சனி, 30 ஏப்ரல், 2022

காஃபி வித் கிட்டு 149 - திருப்தி - மாளவிகா - என் செல்ல செல்லங்கள் - எமக்கென்ன - அன்பு - வேதனை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

LET YOUR SMILE CHANGE THE WORLD; DON’T LET THE WORLD CHANGE YOUR SMILE!

 

******

 

திருப்தி அடைவது சுலபமல்ல.....:

 

ரீல்ஸ், இன்ஸ்டா போன்றவை வந்த பிறகு, அதன் மீது மோகம் கொண்டு அதே வேலையாக இருப்பவர்கள் பலர். சிலர் அவற்றை பார்ப்பதில் நேரம் செலவழிக்க, வேறு சிலர் தங்கள் எல்லா நடவடிக்கைகளையும் காணொளியாக எடுத்து வெளியிடுகிறார்கள். அதற்கு அவர்கள் மெனக்கெடுகிறார்கள் என இன்று பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது - தில்லியின் டால்கட்டோரா தோட்டத்தில்..... ஒரு இளம் பெண் மற்றும் அவருடன் ஒரு இளைஞி.  இளைஞிக்கு நடனம் மீது அதீத மோகம், அது மட்டுமல்லாது தன் நடனத்தினை காணொளியாக எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிடவும் அதீத மோகம்.  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டால்கட்டோரா தோட்டத்தில் இளைஞி நடனமாடுவதும் அதனை இளைஞர் காணொளி எடுப்பதும் என தொடர்ந்து கொண்டே இருந்தது.  பாடலுக்கான ஆடலை விட காணொளியை எடுத்து, அதைப் பார்த்து, மீண்டும் நடனமாடி என பல முறை நடந்து கொண்டே இருந்தது.  கடைசி வரை திருப்தியே இல்லை அந்தப் பெண்ணுக்கு, தோட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது அந்த இளைஞரை திட்டிக் கொண்டிருந்தார் - நான் ஒழுங்கா ஆடினேன் - நீ ஒழுங்காகவே வீடியோ எடுக்கவில்லை!”  

 

******

 

இந்த வாரத்தின் காணொளி - சின்னஞ்சிறு கிளியே :

 

சூப்பர் சிங்கர் பிரபலமான மாளவிகா சுந்தர் பாடிய சில காணொளிகளை சமீபத்தில் கேட்டு ரசித்தேன்.  அப்படி ரசித்த பாடல்களில் ஒன்று மகாகவி பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாடல் ஒன்று. நீங்களும் முடிந்தால் கேட்டு ரசிக்கலாமே!


  

மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை எனில் இந்தச் சுட்டி வழியும் பார்க்கலாம்!

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி: என் செல்ல செல்லங்கள்

 

2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - என் செல்ல செல்வங்கள் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  

 

ஆரம்பத்திலேயே உங்களை உள்ளே அழைப்பது ஜிகே 009. எப்படி தெரியுமா?

 

கிருஷ்ணன்…  கோபால கிருஷ்ணன் 009.

 

கை நீட்டுனா ஏன் யாருமே கை குலுக்க மாட்டேங்கறீங்க?

  

அதெல்லாம் நகத்தை உள்ளே இழுத்துக்குவேன். கவலையே படாதீங்க. ஒரு வேளைக் கடிச்சுருவேனோன்னு பயமா? அதுக்கும் வழி இல்லை. பல்லெல்லாம் கொட்டிப் போச்சு. உடம்பு பூராவும் சர்க்கரை இருக்காம். இப்போப் புரியுதா ஏன் இவ்வளவு இனிப்பாப் பேசறேன்னு?

 

உள்ளே வாங்களேன். உட்கார்ந்து பேசலாம்!

 

ஹௌ ஸ்வீட்!... எவ்வளவு பாசமா கூப்பிடறான் பாருங்க! உள்ளே போனீங்கன்னா நிச்சயம் சந்தோஷமா இருப்பீங்க. அதுக்கு நான் உத்திரவாதம். அது சரி எங்கே போகங்கறீங்களா? அட... நம்ம துளசி கோபால் டீச்சர் எழுதிய என் செல்ல செல்வங்கள் புத்தகத்துக்கு உள்ளேதாங்க!

 

அப்படிப் போனா, நாய், பூனை போன்ற பிராணிகள் மேல் அவர் வைத்திருக்கும் பாசம், அவை காட்டும் அன்பு, வளர்ப்பில் உள்ள பிரச்சனைகள், வெளிநாடுகளில் இது போன்ற செல்லப் பிராணிகளுக்குக் கிடைக்கும் விதவிதமான உணவு வகைகள், கிடைக்கும் உபகரணங்கள், பூனையை ஃபிக்ஸ் செய்வது, செல்லங்களுக்கு உடம்பு சரியில்லையெனில் அவற்றை மிருக வைத்தியரிடம் கூட்டிச் செல்ல என்ன செய்ய வேண்டும், என பல விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

 

முழு பதிவினையும் மேலே கொடுத்திருக்கும் சுட்டி வழி படித்து ரசிக்கலாம்! 

 

******

 

ரசித்த கவிதை - எமக்கென்ன? :

 

சொல்வனம் பக்கத்தில் ரசித்த நாஞ்சில் நாடன் கவிதை ஒன்று உங்கள் பார்வைக்கு.

 

எமக்கென்ன?

 

பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி

மகிமைத் தேர்தல்!

ஆளும் ஆசை அற்றுப் போமோ?

வேட்பாளர் சிலருக்கு ஒற்றை வாக்கும்

பதிவாக வில்லையாம்!

சில கட்சிக்குப் பல தொகுதியில்

காப்பீட்டுத் தொகையும் காணாமல் ஆச்சாம்!

முன்னாள் ஈட்டிய கும்பலின் கணவரை

இந்நாள் ஈட்டும் கும்பலின் மனைவி

கனத்த போட்டியில் புறம் கண்டாளாம்!

ஐந்து கோடி செலவும் ஆகி

ஆறு வாக்கில் தோல்வியும் ஆச்சாம்!

வெற்றிச் செய்தி கேட்ட ஒருவர்

மாரடைப்பில் மரணம் உற்றாராம்!

தலைவர் தேர்தலில் முன்னாள் இந்நாள்

மந்திரி மக்கள் ஏறு தழுவலாம்!

ஆதரவளிக்கும் உறுப்பினருக்கு

வீட்டுமனையாம் கைச்செலவுக்கு

முப்பது இலக்கம் உல்லாசப் பயணம்

பல் திறக் கேளிக்கைப் பயனும் உண்டாம்!

பிறகு

மக்கட்பணி ஆற்றுவ தெங்ஙனம்?

பணி செய்யாமல் உயிர் தரித்தல் எங்ஙனம்?

வெற்றி பெற்றபின் விருந்து கொடுக்க

பத்து டன் ஆட்டுக்கறியாம்!

எமக்கென்ன என்று இருக்கலாம் நாமும்

பாவம் தானே ஆடுகள் ஐயா!

 • நாஞ்சில் நாடன்

******

 

இந்த வாரத்தின் ரசித்த நிலைத்தகவல் - அன்பு :

 

இப்படியான மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்! ரசித்த வாட்ஸப் நிலைத்தகவல் ஒன்று உங்கள் பார்வைக்கு!


 

******

 

இந்த வாரத்தின் செய்தி - வேதனை :

 

இப்படிக் கூடவா பொறுப்பில்லாமல் நடந்து கொள்வார்கள்? என்று நினைக்க வைத்த நிகழ்வு.  வங்கியின் பொறுப்பாளர்கள் வங்கியை ஒவ்வொரு தினமும் மூடிச் செல்லும் முன் எல்லா இடங்களிலும் பார்த்து யாரேனும் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டாமா?  89-வயது முதியவரை வங்கிக்குள் வைத்து பூட்டிச் சென்று இருக்கிறார்கள்.  வேதனை! செய்தியை இங்கே படிக்கலாம்!

 

******

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

32 கருத்துகள்:

 1. அந்த ஒரு மணி நேரமும் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தீர்களா?  ஹா..  ஹா..  ஹா..

  சின்னஞ்சிறு கிளியே பின்னர் கேட்கவேண்டும்.  

  செல்ல செல்வங்கள் பதிவை நான் வாசித்திருக்கிறேனா என்று முதலில் பார்த்தேன்.  ஆ...  என் கமெண்ட் இருக்கிறது அங்கே...

  கடைசி வரியில் இருக்கிறது நாநா கவிதையின் கரு..   அருமை.

  நிலைத்தகவலை நானும் பாத்தேன்.  இருக்கவேண்டும்.

  வங்கி விஷயம் - வேதனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு மணி நேரம் - நடைப்பயிற்சி, ஓய்வு என அவ்வப்போது கவனித்தது தான் ஸ்ரீராம். பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 2. அனைத்து பகுதியும் அருமை... கவி வரிகள் சிறப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  ஒரு மணிநேரம் உங்களுக்கும் வேலை இல்லையோ ஜி ஹா.. ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஒரு மணி நேரம் உங்களுக்கும் வேலை இல்லையோ?// ஹாஹா... நடை, ஓய்வு, நடுவில் கவனிப்பு!

   பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 4. மாளவிகா பாட்டு அருமை. முதியவரை வங்கியில் வைத்து பூட்டிச்சென்றது வேதனையான விஷயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 6. இன்றைய இளைஞர்கள் இளைஞிகளிடம் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்திச் சென்றடைய நிறைய மீடியாக்கள் இருக்கின்றன. சில நன்றாக இருக்கின்றன சில சும்மா தங்கள் செயல் வைரலாக வேண்டும் என்று எடுத்து வெளியிடுவதும் நடக்கிறது.

  பாடல் நன்றாக இருக்கிறது.

  நிலைத்தகவல் நன்று

  வங்கி விஷயம் மிகவும் வேதனை. இப்படியுமா?

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 7. ரீல்ஸ், இன்ஸ்டா // இப்படி எல்லாம் வந்திருக்கிறதா....

  அப்பாவிற்கு என் தங்கை ஒரு மொபைல் அன்பளிப்பாகக் கொடுக்க அவரோ அதைப் பயன்படுத்தக் கஷ்டப்பட்டு என்னிடம் கொடுக்க நான் என் பழைய மொபைலை அவரிடம் கொடுக்க....தங்கைகொடுத்த மொபைலில் அதென்னவோ டிஃபால்ட் செயலிகள் என்று ஜோஷ், அப்புறம் இன்னும் 3 பெயர் சட்டென்று பிடிபடவில்லை வந்து கொண்டே இருக்கிறது. ஃபோன் பேசும் போதும் இடையில் வந்து பாட்டும் பேச்சு என்று ஏதேதோ வருகிறது பேசுபவர் என்ன பேசுகின்றார் என்றே தெரிவதில்லை. இந்தச்செயலிகளை நிறுத்தி, அழித்து, அன் இன்ஸ்டால் செய்தாலும் என்னென்னலாமோ நானும் கூகுளில் தேடி செய்து பார்த்துவிட்டேன். அவர்கள் கொடுக்கும் ஒரு முகவரியில் மெயிலில் எனக்கு இந்தச் செயலிகள் வேண்டாம் என்றும் சொல்லிப் பார்த்துவிட்டேன் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கின்றன. அது மொபைலுடன் கூடவே வருமாம் இதென்ன நன்மையோ? கடுப்பாகிறது.

  இப்படி வருவதும் கூட இப்படியானவர்களுக்கு ஜாலி ஆனால் நமக்குக் கடுப்பு

  இவர்களுக்கு எப்படித்தான் நேரம் கிடைக்கிறதோ

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அலைபேசி உடன் பல செயலிகள் வருகின்றன. அனைத்தும் ஏதோ விதத்தில் பயனுள்ளதாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை தேவையில்லாதவை.

   பதிவு குறித்த கருத்துப் பகிர்வுக்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

   நீக்கு
 8. மாளவிகா சுந்தருக்கு மிக அருமையான குரல். இவரது காணொளிகள் பார்த்திருக்கிறேன் பாடல்கள் பல கேட்டிருக்கிறேன் ஜி, இது உட்பட. இங்கு மீண்டும் ரசித்தேன். ஓரிரு திரைப்படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

  நல்ல திறமையான பெண்.

  கீதா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரது சில பாடல்கள் கேட்டு ரசித்திருக்கிறேன் கீதா ஜி.

   நீக்கு
 9. துளசி அக்காவின் பதிவுகளிலேயே தெரியும் அவரது பாசம். எனக்கும் ரொம்பப் பிடிக்கும் அதை எல்லாம் வாசிக்க. எனக்கும் செல்லங்கள் ரொம்ப இஷ்டமாச்சே. கண்ணழகி மறைந்தது பற்றி எழுத மனமில்லாமல் எழுதாமல் அந்தப் பதிவு அப்படியே இருக்கிறது. மறைவு மிகவும் கஷ்டமாக இருக்கும்.

  கருப்பன் பற்றி வாசித்ததும் கண்ணில் நீர் நிறைந்துவிட்டது ஜி. அப்படியே என் செல்லங்கள் நினைவுக்கு வந்தாங்க. இப்போது யாரையும் வளர்க்கவில்லை.

  நல்ல அறிமுகம் ஜி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல்லங்கள் குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

   நீக்கு
 10. கவிதை, நிலைத்தகவல் அருமை

  வங்கி அந்தப் பெரியவர் பற்றிய செய்தி கூகுள் தந்த செய்திகளில் வந்தது வேதனையான விஷயம். எப்படி இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள் என்று தோன்றியது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி கீதா ஜி.

   நீக்கு
 11. அன்பின் வெங்கட்,
  என்றும் நலமுடன் வாழ வேண்டும்.
  கண்ணில் முதலில் பட்டது
  துளசியின் புத்தகக் கட்டுரையும், அவரின் செல்லங்களும் தான். உன்னதமான
  தம்பதி.

  டால்கட்டோரா நடனமணி. என்ன் யூடியூப் மோகமோ.
  ரசிக்கவில்லை.

  உங்கள் பெரியப்பாவின் கருப்பனும் அருமையாக மந்தில் பதிந்தான்.
  எத்தனியோ உயிர்கள்
  வாய் பேசாமல் நம்முடன் இணகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   நீக்கு
 12. நாஞ்சில் நாடனின் எழுத்து எப்போழுதுமே சிந்திக்க வைக்கும். கவிதை வரிகள்
  பாராட்டவும் ஒரு தகுதி வேண்டுமே நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாஞ்சில் நாடன் கவிதை வரிகள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 13. மாளவிகா சுந்தரின் இனிமையான குரலைக் கேட்டு ரசித்தேன்,. மிக
  அருமை மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவரது பாடல்கள் சில கேட்டு ரசித்திருக்கிறேன் வல்லிம்மா. நன்றாகவே பாடுகிறார்.

   நீக்கு
 14. வங்கி முதியவர் செய்தி மிக மிக வேதனை. நடுக்கமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வங்கியில் முதியவருக்கு கிடைத்த அனுபவம் வேதனையானது தான் வல்லிம்மா. பொறுப்பற்ற ஊழியர்கள்!

   நீக்கு
 15. கதம்பம் அருமை. வங்கியில் பெரியவரை வைத்து பூட்டி விட்டது வேதனை.
  பாடல் பகிர்வு அருமை. மிகவும் ரசித்து பாடுகிறார். கவிதையும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 16. மாளவிகா பாடல் இனிமை. நந்தகோபால் அவர்களின் 'என்செல்லசெல்வங்கள் 'நல்லதோர் புத்தகம் மீண்டும் அறிமுகப்படுத்தியது நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....