எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, April 2, 2013

அன்னம் விடு தூது – 6 – பத்மநாபன்அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் ஐந்தாம் கவிதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். இக்கவிதையினை எழுதியது எனது நண்பர் திரு பத்மநாபன் [இவர் தனியாக வலைப்பூ ஒன்றும் வைத்தில்லை].  எனது பதிவுகளில் ஈஸ்வரன் என்ற பெயரில் கருத்துகள் பகிர்வது அவரே.  தில்லியில் என்னுடன் பணி புரிகிறார்.

இதோ அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் ஐந்தாவது கவிதை!

பட உதவி: சுதேசமித்திரன் 1957


ஓவியனின் தூரிகையை ரசிப்பதா! இல்லை
அவன் வரைந்த காரிகையை ரசிப்பதா!

சேலையை ரசிப்பதா! இல்லை
வனச் சோலையை ரசிப்பதா!
அன்னத்தை ரசிப்பதா! இல்லை
அவள் கன்னத்தை ரசிப்பதா!

அந்த தண்மலரை ரசிப்பதா! இல்லை
இந்தப் பெண்மலரை ரசிப்பதா!
நகையாடும் மங்கையினை ரசிப்பதா! இல்லை
மென்னகையோடும் மலர்முகத்தை ரசிப்பதா!

நீரோடை சலசலப்பை ரசிப்பதா! இல்லை
மேலாடை வனவனப்பை ரசிப்பதா!
நீலவான மேகத்தை ரசிப்பதா! இல்லை
அன்னத்தின் மோகத்தை ரசிப்பதா!

ஓவியனின் தூரிகையை ரசிப்பதா! இல்லை
அவன் வரைந்த காரிகையை ரசிப்பதா!
ரசித்தே தீர்வதென்று நல்லமனம் சொல்லியதால்
நங்கைதனை நான் ரசித்த ரசிப்பதனைச் கேட்பீரே!

தென்றலைத் தூது விட்டால் திசை மாறிப் போகுமென்று
அன்னத்தைத் தூதுவிட அலைமோதி நிற்பவளை
என்பார்வை விழியாலே தூதனிப்பி ரசிக்கின்றேன்!

நன்னீரைத் தூது விட்டால் நனைந்தே போகுமென்று
அன்னத்தைத் தூது விட அருகே அழைப்பவளை
என்னுளத்தை இழந்தபின்னும் தூரனின்று ரசிக்கின்றேன்!

தாமரையை தூது விட்டால் ஒட்டாமல் போகுமென்று
யாருரைக்கக் கேட்டதாலோ தவித்தே நிற்பவளை
நேருரைக்கும் காதலுடன் தனியாய் ரசிக்கின்றேன்!

ஒட்டுக்கும் உறவுக்கும் ஒருவர் துணை வேண்டுமென்றோ!
எட்ட நிற்கும் நானுனக்கு ஒட்டாக உறவாக
கட்டுப்பட்டு வந்திடவா! காதல் ரசம் தந்திடவா!

தனியாக நிற்கின்றேன்! தள்ளி நின்று ரசிக்கின்றேன்!
கனியமுத இதழாலே ஓரிசைவு தந்து விட்டால்
இனி்தான இல்லறத்தை இணைந்தே ரசித்திடுவோம்!

-          பத்மநாபன்.

என்ன நண்பர்களே, நண்பர் பத்மநாபனின் கவிதையை ரசித்தீர்களா? இவரை பலமுறை வலைப்பூ ஒன்றினை துவங்கச் சொல்லி விட்டேன்! இவரும் வலைப்பூ ஒன்றினை தொடங்கவேண்டும் என நினைக்கிறீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

கவிதைக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! கவிதை எழுதிய திரு பத்மநாபன் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!


அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

42 comments:

 1. வாழ்த்துக்கள் புதிய கவிஞர் நண்பனை அறிமுகம்
  செய்ய எண்ணும் உங்களுக்கும் உங்கள் நண்பனிற்கும்
  விரைவில் தளத்தை ஆரம்பிக்கச் சொல்லுங்கள் அது தான் சிறந்த வழி !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   தளம் ஆரம்பிக்கச் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். பிடி கொடுக்க மாட்டேன் என்கிறார். :)

   Delete
 2. உங்கள் நண்பர் பத்மநாபனின் கவிதை நன்றாக இருக்கிறது.
  வாழ்த்துக்கள்.

  அவர் வலைப்பூ ஆரம்பித்து எழுதலாமே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   சொன்னால் கேட்டால் தானே! அடம் பிடிக்கிறார்! நேரம் இல்லை எனச் சொல்வதால் என்னுடைய வலையிலே அவ்வப்போது எழுதச் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். பார்க்கலாம்.

   Delete
 3. ரசிக்க வைத்த அருமையான் கவிதைக்குப் பாரட்டுக்கள்....

  விரைவில் வலைப்பூவொன்று தொடங்கிட வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. உங்கள் நண்பரின் கவிதை நன்றாக இருக்கிறது. அவரும் வலைத்தளம் ஆரம்பிக்கலாம் ஆனால் கவிதை மட்டும்தான் எழுதப் போகிறார் என்றால் உங்கள் தளத்திலேயே அவர் எழுதலாம்.வலைதளத்தில் கவிதையை படிப்பவர்களைவிட எழுதுபவர்கள் மிக அதிகம். ஆனால் கவிதையும் தாண்டி பல அனுபவங்களை எழுதப் போகிறார் என்றால் வலைத்தளம் ஆரம்பிக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

  ReplyDelete
  Replies
  1. வேலை பளு காரணமாக அவரால் வலைப்பூ ஆரம்பிக்க முடியவில்லை எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். பார்க்கலாம்.

   என்னுடைய பக்கத்திலும் அவ்வப்போது எழுதச் சொல்லி இருக்கிறேன். எல்லாம் அவர் கையில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

   Delete
  2. //கவிதை படிப்பவர்களை விட எழுதுபவர்கள் அதிகம்
   முறுவலோடு தலையாட்ட வைக்கிற கணிப்பு Avargal Unmaigal.

   Delete
  3. உண்மைகள் சொன்னது உண்மை!

   நன்றி அப்பாதுரை.

   Delete
 5. கவிதை மிக நன்று,
  கவிதை எழுத எடுத்துக் கொண்ட நேரத்தில் வாரம் ஒரு கவிதை எழுதி பதிப்பிக்கலாமே!!
  அதாவது பதிவு போடலாமே. வாழ்த்துகள் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் சொல்றேம்மா....

   தங்களது வருகைக்கும் கவிதையினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 6. கவிதை அருமை. தாராளமாக உங்கள்நண்பர் வலைபூ தொடங்குவதை வரவேற்கிறோம்.
  அடடடா நான் இந்தப் படத்திற்கு கவிதை எழுத மறந்துவிட்டேனே!
  முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன். கவிதை நீங்களும் எழுதலாம்.....

   Delete
 7. அனைத்து வரிகளும் அருமை. இறுதி வரிகளில் இன்பம்:

  //ஒட்டுக்கும் உறவுக்கும் ஒருவர் துணை வேண்டுமென்றோ!
  எட்ட நிற்கும் நானுனக்கு ஒட்டாக உறவாக
  கட்டுப்பட்டு வந்திடவா! காதல் ரசம் தந்திடவா!

  தனியாக நிற்கின்றேன்! தள்ளி நின்று ரசிக்கின்றேன்!
  கனியமுத இதழாலே ஓரிசைவு தந்து விட்டால்
  இனி்தான இல்லறத்தை இணைந்தே ரசித்திடுவோம்!//

  மிகவும் அழகு ! ;)))))

  வலைப்பூ துவங்க இவரும் ”ஓரிசைவு தந்து விட்டால்” வெங்க்ட்ஜிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மகிழ்ச்சியே !! மனமார்ந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. கவிதையை ரசித்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி வை.கோ. ஜி!

   உங்களது அழைப்பினை அவரிடமும் சொல்கிறேன்.

   Delete
 8. உங்க நண்பர் வலைப்பூ ஆரம்பிச்சதும் அவரோட வலைப்பூ லிங்கை அனுப்புங்க சகோ.

  ReplyDelete
  Replies
  1. ஆரம்பித்தால் நிச்சயம் சொல்கிறேன் சகோ.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 9. எதை ரசிப்பது என்று கேட்டு ஒன்றுவிடாமல் ரசித்திருக்கிறாரே.. கவிதை நயத்தோடு!

  //தனியாக..தள்ளி நின்று..
  ஒருவேளை ப்லாக் எழுதுவதைப் பற்றி குறிப்பாகச் சொல்றாரோ?

  ReplyDelete
  Replies
  1. வேறு குறிப்பாகவும் இருக்கலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 10. தவித்துத்தான் தில்லியிலே
  துணையின்றி நிற்பவளை
  தனியாக ரசிப்பவரே !!

  பார்த்தது போதுமய்யா
  பள்ளி கொண்ட பத்மனாபா !!

  "தென்றலைத் தூதுவிட்டால்
  திசை மாறிப்போகுமென்று "
  அணு உலை பக்கத்தில்
  அருகில் நீர் போகாதீர்.

  " இனிதான இல்லறத்தை
  இணைந்தே ரசித்திடவே " - நின்
  இல்லாள் இருபது முறையுனக்கு
  செல் அடித்து நொந்து விட்டாள்.

  நீயிருக்கும் நிலைதன்னை - காவல்
  நோக்குமுன்னே நுகருமுன்னே
  நீயாக நகர்ந்துவிடு.
  வீடு நோக்கி ஓடிவிடு.


  அன்புடன்,
  சுப்பு தாத்தா. .
  www.subbuthatha.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. பத்து முதல் படி எடுத்து வைத்தாகிவிட்டது. இனி அடுத்து வலைப்பூ ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி. வெங்கட் கொடுத்தப் பூங்கொத்திலிருந்து ஒரு பூவை உருவி அதை வலைப்பூவாக மணம் கமழச் செய்ய வாழ்த்துகள்!

   Delete
  2. ஆஹா கவிதைக்கு எதிர் கவிதை! ரொம்ப நல்லா இருக்கு போட்டி.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
  3. ஆமாம் சீனு. நானும் ரொம்ப நாளா சொல்றேன்! அண்ணாச்சி கேட்டாத்தானே!

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிடா சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]

   Delete
 11. திரு பத்மநாபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  விரைவில் வலைத்தளம் தொடங்குவதற்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 12. மிக மிக அருமையாக இருக்கிறது உங்கள் நண்பர் பத்மநாபனின் கவிதை.
  எத்துணை ரசனை. அவர் ரசனையை விபரிக்க வார்த்தைகளை தேடவேண்டி இருக்கிறதே...
  அருமை! மிகமிகச் சிறப்பு!..

  உங்கள்நண்பர் வலைப்பூ தொடங்குவதை நானும் விரும்புகிறேன். இத்தனை திறமையானவர் இலைமறை காயாக இருக்காமல் அவரை வெளியே கொண்டுவாருங்கள் சகோதரரே...

  அருங்கவி படித்த உங்கள் நண்பருக்கும் அதனை இங்கு பகிர்ந்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 13. ரசிகர் திரு பத்மநாபனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  வெங்கட் நாகராஜன் சார், நானும் இப்படித்தான் நேரம் இல்லை என்று வலைப்பூ ஆரம்பிக்காமல் இருந்தேன். ஆரம்பித்ததும் கிடைத்த மகிழ்ச்சி அதிகம். திரு பத்மநாபனிடம் சொல்லுங்கள் வலைப்பு ஆரம்பிக்க.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரமணி.

   Delete
 14. நீங்கள் கோடு (கோட்டோவியம்) போட்டால் உங்கள் நண்பர் ரோடு (ரசிப்புக் கவிதை) போட்டுவிட்டாரே!

  உங்கள் நண்பரைப் போலவே எங்களுக்கும் எதை ரசிப்பது என்று தெரியவில்லை.
  அவள் அன்னம் விடு தூது என்றால் இவர் தன் விழியசைப்பாலே (உங்கள் வலைத் தளத்தின் மூலமே) தூது விட்டிருக்கும் அழகை ரொம்பவும் ரசித்தேன்!

  வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete


 15. சித்திரத்தில் இருக்கும் எல்லாவற்றையும் கவி நயத்தோடு வருணித்து அழகாய் எழுதி இருக்கிறார். வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சங்கீதா.

   Delete
 16. கவிதையில் தூது விட்டார் அன்னத்தை ஐந்து பேர்
  கவர்ந்து இழுக்கும் அழகான கற்பனைத்தேர்!
  நன்றி வெங்கட் நாகராஜ்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 17. உங்கள் நண்பருக்கு என் வாழ்த்துக்கள்.
  கவிதைகளோ... கட்டுரைகளோ..
  எதுவாக இருந்தாலும் இணையத்தின் மூலம்
  தமிழை மேலும் வளர்க்க உங்களின் நண்பரை
  வருக.. வருக... என்று நானும் அழைக்கின்றேன்.

  பகிர்விற்கு நன்றி நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 18. இரசித்தேன்

  வாழ்த்துகள் நண்பர் திரு பத்மநாபன் அவர்களுக்கு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திகழ்.

   தங்களது முதல் வருகையோ? தங்களது வரவு என்னை மகிழ்வித்தது.....

   Delete
 19. கைப்புள்ளையா இருந்த என்னை கவிப்புள்ளையாக அறிமுகப்படுத்திய தங்களுக்கும், என் கவியையும் ரசித்து வான்கவியே(?) வலைப்பூவிற்குள் வருக என்று அழைத்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி! நன்றி!

  (இந்தியா கேட்டில் ஃப்ளக்ஸ் போர்டு வைக்கப் கூடாதுன்னு சொல்லிட்டாங்க!)

  ReplyDelete
  Replies
  1. அட இந்தியா கேட் பக்கத்துல ஃப்ளெக்ஸ் வைச்சா தான் அடுத்த கவிதை எழுதுவீங்க போல!

   சீக்கிரம் வேற ஒரு பதிவு எழுதி அனுப்புங்க அண்ணாச்சி. இல்லைன்னா பதிவு எழுதுங்க சீக்கிரம்னு உங்க வீட்டு வாசல்ல ஃப்ளெக்ஸ் வச்சிடுவோம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....