வெள்ளி, 27 மே, 2022

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம் - பகுதி இரண்டு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

பயணம் இன்றி வாழ்க்கையும் இல்லை; பணம் இன்றி உறவுகளும் இல்லை… 

 

******

நதிக்கரை நகரங்கள் - பகுதி ஒன்று இங்கே.புது தில்லி இரயில் நிலையம் பதாகை 


இரயில் நிலையத்தின் வாயிலில் மாதிரி இன்ஜின்

 

புது தில்லி இரயில் நிலையத்திலிருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் லக்னோ மெயில் (12230) Gகாஜியாபாத், ஹாபூர், மொராதாபாத், ராம்பூர், பரேலி, ஷாஜஹான்பூர் ஆகிய ஆறு நிறுத்தங்களில் நின்றபிறகு தொடர்ந்து பயணித்து, அதிகாலை 04.43 மணிக்கு ஹர்தோய் நகரை வந்தடையும்.  அங்கே இரண்டே இரண்டு நிமிடங்கள் மட்டுமே இந்த இரயில் நிற்கும் என்பதால் கவனமாக இறங்குவது நல்லது!  நடுவில் இறங்கும் சக பயணிகள் பலரும் இறங்கும்போது ஏற்படுத்தும் சப்தங்கள் உங்களை தூங்க விடாது என்பது உங்களுக்கும் புரிந்திருக்கும்.  நாங்கள் பயணித்த போதும் எங்களால் நன்றாக உறங்க இயலவில்லை.  ஆங்கிலத்தில் சொல்வது என்றால், Disturbed Sleep தான். நான்கு பெரியவர்கள், மூன்று குழந்தைகள் என அனைவரும் பேசிக் கொண்டு இருந்ததோடு, எங்களுக்குக் கிடைத்த இருக்கைகள் வேறு அந்தப் பெட்டியின் கடைசி இருக்கைகள் என்பதால் தொடர்ந்து கதவை திறப்பதும் மூடுவதுமாக இருந்தார்கள்.  அதனால் சரியான உறக்கம் இல்லை.  

 

அதிகாலை 04.43 மணிக்கு தான் நாங்கள் இறங்க வேண்டிய இரயில் நிலையமான ஹர்தோய் வரும் என்றாலும் காலை நான்கு மணிக்கே எழுந்து வேலைகளை முடித்துக் கொண்டு தயாராக இருந்தோம்.   ஹர்தோய் இரயில் நிலையத்திலிருந்து நைமிசாரண்யம் செல்ல எல்லா நேரங்களிலும் பேருந்து வசதிகள் இல்லை.  இரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் (ஹிந்தியில் Bus Adda) சென்று அங்கே காத்திருந்து பேருந்து வழி நைமிசாரண்யம் சென்று சேரலாம்.  இல்லை என்றால் இரயில் நிலையம் வாயிலில் காத்திருக்கும் ஆட்டோ அல்லது கார் மூலம் நீங்கள் பயணிக்கலாம் என்று ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தோம்.  இங்கே உங்களுக்கு பயனுள்ள ஒரு செய்தியும் சொல்கிறேன்.  இது போன்ற இடங்களுக்கு பயணிக்க, அதுவும், தகுந்த துணையுடன் - ஹிந்தி தெரிந்த தமிழ் நபர் ஒருவருடன் பயணிக்க விருப்பம் இருந்தால், எனது நண்பர் - திரு சாய்ராம் என்பவரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.  பல வருடங்களாக பயண ஏற்பாடுகள் செய்து வருகிறார் அவர்.  வடக்கில் எந்த பயணம் என்றாலும் - குறிப்பாக ஆன்மீக பயணம் என்றால் நிச்சயம் அவரை தொடர்பு கொள்ளலாம்.  அவரை தொடர்பு கொள்ள அலைபேசி எண் - 0-9868260622.  


ஆட்டோவிற்கு டீசல் போட்ட போது…


இந்தப் பயணம் குறித்து முடிவு செய்ததும் நண்பர் சாய்ராம் அவர்களுடன் பேசியபோது, அன்று கூட அவர் நைமிசாரண்யத்தில் தான் இருந்தார்.  இரயில் நிலையத்திலிருந்து எப்படி வருவது, எங்கே தங்கலாம் என்பது போன்ற பல தகவல்களை எங்களுக்குத் தந்தார். அவர் சொன்னபடி, நாங்கள் இரயில் நிலையத்தில் இறங்கியதும் வெளியே வந்து பார்க்க ஒரு ஆட்டோ தயாராக இருந்தது. ஒரு கார் கூட இருந்தது.   ஆனாலும், ஆட்டோ ஓட்டியிடம் பேச, அங்கிருந்து நைமிசாரண்யம் வரை (கிட்டத்தட்ட 44 கிலோ மீட்டர்) செல்ல 800 ரூபாய் கேட்டார்.  நண்பர் சாய்ராம் சொன்னதை விட அதிகம் என்பதால், சரியான கட்டணம் சொல்லுங்கள் என்று கேட்க, அவரிடம் பேசி, கடைசியாக 600 ரூபாய் கடடணத்திற்கு எங்களை அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்டார்.  இங்கே ஒரு விஷயத்தினை தெளிவு படுத்தவேண்டும் - இந்த அளவு தொலைவு நம் ஊரில் ஆட்டோவில் பயணிக்க வேண்டும் என்றால் நிச்சயமாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள் - அப்படியே ஒப்புக் கொண்டாலும் குறைந்தது 1500 ரூபாய் கேட்கலாம்! இன்னும் அதிகம் கூட கேட்கலாம்!   

 

காலை நேரம் இப்படி நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும் என்பது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும் - இப்படியான சவாரிகள் அங்கே அடிக்கடி கிடைக்கும் என்பதால் தேவையான அளவு டீசல் போட்டு வைத்திருக்கலாம்.  ஆனால் அந்த ஓட்டுநர் காலை நேரம் ஹர்தோய் நகரின் ஒவ்வொரு இடமாக சுற்றி பெட்ரோல் நிலையம் எங்கே திறந்திருக்கும் என்று தேடிக்  கொண்டிருந்தார்.  நான்கு ஐந்து பெட்ரோல் நிலையங்கள் மூடி இருக்க, ஐந்தாவது இடத்தில் தான் அவரால் வண்டிக்கு டீசல் பிடிக்க முடிந்தது.  அவரிடம் “ஏண்டாப்பா, முதலிலேயே டீசல் போட்டுக் கொள்ள வேண்டியது தானே?” என்று கேட்டால் ஏதேதோ காரணம் சொல்லிக் கொண்டு இருந்தார்.  எல்லா ஓட்டுனர்கள் போல, டீசல் பணம் சவாரியிடமே கேட்பதை இவரும் தொடர்ந்தார்.  பாதி பணம் (300 ரூபாய்க்கு) டீசல் போட்டுக் கொண்ட பிறகு நைமிசாரண்யம் செல்லும் பாதையில் எங்கள் பயணம் தொடர்ந்தது.  இதற்கே அரை மணி நேரம் வீணாகி விட்டது.  இல்லை என்றால் பாதி தூரம் சென்றிருக்கலாம்.  

   

ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி என்பதால் கோடை ஆரம்பித்து குளிர் எல்லாம் முடிந்து இருக்கும் என்பதால் கோடைக்கான உடைகளை அணிந்தே சென்றிருந்தோம்.  ஆனால் அதிகாலை நேரம், அதுவும் சென்ற சாலையின் இரு புறமும் வெட்டவெளி மட்டுமல்லாது கோதுமை விளையும் வயல்கள் என்பதால் நல்ல குளிர் காற்று அடித்துக் கொண்டிருந்தது.  எங்களால் தாங்கிக் கொள்ள முடிந்தாலும் நண்பரின் இல்லத்தரசியால் அந்தக் குளிர்க் காற்றை தாங்கிக் கொள்ள முடியவில்லை.  பையிலிருந்து நண்பரின் இரண்டு வேஷ்டிகளை எடுத்து போர்வை போல போற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.  அந்த அளவு குளிர் காற்று.  என்ன தான் அவர்களும் தில்லியில் இருந்து குளிர் பழகியவர்களாக இருந்தாலும் காலை நேர காற்றும், சில்லென்ற தட்பவெப்பமும் அவருக்கு தாங்கவில்லை.  அந்த சமயத்தில் காரில் சென்றிக்கலாமோ என்ற யோசனை எனக்கு வந்தது. 

 

தொடர்ந்து பயணித்து நாங்கள் நீம்சர்/மிஸ்ரிக் என்றெல்லாம் அழைக்கப்படும் நைமிசாரண்யம் சென்றடைந்தோம்.  அங்கே கிடைத்த அனுபவங்களென்ன, எங்கே தங்கினோம், எங்கெல்லாம் பயணித்தோம் போன்ற விவரங்களை தொடர்ந்து வரும் பகுதிகளில் எழுதுகிறேன்.  அடுத்த பகுதியில் சந்திக்கலாம்.  தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….

 

32 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நல்லதே நடக்கட்டும். தங்களது வருகைக்கு நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 2. அதிகாலையில் நைமிசாரண்யம்..

  ஹரி ஓம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிகாலையில் நைமிசாரண்யம் - இனிதான அனுபவம் தான். தங்களது வருகைக்கும் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 3. உபயோகமான தகவல்களுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள்.  தொடர்கிறேன்.  44 கிலோமீட்டருக்கு 800 ரூபாயா...   என்ன சென்னை விலையாய் இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவல்கள் பயனுள்ளதாக அமைந்தால் மகிழ்ச்சியே. சென்னை விலை இன்னும் அதிகமாக இருக்கலாம் ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

   நீக்கு
 4. அருமையான வாசகம்.
  நல்ல தகவல்களுடன் பயணத் தொடர் ஆரம்பித்து விட்டது மகிழ்ச்சி.
  நானும் நினைத்தேன் தொலைவு அதிகம் காரில் சென்று இருக்கலாம். கார் ஜன்னலை வேண்டுமென்றால் மூடி கொள்ளலாம், திறந்து கொள்ளலாம், அவர்களுக்கு குளிர் தாங்கி இருக்கும். எல்லாம் அனுபவம் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. ஆட்டோவிற்கு பதில் காரில் சென்றிருக்கலாம் - உண்மை. பட்ட பிறகே புத்தி வந்தது! ஹாஹா. தங்களது வருகைக்கும் கருத்து பகிர்தலுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

   நீக்கு
 5. ஆஹா.. வித்தியாசமான ஆட்டோ பயணம். நிறைய விவரங்களோடு எழுதுங்கள். உபயோகமாக இருக்கும். நைமிசாரண்யத்தை ஓரளவு பார்த்துவிட்டேன் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன்.

  2008ல் முற்றிய கோதுமை வயல்கள் நடுவே மனைவியை நிற்கவைத்துப் படமெடுத்தது (மனதுக்குள் வயலில் கோதுமை நாகம் இருக்குமோ என்ற பயத்துடன்) நினைவுக்கு வருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னாது... கோதுமை நாகமா?... அப்படியும் ஒரு நாகம் இருக்கிறதா? சும்மா... தெரிந்துகொள்வதற்காக கேட்கிறேன்....

   நீக்கு
  2. கருநாகம் - கரியதாக இருக்கும். கோதுமை நாகம்-கோதுமை நிறத்தில் இருக்கும். இதனை நான் தாளவாடியில் இருந்தபோது (சாம்ராஜ்நகர் அருகில்) நிறைய தடவை பார்த்திருக்கிறேன் (அங்கெல்லாம் கோதுமை நாகம், மலைப்பாம்பு போன்றவற்றை சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்..மலைப் பகுதி என்பதால்). பொதுவாக வயல்களில் நல்லபாம்பு இருக்கும் (அதுவே இடையில் நீர் ஓடும் ஓடைகள் போன்று வயல்களிடையே இருக்கும் இடத்தில் தண்ணீர் பாம்புகள் இருக்கும்). அதனால் கோதுமை வயல்களிலும் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

   நீக்கு
  3. நெல்லைத் தமிழன் - கோதுமை நாகம் பற்றி விளக்கம் தந்ததற்கு நன்றி சார்...

   நீக்கு
  4. முடிந்த வரை விவரங்கள் தருவது எப்போதுமே வழக்கம். இந்தத் தொடரிலும் அப்படியே முயற்சி செய்கிறேன் நெல்லைத்தமிழன். கோதுமை வயலுக்குள் கோதுமை நாகம் - ஹாஹா… இருந்திருந்தால் எண்ணம் வந்ததே! கோதுமை என்ற பெயர் இருப்பதால் கோதுமை வயலில் இருக்குமா என்று தெரியவில்லை. உங்கள் நினைவுகள் நன்று! தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
  5. கோதுமை நாகம் என்று நானும் கேள்விப் பட்டதுண்டு நாஞ்சில் சிவா. கோப்ரா வகைகளில் ஒன்று என விக்கிபீடியா சொல்கிறது. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
  6. கோதுமை நாகம் குறித்த தகவல்களுக்கு நன்றி நெல்லைத்தமிழன். கோதுமை வயலில் இருக்குமா என்று தெரியவில்லை. தங்களது மீள் வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
  7. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நாஞ்சில் சிவா.

   நீக்கு
 6. பயணத்தில் ஆர்வம் கொண்ட என்போன்றோர்களுக்கு உதவும் விதமாக தங்கள் நண்பரின் அலைபேசி எண்களையெல்லாம் தந்து உதவியுள்ளீர்கள்... நன்றி சார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணம் செய்ய ஆசைப்படும் சிலருக்கேனும் இந்தத் தகவல்கள் பயனுள்ளதாக அமைந்தால் மகிழ்ச்சியே நாஞ்சில் சிவா. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 7. கைப்பேசி எண் பலருக்கும் உதவும்... அருமை... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவல்கள் பயனுள்ளதாக அமைந்தால் மகிழ்ச்சியே தனபாலன். தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 8. பயண அனுபவம் தொடரட்டும். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நாகேந்திர பாரதி.

   நீக்கு
 9. வெங்கட்ஜி ஹப்பா 44 கிமீ தூரம் ஆட்டோவில்!! ரொம்பவே வித்தியாசமான பயணம்!!! அது போல நண்பர் சாய்ராம் அவர்களின் எண்ணும் கொடுத்ததற்கு நன்றி

  நல்ல பயனுள்ள விவரங்கள், வெங்கட்ஜி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 44 கிலோமீட்டர் ஆட்டோ பயணம் - சற்றே அதிகம் தான்! ஹாஹா… இதற்கு முன்னரும் இப்படி பயணித்து இருக்கிறேன் கீதா ஜி. சிலருக்கேனும் இந்தத் தகவல்கள் பயனுள்ளதாக அமைந்தால் மகிழ்ச்சியே. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. பணம் இல்லையென்றால் பயணமும் இல்லை...

  பயணம் குறித்த பதிவு ஆரம்பத்திலேயே சுவாரஸ்யமாக உள்ளது. பலனுள்ள பல தகவல்களை தந்துள்ளீர்கள். நாற்பத்தி நான்கு கி. மீ தூரம் பயணம் ஆட்டோவில் கஸ்டமாக இருக்காதோ ? நீங்கள் கூறுவதை பார்க்கும் போது அங்குள்ள சாலைகளுக்கு ஏற்ப இது சகஜந்தான் போலும். காலை நேர குளிர் வேறு தங்கள் நண்பரின் மனைவியை பாதித்தது சற்று சிரமமாகத்தான் இருந்திருக்கும். மேலும் பயண விபரங்கள் அறிய உங்களுடன் பயணத்தில் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தகவல் பகிர்வுகள் சிலருக்கேனும் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி இராமசாமி ஐயா.

   நீக்கு
 12. நைமிசாரண்யம் பயணத்தில் தொடர்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணத்தில் நீங்களும் தொடர்ந்து வருவதில் மகிழ்ச்சி மாதேவி.

   நீக்கு
 13. பயனுள்ள தகவல்கள் நிறைந்த சுவாரசியம்மான பயணக்கட்டுறை. தொடர்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவல் பகிர்வு சிறப்பாக அமைந்தால் நல்லதே! தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கு மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....