திங்கள், 25 மார்ச், 2013

லல்லுவால் வந்த தொல்லை




மஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 2



இப்பதிவின் முதல் பகுதியினைப் படிக்க இங்கே சுட்டலாம்!



சென்ற பகுதியில் சொன்னது போல [B]பாகல்பூர் [G]கரீப் ரத் வண்டியில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் வேறு சிலர் அமர்ந்திருந்தனர். என்ன குழப்பம் என்று வெளியே சென்று பட்டியலைப் பார்க்கச் சென்றால் இந்த குழப்பத்திற்குக் காரணகர்த்தா முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் என்பது புரிந்தது.



பட உதவி: கூகிள்




அவர் ரயில்வே துறை மந்திரியாக இருந்த சமயத்தில் எல்லா ரயில் பெட்டிகளிலும் பக்கவாட்டிலும் மூன்று படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகளை உருவாக்க வேண்டும் என ஒரு மிகவும் மட்டமான முடிவினை எடுத்தார். 

சாதாரணமாகவே, உயரமாக இருக்கும் என் போன்றவர்களால் பக்கவாட்டில் உள்ள படுக்கைகளில் படுக்க முடியாது. இருக்கும் கொஞ்ச இடத்திலும் நடுவே இன்னுமொரு படுக்கையை அமைத்து விட்டதால், கொஞ்சம் குண்டானவர்களும் அந்த நடு படுக்கையில் உள்ளே நுழைவது கடினம் – அப்படியே நுழைந்து விட்டால் வெளியே வருவது அதைவிட கடினம்!



ரயில்வே துறை முன்பதிவு செய்யும்போது சாதாரண 72 படுக்கைகள் கொண்ட பெட்டிக்கு ஏற்ப படுக்கை எண்களை நமக்குக் கொடுக்கும். நமக்கு வரும் பெட்டி இப்படி பக்கவாட்டில் மூன்று படுக்கைகள் கொண்ட பெட்டியாக இருந்துவிட்டால், எல்லா எண்களும் மாறிவிடும். அதனால் மீண்டும் பட்டியலில் உங்களுக்குண்டான இருக்கைகளைப் பார்த்து அங்கே சென்று எங்கள் உடமைகளை வைத்து இரவின் மடியில் சாய்ந்தோம்!  



இரவு பத்து மணிக்கு ரயில் கிளம்பியது தான் எங்களுக்குத் தெரியும். நித்திரா தேவியும் ரயிலின் ஆட்டமும் ஓட்டமும் எங்களை தாலாட்ட, சுகமான உறக்கம். காலை ஆறரை மணிக்கு அலஹாபாத் நகரில் கண்விழித்தோம்.



எங்கள் குழுவில் வந்திருந்த ஒருவரின் அலஹாபாத் கிளை அலுவலகத்திலிருந்து இரண்டு கார்கள் வந்திருந்தன. இன்னுமொரு நண்பரின் உறவினர் பல காலமாக அலஹாபாத் வாசி. நான்கு தலைமுறைகளாக அவரது குடும்பத்தினர் தான் அலஹாபாத் நகரின் வேணி மாதவ் கோவிலை நிர்வாகம் செய்பவர்கள். அதனால் அங்கே தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். காரில் நேரே வேணி மாதவ் கோவிலுக்குச் சென்று இறங்கினோம்.



கோவிலுக்குச் சொந்தமான தங்கும் விடுதியில் எங்களது உடமைகளை வைத்து விட்டு அங்கேயே தேநீர்/காபி போட்டு குடித்து விட்டு, சற்றே இளைப்பாறிய பின் திருவேணி சங்கமத்தில் நீராட புறப்பட வேண்டும். இளைப்பாறும் சமயத்தில் வேணி மாதவ் கோவிலைப் பற்றியும் சிறிது பார்ப்போம்!





கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் பழமையானது இந்த வேணி மாதவ் கோவில். அலஹாபாத் நகரின் கீட்கஞ் [Keetganj] பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோவில் யமுனை நதிக்கு அருகிலேயே இருக்கிறது. அலஹாபாத் நகரில் இன்னும் சில வேணி மாதவ் கோவில்கள் இருக்கின்றன. அப்போதைய ராஜா கோவில் கட்டி அந்த இடத்தோடு கோவில் நிர்வாகிப்பவர்களுக்கு எழுதிக் கொடுத்து விட்டனராம்.



கோவில் நிர்மாணிக்கப்பட்ட சமயத்தில் இந்த சாலையில் கோவில் மட்டுமே இருந்திருக்க வேண்டும். தற்போது அந்த சாலையில் பல வீடுகள், கடைகள். கோவிலை ஒட்டியே பல வீடுகள் – சாலையிலிருந்து சில படிகள் ஏறிச்சென்றால் வேணி மாதவனை தரிசிக்கலாம். கோவிலில் சில பழைய ஓவியங்கள் பார்த்து ரசிக்கும்படியாக இருந்தது. அந்தக் காலத்தில் கட்டப்பட்டதால் பெரிய தூண்களும், சூரிய வெளிச்சம் உள்ளே வர ஏதுவாய் சாளரங்களும் என ரம்மியமாக இருந்தது.



என்ன நண்பர்களே கோவில் பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொண்டீர்களா? சரி அடுத்து திரிவேணி சங்கமத்தினை நோக்கிச் செல்ல வேண்டும். கோவிலின் ஒரு ஊழியர் எங்களுக்கு படகினை அமர்த்தித் தர எங்களுடன் வந்தார். அருகிலேயே யமுனை நதி. அங்கே படகுத் துறைக்குச் சென்று, படகில் ஏறி சங்கமத்திற்குச் செல்ல வேண்டும்.  என்ன நண்பர்களே படகில் செல்ல தயாராகி விட்டீர்களா?  அட பார்த்து உட்காருங்க! படகு தத்தளிக்குது பாருங்க. அப்புறம் ஓடக்கார தாத்தா திட்டுவாரு!



எல்லாரும் உட்கார்ந்த பிறகு கிளம்பலாம் சரியா.  அதுக்குள்ள எனக்குக் கொஞ்சம் வேலையெல்லாம் இருக்கு. அதை முடித்து விட்டு வருகிறேன்!



வரும் திங்களன்று இந்த பயணக் கட்டுரையின் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை!



நட்புடன்



வெங்கட்.
புது தில்லி.

34 கருத்துகள்:

  1. நேரில் காண வாய்ப்பில்லாத பல தலங்களை உங்கள் மூலம் கண்டு விட முடிவது மிக மகிழ்வான விஷயம். தொடர்கிறேன் நானும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      நீக்கு
  2. கோவில்களின் படங்களை இன்னும் இணைத்திருக்கலாமே... படம் எடுக்க தடையா...?

    தத்தளிக்கும் படகு பயணத்தை தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிலின் உள்ளே படங்கள் எடுக்கத் தடை. அதனால் தான் படங்கள் எடுக்கவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. ரயில் பயணம் என்பது இன்பமான பயணம் என்று போனால் அங்கே நொந்தலாலா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.

      நீக்கு
  4. //உயரமாக இருக்கும் என் போன்றவர்களால் பக்கவாட்டில் உள்ள படுக்கைகளில் படுக்க முடியாது. இருக்கும் கொஞ்ச இடத்திலும் நடுவே இன்னுமொரு படுக்கையை அமைத்து விட்டதால், கொஞ்சம் குண்டானவர்களும் அந்த நடு படுக்கையில் உள்ளே நுழைவது கடினம் – அப்படியே நுழைந்து விட்டால் வெளியே வருவது அதைவிட கடினம்!//

    மஹா கஷ்டம். நரக வேதனை தான் இது. லல்லு போன்றவர்களை இந்தப் பக்க வாட்டில் உள்ள நடு படுக்கையில் நான்கு நாட்களாவது தொடர்ச்சியாகப் பயணம் செய்ய வைத்து தண்டனை அளிக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்களின் கஷ்டம் அவர்களுக்கும் புரியும்.

    சுவாரஸ்யமான பதிவு. தொடருங்கள், வெங்கட்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லல்லு ஏன் ட்ரைன்ல போகப் போறார்! :) அதனால் அவருக்கு இந்தக் கஷ்டம் புரியாது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  5. படகில் உட்கார வைத்து விட்டு போய்டீங்க ....................

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோ வந்துடுவேங்க! படகுல உட்கார்ந்து கொஞ்சம் இயற்கையை ரசிங்க!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

      நீக்கு
  6. ஆமாங்க சரியா சொன்னீங்க ரயிலில் பயணிகள் படும் கஷ்டங்கள் ஒன்னா இரண்டா. அலகாபாத் பயணத்தில் நாங்களும் உங்க கூடவே பயணிக்கிறோம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடன் பயணம் செய்வதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.

      நீக்கு
  7. லல்லுவிடம் எனக்கு பிடித்த விஷயமே இதுதான். களத்தில் இல்லாவிட்டாலும் தன்னை யாரும் மறந்து விடாமல் இருக்க இப்படி ஏதாவது செய்து வைத்திருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்க முடியுமா அவரை! :)

      தங்களத் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

      நீக்கு
  8. உங்கள் பதிவு அலகாபாத்தில் நான் கழித்த இனிய மூன்று ஆண்டுகளை நினைவு படுத்திவிட்டது.
    அருமை வெங்கட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் பதிவுகள் உங்கள் நினைவுகளை இன்னும் அதிகமாக்கலாம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  9. பால கணேஷ் சொலவது போலத்தான். பயணித்திராத பகுதிகளை உங்கள் பதிவில் கண்டு விடுகிறோம்.. இருந்த இடத்தில் இருந்தே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் சார். எனது பதிவினால் சிலருக்கு உபயோகமிருக்கிறது என நினைக்கும்போது மகிழ்ச்சி!

      நீக்கு
  10. இம்மாதிரி ஆன்மீகப் பிரயாணங்களில் லல்லுவையும் ஒரு விதத்தில் நினைவு கூர்ந்து பகுதி புண்ணியம் அவருககும் போய்விடுகிரது. உங்கள் பிரயாணத்தில் நாங்களும் உடன் வருகிறோம். ரொம்ப இன்ட்ரஸ்டாக இருக்கு. நான் கூட என் பிள்ளை அனுப்பிய கும்ப மேளா படங்கள் போட்டிருந்தேன். விரிவாக சொல்கிறேன் என்று சொன்னான். நீங்கள் சொல்லுங்கள். நான் கேட்கிறேன். சட்டென்று உங்கள் பதிவு பார்த்தேன்.
    இப்படியே சுருக்கு வழியில் வர ஸவுகரியமாக இருந்தது. இலஹாபாத்
    போயிருக்கிறேன். 45 வருஷங்களுக்கு முன். ஸரி இப்போது நானும் வருகிறேன், பிரயாணிப்போம். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா.

      நீங்களும் என்னுடன் வருவதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  11. படகில் இருந்து ரசித்துக்கொண்டே இருக்கின்றோம். அடுத்த பயணத்திற்கு ......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  12. அந்தக் காலத்தில் கட்டப்பட்டதால் பெரிய தூண்களும், சூரிய வெளிச்சம் உள்ளே வர ஏதுவாய் சாளரங்களும் என ரம்மியமாக இருந்தது.

    அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  13. படகில் ஏறி சங்கமத்திற்குச் சென்று திரிவேணி சங்கமத்தில் குளித்தநினைவு வருகிறது. , முதலை வராத இடத்திற்கு அழைத்து செல்கிறேன் என்றார்கள். பலகை போட்டு அதன் மேல் நின்று குளிக்க சொல்கிறார்கள். குளித்ததும் பெரிய கதை! 5 பேருக்கு குளிக்கும் கட்டணம் 800ரூபாய்.(10 வருடம் முன்பு)

    ரயில் நிலையத்திலிருந்து நடந்தே போக இடம் இருந்தும், டாக்ஸிக்காரரும்,அவர் அழைத்து சென்று விட்ட படகுகாரரும் சேர்ந்து எங்களை ஏமாற்றியது எல்லாம் நினைவு வந்தது. குளிக்க போகும் போது பண்டாக்கள் வேறு படகில் துரத்திக் கொண்டு வந்து கங்கா மாதாவிற்கு தேங்காயும் பூ போட சொல்லி தொந்தரவு செய்ததும் நினைவுக்கு வந்து விட்டது.
    உங்கள் அனுபவம் அறிய தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே ஏமாற்றுபவர்கள் நிறையவே கோமதிம்மா. விதம் விதமாக பண்ம் பிடுங்குவார்கள். அதுவும் தெற்கிலிருந்து வந்தவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். மொழி தெரியாத காரணத்தால் தடுமாறும் மக்களை அரை குறை தமிழில் பேசி ஏமாற்றுவதற்காகவே ஒரு கும்பல் இங்கே அலைவதுண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  15. //சாதாரணமாகவே, உயரமாக இருக்கும் என் போன்றவர்களால் பக்கவாட்டில் உள்ள படுக்கைகளில் படுக்க முடியாது. இருக்கும் கொஞ்ச இடத்திலும் நடுவே இன்னுமொரு படுக்கையை அமைத்து விட்டதால், கொஞ்சம் குண்டானவர்களும் அந்த நடு படுக்கையில் உள்ளே நுழைவது கடினம் – அப்படியே நுழைந்து விட்டால் வெளியே வருவது அதைவிட கடினம்!//

    ஆமாம், இந்தக் கொடுமையை நாங்களும் அனுபவித்திருக்கோம். :))) ஒரு முறை அவருக்கு இப்படித்தான் கொடுத்துட்டாங்க. ஒளரங்காபாத் போனப்போனு நினைக்கிறேன். அப்புறமா டிடிஆர் கிட்டே சண்டை போட்டு நடுப் படுக்கையில் யாரையும் விடாமல் பார்த்துக் கொண்டோம். ஆனாலும் அவர் ஏறி இறங்கும் ஒவ்வொரு நிமிடமும் பயம்மா இருக்கும். கழுத்து வேறே பிரச்னை ஆச்சே! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லல்லு ப்ரசாத் போய் பல மந்திரிகள் வந்தாலும், இன்னமும் சில வண்டிகளில் வைத்திருக்கிறார்கள்..... ரொம்பவே கஷ்டம் இது.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

      நீக்கு
  16. என்னவோ என்னால் எல்லாரோட பதிவுகளுக்கும் வந்து படிக்க முடியாமல் போகிறது. பலருக்கும் கோபம், வருத்தம், உங்களுக்கும் கோபம்/வருத்தம்னு நினைக்கிறேன். :))))))

    திரிவேணி சங்கமத்தில் குளித்த அனுபவம் மறக்க முடியாதது. என் மாமியார் அந்தப் பலகைக்கு மேல் அப்படியே கங்கையில் நீச்சலே அடித்தார். :))) நான் தான் இறங்கிக் காக்காக் குளி குளிச்சுட்டு உடனே மேலே ஏறிட்டேன். :)))))

    பதிலளிநீக்கு
  17. அடடா.... உங்க மேல எனக்கு கோபமா? எதுக்கு....

    பல பதிவுகளை படிக்க முடியாமல் போவது சாதாரணம்.... நானே சில நாட்களாக படிக்காமல் விட்ட பதிவுகள் எண்ணிலடங்கா!

    நாங்க போகும்போது நல்ல எருமைக் குளியல் தான்! :)

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

    பதிலளிநீக்கு
  18. வேணி மாதவ் கோவிலை பற்றிய செய்திகள் நன்றாக இருந்தது. தொடர்ச்சியை படித்து விட்டு கருத்துகளை எழுதுகிறேன்

    விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....