரஸ்ட் நடத்தும் DHதரம்ஷாலா!  



ஜானகி மஹல் முகவரி மற்றும் தகவல் தொடர்புக்கு…

 

ஸ்ரீ ஜானகி மஹல் ட்ரஸ்ட் மூலமாக இந்தக் கோவிலும் DHதரம்ஷாலாவும் நிர்வகிக்கப்படுகின்றன.  தங்கும் இடங்களுக்கான கட்டணம் குறைவானது தான். AC அறைகள் என்றால் கட்டணம் சிறிது அதிகம்.  அயோத்யா நகர் செல்லும் யோசனை உங்களுக்கு இருந்தால் முன்கூட்டியே இவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ, அலைபேசி மூலமாகவோ பேசி நீங்கள் தங்குவதற்கான அறையை முன்பதிவு செய்து கொள்ளலாம்.  அவர்களது மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் போன்ற தகவல்கள் அடங்கிய அட்டையின் படம் சேர்த்திருக்கிறேன்.  இணையத்தில் யாத்ராதாம் எனும் தளம் வழியேயும் முன்பதிவு செய்து கொள்ள முடியும். அத்தளம் இங்கே! 

 

தங்குமிடம் மட்டும் சரியாக அமைந்து விட்டால் பயணத்தில், கோவில் உலாவில் தடங்கல்கள் வருவது குறைவாகவே இருக்கும்.  சரியான தங்குமிடம் அமையாவிட்டால் மொத்த பயணமும் உங்களுக்கு பிடிக்காமல் போய்விடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.  நாங்கள் சென்ற போது இந்த இடத்தில் தங்கவில்லை என்றாலும் இங்கே சென்று பார்த்து வந்தோம்.  தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த ராம நாமம் மனதுக்கு அமைதியையும் ஒரு வித நல்லுணர்வையும் தந்தது என்பதை மறுக்க இயலாது.  அயோத்யா ஜி செல்லும் வாய்ப்பிருந்தால் நிச்சயமாக இந்த தங்குமிடத்தினை நீங்கள் பயன்படுத்தலாம்!  அயோத்யா ஜி சென்று இராம ஜென்ம பூமி, தசரத் மஹல், ஹனுமன் கோவில் என பார்க்க வேண்டிய இடங்கள் அனைத்தையும் நீங்கள் பார்த்து வரலாம்!  விரைவில் அப்படி ஒரு பயணம் உங்களுக்கு அமையட்டும்.  

 

அயோத்யா ஜி குறித்த மேலும் பல தகவல்கள் வரும் பதிவுகளில் வரும். தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

10 கருத்துகள்:

  1. இறைவனை குழந்தையாக பார்க்கும் மனோபாவம் பக்குவம் வந்தவர்களுக்கே சாத்தியம்.  கிருஷ்ணஜெயந்தி கொண்டாடும்போது கிருஷ்ணனை நாம் குழந்தையாக எண்ணி படைத்து, வணங்கி  மகிழ்கிறோம். அயோத்யாஜி தகவல்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. மிக சிறப்பான இடம் ... எங்களின் போன பயணத்தில் அயோத்தியா செல்லும் திட்டம் இருந்து பிறகு மாற்றிவிட்டோம் ...ஆனால் கண்டிப்பாக செல்ல வேண்டும் அதுவும் சில நாட்கள் இருந்து சேவிக்க ஆசைப்படும் இடம் ... அந்த முகவரியையும் சேமித்துக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. மூன்று இரவுகள் தங்கணும். அதற்கான கால அவகாசம் குறைவு

    பதிலளிநீக்கு
  4. இறைவனை நாம் நினைத்தபடியெல்லாம் கொண்டாடுவது சிலருக்கு மட்டுமே கைவந்த கலை. அப்படியான விஷயம் இங்கே இந்த இராமர் கோவிலிலும் மதுரா, விருந்தாவன் போன்ற இடங்களில் கிருஷ்ணர் கோவில்களிலும் பார்க்க முடியும். நிறைய முறை இப்படியான விஷயங்களை பார்த்துப் பார்த்து ரசித்திருக்கிறேன். இறைவனை எல்லா வடிவங்களிலும் பூஜிக்க, சிந்திக்க முடிவது நல்ல விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது. //

    ஹைஃபைவ் ஜி...

    //இப்படித்தான் பூஜை செய்ய வேண்டும் என விதிவகைகள் இருந்தாலும், நம்மில் ஒருவராக, நம் குழந்தையாக பாவித்து அவனை கொஞ்சுவது என்பது அதீத பக்தி என்றே தோன்றுகிறது. //

    இந்தப் பக்குவம் வந்துவிட்டால் அந்து எந்தவிதிமுறைகளும் கிடையாதுதான் இல்லையா.

    ஆமாம் மதுரா விருந்தாவனில் பார்த்திருக்கிறேன்....ரொம்பப் பிடித்தது.
    அயோத்யா ஜி யில் ஒரு நாளேனும் தங்கி நிதானமாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் உண்டு. இன்னும் ஒரு முறை கூடச் சென்றதில்லை அங்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பொம்மை கார் உட்பட! //

    நம்ம பாட்டி எங்களுக்குச் சின்ன வயசுல சொல்லிக் கொடுத்தது, எந்த பொம்மையானாலும் காலால் உதைக்கக் கூடாது அடிக்கக் கூடாது உடைக்கக் கூடாது அதுலயும் உம்மாச்சி இருக்கார்னு....அதாவது பொம்மைகளையும் பத்திரமாக வைச்சுக்கணும் என்பதற்கு. அதுக்கும் மரியாதை கொடுக்கணும்னு. இதில் ஒரு தத்துவமும் இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த ராம நாமம் மனதுக்கு அமைதியையும் ஒரு வித நல்லுணர்வையும் தந்தது என்பதை மறுக்க இயலாது. அயோத்யா ஜி செல்லும் வாய்ப்பிருந்தால் நிச்சயமாக இந்த தங்குமிடத்தினை நீங்கள் பயன்படுத்தலாம்!//

    பார்த்து வைத்துக் கொண்டாயிற்று.

    வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அனைத்து விவரங்களும் அருமை சார்.
    விரைவில் செல்லும் அவா ஏர்ப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  8. அஜோத்தியாஜி தகவல்கள் பலருக்கும் பயன்படும்.

    பயணம் எங்களுக்கு கிட்டுமா என்பது சந்தேகமே.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....