வெள்ளி, 8 ஏப்ரல், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி பதினாறு – தம்பிக்காக அக்கா உருவாக்கிய விளையாட்டு!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய யாரிவள் பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படி(பார்)க்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

இன்று நீ படும் அவமானங்கள் எல்லாம் உனது வருங்காலத்தில் வெற்றிக்கு தேவைப்படும் அனுபவமாகவும் வாழ்க்கையில் முன்னேற ஒரு உந்து சக்தியாகவும் கண்டிப்பாக அமையும் - யாரோ!

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

 

யாரிவள்! பகுதி பதினாறு - தம்பிக்காக அக்கா உருவாக்கிய விளையாட்டு!



 

இவளுக்கு வெளியில் சென்று விளையாடுவதில் அத்தனை ஈடுபாடு இல்லை என்று சொல்லியிருந்தாளே! நினைவிருக்கிறதா! ஆனால் விடுமுறை நாட்களில் வீட்டிலேயே நண்பர்கள் எல்லாம் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளில் அவளுக்கு கூடுதல் ஆர்வம் இருந்தது.

 

துண்டுச் சீட்டுகளில் ராஜா, ராணி, மந்திரி, போலீஸ், திருடன் என்று எழுதி குலுக்கிப் போட்டு அதை ஆளுக்கொன்றாக எடுத்து திருடனை கண்டுபிடிக்கும் விறுவிறுப்பு இருக்கிறதே!! மிகவும் சுவாரஸ்யமானது அந்த விளையாட்டு! திருடனாக இருப்பவர் ஏதும் அறியாதது போல் இருக்க வேண்டும்! கொஞ்சம் சிரித்து விட்டாலும் காட்டிக் கொடுத்து விடும்..🙂 

 

சினிமாவின் பெயர்களை மூன்று மூன்றாக சீட்டுகளில் எழுதிக் கொண்டு, இப்படி எத்தனை நபர்களோ அவர்களுக்கு ஏற்றாற் போல் எழுதி குலுக்கிப் போட்டு நபருக்கு மூன்று சீட்டுகளாக எடுத்துக் கொண்டு செட்டு சேர்க்க வேண்டும். 

 

ஒரு சுற்றுக்கு ஒரு சீட்டு நமக்கு கிடைக்க, தேவையில்லாத ஒரு சீட்டை நாம் பார்க்காமல் கொடுத்து விட வேண்டும்! முதலில் செட்டு சேர்த்தவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.. இந்த விளையாட்டுக்கு 'செக்' என்று அவர்கள் கூட்டத்தில் பெயரிடப்பட்டது..🙂

 

அதே போல் தீப்பெட்டி டப்பாவின் அட்டைப்படங்களை சேகரிப்பது ஒரு வழக்கம். அதில் ஒரு விளையாட்டு! அதை நபர்களுக்கு ஏற்றாற் போல் பிரித்துக் கொண்டு ஆளுக்கொன்றாக கீழே போடப்போட ஒரே மாதிரி இருக்கும் அட்டைப்படங்கள் வந்தால் அதற்கு கீழிருக்கும் அத்தனைச் சீட்டுகளும் கடைசியாக போட்டவருக்கு சென்று விடும்! யாரிடம் அதிகமான சீட்டுகள் இருக்கிறதோ அவரே வெற்றியாளர்..🙂

 

சீட்டுக்கட்டுகளும் , கேரம் போர்ட் , தாயக்கட்டை, பல்லாங்குழியும் விளையாடுவாள்..🙂 இவை அத்தனையும் நேரம் போவதே தெரியாத அளவுக்கு அந்தக் கூட்டத்துக்கு நல்லதொரு பொழுதுபோக்காகவும், த்ரில்லிங்காகவும் இருந்ததுசீட்டு விளையாட மட்டும் அம்மா அனுமதிக்கவில்லை! அம்மாவின் சொல்லை மீறி விளையாடியதால் ஒருமுறை அதை கிழித்து குப்பையில் போட்டு விட்டாள்..🙂

 

ஒருநாள் இவளின் குட்டித்தம்பி புதிதாக ஒரு விளையாட்டைத் தன் நண்பன் வீட்டில் விளையாடியதாகச் சொன்னான்! அவன் சொன்ன விவரங்களை வைத்து இவளுக்கும் அதைப் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது! அந்த நண்பனிடம் சொல்லவே இவர்கள் வீட்டுக்கும் கொண்டு வந்தான். அதில் எல்லோருமாக சேர்ந்து விளையாடினார்கள்! மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது..🙂 அதன் பெயர் பிசினஸ் ட்ரேட்!

 

அடுத்த நாளும் விளையாடலாம் என்று கேட்ட போது அந்த நண்பன் வீட்டில் தர மறுத்து விட்டார்கள்! இவளுக்கு மிகுந்த  ஏமாற்றமாக இருந்தது! குட்டித்தம்பியோ அதை விளையாடணும் என்று அடம் பிடிக்கிறான்! அவனுக்கு நிதர்சனம் புரியலை! பிறகு தம்பியை சமாதானம் செய்ய இவள் வழி ஒன்றைக் கண்டுபிடித்தாள்!

 

முதல்நாள் விளையாடியதை நினைவில் கொண்டு காலியான  Long size நோட்டிலிருந்து அட்டையை மட்டும் எடுத்துக் கொண்டாள்.  உள்புறத்தில் இருபுறமும் பேப்பரை ஒட்டினாள். பின்பு அதில் கட்டங்கள் வரைந்து, ஒவ்வொரு கட்டத்திலும் மாநிலங்களின் பெயர்களையும் எழுதிக் கொண்டாள்! 

 

அதன் பின் துண்டுச்சீட்டுகளை உருவாக்கி அதில் பணம்,  மாநிலங்களின் பெயர்கள் மற்றும் இன்னும் பிற விவரங்களையும் எழுதி வைத்தாள்! வீட்டிலிருக்கும் தாயக்கட்டை டைஸானது! காயின்களுக்கு புளியங்கொட்டைகளும், வீடு, ஹோட்டலுக்கு பருப்புகளும், மணிகளும் உதவியது!  

 

இப்போது உருவாகி விட்டது தம்பிக்காக இவள் தயாரித்த செலவே இல்லாத சூப்பரான பிசினஸ் ட்ரேட்! முதல் நாள் விளையாடிய ட்ரேடுக்கு சற்றும் குறைவில்லாத ட்ரேட் அது! தம்பியும் குஷியாகி விட்டான்! நெடுநாட்கள் வரை அதை பத்திரமாக வைத்திருந்து அதில் எல்லோருமாக  சேர்ந்து விளையாடினார்கள்..🙂

 

இப்படியாக இந்தப் பெண் இன்னும் என்னவெல்லாம் செய்தாள்?? தொடர்ந்து பார்க்கலாம்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

14 கருத்துகள்:

  1. இளமையில் எத்தனை விதமான விளையாட்டுகள், பொழுது போக்குகள்...  சொந்தமாக உருவாக்கிக்கொண்ட ட்ரேட் விளையாட்டு...   சூப்பர்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதும் விளையாட்டுகள் இருந்தாலும் பலர் அலைபேசிகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள்...... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. சூப்பர் ஆதி! அப்போதெல்லாம் பிஸினஸ் ட்ரேட் விளையாட்டு செட் ஒரு சில வீடுகளில் தான் இருக்கும். பெயருக்கு ஏற்றாற் போல கொஞ்சம் வசதியான வீடுகளில்.

    நம் வீட்டில் இந்த கேம் கிடையாது. ஃப்ரென்ட் யாராவது எடுத்து வந்தால் உண்டு ஆனால் இதை விளையாட அனுமதிக்கமாட்டாங்க. ஜெயில், பிஸினஸ் லாஸ் எல்லாம் வரும் அது அபசகுனம் என்று மெயின் ரீசன் படிப்பு படிப்பு படிப்பு.

    நாங்கள் ஆடுபுலி ஆட்டம் தரையில் அல்லது அட்டையில் வரைந்து விளையாடியதுண்டு அது போல தாயக்கட்டம் வரைந்து. புளியங்கொட்டை, மஞ்சாடி, குன்றுமணி, எங்கள் ஊரில் சோழி சிப்பி நிறைய கிடைக்குமே ஆற்று மணலில் பொறுக்கி வைத்துக் கொண்டு என்று. தாயக்கட்டமும் அனுமதி இல்லை. மகாபாரதம்!!!

    பொதுவாகவே வீட்டில் படிப்பு படிப்பு படிப்பு தான் கூட வீட்டு வேலை. இப்படி விளையாடியது ரொம்பக் குறைவு. பல்லாங்குழி ஆடியதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி. எங்கள் வீட்டில் கூட சில விளையாட்டுகளுக்கு தடை இருந்தது - குறிப்பாக சீட்டுக்கட்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. தம்பிக்காக அழகான கேம் போர்ட் செய்து கொடுத்து விளையாடியது அருமை. அந்த வயதில் நல்ல கற்பனைத் திறமை!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  4. சிறுவயது குழந்தைகள் செயல்கள் பழைய நினைவுகளை மீட்டி விட்டது.

    தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவலைகளை இப்பதிவு மீட்டு எடுக்க உதவியதில் மகிழ்ச்சி கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. //சூப்பரான பிசினஸ் ட்ரேட்! முதல் நாள் விளையாடிய ட்ரேடுக்கு சற்றும் குறைவில்லாத ட்ரேட் அது//

    தம்பிக்கு பிசினஸ் ட்ரேட் செய்து கொடுத்தது மகிழ்ச்சி.

    திறைமகளும் பொறுமையும் உள்ள அக்கா. ரோஷ்ணியும் உங்களை போல கை வேலை திறன் உள்ளவள்.
    நினைவுகள் அருமை.
    நாங்களும் சிறு வயதில் நிறைய விளையாடி இருக்கிறோம்.
    திருமணம் ஆனபின்னும் விளையாட்டுத்தான் என் குழந்தைகளுடன், அக்கம் பக்கத்து குழந்தைகளுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பதிவு குறித்த விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. ட்ரேட் உருவாக்கம் அற்புதம்.

    எங்கள் வீட்டில் கடைக்குட்டி நான் என்பதால் அண்ணாமார்களே அனைத்து விளையாட்டுகளும் செய்து விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் கடைக்குட்டிக்கு தான் அதிக செல்லம். தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....