அன்பின்
நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட நதிக்கரை நகரங்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
பிறந்து விட்டோம்
என்பதற்காக வாழாதீர்கள்; அது கடனாய் முடியும்; வாழ்வதற்காக பிறந்திருக்கிறோம்
என்று எண்ணுங்கள்… வாழ்வு இனிக்கும்.
******
R K CATERING,
திருவரங்கம் - இந்த வாரத்தின் உணவக அனுபவம்:
சமீபத்தில் ஒரு காணொளி
கண்டேன் - YOUTUBE-இல்! திருவரங்கம் வடக்கு
சித்திர வீதியில் இருக்கும் R K CATERING குறித்த காணொளி. திருவரங்கம் சென்றால் அங்கே சென்று உணவு
சுவைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். காணொளிகளில் அதுவும் YOUTUBE வெளியீடுகளில்
அறிமுகம் செய்யப்படும் உணவாகட்டும், உணவகமாகட்டும் அவர்கள் சொல்லும் அளவு
சிறப்பானதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல முறை இதை அனுபவத்தில் உணர்ந்து
இருக்கிறேன். இதை மீண்டும் ஒரு
முறை இந்த உணவகம் செல்லும் சமயத்தில் உணர்ந்தேன். காலை நேரம் என்பதால் இட்லி மற்றும் வடை
சொன்னேன். இலை வைத்து
பரிமாறினார்கள். ஆஹா ஓஹோ என்று
சொல்லும் அளவிற்கு நன்றாக இல்லை என்றாலும் பலருக்கு, அதுவும் தனியாக வீட்டில்
வசிக்கும் பல பெரியவர்களுக்கு இந்த உணவகம் நல்ல ஒரு வசதி. காலை ஆறு-ஆறரை மணிக்கே சாம்பார், ரசம்,
பொரியல், கூட்டு என அனைத்தும் தயாராகிவிடுகிறது இங்கே. வீட்டிற்கே கொண்டு சென்று கொடுத்து
விடுகிறார்கள் என்பதும் கூடுதல் வசதி. வாசலில் இன்றைய மெனு என்கிற பதாகை
மட்டுமே இருக்கிறது. கடையின் பெயர்
சொல்லும் பதாகை இல்லை. அலைபேசி மூலம்
முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டால் வீட்டிற்கு கொண்டு வந்து தந்து விடுவார்களாம். திருவரங்கம் வந்தால் சென்று
சாப்பிட்டுப் பாருங்களேன்.
******
பழைய நினைப்புடா
பேராண்டி: ”அபரஞ்சி
பொன்னும் ரங்கராட்டினமும்”
2013-ஆம் ஆண்டு இதே
நாளில் வெளியிட்ட பதிவு - ”அபரஞ்சி பொன்னும் ரங்கராட்டினமும்” - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
திருவரங்கத்திற்கும்
எனக்கும் சற்றே தொடர்பு இருப்பதால், ரங்கராட்டினம் புத்தகம் படிக்கும்போது என்னால்
அதிகமான ஈடுபாடுடன் படிக்க முடிந்தது. அதிலும் கதையில் வரும் பல இடங்களை கோவில்
செல்லும்போது பார்க்க முடிவதால் கதையை ஒன்றி படித்தேன். அரங்கனின்
சன்னதியிலிருந்து தாயார் சன்னதிக்கு வரும் வழியில் ”ஐந்து குழி மூணு வாசல்” என
ஒன்று உண்டு. ரங்கன் வருகிறானா என தனது ஐந்து விரல்களை தரையில் ஊன்றி ரங்கநாயகி
தாயார் பார்த்த இடம் இது எனச் சொன்னாலும் இதற்கு உண்மையான அர்த்தம் வேறு.
“பஞ்ச இந்திரியங்கள்
என்ற படுகுழிகளை அடக்கி, ‘சித், அசித், ஈஸ்வரன்’ என்கிற மூன்று தத்துவங்களைப்
புரிந்து கொண்டால், பரமனடி அடையலாம்” என்பதைக் குறிப்பது தான் இந்த ‘ஐந்து குழி
மூணு வாசல்! இந்த இடத்தின் வழியே கதாசிரியர், திருவரங்கம் கோவில் வரலாற்றில்
பின்னடைவான, இருண்ட காலம் வந்ததை விவரமாகச் சொல்கிறார்.
ஹொய்சாள மன்னர்கள்
ஆண்டு கொண்டிருந்த காலம். ஒரு சூரியகிரகணத்தின் போது சோமளாகிரி மலைத் தொடர்
பிளந்தது. அடுத்த நாள் பார்த்தால் மலையில் பிளவுகளுக்கிடையே பாளம் பாளமாய்
பொற்படிமங்கள் கதிரவனின் ஒளியில் தகதகவென மின்னிக்கொண்டிருந்தன. அத்தனையும்
அபரஞ்சிப் பொன். இந்த அபரஞ்சிப் பொன்னால் நாட்டுக்கு நல்லது நடக்கப் போகிறதா இல்லை
கெடுதல் நடக்குமா….. மேலும் படியுங்களேன்.
அபரஞ்சி பொன் கொண்டு
ஹொய்சாள மன்னனான வீரசோமேசன் தான் கட்டிக்கொண்டிருக்கும் “போசலேஷ்வரம்” சிவன்
கோவில் முழுவதையுமே பொன்னால் கட்டி திருவரங்கம் கோவிலை விட அதிக புகழ் பெற
வேண்டுமென ஆசைப்படுகிறார். அபரஞ்சி பொன் கிடைத்த விஷயம் பாண்டிய மன்னரான
சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்குத் தெரிந்தால் ஆபத்து என மறைக்கப் பார்க்கிறார்கள்
ஹொய்சாள மன்னர். ஆனாலும் பாண்டிய மன்னனுக்கு விஷயம் தெரிந்து அபரஞ்சி பொன்னை அடைய
போர் மூள்கிறது. ஹொய்சாள மன்னன் வீரசோமேசன் மாண்டு போகிறான். இது முதலாம் குழி.
முழு பதிவினையும் மேலே
கொடுத்திருக்கும் சுட்டி வழி படித்து ரசிக்கலாம்!
******
ராஜா காது கழுதைக் காது - உன்னைப் பார்த்த நேரம் :
தினம் தினம் வீட்டு
வாயிலுக்கே வந்து குப்பை கூடைகளை எடுத்துச் செல்லும் வண்டி மத்திய அரசாங்கத்தின்
திடடத்தின் கீழ், பல மாநிலங்களிலும் செயல்படுகிறது. வண்டிகளில் வந்து குப்பைகளை சேகரித்துச்
செல்லும் இந்த உழைப்பாளிகள் அனைவரும் போற்றத்தக்கவர்கள். அவர்களது வேலை கடினமானது
என்பதால் அவர்கள் தங்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. சமீபத்தில் அப்படி ஒரு பெண்
உழைப்பாளியைப் பார்த்தேன். வீட்டு வாசலில் வந்து
கூடைகளை வாங்கிக் கொண்டு வண்டியில் போடும் நேரம் பாடல்களை முணுமுணுத்துக்
கொண்டிருந்தார். ஒரு வீட்டு வாசலில்
நின்று வீட்டிலிருந்து வந்தவரை பார்த்ததும் அவர் பாடிய பாடல் - “உன்னைப்
பார்த்த நேரம் ஒரு பாட்டு ஒண்ணு பாடத் தோணும்!” அவரது மகிழ்ச்சி நிலைத்து,
நீடித்து இருக்கட்டும் என்ற பிரார்த்தனையுடன் நான் அங்கிருந்து நகர்ந்தேன்.
******
இந்த வாரத்தின் காணொளி -
பாரம்பரிய
ஊறுகாய் கடை :
ஜெய்பூர் நகரில்
இருக்கும் ஒரு பழமையான ஊறுகாய் கடை குறித்த ஒரு காணொளி பார்க்கக் கிடைத்தது. 50 வகை ஊறுகாய்கள், 10 வகை முரப்பா
(MURABBA) கிடைக்கும் இந்த கடையை நடத்துபவர்கள் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக இதே
தொழிலில் இருக்கிறார்களாம். இந்த மாதிரி கடைகளைத்
தேடித் தேடிச் சென்று சுவைக்கும் சில FOODIES இணையத்தில் இருக்கிறார்கள். காணொளி
பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது! :) ஊறுகாய் சுவைக்க யாருக்குத் தான்
பிடிக்காது! நீங்களும் பாருங்களேன்.
மேலே உள்ள காணொளி வழி
பார்க்க இயலவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்.
180 years old pickle shop in the town, jaipur food vlog,180
साल
पुरानी
अचार
की
दुकान।
******
இந்த வாரத்தின் ரசித்த
சிறுகதை - கொழும்பு
டீ :
சொல்வனம் தளத்தில்
இந்த வாரம் படித்து ரசித்த ஒரு சிறுகதை கொழும்பு டீ. காதல் தோல்வி அடைந்த ஒரு இளைஞனின் மனநிலையைச் சொல்லும்
சிறுகதை. விஜயலக்ஷ்மி என்பவர்
எழுதிய சிறுகதை. கதையில் கொழும்பு
நகருக்கும் பயணிக்கிறார்கள் என்பதை படித்த போது மனதில் ஒரு உற்சாகம்! பயணம் செய்கிறார்களே! :) சிறுகதையை
படித்துப் பாருங்களேன். உங்களுக்கும் இந்தச்
சிறுகதை பிடிக்கலாம்! கதையிலிருந்து சில வரிகள் இங்கே!
சந்தியாவிடம் பிடித்தது
ஒரு முறை கூட எங்களிடம் பெண்மைக்கான நளினங்கள் என்று வரையறுக்கப்பட்ட ( யார்
இவற்றை எல்லாம் வரையறுத்தார்களோ) நடத்தையை அவள் வெளிப்படுத்தியதே இல்லை என்பது
தான்.
சந்தியா தன்னை
வெளிப்படுத்திக்கொள்ளும் விதமே ” இங்க கோடு கிழிச்சிருக்கேன், நானா தாண்டுனாதான்
உண்டு” என்று ஒரு வித கம்பீரமும் தெளிவும் கொண்டதாக இருக்கும். கண்ணன் சாருடன்
கோவையின் பெருநிறுவனங்களுக்கு சென்று வருவது, அவர்களைக் கையாளும் விதம் எதிலும்
ஒரு தொழில்முறை நேர்த்தி இருக்கும்.
சிறந்த உரையாடல்களும்,
மிக சிறந்த வாக்குவாதங்களுமாக சைக்கிள் பயணங்களில் எங்கள் மூவரின் நட்பும்
ஓடிக்கொண்டிருந்தது.
******
இந்த வாரத்தின் ரசித்த
நிலைத்தகவல் - இலையுதிர்
காலம் :
******
இந்த வாரத்தின் காஃபி
வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து…
உணவகங்கள் யு டியூபில் சொல்லக்கூடிய அளவில் இல்லை என்பது எதிர்பார்க்கக் கூடியதே... ஒவொருவருக்கும் சுவை மாறுமே..
பதிலளிநீக்குஒருவருக்கு பிடித்த சுவை அடுத்தவருக்கு பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை தான். பதிவு குறித்த தங்கள் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி ஸ்ரீராம்.
நீக்குரங்கராட்டினம் மறுபடி எடுத்துக் படிக்கத் தோன்றுகிறது!
பதிலளிநீக்குஎங்கள் வீட்டுக்கு குப்பை எடுக்க வருபவர் வரும்நேரம் சில பழைய ஹிந்திப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தேன். அதை கூடவே முணுமுணுத்த அந்த பெண்மணி, பிடித்த பாடல் என்று சொல்லிச் சென்றது நினைவுக்கு வருகிறது.
ரங்கராட்டினம் மீண்டும் படிக்க ஆவல் எனக்கும்! பழைய ஹிந்தி பாடல் - இப்படி சிலராவது இருப்பதில் மகிழ்ச்சி! தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த தங்கள் கருத்துப் பகிர்வுக்கு உளங்கனிந்த நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅந்த வகை ஊறுகாய்களை சென்னை டிரேட் சென்டர் போன்ற இடங்களில் நடந்த கண்காட்சிகளில் பார்த்துமிருக்கிறேன், வாங்கியும் இருக்கிறேன். அதன் சுவை எனக்கு ஒத்துவரவில்லை!
பதிலளிநீக்குவட இந்திய ஊறுகாய்களில் சேர்க்கப்படும் வினிகர் சுவையும், கடுகு எண்ணெய் வாசமும் பலருக்கும் - குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு பிடிப்பதில்லை. தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த தங்கள் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி ஸ்ரீராம்.
நீக்குஇன்றைய தொகுப்பு அருமை..
பதிலளிநீக்குநலமே வாழ்க..
இன்றைய பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா. நல்லதே நடக்கட்டும்.
நீக்குவிளம்பரங்கள் ஒரு புறம் இருக்கட்டும்... சாப்பாடு தரமாக இருக்கின்றதா!..
பதிலளிநீக்குநான் சாப்பிட்ட இட்லி எனக்கு பிடித்ததாக இல்லை துரை செல்வராஜூ ஐயா. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்குகதம்பம் அருமை - அந்தப் பாட்டும்...
பதிலளிநீக்குஇன்றைய பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்குஸ்ரீரங்கம் போனால் சாப்பாடு கொஞ்சம் கஷ்டம் தான். பாலாஜி என்றொரு உணவகம் தெற்கு வாசலில் இருக்கிறது. எப்போதும் அங்கு போவோம். மாமாக்கள் இருந்தாலும் எல்லோருமே வயதானவர்கள். தொந்திரவு கொடுக்க வேண்டாம் என்று போவதில்லை. ஒருமுறை ஒரு உணவகத்திற்குச் சென்றோம். வாசலில் பதாகை இல்லை. சிற்றுண்டி தான் சாப்பிட்டோம். காபி டீ இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நீங்கள் சொல்லியிருக்கும் கடையா என்று நினைவில்லை.
பதிலளிநீக்குபாலாஜி பவன் - அங்கேயும் உணவு சாப்பிட்டு இருக்கிறேன். எனக்கு பிடித்தமானதாக இல்லை. நான் சொல்லும் உணவகம் வடக்கு சித்திரை வீதியில் இருக்கிறது ரஞ்சனிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.
நீக்குஐந்து குழி மூன்று வாசல் என்பதற்கு தாயார் அங்கு வந்து பெருமாள் வருகிறாரா என்று பார்ப்பாள் என்பது நிச்சயம் இல்லை. தாயார் படி தாண்டாப் பத்தினி. உட்பிராகாரத்தில் மட்டுமே உலா வருவாள் உத்சவ காலத்திலும் கூட. ஐந்து குழி மூணு வாசலிலிருந்து பார்த்தால் பரமபத வாசல் தெரியும். அர்த்த பஞ்சகம் எனப்படும் ஐந்து அர்த்தங்களை அறிந்தால் பரமபதத்தை அடையலாம் என்பது பொருள்.
பதிலளிநீக்குஐந்து குழி மூணு வாசல் - விளக்கம் நன்று. நானும் இது குறித்து ஒரு முறை முன்னர் எழுதி இருக்கிறேன் ரஞ்சனிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.
நீக்குஇந்த முறை நீங்கள் ஸ்ரீரங்கத்தைப் பற்றி எழுதியதால் நிறைய கருத்துக்களை சொல்லத் தோன்றுகிறது. ஸ்ரீரங்கத்தின் உண்மையான இருண்ட காலம் 1323 ஆண்டு நடந்த உலுக்கான் படையெடுப்பின் போது நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தை விட்டு அகன்றதுதான். கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்குப் பிறகு திருவரங்கம் திரும்பினார் நம்பெருமாள். திருவரங்கன் உலா என்று ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய நாவல் ஒன்று தான் ஸ்ரீரங்கத்தைப் பற்றி எழுதப்பட்ட authentic நாவல் என்று சொல்ல வேண்டும். 1371 ஆம் ஆண்டு பரீதாபி வருடம் வைகாசி 17 ஆம் நாள் அரங்கன் திரும்பி வந்த நாள். வரும் 31 ஆம் தேதி இதனை எங்கள் ஆசார்யன் ஸ்வாமி ஸ்ரீரங்கத்தில் பெரிய திருவிழாவாகக் கொண்டாட இருக்கிறார். நிறைய நிகழ்ச்சிகள் 30, 31 (மே மாதம் 2022) இரண்டு நாள்களும் நடைபெற இருக்கிறது. குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, ரங்கோலிப் போட்டி சமையல் போட்டி எல்லாம் இருக்கிறது. ரோஷ்ணி கலந்து கொள்ளலாம். கோரதம் அருகில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. உங்களுக்குப் போஸ்டர் அனுப்புகிறேன். உங்கள் தளத்திற்கு நிறைய பேர்கள் வருவார்கள். என்பதால் இங்கே சொல்லுகிறேன். தவறாக நினைக்க வேண்டாம்.
பதிலளிநீக்குநம்பெருமாள் குறித்த தகவல்கள் இங்கே பகிர்ந்து கொண்டது நன்று. கோரதம் அருகே நடக்க இருக்கும் விழா குறித்த தகவல்கள் சிறப்பு. மக்களுக்கு தேர்வு நேரம் என்பதால் போட்டிகளில் பங்குபெறுவது கடினம். வாட்ஸப் வழி பகிர்ந்து கொண்ட தகவலுக்கும் நன்றி ரஞ்சனிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குயூடியூபில் சொல்லப்படும் உணவகங்கள் பற்றின கருத்துகள், பலவும், நன்றாக இருப்பதில்லை. இவங்களும் பார்வையாளர்கள் வேணும், பணம் குமியணும் என்று போற வர்ற கடைகளிலெல்லாம் நுழைந்து ஒரு யூடியூப் தயார் பண்ணிடறாங்க. என்னத்தச் சொல்ல? (இன்னும் நான் வெளி ஆண்டாள் கோவிலின் அருகிலுள்ள பஜ்ஜி வடை கடைக்குச் செல்லவில்லை. அது நன்றாகவே இருக்கும் என்று தோன்றுகிறது)
பதிலளிநீக்குஹரித்வாரிலும் நூற்றுக்கணக்கான ஊறுகாய்கள் உண்டு என்று யாத்திரை சென்றிருந்தபோது சொன்னார்கள். சில கடைகளில் குவியலாக இருந்த வெவ்வேறு ஊறுகாய்களையும் பார்த்தேன். அங்கெல்லாம் கடுகு எண்ணெய் என்பதால் சுவைத்துப் பார்க்கவில்லை. அதுவும் தவிர, ஹரித்வாரில் சாப்பிட்டு இனிப்புவகைகள் (பாலினால் ஆனவை) உடலுக்குக் கெடுதி செய்தன.
YouTube பக்கத்தில் சொல்லப்படும் அனைத்து உணவகங்களிலும் உணவு நன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை - இதை உணர்ந்தே இருக்கிறேன். ஹரித்வார் ஊறுகாய் குறித்த தகவலும் நன்று. பால் இனிப்புகள் உங்களுக்கு ஹரித்வாரில் ஒத்துக்க கொள்ளவில்லை போலும் - அடடா… பயணத்தில் இப்படி ஏற்பட்டால் வேதனை தான். தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.
நீக்குகாணொளிகளில் அதுவும் YOUTUBE வெளியீடுகளில் அறிமுகம் செய்யப்படும் உணவாகட்டும், உணவகமாகட்டும் அவர்கள் சொல்லும் அளவு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. //
பதிலளிநீக்குஆமாம் ஜி. சரிதான்.
என்றாலும் நம் வீட்டில் சுவை என்று ரொம்ப முக்கியத்துவம் வெளியிடங்களுக்குச் செல்லும் போது ஏதோ அந்த நேரத்திற்குக் கிடைக்கிறதே என்று சாப்பிடுவோம். மற்றொன்று, தினமுமே வீட்டில் என்ன செய்தாலும், எப்போ செய்தாலும் சாமிக்குக் காட்டி வைத்து விட்டுச் சாப்பிடும் பழக்கம்...பாட்டியிடம் இருந்து வந்த பழக்கம்..பழையதைக் கூட நீரே அம்சி என்று சொல்லுவார் பாட்டி......."பெருமாள் இம்புட்டு இன்னிக்குக் கொடுத்தாரேன்னு பெருமாளை நினைச்சுண்டு சாப்பிடணும். பெருமாள் கொடுக்கற சாப்பாடைக் குறை சொல்லக் கூடாது. அவன் படி அளக்கறத குத்தம் சொல்லலாமோ? அடுத்த வேளை சாப்பாடு கிடைக்காம போயிடும் என்ன நாக்கு வேண்டிக் கிடக்கு" என்று என் பாட்டி எங்களுக்குச் சொல்லி சொல்லி புகட்டிய பாடம். அது இன்று வரை கை கொடுக்கிறது.
கீதா
//பெருமாள் இம்புட்டு இன்னிக்குக் கொடுத்தாரேன்னு பெருமாளை நினைச்சுண்டு சாப்பிடணும். பெருமாள் கொடுக்கற சாப்பாடைக் குறை சொல்லக் கூடாது. அவன் படி அளக்கறத குத்தம் சொல்லலாமோ? அடுத்த வேளை சாப்பாடு கிடைக்காம போயிடும் என்ன நாக்கு வேண்டிக் கிடக்கு// உங்கள் பாட்டி சொன்னது சரியான விஷயம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கு உளங்கனிந்த நன்றி கீதா ஜி.
ரங்கராட்டினம் வாசித்திருக்கிறேன். உங்கள் பதிவையும் வாசிக்கிறேன்.
பதிலளிநீக்குவீட்டுக்கு வந்து குப்பையை எடுத்துச் சொல்பவர்கள் மிகவும் போற்றப்பட வேண்டியவர்கள்.
இங்கு அப்படி வந்தாலும் நம் மக்கள் இருக்கிறார்களே அவர்களுக்குச் சாலையில் குப்பையை, வீட்டில் கிழிந்த துணிகளை எல்லாம் போடாமல் இருக்க முடியாது. பாவம் தெரு பெருக்குபவர்கள் பெண்கள் வந்து அதை எல்லாம் அள்ளிப் போட்டுக் கொண்டு போவார்கள்.
கீதா
பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. குப்பை எடுப்பவர்களை சக மனிதர்களாக மதிக்காத பலர் இந்த சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனையான உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கு உளங்கனிந்த நன்றி கீதா ஜி.
வலைப்பதிவர் சுரேஷ் (அப்படித்தான் நினைவு), ராகேஷ் ரகுநாதன் போன்றவர்கள் ஊர் ஊராகச் சென்று உணவைச் சுவைப்பவர்கள். காணொளிகள் பதிவுகள் போடுபவர்கள். இப்போது சுரேஷ் எழுதுகிறாரா என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குபல வகை ஊறுகாய்கள். ஜாடிகள் பாட்டில்கள் பார்க்கும் போதே ஆசை எழுகிறது. வட இந்திய ஊறுகாய்கள் அது தனிச்சுவை.
கீதா
கடல்பயணங்கள் சுரேஷ் - உங்களுக்கும் தெரிந்தவர், ஜி...
நீக்குஇவரது கடைசிப் பதிவு தூத்துக்குடி உணவு பற்றி....மஸ்கோத்து அல்வாவோ அல்லது சேலம் உணவு பற்றியோ என்று நினைவு. அவரது வலைத்தளம் போய்ப்பார்க்க வேண்டும். ஆவியின் நண்பரும் கூட இவர். அதனால் ஆவி அவரோடு பேசிய போது ஒரே ஒரு முறை சுரேஷோடு பேசியிருக்கிறேன் அப்படித் தெரிந்ததுதான் அவரது வலைத்தளம்,
கீதா
வலைப்பதிவர் சுரேஷ் அவர்களை சென்னை பதிவர் சந்திப்பில் நேரிலும் சந்தித்து இருக்கிறேன். நீண்ட நாட்களாக/மாதங்களாக பதிவுகள் எழுதுவதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கு உளங்கனிந்த நன்றி கீதா ஜி.
வட இந்திய ஊறுகாய் சுவை ஒரு விதம் தான். அது பலருக்கும் பிடிப்பது இல்லை - குறிப்பாக நம் ஊர் மக்களுக்கு - அதில் கலக்கப்படும் வினிகரின் சுவையும், கடுகு எண்ணையின் சுவையும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கு உளங்கனிந்த நன்றி கீதா ஜி.
"கொழும்பு டீ" கதை வாசித்திருக்கிறேன். அந்தத் தலைப்பு ஈர்த்ததால். சொல்வனம், குவிகம், இன்னும் சில எல்லாம் அவ்வப்போது செல்வதால். நல்ல கதை. சைக்கிளில் மூவரும் பழைய கோயில்களுக்குச் செல்வது எல்லாமே ரசித்தேன். கொழும்பு பயணம் என்றதும் நானும் கொஞ்சம் ஆர்வமுடன் வாசித்தேன். ஆனால் கதை அதுவல்லவே...
பதிலளிநீக்குகிட்டத்தட்ட ஆட்டோகிராஃப் படக் கதை நினைவுக்கு வந்தது...
இந்தக் கருத்தேனும் போக வேண்டும். பிழை பிழை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாது ப்ளாகர்.
கீதா
கொழும்பு டீ - கதை நீங்களும் வாசித்தது அறிந்து மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கு உளங்கனிந்த நன்றி கீதா ஜி.
அன்பின் வெங்கட்,
பதிலளிநீக்குஎன்றும் நலமுடன் இருங்கள்.
பல் வேறு காரணங்களால் அடிக்கடி வர முடியவில்லை.
தில்லி ஊறுகாய் வகைகள் உறவினர்கள் கொண்டு வந்து ருசித்திருக்கிறோம்.
மசாலாப் பொருட்களும் சேர்ப்பார்களோ.
காணொளி நன்றாக இருந்தது. அவர்களின் வண்ணச் சேர்க்கையும்
சுவைக்க ஆவல் கொடுக்கிறது.
தினம் தினம் பதிவுகளுக்கு வருவது கடினம் தான் வல்லிம்மா. முடிந்த போது வாருங்கள். ஊறுகாய் குறித்த காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
நீக்குரங்க ராட்டினம் வாசித்ததில்லை.
பதிலளிநீக்குசொல்வனம், குவிகம் சில சமயங்களில் சென்று வாசித்ததுண்டு.
ஆர்வம் இல்லை. நீங்கள் எழுதி இருக்கும் விதம் படிக்கலாமே என்று தோன்றுகிறது.
கதை தளங்கள் அனைத்திலும் வரும் கதைகள் எல்லாமே நன்றாக இருக்கும் என்று சொல்ல முடிவதில்லை வல்லிம்மா. தேடித்தேடியே படிக்க வேண்டியிருக்கிறது. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
நீக்குகுப்பை எடுத்துச் செல்பவர்கள் பாடவும் செய்தால்
பதிலளிநீக்குமகிழ்ச்சி தான். எத்தனை உன்னதமான வேலைகளைச் செய்கிறார்கள்.
இங்கு வியாழன் தோறும் வரும்,
குப்பை லாரியில் பாடல்களை
வானொலியில் கேட்ட படி வேலைகளைச் செய்வார்கள்.
அருமையாக இருக்கும்.
உள்ளே இருந்த படியே பார்ப்பேன்.
அருமையான பதிவு மா. நன்றி.
குப்பை எடுப்பவர்கள் உன்னதமான வேலை செய்ப்பவர்கள் - உண்மை தான் வல்லிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
நீக்குடில்லி ஊறுகாய் பார்கிறேன். கொழும்பு ரீயும் :) படித்துப் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குமுடிந்தபோது பாருங்கள்/படியுங்கள் மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.