வியாழன், 19 மே, 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி இருபத்தி எட்டு – சேவைக் கல்யாணம்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பக்கபலம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்ள, நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

 

யாரிவள்! பகுதி இருபத்தி எட்டு - சேவை கல்யாணம் 

எந்த ஒரு பெரிய விஷயமும் நடைபெற பலரின் உழைப்பு அங்கு  தேவைப்படுகிறது. அப்போது தான் அது சிறப்பான முறையில் முழுமையும் பெறும்! அது ஒரு கட்டிடமோ, கோவிலோ, கல்யாணமோ தனியொரு நபராக அதைச் செய்ய முடியாது! ஒரு கல்யாணம் நடைபெற எல்லோரின் ஒத்துழைப்பும், உழைப்பும் நிச்சயமாக தேவை இல்லையா!

 

சனிக்கிழமை மாலைச் சிற்றுண்டியாக இன்று சுவையான சேவையைத் தயார் செய்து பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என அம்மா முடிவெடுத்து விட்டாள் என்றால் அதற்கு புழுங்கலரிசியை முன்பே ஊறவைத்து கல்லுரலிலோ, கிரைண்டரிலோ மையாக அரைத்து விடுவாள்! இந்த சேவையை இடியாப்பம் என்றும் இவளுடைய ஊராம் கோவையில் சந்தகை என்றும் அழைக்கப்படுகிறது.

 

பின்பு அதை வாணலியில் சற்று இறுகும் வரை கிளறி இறக்க, அந்த மாவு பிடி கொழக்கட்டைகளாக மாற்றப்படும்! மாவைக் கிளறும் போது இப்போது வாணலியில் மொறுமொறுப்பாக ஒட்டிக் கொண்டிருக்குமே அதை பெயர்த்து எடுத்து யார் பங்கிட்டுக் கொள்வது என்று இவளுக்கும் தம்பிக்கும் பெரும் போட்டியே நடைபெறும்..🙂 அத்தனை சுவைமிக்கதாக இருக்கும் அந்த லேயர்!

 

பிடித்து வைத்த கொழக்கட்டைகள் பின்பு ஆவியில் வைக்கப்பட்டு தன்னை சேவையாக மாற்றிக் கொள்ளத் தயாராகி விடும்..🙂 மூன்று கால்களுடன் சேவை நாழி சிறிது எண்ணெய்க் குளியலுடன் அப்பாவின் வசம் ஒப்படைக்கப்படும்! 

 

சுடச்சுட கொழக்கட்டைகளை தொடர்ந்து அம்மா நாழியில் போட்டுக் கொண்டிருக்க, அப்பாவின் முயற்சியில் அந்த நாழி சுற்றப்பட, 

 

இவள் அந்த நாழியை நகர விடாமல் உறுதியாக பிடித்துக் கொள்ள, கொழக்கட்டை நூல் போல சேவையாக உருமாறி தயாராகி விடும். தயார் செய்த சேவையை அடுத்து அம்மா தாளிப்புகளுக்கு தயார் செய்ய வேண்டும். 

 

தேங்காயை பக்குவமாக உடைத்து, அவை நாரெல்லாம் முழுவதுமாக நீக்கப்பட்டு, அப்பா பதமாக துருவிக் கொடுத்துடுவார். அந்தத் துருவலில் சிறிது பழுப்பு கூட இருக்காது! வெள்ளை வெளேரென்று பூப்போல இருக்கும்! அப்பா எந்தவொரு வேலையைச் செய்தாலும் அதை நேர்த்தியாக, சுத்தமாக, பாங்காக செய்திடுவார். அப்பாவைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்! 

 

தயார் செய்த சேவையைத் தேங்காயோடும், எலுமிச்சையோடும் பின்பு தனியாகவும் என பிரித்து விடுவாள் அம்மா. ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பொலபொலவென்று, மெத்து மெத்தாக சுவைக்கத் தயாராகி விடும் தேங்காய் சேவை, எலுமிச்சை சேவை மற்றும் பாலுடன் சர்க்கரை சேர்த்து பிள்ளைகளுக்காக ஸ்பெஷல் சேவை! 

 

இப்படியாக இந்தச் சிறப்பான சேவைக் கல்யாணம் மாதம் ஒருமுறை நிகழும்..🙂 அம்மா சுவையாக செய்யும் பதார்த்தங்களும், அப்பாவும், இவளும் அதற்கு உதவுவதுமாக வாராவாரம் இந்தக் கதைகள் தொடர்ந்து கொண்டே இருந்தன! இன்னும் சொல்ல வேண்டிய கதைகள் ஏராளம் இருக்க தொடர்ந்து இவளுடன் வாருங்கள்..🙂

 

இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சுட்டிப்பெண்?? தொடர்ந்து பார்க்கலாம்

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

24 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ சார்.

   நீக்கு
 2. நானும் சிறுவயதில் இந்த சேவை தயாரிப்பில் அம்மாவுக்கு உதவி இருக்கிறேன்.  எனக்கு மிகவும் பிடிக்கும்.  இப்போதெல்லாம் ரெடிமேட் சேவைதான்!  ஆனால் அம்மா மாவை இட்லி போல வேகவைத்து ஆறும் முன் இடியாப்பம் பிழியச் சொல்வார் என்று நினைவு.  வாணலியில் புரட்டியதாக நினைவில்லை.  அதே சமயம் அந்த மொறுமொறு லேயர் சொல்லி இருக்கிறீர்கள் பாருங்கள், அதற்கு எங்கள் வீட்டிலும் போட்டி இப்போதும் இருக்கும்.  அரிசிமாவு உப்புமா, மோர்களி போன்றவற்றில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலர் மாவை இட்லி தட்டில் விட்டு ஆவியில் வைத்தும் பிழிவார்கள். ஆனால் அதில் அந்த மொறுமொறு இருக்காதே...:) இந்த செய்முறையில் செய்யும் சேவை மிகவும் சுவையானது. நாங்களும் இப்போது ரெடிமேட் தான்..:)

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

   நீக்கு
 3. நீங்கள் எழுதியிருக்கும் முறையில்தான் எங்கள் வீட்டில் சேவை தயாரிப்பு. இங்கு புதிய சேவை, கிலோ 90ரூபாய்க்குக் கிடைப்பதால், வீட்டில் தயாரிப்பது ஒரு வருடமாக நின்றுபோயிற்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வீட்டிலும் இந்த செய்முறை தானா!! இங்கேயும் ரெடிமேட் சேவை தான்.

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.

   நீக்கு
 4. சுவாரஸ்யமான நிகழ்வுகள் தொடர்ந்து வருகிறேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

   நீக்கு
 5. //சுடச்சுட கொழக்கட்டைகளை தொடர்ந்து அம்மா நாழியில் போட்டுக் கொண்டிருக்க, அப்பாவின் முயற்சியில் அந்த நாழி சுற்றப்பட, //

  என் மாமியார் வீட்டில் இந்த சேவை நாழியில் மாமியார் கொழுக்கட்டைகளை போட என் கணவர் மற்றும் கண்வரின் சகோதர்கள் பிழிவார்கள், அப்புறம் பேரன் பேத்திகள் போட்டி போட்டு கொண்டு செய்வார்கள். புளிகாய்ச்சல், தேங்காய் சேவைதான் பிடித்தது எங்கள் வீட்டினருக்கு. சில வருடங்களாக வீடு தேடி சேவை வந்து விடும் தினம் கொண்டு வந்து விற்பார்கள் அதை வாங்கி வேலையை எளிதாக்கி விட்டார்கள். சூடு செய்து தாளிக்கும் வேலை மட்டுமே!

  அப்பாவும் வீட்டு பணிகளில் துணை நின்றது எனக்கு படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புளிக்காச்சல் சேவை சுவைத்ததில்லை. தேங்காய் சேவை தான் எனக்கும் பிடித்தது. அப்பா எப்போதுமே எல்லா வேலைகளிலும் உதவுவார் அம்மா.

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

   நீக்கு
 7. சேவை செய்முறை பிரமாதம் . நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி சார்.

   நீக்கு
 8. ஆஹா ஆதி! சேவை!!! உங்கள் நினைவுகள் என்னையும் அக்காலத்திற்கு இழுத்தது.

  இதே இதே முறையில்தான் இதே போன்ற சேவை நாழியில்தான் அன்றும் இன்றும் நம் வீட்டிலும். சமீபத்தில் கூடச் செய்தேன். நம் வீட்டில் சேவை என்றால் புளிசேரி அல்லது திருநெல்வேலி மோர்க்குழம்பு. கலந்த சேவையும் செய்வதுண்டுதான். தேங்காய்ப்பால்/வெல்லம் சேவையும்.

  நான் தெரிந்துகொண்ட வரையில் (உங்களுக்கும் தெரிந்திருக்கும் நிச்சயமாக)
  இடியாப்பம் பச்சரிசியில் தயாரித்து வைத்திருக்கும் இடியாப்ப மாவில் (ஊற வைத்து அரைத்தும் செய்யலாம் தான்) கிளறி இடியாப்ப அச்சில் பிழிந்து ஆவியில் வேக வைப்பது...(நூலப்பம்/நூல்புட்டு)
  சேவை - புழுங்கலரிசி அரைத்துக் கிளறி வேகவைத்துப் பிழிவது. அதுவும் நாரோயிலில், திருவனந்தபுரத்தில் கிடைக்கும் டொப்பி புழுங்கல் அரிசியில் செய்தால் மணம் செமையா இருக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேவைக்கு புளிசேரி, மோர்குழம்புடன் சுவைத்ததில்லை. பச்சரிசியில் செய்தால் இடியாப்பம் என்பது புதிய தகவல்.

   தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

   நீக்கு
 9. உங்கள் அப்பாவும் உதவி செய்தது அருமை...சென்ற பதிவுகளிலும் கூட சொல்லியிருக்கீங்க.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பா எல்லா வேலைகளிலுமே உடனிருப்பார். சமையல் தான் தெரியாது.

   நன்றி கீதா சேச்சி.

   நீக்கு
 10. வாணலியின் அடியில் ஒட்டிக் கொள்ளும் அந்த அடிக்காந்தல் ஆஹா இப்பவும் (மகன் இங்கிருந்தால் அவனும் சேர்ந்து கொள்வான்) அதற்குப் போட்டி உண்டு...என் பாட்டி என்னக்கு என்று அதை விட்டு வைப்பார். ஆனால் அவர்தான் சுரண்டித்தருவார்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அந்த அடிக்காந்தலின் ருசிக்கு ஈடு இணையில்லை.

   நன்றி கீதா சேச்சி.

   நீக்கு
 11. சேவை இயந்திரத்தைச் சூழற்றுவதற்கே வீட்டில் போட்டி இருப்பதுண்டு. என்னதான் ரெடிமேட் சேவை வசதியாக இருந்தாலும், வீட்டில் தயாரிக்கப்பட்ட சேவையின் சுவைக்கு இணையாக முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டில் தயாரிக்கப்பட்ட சேவை சுவை அலாதி தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி இராய செல்லப்பா ஐயா.

   நீக்கு
 12. குடும்பமாக உதவுவது மகிழ்ச்சி.

  சேவை எல்லாம் செய்ததில்லை . இடியப்பம் அடிக்கடி உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இடியாப்பம் எனக்கும் பிடிக்கும் மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....