செவ்வாய், 9 ஏப்ரல், 2013

மஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 4 – குகனின் வழித்தோன்றலுடன் ஒரு பேட்டி



மஹா கும்பமேளாஒரு பயணம்பகுதி 1 பகுதி 2 பகுதி 3

சென்ற பகுதியில் சொன்னது போல, நாங்கள் எட்டு பேரும் ஒரு படகில் ஏறி அமர்ந்தோம். கூடவே எங்களை அழைத்து வந்து படகோட்டியிடம் பேசி விட்ட வேணி மாதவ் கோவில் பணியாளரும். எங்கள் ஒன்பது பேரையும் வைத்து படகோட்டிய அந்த படகோட்டிக்கு எத்தனை வயது இருக்கும்? யோசித்துக் கொண்டிருங்கள், கடைசியில் சொல்கிறேன்.



ஒற்றைக்கு ஒற்றை!!

 

படகினைச் செலுத்துமுன் எங்களை பக்கத்துக்கு நான்கு பேராக அமர வைத்தார். படகின் கடைசியில் நடுவே ஒரு பலமான [அதாவது எடை அதிகமுள்ள] ஒரு ஆளை உட்கார வைத்தால் நல்லது என எனது நண்பரை [இவர் பற்றி சொல்லுங்கண்ணே சொல்லுங்க! எனும் பதிவில் முன்னமே எழுதி இருக்கிறேன்] உட்கார வைத்தார். படகு யமுனை நதியில் மெல்ல மெல்ல கடந்து கொண்டிருந்தது. நான் புகைப்படங்கள் எடுத்தபடியே படகோட்டியிடம் பேச்சுக் கொடுத்தேன். நான் பேசியது பார்த்து மற்றவர்களும் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.


ஆபத்துதவி படகு!


படகோட்டி குகன் [இவரது பெயர் கேட்டு வைத்துக் கொண்டிருந்தாலும் மறந்து விட்டேன். கட்டுரைக்காக குகன் என்றே வைத்துக் கொள்வோமா?] தனது ஒன்பதாவது வயதிலிருந்தே படகு செலுத்த ஆரம்பித்து விட்டதாகச் சொன்னபோது ஆச்சரியம். அலஹாபாத் நகரினருகில் இருக்கும் கிராமத்தில் பிறந்து, படிப்பு அவ்வளவாக ஏறாததால், அப்பாவின் தொழிலான படகோட்டுவதையே இவரும் தொடர்ந்து விட்டாராம்.


வயதாகிவிட்டாலும் இப்படியா ஒதுக்கி வைப்பது!


தொடர்ந்து படகோட்டுவதையே தொழிலாகச் செய்து வந்த இவருக்கு விதவிதமான அனுபவங்கள்.  அத்தனையும் அவரிடம் பேசித் தெரிந்து கொள்ள ஒரு படகுப் பயணம் பற்றாது. ஆற்றின் போக்கில் படகு செலுத்துவதில் உள்ள கஷ்டத்தினை விட ஆற்றின் போக்குக்கு எதிரே படகு செலுத்துவதில் தான் அதிக கஷ்டம் எனச் சொல்லி, ஒவ்வொரு நாளும் வீடு சென்றபிறகு இரு தோள்களும், ‘என்னைக் கொஞ்சம் கவனியேன்என்று தன்னைக் கெஞ்சுவது போல இருக்கும் எனச் சொல்கிறார் குகன்.


நான் மூவர்ணப் படகு!
 
படகோட்டிகள் எனச் சாதாரணமாக எங்களை எடை போட்டு விடாதீர்கள் எனச் சொல்லி, ‘நாங்கள் விஷ்ணுபகவானின் அவதாரமான ராமனை கரையேற்றியவர்கள்!என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டார். வனவாசத்திற்குச் செல்லும் போது ராமன், சீதா, லக்ஷ்மணன் ஆகியோர் கங்கை ஆற்றினைக் கடக்க உதவிய குகனின் வழித்தோன்றல்கள் நாங்கள் என அவர் சொன்னது உண்மை தான் – ‘குகனோடு ஐவரானோம்என ராமனே சொன்னது தான் உங்களுக்குத் தெரியுமே.


பணி முடிந்து உணவருந்தும் மற்றுமொரு உழைப்பாளி!

படகினைச் செலுத்தியபடியே அதில் இருக்கும் கஷ்டங்களையும் சொல்லி வந்தார். நடுநடுவே உட்கார்ந்திருக்கும் நாங்கள் சற்றே அசைந்தாலும் ஒரு மிரட்டல் – ‘ஒழுங்கா உட்காரு, அசையாதேஎன. நீ கொஞ்சம் நகர்ந்தாலும், நான் பார்க்காவிட்டாலும் எனக்குத் தெரிந்து விடும். பாலன்ஸ் மாறினால் துடுப்பு போடும் போது முட்டிகள் இடித்து கை வலிக்க ஆரம்பித்து விடும் எனச் சொல்லி, அதைச் செய்தும் காண்பித்தார்.  

இவரது வாழ்நாளில் பல இளைஞர்களுக்கு படகோட்டுவது எப்படி, அதிலுள்ள நுணுக்கங்கள், வழிகள் என பலதையும் சொல்லிக் கொடுத்ததாகச் சொல்லிய குகன் அவர்கள், எதிர்பட்ட பல படகோட்டிகள் தன்னிடம் பயின்றவர்கள் என்பதில் பெருமை கொண்டார். செல்லும் வழியில் எதிர்படும் பல படகினைச் செலுத்தியவர்கள் இரண்டு பேர்கள் – பயணம் செய்தவர்கள் என்னமோ எங்களைப் போலவேதான்.  பத்து பேர் கொண்ட படகை இரண்டு பேர் துடுப்புப் போட்டுச் செலுத்தினால் கொஞ்சம் இலகுவாக இருக்கும் தானே. ஆனால் இவரோ தனியாகவே செலுத்துகிறார்.

எங்களை ஏற்றிக்கொள்வதற்கு முன்னர் இரண்டு பிஸ்கெட்டுகளை உண்டு இரண்டு மிடறு தண்ணீர் அருந்தினார். அவ்வளவு தான். வேறு எதுவும் சாப்பிட்டால் வயிறு முழுவதும் இருக்கும்போது தங்களால் படகு செலுத்த முடியாது. படகோட்டி முடித்து வந்து தான் சப்பாத்தி சாப்பிடுவேன் என்று சொல்கிறார்.

நாளொன்றுக்கு மூன்று அல்லது நான்கு முறை பயணிகளை இப்படி அழைத்துச் செல்வதில் இவருக்குக் கிடைக்கும் பணம் வைத்து தான் இவரது வாழ்க்கை ஓடுகிறது. எல்லா நாட்களும் இப்படி கிடைக்குமெனச் சொல்ல முடியாது. கிடைக்காத போது வாழ்க்கை கடினமெனச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இருந்தும் கடினமான படகோட்டும் பணி செய்வதில் இவருக்கு ரொம்பவும் பெருமை. எங்களை சங்கமத்திற்கு அருகில் அழைத்துச் சென்று அங்கே குளிக்க ஏதுவாய் இருக்கும் இடத்தில் இறக்கி விட்டு நாங்கள் குளித்து முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை சும்மா இருக்கப் போவதில்லை அவர் – படகில் கொஞ்சமாக இருக்கும் தண்ணீரை அப்புறப் படுத்த வேண்டும்!

நாங்கள் சங்கமத்தில் குளித்து முடித்து திரும்பவும் யமுனைக் கரைக்கு வந்த போது இறங்குமிடத்திற்கு முன்னரே எங்களிடம் படகோட்டியதற்கு கூலியைக் கொடுக்கும்படி கேட்டார் – காரணம் ஹாக்கி மட்டைக்காரர்களுக்கு நேரே வாங்கினால் அவர்கள் பணத்தினைப் பிடுங்கிக் கொண்டு இவருக்கு சொல்பமே தருவார்கள் என்பதால். ஆயிரம் ரூபாய் பேசியிருந்தாலும் கூடவே கொடுத்து அவரை மகிழ்வித்தோம். உழைப்பிற்கும், அதுவும் அவரது முதிர்ந்த வயதிற்கும் நிச்சயம் மரியாதை செய்ய வேண்டுமல்லவா? அட, இப்பகுதியின் ஆரம்பித்தில் வயது என்ன எனக் கேட்டிருந்தேனே? யூகித்து விட்டீர்களா?


எங்கள் குகன்!

அவரது வயது அப்படியொன்றும் அதிகமில்லை நண்பர்களே....  75 வயது! இதோ நீங்களே பாருங்களேன் இந்த உழைப்பாளியை! சரியாக யூகித்தவர்கள் தங்களைத் தாங்களே முதுகில் தட்டிக் கொள்ளலாம்!

படகைச் செலுத்தியபடியே செல்லும் வழியில் இருந்த கோட்டை, அதில் சில இடங்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவற்றையும் சொன்னார். அவற்றையெல்லாம் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.



டிஸ்கி: இப் பகிர்வு நேற்றே வெளியிட்டு இருக்க வேண்டியது! ஆனால் அடுத்த பயணம் முடித்து இரவு 12.00 மணிக்கு வந்ததால் இதை எழுதி வெளியிடுவதில் தாமதம். இக்கட்டுரையின் அடுத்த பகுதி வழக்கம் போல் அடுத்த திங்களன்று வெளி வரும்!
 

20 கருத்துகள்:

  1. படங்கள் + தகவல்கள் அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.

      நீக்கு
  2. உழைப்பிற்கும், அதுவும் அவரது முதிர்ந்த வயதிற்கும் நிச்சயம் மரியாதை செய்ய வேண்டுமல்லவா?

    பாராட்டுக்கள்.........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  3. முதியவரை ஆரம்பத்திலேயே கண்டுகொண்டோம். :) அவரை வாழ்த்துவோம்.

    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  4. ராமன், சீதா, லக்ஷ்மணன் ஆகியோர் கங்கை ஆற்றினைக் கடக்க உதவிய குகனின் வழித்தோன்றல்கள் நாங்கள் என அவர் சொன்னது உண்மை தான் – ‘குகனோடு ஐவரானோம்’ என ராமனே சொன்னது தான் உங்களுக்குத் தெரியுமே.//

    பெயர் தெரியவில்லை என்று குகன் என்று நீங்கள் வைத்த பேர் பொருத்தம் தான்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. நீங்கள் உங்களின் இன்றைய பதிவில் இப்பதிவினைப் பற்றிக் குறிப்பிட்டதால் கண்டுகொண்டு இங்குவந்து வாசித்தேன். அதற்கும் நன்றி!

    அருமையான கட்டுரை.
    அப்படியே நானும் உங்களின் ஓடத்தில் கரையில்.. ஓ! ஓடக்காரர் குகன் திட்டுகிறார்... நடுவில் அமர்ந்திருந்து அத்தனையையும் ரசித்தேன்...:)

    அருமையாக உங்கள் அனுபவம் பேசுகிறது. குகனின் வயதில் விக்கித்துப்போனேன்.
    படங்கள் அருமை.
    கூடவே யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே.... பாடலும் பாடிக்கொண்டே.....

    உங்களுக்கும் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  6. 75 வயதில் படகு ஒட்டுறாரா? அவருக்கும் துணிச்சல் அவரை நம்பி இறங்கிய உங்களுக்கு அச ஐ மீன் அபாரத் துணிச்சல். இருந்தாலும் நெகிழ்ச்சியான அனுபவம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      தைரியம் யாருக்கு அதிகம் என எனக்கும் கேள்வி எழுந்தது! சென்று வந்த பின்!

      நீக்கு
  7. வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம் என்பது போல் படகோட்டி வரை விடாமல் விஷயத்தை அள்ளரீங்க ,பாருங்களேன் சப்பாதியே வயிறு முட்டும் படி இருக்கும்னா நம்ம போல அரிசி சாப்பிட்டால் அவ்வளவுதான் போல உரமேறிய உடம்பு 75 தையும் தாங்குது
    மேலும் காத்திருக்கிறேன் அறிய

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.....

      நீக்கு
  8. குகனோடு உங்கள் அனுபவம் சுவையோ சுவை. உங்களது எழுத்தில் நாங்களும் உங்களுடன் பயணிக்கிறோம்.
    தெளிவான எளிமையான நடைக்குப் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு
  9. அருமையான பதிவு. உங்களோடு பேசும் அளவுக்கு ஹிந்தி தெரிந்திருக்கே! உள்ளூர்க்காரராக இருந்தபடியாலோ? நல்ல அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருப்பார் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்மா... அவங்க பாஷையோட ஹிந்தியும் தெரிஞ்சு வைச்சிருந்தா தானே நல்லது.

      அவரோடு பேசியதில் நிறைய விஷயங்கள் தெரிந்தது....

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  10. குகன் - பெயர் பொருத்தம்தான். குகனோடு ஐவரானோம் அவரும் ராமாயணக் கதையின் குகனைச் சொல்லியிருப்பது சிறப்பு. பாவம் இப்படியானவர்கள். படகு துடுப்பு போட்டு ஒட்டுவது ரொம்ப சிரமம். அனுபவம் உண்டு.

    மட்டுமல்ல உட்கார்ந்திருப்பவர்கள் எடை சரியாக பாலன்ஸ் ஆகி இருக்க வேண்டும் இரு பக்கமும் இல்லை என்றால் படகு கவிழ்ந்திட வாய்ப்பு மிக அதிகம்.

    பாவம் இவர்களின் பிழைப்பு. நீங்கள் கூடுதல் கொடுத்து அவரை மகிழ்வித்தது அவருடைய உழைப்பை உயர்த்திக் காட்டும் செயல். எங்கெல்லாமோ பேரம் பேசாமல் பைசாவை அள்ளி விடுகிறோம் இவரைப் போன்றவர்களுக்குக் கொடுப்பதில் தவறே இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....