அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
துணிவு இல்லையேல் வாய்மை இல்லை; வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை - மகாத்மா காந்தி.
******
சாலைக் காட்சிகள் - ஹோலி - பிச்சை:
ஹோலி பண்டிகை வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே பண்டிகையைக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். ஹோலிக்கு முன் வந்த ஞாயிறு மாலை டால்கட்டோரா பூங்காவிற்குச் செல்லும் வழியில் ஒரு யுவதியையும் கூடவே ஒரு இளைஞனையும் பார்த்தேன். பெண்ணின் முகம், கைகள் உடை என எல்லா இடங்களிலும் வண்ணப்பொடிகள் கொண்டு பூச்சு..... ஆனால் அந்த இளைஞன் நிலையோ பரிதாபம். உடை முழுவதும் அழுக்கு - மொத்தமாக சேற்று/சாணிக் குளியல் நடத்தி இருப்பார்கள் போலும் - அவரைத்தாண்டி செல்லும் போது ஒரு வித துர்நாற்றம் - அவரோ எந்தவித உணர்வும் இன்றி அப்பெண்ணிடம் கடலை வறுத்தபடி சென்று கொண்டிருந்தார். தன் மீது கொட்டப்பட்ட சேற்றின் வாசமோ, அதே ஈர உடைகளோடு சாலையில் நடக்க வேண்டியிருக்கிறதே என்ற கவலையோ அவரிடத்தில் இல்லவே இல்லை.
பூங்காவில் கூட இப்படியான ஹோலி கொண்டாட்டங்கள் ஆங்காங்கே காண முடிந்தது. பெரும்பாலும் ஜோடிகள் - அங்கே வந்து தங்களுக்குள் Sweet Nothings பேசியபடி ஹோலியும் கொண்டாடத் தேவையான முன் கூடிய ஆயத்தங்களுடன் வந்திருந்தார்கள். ஒரு அழகான சுருட்டை முடி யுவதி தலைவிரி கோலமாக வந்திருக்க அவள் கையில் ஒரு தட்டு - தட்டில் வண்ணப் பொடிகள்..... ஒருவருக்கொருவர் வண்ணம் பூசிக் கொண்ட பிறகு Photo Session ஆரம்பித்தது..... செல்ஃபிக்கள் மட்டுமல்லாது, மாற்றி மாற்றி அடுத்தவரை படம் எடுப்பதும் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தது..... பூக்களுக்கு நடுவே அமர்ந்து கொண்டு கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து அமர்ந்திருந்த அந்த யுவதியின் கையில் தட்டு..... கோயில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுக்கும் எங்கள் ஊர் பெண் போலவே தெரிந்தாள் - அவளைக் கடக்கையில் சொல்லிவிடத் தோன்றியது - ”பார்த்தும்மா, யாராவது ஏந்திய தட்டில் காசு போட்டுட போறாங்க” என்று தான் 🙂
******
இந்த வாரத்தின் காணொளி - அணில் :
சில விஷயங்களை எப்போதும் ரசிக்க முடியும்...... அப்படியான ஒரு விஷயம் அணில்கள் போன்ற உயிரினங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது....... அப்படி சமீபத்தில் பார்த்து ரசித்த அணில் ஒன்று - காணொளி ஆக.... நீங்களும் ரசிக்க......
******
பழைய நினைப்புடா பேராண்டி: குகனின் வழித்தோன்றல்
2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - குகனின் வழித்தோன்றல் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
படகோட்டி குகன் [இவரது பெயர் கேட்டு வைத்துக் கொண்டிருந்தாலும் மறந்து விட்டேன். கட்டுரைக்காக குகன் என்றே வைத்துக் கொள்வோமா?] தனது ஒன்பதாவது வயதிலிருந்தே படகு செலுத்த ஆரம்பித்து விட்டதாகச் சொன்னபோது ஆச்சரியம். அலஹாபாத் நகரினருகில் இருக்கும் கிராமத்தில் பிறந்து, படிப்பு அவ்வளவாக ஏறாததால், அப்பாவின் தொழிலான படகோட்டுவதையே இவரும் தொடர்ந்து விட்டாராம்.
தொடர்ந்து படகோட்டுவதையே தொழிலாகச் செய்து வந்த இவருக்கு விதவிதமான அனுபவங்கள். அத்தனையும் அவரிடம் பேசித் தெரிந்து கொள்ள ஒரு படகுப் பயணம் பற்றாது. ஆற்றின் போக்கில் படகு செலுத்துவதில் உள்ள கஷ்டத்தினை விட ஆற்றின் போக்குக்கு எதிரே படகு செலுத்துவதில் தான் அதிக கஷ்டம் எனச் சொல்லி, ஒவ்வொரு நாளும் வீடு சென்றபிறகு இரு தோள்களும், ‘என்னைக் கொஞ்சம் கவனியேன்’ என்று தன்னைக் கெஞ்சுவது போல இருக்கும் எனச் சொல்கிறார் குகன்.
படகோட்டிகள் எனச் சாதாரணமாக எங்களை எடை போட்டு விடாதீர்கள் எனச் சொல்லி, ‘நாங்கள் விஷ்ணுபகவானின் அவதாரமான ராமனை கரையேற்றியவர்கள்!” என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டார். வனவாசத்திற்குச் செல்லும் போது ராமன், சீதா, லக்ஷ்மணன் ஆகியோர் கங்கை ஆற்றினைக் கடக்க உதவிய குகனின் வழித்தோன்றல்கள் நாங்கள் என அவர் சொன்னது உண்மை தான் – ‘குகனோடு ஐவரானோம்’ என ராமனே சொன்னது தான் உங்களுக்குத் தெரியுமே.
முழு பதிவினையும் மேலே கொடுத்திருக்கும் சுட்டி வழி படித்து ரசிக்கலாம்!
******
ரசித்த சிறுகதை - இரவின் மடியில் :
பொழுது போகா நேரங்களில் எந்த வித இலக்கும் இல்லாமல் சாலைப் பயணம் மேற்கொள்வதோ, நடப்பதோ ஏதோ ஒன்று செய்வது நேரத்தைப் போக்க உதவுவதோடு ஏதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாகவும் அமைந்து விடுவதுண்டு. சமீபத்தில் ஒரு நாள் மாலை - ஞாயிற்றுக் கிழமை - அப்படி நடந்து சென்ற போது தில்லி நகராட்சி பகுதி ஒன்றின் சுற்றுச் சுவர்களில் பல வித ஓவியங்களைப் பார்க்க முடிந்தது. தெருவோரம் நின்று தங்களின் அவசர பிரச்சனைகளை - வேறென்ன மூத்திரம் கழிப்பது தான் - சுவற்றின் அருகே முடித்துக் கொள்பவர்களை, அப்படிச் செய்யாமலிருக்க இந்த மாதிரி ஓவியங்கள் வரைகிறார்கள் - என்றாலும் சிலர் அதனையும் மதிக்காமல் தங்கள் வேலைகளை முடித்து விடுகிறார்கள் என்பது வேதனை தான். அழகான ஓவியங்கள் - அதிலும் சில மிகவும் ஈர்க்கும் விதமாக இருந்தது. ஒன்றிரண்டு ஓவியங்களின் படங்களை எனது அலைபேசியில் எடுத்தேன் - அவை இந்த வாரத்தின் ரசித்த ஓவியமாக பகிர்ந்து இருக்கிறேன். சரி ரசித்த சிறுகதை பற்றி சொல்ல வந்து விட்டு வேறேதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன் என நினைக்க வேண்டாம் - சிறுகதையும் இப்படி இலக்கில்லா நடை குறித்தது தான் - இரவின் மடியில் என்ற தலைப்பில் நல்லதொரு சிறுகதை - சொல்வனம் பக்கத்திலிருந்து - பத்மகுமாரி என்பவர் எழுதிய கதை - படித்துப் பாருங்களேன்!
******
இந்த வாரத்தின் நிழற்படப் புதிர் - இது என்ன? :
சமீபத்தில் எடுத்த நிழற்படம் மேலே! இது என்ன? என்று யாராவது சொல்ல முடியுமா? இரண்டு நாட்களில் இதே பதிவில் இது என்ன படம் என்பதைச் சேர்த்து விடுகிறேன்!
******
இந்த வாரத்தின் தகவல் - பிரம்ஹ கமலம் :
பிரஹ்ம கமலம் பூவின் படம் நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்களின் பதிவுகளில் வெளியிட்டது நினைவில் இருக்கலாம். இந்தப் பூ உத்திராகண்ட் மாநிலத்தின் மலைப் பகுதிகளில் நிறையவே இருக்கிறது என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என்பது கவலைக்குரிய விஷயம். உத்திராகண்ட் மாநிலத்தின் பூவாக இருக்கும் இந்த பிரஹ்ம கமலம் மருத்துவ குணம் நிறைந்தது என்பதால் பூக்களை எடுத்து விற்பதில் உள்ளூர் வாசிகள் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பூக்கள் அழிந்து வருகின்றன என்பது வேதனையான உண்மை. பிரஹ்ம கமலம் போலவே இன்னும் பல வகையான பூக்கள் இந்த மலைப் பகுதிகளில் உண்டு. முடிந்தால் நண்பர் எடுத்த படங்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்வேன்!
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
//”பார்த்தும்மா, யாராவது ஏந்திய தட்டில் காசு போட்டுட போறாங்க” என்று தான்//
பதிலளிநீக்குமறந்துபோய் போட்டாற்போல ஒரு ரூபாய் போட்டுவிடவேண்டும்!!!
மிக சுறுசுறுப்பான ஜீவன் அணில். வியப்பாய் இருக்கும். வயதான அணில்களும் அதே சுறுசுறுப்புடன் இருக்குமா, அல்லது அவர்கள் வீட்டு கட்டிலில் படுத்திருக்குமா?
குகனின் வழித்தோன்றல்களுக்கு அந்தப் பெருமை உண்டுதானே?
அந்தப் படம் நீர் நிறைந்த இடம். அது நீர்.
ப்ரஹ்ம கமலம் பூ அழகு.
பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
நீக்குபுதிருக்கான விடை - தால்கட்டோரா பூங்காவில் இருந்த ஒரு நீர்நிலை - ஒரு ஓரமாக அழுக்கு சேர்ந்திருக்கிறது! அதை Close-up ஆக எடுத்த படம் தான் மேலே!
ப்ரஹ்ம கமலம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைகும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இவ்வார கதம்பம் அனைத்தும் அருமை
பதிலளிநீக்குஅணில் காணொளி நன்று.
பதிவின் பகுதிகள்/காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அனைத்து பகுதிகளும் அருமை...
பதிலளிநீக்குஇது என்ன? பகுதி :-
இடத்தை சுத்தம் செய்வது என அறிகிறேன்... அடியில் இரும்பு சல்லடை தெரிகிறது...
பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. புதிருக்கான விடை - மேலே ஸ்ரீராம் அவர்களின் கருத்திற்கு பதிலாக சொல்லி இருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
வீடு அல்லது வெளியே துவைத்து அந்தத் தண்ணீர் வெளியே செல்லும் பகுதியில் சென்று சேர்கிறது. பாத்ரூமில் நிறைய சோப் போட்டுக் குளிக்கும்போது இந்த மாதிரி, ஆனால் சிறிய அளவில் ஆகியிருக்கிறது.
பதிலளிநீக்குமற்றப் பகுதிகளும் நன்று... எங்கே அந்தப் பிச்சைக்கார ஆடைப் பெண்? ஹா ஹா
பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. புதிருக்கான பதில் மேலே! (பார்க்க ஸ்ரீராம்-க்கு கொடுத்த பதில்!)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
வாசகம் நன்றாக இருக்கிறது. அணில் காணொளி அருமை.என்ன அவசரம் உணவு உண்பதில் !
பதிலளிநீக்குசோப்பு நுரை போல இருக்கிறது. அதன் வடிவம் மரத்தை அறுத்தால் கிடைக்கும் டிசைன் போல இருக்கிறது.
வாசகம் மற்றும் பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா. புதிருக்கான பதில் மேலே பதிலில் சேர்த்திருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கதம்பம் அருமை. அணில் காணொளியை ரசித்தேன்.
பதிலளிநீக்குபதிவின் பகுதிகளை ரசித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பல்சுவைச் செய்திகள். ரசித்தேன்.
பதிலளிநீக்குபல்சுவை பகிர்வினை ரசித்தமைகு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஹோலிப் பண்டிகை விஷயங்கள் நன்று.
பதிலளிநீக்குஅணில் காணொளி அருமை.
கதையும் பழைய பதிவும் வாசிக்கிறேன்.
ஏதோ கழிவுத் தண்ணீரோ
இரு பகுதிகள் வாசிக்க வேண்டும் அது தவிர அனைத்தும் ரசித்தேன்.
வாசகம் அருமை
துளசிதரன்
வாசகமும் பதிவின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் உண்மை, ஜி.
பதிலளிநீக்குஅவளைக் கடக்கையில் சொல்லிவிடத் தோன்றியது - ”பார்த்தும்மா, யாராவது ஏந்திய தட்டில் காசு போட்டுட போறாங்க” என்று தான் 🙂//
ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன் ஜி!
அணில் ஆஹா என்ன அழகு! அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சுறு சுறுப்பு...பரவாயில்லையே நீங்கள் எடுக்கும் வரை ஓடவில்லையே. சுவாரசியமாகத் தின்று கொண்டு...ஓ இல்லை இல்லை கொறித்துக் கொண்டிருக்கிறது!! யுட்யூபில் போட்டது எனக்கு வரவே இல்லையே. உங்கள் வீடியோக்கள் வந்ததும் எனக்கு அறிவிப்பு வந்துவிடுமே. இந்தமுறை வரவில்லைய். என்ன என்று பார்க்க வேண்டும்.
கதையும், பழைய பதிவும் வாசித்துவிட்டு வருகிறேன் ஜி
கீதா
வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. அணில் பார்த்து ரசிக்கக் கூடியது தான். நான் அங்கே சில மணித்துளிகள் இருந்தபோது இப்படி நிறைய காட்சிகள் பார்த்து ரசித்தேன்.
நீக்குபதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி கீதா ஜி.
ப்ரம்மகமலம் பூ செமையா இருக்கு ஜி. அழிந்துவருவது என்பது சோகம்.
பதிலளிநீக்குஇரவின் மடியில் = கதாசிரியரின் அவதானிப்பு அருமை. இலக்கில்லா முடிவு இல்லா கதையை ரசித்து வாசித்தேன். கடைசி வரி ஏதோ விஷயம் சொல்கிறது~
கீதா
ப்ரஹ்ம கமலம் மற்றும் அதைப் போலவே வேறு சில பூக்களும் அழிந்து வருகிறது! வேதனையான விஷயம் தான்.
நீக்குபதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி கீதா ஜி.
நுரை தள்ளி ட்ரெய்ன் ஹோல் கம்பிகளின் அருகில்.....காஃபியோ? அப்படித்தான் தோன்றுகிறது.
பதிலளிநீக்குகீதா
ஸ்ரீராம்-க்கு கொடுத்த பதிலில் படம் பற்றி குறித்து இருக்கிறேன் கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காந்தியிடம் எதுவுமே இல்லை. :( போகட்டும். பிரம்ம கமலம் அழிந்து வருவது என்பது உண்மையிலேயே வருத்தமான விஷயம். பூ அருமை. இந்த ஹோலியின் ஆர்ப்பாட்டங்கள், கொண்டாட்டங்கள் எனக்கும்/எங்களுக்கும் பிடிக்காது. அது என்ன என்பதை இரண்டு நாட்களில் சேர்க்கிறேன்னு சொல்லிட்டுச் சேர்க்கலை போல. தண்ணீர் சுழித்துக் கொண்டு வேகமாகப் போவதைப் பார்த்தால் பாதாளச் சாக்கடைனு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.