திங்கள், 1 ஏப்ரல், 2013

மஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 3 – படகுத்துறையில் கொள்ளை


மஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 1 பகுதி 2

சென்ற பகுதியில் உங்களனைவரையும் படகில் உட்கார வைத்துச் சென்றுவிட்டேன். ”ஓடம் நதியினிலே, ஒருத்தன் மட்டும் கரையினிலே” என்று நீங்கள் பாடினீர்களோ என்னமோ தெரியாது :)

யமுனை நதிக்கரைக்கு வந்தால் நிறைய நபர்கள் கையில் ஒரு ஹாக்கி ஸ்டிக்-உடன் காத்திருந்தார்கள். யமுனைக் கரையில் ஹாக்கி பயிற்சி செய்து இந்தியாவிற்காக அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு கொண்டு தங்கப் பதக்கம் வாங்கித் தரப்போகும் நல்லெண்ணம் கொண்டவர்களோ என தவறாக எண்ண வேண்டாம். இவர்கள் அனைவரும் கும்பமேளாவிற்கு வந்து கங்கை/யமுனையில் குளிக்க படகினை உங்களக்கு ஏற்பாடு செய்து தரும் ஏஜென்டுகள்.

சாதாரணமாக படகின் மூலம் மூன்று கிலோமீட்டர் தொலைவு சென்று அங்கே நீங்கள் குளிக்கும்வரை காத்திருந்து மீண்டும் ஏற்றின கரையிலேயே இறக்கி விட அரசாங்கம் வைத்திருக்கும் கட்டணம் நபர் ஒருவருக்கு 90/- ரூபாய். ஆனால் இந்த ஏஜெண்டுகள் ஆரம்பிக்கும் தொகை ஒரு படகிற்கு [எட்டு முதல் பத்து பேர் வரை பயணிக்கும்] 4000 ரூபாய். அப்படி இப்படி என்று பேசி குறைத்தாலும் 3000 ரூபாய்க்கும் கீழே வர மாட்டார்கள். அதாவது ஒரு பயணிக்கு 300 ரூபாய்க்கும் மேலே.

இப்படி பேசி கடினமாக உழைக்கும் படகோட்டிக்கு தந்துவிடுவார்கள் என தப்பான எண்ணம் வேண்டாம். படகோட்டிக்கு அரசாங்கம் நிர்ணயித்த கட்டணமான ஒரு பயணிக்கு 90க்கும் மேலே பத்து ரூபாய் போட்டு 100 ரூபாய் – சென்னையில் ஆட்டோவில் செல்லும் போது மீட்டருக்கு மேலே போட்டுக்கொடுப்பது போல! மீதி பணம் அனைத்தும் ஹாக்கி வீரருக்கு!

இதற்கிடையே அங்கே காத்திருக்கும் மக்களுக்கும் பொறுமை இல்லை. எவ்வளவு கொடுத்தாவது படகில் சவாரி செய்ய தயாராக இருக்கிறார்கள். அதனால் ஹாக்கி வீரர்களுக்குக் கொண்டாட்டம். படகோட்டிகளுக்கு திண்டாட்டம். சிலர் மட்டுமே அவர்களிடம் பேரம் பேசுகிறார்கள். நாங்கள் சென்றபோது எங்களிடமும் நிறைய பணம் கேட்டார்கள். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து எங்களுடன் வந்திருந்த நபர், தெரிந்த படகோட்டி வரும்வரை கொஞ்சம் பொறுமையாகக் காத்திருப்போம் எனச் சொன்னதால் காத்திருந்தோம்.

ஆந்திராவிலிருந்து வந்திருந்த பலரை ஹாக்கி வீரர்கள் ஏமாற்றிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. அதில் ஆந்திர காவல் துறையில் பணியாற்றும் ஒருவர் மட்டுமே இவர்களை எதிர்த்து குரல் கொடுத்தார். தனியாளாக இவர்களை துரத்திக் கொண்டிருந்தார். கரையில் காவலுக்கு இருந்த உத்திரப் பிரதேச காவல் துறையினைச் சேர்ந்தவர்கள் பார்வை இங்கே இல்லாதமாதிரியே இருந்தார்கள்!

ஓடக்காரர்களை மிரட்டி வைத்திருக்கும் இந்த நபர்கள் கும்பமேளாவிற்கு வந்திருக்கும் நபர்களை நேரடியாக படகோட்டிகளிடம் பேச விடுவதில்லை. அப்படியே பேசினாலும், படகோட்டிகளிடம் அவர்களது பாஷையில் [ஹிந்தி அல்ல] திட்டுகிறார்கள். நாங்கள் எங்களை கங்கையில் கரையேற்றப் போகும் படகோட்டிக்காகக் காத்திருந்தோம். சரி காத்திருக்கும் வரை சும்மா இருக்க வேண்டாமே என அங்கே சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன்.

நாங்கள் நின்ற இடத்திலிருந்து வலப் பக்கம் யமுனையின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய இரும்புப் பாலம் – மேலே ரயிலும், அதன் கீழே சாலை வாகனங்களும் செல்லக் கூடிய பாலம். இதன் வயது 150 க்கு மேல்! இடப் பக்கம் புதியதாகக் கட்டிய தொங்கு பாலம். இரண்டையும் சில புகைப்படங்கள் எடுத்தேன். எடுத்த சில புகைப்படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு!








என்ன புகைப்படங்களை ரசித்தீர்களா? இதற்குள் எங்களுக்கான படகோட்டியும் வந்துவிட்டார். அவரிடம் நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து எங்களுடன் வந்தவர் அவருடைய பாஷையில் பேசி ”வேணி மாதவ் கோவில் மஹாராஜ்” அனுப்பியதாகச் சொன்ன உடனேயே படகோட்டி எட்டு பேர் செல்ல ஆயிரம் ரூபாய் எனச் சொல்லவே அவருடைய படகில் ஏறினோம். அது என்ன மஹாராஜ் எனச் சந்தேகத்துடன் படிப்பவர்களுக்கு, இங்கே கோவிலில் பூஜை செய்யும் நபரை மஹாராஜ் என்றே அழைக்கிறார்கள்.

படகில் படகோட்டி சொன்னது போல பக்கத்திற்கு நான்கு பேராக அமர்ந்து கொள்ள, எங்களது படகுப் பயணம் தொடங்கியது. படகோட்டி படகினைச் செலுத்தியபடியே எங்களுக்கு சில கதைகளைச் சொல்லத் தொடங்கினார். அது என்ன கதை, அவருடன் என்ன பேசினோம் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

பயணத்தின் அடுத்த பகுதியில் உங்களைச் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

36 கருத்துகள்:

  1. நிறைய உபயோகமான தகவல்கள்.
    படகுக்கு காத்து இருக்கும் போது எடுத்த படங்கள் எல்லாம் அழகு.
    இரண்டு கன்றுகளின் அன்பு அரவணைப்பு அருமை.
    பட்கோட்டியின் கதை கேடக ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. படகுப் பயணப் பகிர்வுகள் தரும் பாடம் ...

    படங்கள் அருமை ..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. அந்த ஹாக்கி வீர்ரர்கள் இப்படி எல்லாம் பயணிகளை தொல்லை படுத்தினால் எப்படி சுற்றுலாவை ரசிக்க முடியும் இல்லியா?

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.

      நீக்கு
  3. சுவாரசியமான பயணக் கட்டுரை... சுவை கூடியுள்ளது சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  4. எனக்கு பொதுவாகவே இப்படி ஊருலா, பயணக்கட்டுரைகள், அனுபவங்கள், படங்களுடன் படிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. ஏனினில் நமக்கு போக கிட்டாத எல்லாவற்றையும் ஒவ்வொருதரும் தரும் அவரவர் அனுபவங்களுடன் நாமும் பயணிப்பது போன்ற ஓருவகை உணர்வு.

    அவ்வகையில் உங்களின் இந்தப் பதிவும் எனக்கு அருமையாக இருக்கிறது. அழகிய படங்கள். இதன் பகுதி1, பகுதி2 பதிவுகளையும் படித்தேன் ரசித்தேன்.

    இங்கு இந்த ஹொக்கி கம்புகளுடன் இவர்களைப்பற்றிப்பார்க்கும்போதுதான் மனதுக்குள் த்ரில் படம் போல் உணர்வு வருகிறது.

    தொடருங்கள். பின் தொடருகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  5. ரசிக்க வைக்கும் பயணம் + படங்கள்... தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. மிகவும் சுவாரஸ்யமான பயணக்கட்டுரை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  7. படங்களைப் பார்த்து அசந்துவிட்டோம்!Super photography!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  8. பார்தீங்களா டீ .வி சீரியல்களில் வருவது போல் தொடரை முக்கியமான இடத்தில் நிறுத்த உங்களுக்கு வருகிறது ம்ம்....
    படங்கள் ரொம்ப அழக வந்திருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

      நீக்கு
  9. ஹாக்கி மட்டை எதற்காக உருவாக்கப்பட்டதோ, அதைத் தவிர எல்லாவற்றிற்கும் பயன்படுகிறது.

    புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

      நீக்கு
  10. படங்களுடன் பதிவு சுவாரஸ்யம். ஹாக்கி மட்டை தடியர்களைக் கடந்து நாங்களும் உங்களுடன் படகில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. இத்தனை தண்ணீரை தமிழ்நாட்டுக்காரர்கள் படத்தில் தான் பார்க்கவேண்டும் 
    அழகான பாலப்  படங்கள் 
    மகாராஜ் - நம்ம ஊர் மகாராஜ்கள் பொறாமைப்படலாம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தொடர்கிறேன் மாதவன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி....

      நீக்கு
  13. படங்களும் பகிர்வும் அருமை வெங்கட். படகோட்டிகளின் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  14. பாலம் அருமையாக இருக்கின்றது.

    என்னே கன்றுகளின் பாசப் பிணைப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  15. எளியோர்களை மிரட்டிப் பணிய வைக்கும் வலியோர்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர்.
    யமுனைக் கரையிலும் இதேபோல நடக்கிறது.
    நீங்கள் போன போது கூட்டம் இல்லையா? கும்பமேளா என்றால் கூட்டம்தான் நினைவுக்கு வருகிறது.
    நதிகளைப் பார்ப்பதே ஒரு உற்சாகம்தான். அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டம் கோடிக்கணக்கில் இல்லை! ஆயிரக் கணக்கில் இருந்தது!

      படங்கள் ரசித்தமைக்கு நன்றிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு
  16. //அப்படியே பேசினாலும், படகோட்டிகளிடம் அவர்களது பாஷையில் [ஹிந்தி அல்ல] திட்டுகிறார்கள்.//

    போஜ்புரி அல்லது பிஹாரி. சில சமயம் மைதிலியாகவும் இருக்கலாம், பெரும்பாலான படகோட்டிகள் பிஹாரிகளே. காசியில் ஹனுமான்காட்டில் நாங்கள் தங்கி இருந்த வீட்டுக் காரரின் சொந்தப் படகோட்டி தமிழிலேயே தெரிந்தவரை பேசுவார். ரசிப்போம். திரிவேணி சங்கமத்திலும் அவரே ஏற்பாடு செய்திருந்ததால் மொத்தச் செலவில் அடங்கி விட்டது. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பீஹாரி பேசியிருந்தா கொஞ்சம் கொஞ்சம் புரிஞ்சுருக்கும். சுத்தமா மைதிலி பாஷையில் பேசியதால் புரியல.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  17. தில்லியில் இருந்து போகும்போதே ஆளுக்கு ஒரு ஹாக்கி மட்டை வாங்கி கொண்டு போய் இருந்தால் மிகவும் உபயோகமாக இருந்திருக்குமோ !!!!!!! அடுத்த முறை முயற்சி செய்யலாம்
    நல்ல பகிரவு. நீண்ட நாட்களுக்குப்பின் உங்களுடுன் தொடர்பு கொள்கிறேன். வாழ்த்துகள்.
    விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கும் கருத்துப் பகிர்வு செய்தமைக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....