சனி, 23 ஏப்ரல், 2022

கதம்பம் - கவிதை தினம் - ராம் லட்டு - இன்றைய பொழுது - பறவை போல பறந்து

  

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் முகநூல் இற்றைகளின் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

THE DIFFICULT TIMES WILL ALWAYS COME TO AN END - BUT THE WISDOM AND STRENGTH YOU GAIN FROM THEM WILL BE YOURS FOREVER - PAULA FINN

 

******

 

கவிதை தினம் - 21 மார்ச் 2022


 

கவிதை தினம்!

இவ்வுலகின் அழகை

ரசிக்கத் தெரிந்தால்

பார்க்கும் காட்சிகள்

காதல் உணர்வில்

ஒன்றுடன் ஒன்று

சங்கமித்துக் கொண்டு

தமிழருவியாய் பொங்கி

வர்ணஜாலமாய் விரிந்து

வார்த்தை கோலமிட்டு

கவியின் சொல்நடையில்

கவி நடனம் புரிந்து

கவிதையாகும்!

 

******

 

ராம் லட்டு (Moong dhal bonda) - 23 மார்ச்:


 

டெல்லியில் சாலையோரக் கடைகளில் 'ராம் லட்டு' என்ற பண்டம் மிகவும்  பிரபலம். லட்டு என்பதால் இனிப்பென்று நினைக்க வேண்டாம்! ஏறக்குறைய உருண்டையாக இருப்பதால் லட்டு என்றும், என்ன பெயரிடுவது என்ற யோசனையில் 'ராம்' என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம்!

 

உருண்டையாக வட்டமாக இருப்பதெல்லாம் அங்கே Gகோல்! 

 

மகள் டெல்லியில் ப்ளே ஸ்கூலுக்கு சென்ற போது ஒரு ரைம்ஸ் சொல்வாள்!

 

நீச்சே தர்த்தி கோல் கோல்!

ஊப்பர் சந்தா கோல் கோல்!

மம்மி கி ரொட்டி கோல் கோல்!

பப்பா கா பைசா கோல் கோல்!

ஹம் பி கோல்!

தும் பி கோல்!

சாரே துனியா கோல் மட்டோல்!

 

என்பதாக அந்தப் பாடல் இருக்கும்.

 

கீழே பூமியும் ஒரு வட்டம்!

அந்த நிலாவும் வட்டம்!

அம்மா செய்யும் ரொட்டியும் வட்டம்!

அப்பாவின் பைசாவும் வட்டம்!

நானும் வட்டம்! நீயும் வட்டம்! இந்த மொத்த உலகமும் வட்டம் தான்..🙂 

 

இது தான் அந்தப் பாடலுக்கான அர்த்தம்..🙂

 

நேற்று வெங்கடேஷ் பட் சாரின் யூட்டியூப் சேனலில் மூங்தால் போண்டா (பயத்தம்பருப்பு) ரெசிபியைப் பார்த்ததும் செய்யணும் என்று முடிவு செய்து விட்டேன்...🙂 மாலை நேரத்திற்கேற்ற ரெசிபி! வாய்ப்பு கிடைக்கும் போது செய்து பாருங்களேன்.

 

******

 

இன்றைய பொழுது..! - 27 மார்ச் 2022: 

 

சொல்லத் தான் நினைக்கிறேன்!

உள்ளத்தால் துடிக்கிறேன்!

வாயிருந்தும் சொல்வதற்கு

வார்த்தையின்றி தவிக்கிறேன்!

 

நேற்று முழுவதும் இந்தப் பாடல் தான் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் அமைந்த பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்ததில் 'பச்சக்' என்று மனதில் ஒட்டிக் கொண்ட பாடல்!

 

*****

 

கடைத்தெருவில் ஃபேன்சி ஸ்டோருக்கு சென்றிருந்தேன். ஒருமுறை சரியான அளவில் கிடைத்த பசைப்பொட்டு மீண்டும் கிடைப்பதில்லை! அளவுகள் சிறிதளவே மாறினாலும் அதை வைத்துக் கொண்ட பின் முகத்தின் அமைப்பே மாறிவிட்டாற் போன்ற உணர்வு ஏற்படுகிறது!

 

அங்கே ஒரு குட்டி தேவதையைக் காண நேர்ந்தது. கடை உரிமையாளரின் மகள்!

 

உங்க பேர் என்ன! என்றேன்.

 

லோச்சி! என்றாள்.

 

லோச்சியா!! என்று மீண்டும் கேட்டவுடன்..

 

உடனே அவளின் அப்பா 'லோகஸ்ரீ' க்கா என்றார்..🙂

 

தன் அப்பாவின் இரு கால்களுக்கு நடுவே புகுந்து சுற்றிக் கொண்டே சோட்டோ! சோட்டோ! என்று கேட்டுக் கொண்டிருந்தாள்..!!

 

என்ன கேட்கிறாள் என்று புரியாமல் நான் விழிக்க..

 

அவள் அப்பா தன் அலைபேசியை எடுத்துக் கொடுக்க அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு பார்க்கும் இடங்களையெல்லாம் தன் திறமையால் பதிவு செய்து கொண்டிருந்தாள்..🙂

 

'பை' சொல்லி விட்டு வந்தேன்!

 

*****

 

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றை நமக்கு காட்சிப்படுத்தி புத்துணர்வையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தருகிறார் இறைவன்! நாம் அதை உணர்ந்து கொண்டால் எல்லா நாளும் இனிய நாளே! 

 

******

 

பறவை போல பறந்து - 28 மார்ச் 2022: 


 

பறவை போல் காற்றில் பறக்க எல்லோருக்கும் ஆசை தான். விமானத்தால் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பறந்து செல்லும் எண்ணம் சாத்தியமானது. எல்லோருக்கும் அது வெகு எளிதாகவும் மாறிப் போனது!

 

என் கடைக்குட்டி மாமாவுக்கு விமானத்தோடும், விமான நிலையத்தோடும் தொடர்புடைய பணி! என்னுடைய சிறுவயதில் நான் சென்னை விமான நிலையத்தில் கன்ட்ரோல் அறையின் உள்ளிருந்து விமானம் தரையிறங்குவதையும், பறக்க ஏதுவாக ஓடுதளத்தில் செல்வதையும் பார்த்திருப்பதாக அம்மா சொல்லியிருக்கிறார். 

 

சிறு குழந்தையாக இருந்த குட்டித் தம்பி எதனாலோ அன்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ததாகவும், அதன் பிறகு மாமா வாங்கித் தந்த பெரிதான  ஐஸ்க்ரீமைப் பற்றியும் அம்மா சொல்லிக் கேட்ட நினைவு! அன்றைய காட்சிகள் என் நினைவில் இல்லை!

 

சின்னஞ்சிறு பெண்ணாக மாமாவின் கல்யாணத்தில் Sky blue நிறத்தில் பூக்களால் எம்பிராய்டரி செய்யப்பட்ட அழகான சுடிதார் அணிந்து கொண்டதும், மஞ்சள் நிற செவ்வக வடிவ டப்பாவில் மாமா வாங்கித் தந்த Building blocks ம் தான் நினைவில் இருக்கும் விஷயங்கள்..🙂

 

பள்ளிநாட்களில் என் மாமா கோவை விமான நிலையத்தில் பணியாற்றிய போது ஒருநாள் வானொலித் தொலைபேசித் தொடர்பு  மூலம் விமானத்தோடு தொடர்பு கொண்டு அதை தரையிறக்கும் நிகழ்வையும், விமானம் பறக்க ஏதுவாக ஓடுதளத்தில் சென்றதையும் கண்டு வியந்திருக்கிறேன்.

 

சென்ற வாரத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற Wings India Exhibition 2022 புகைப்படங்களை மாமா வாட்ஸப்பில் அனுப்பிய போது ரசித்துப் பார்த்தேன். அப்போது கூட நான் இதில் பறந்தால் எப்படியிருக்கும் என்கிற மாதிரியான  சிந்தனையே என்னிடம் இல்லை!

 

தெனாலி கமல் எல்லாவற்றுக்கும் பயம் எனக்கு! என்று சொல்வதைப் போல் தான்..🙂 டெல்லியில் ஒருநாள் மூன்று மெட்ரோ மாறி ஒரு இடத்துக்கு போக வேண்டும். மெட்ரோ ஸ்டேஷனில் எஸ்கலேட்டரில் செல்வதற்கு  பயந்து படிகள் ஏறி  ஏறி ஓய்ந்து போன கால்களால் தான் பிறகு எஸ்கலேட்டர் பழகியது எனக்கு. 🙂

 

விமானப்பயணம் மேற்கொள்ள என்னவரும் எத்தனையோ முறை என்னை அழைத்தும் வர மறுத்து விட்டேன்:) பயணங்களை தவிர்க்கக் காரணமாக டேஷ் பிரச்சனையும் தான் இருக்கே! இப்போது என்னவோ ஒரு உத்வேகம்!

 

எல்லாவற்றையும் கடந்து வருவதைப் போல என் முதல் விமானப்பயணமும் விரைவில் ஈடேறும் என்ற நம்பிக்கையுடன் 'கூடிய சீக்கிரம் விமானத்திலிருந்து செல்ஃபி எடுத்து அனுப்பறேன்' என்று மாமாவிடம் சொல்லியிருக்கிறேன்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

18 கருத்துகள்:

  1. பேஸ்புக்கிலும் படித்திருந்தேன்.  சொல்லத்தான் நினைக்கிறேன், லோச்சி மட்டும் புதிது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. கதம்பச் செய்திகள் அனைத்தும் அருமை

    இதுவரை நீங்கள் விமானத்தில் பறக்கவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. விமானத்தில் பறக்க இதுவரை அவர் ஒப்புக் கொள்ளவில்லை! :)

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  5. மூங்க்தால் போண்டோ - சூப்பரா வந்திருக்கு ஆதி. நானும் செய்ததுண்டு ஆனால் இன்னும் பட் அவர்களின் வீடியோ பார்க்கவில்லை. நேரம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப டைட்டாக இருக்கு. அவரது முறையையும் பார்க்க வேண்டும்

    விமானம் படம் அழகு! உங்கள் திடீர் உத்வேகம் விரைவில் பூர்த்தியாக வாழ்த்துகள்! பறந்துவிட்டு அனுபவங்களை எழுதுங்கள்.

    விமானம் எனக்கும் பிடிக்கும் அந்த மேகங்களை பார்ப்பது ரொம்பப் பிடிக்கும் விமானத்திலும் ஜன்னல் கிடைக்க வேண்டும் என்று நினைப்பேன். விமானம் பிடித்தாலும் ரயில்தான் மிகவும் மிகவும் பிடித்த பிரயாணம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. வாசகம் அருமை.

    லோச்சி - குழந்தை மழலை!

    சோட்டோ சோட்டோ?!!! - மொபைலை அப்படிச் சொல்கிறதோ மழலையில்!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  7. கதம்பத்தில் கவிதையும், போண்டோவும் மணக்கின்றன!

    நான் ஒரு முறைதான் விமானத்தில் பயணித்திருக்கிறேன்.

    உங்களின் விமானப் பயணம் விரைவில் பறந்திட வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  8. அன்புள்ள ஆதி, கதம்பத்தில் கவிதையும், ஹிந்தி மழலையர் பாடலும் அழகு. பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாட்டு ஞாபகம் வந்தது. குழந்தைகளின் மழலை எப்பொழுதும் அழகு!தங்கள் விமான பயணம் நல்லபடி அமைய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் குறித்த தங்களது கருத்துகளை தெரிவித்தமைக்கு நன்றி காயத்ரி சந்திரசேகர் ஜி.

      நீக்கு
  9. விமான பயணம் உங்கள் விருப்பம் போல் விரைவில் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....