வியாழன், 14 ஏப்ரல், 2022

ருபின் பாஸ் - உத்திராகண்ட் - மலையேற்றம் - ப்ரேம் Bபிஷ்ட் - பகுதி ஒன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

அவமானத்திற்கு இரண்டு குணங்கள் உண்டு - ஒன்று கோழையை தற்கொலை செய்து கொள்ள வைக்கிறது; மற்றொன்று வீரனை வாழ்ந்து காட்ட வைக்கிறது; இதில் எதுவாக நாம் இருக்க வேண்டும் என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும்.

 

******

 

சில வாரங்கள் முன்னர் அலுவலக நண்பர் எழுதி பயணத் தொடரான கேதார் தால் உங்களுக்கும் நினைவில் இருக்கும் என நம்புகிறேன்.  சென்ற ஞாயிறன்று அவரின் பயணங்களில் ஒன்றான ருபின் பாஸ் என்ற மலையேற்றப் பயணத்தின் போது எடுத்த நிழற்படங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்ததும் நினைவில் இருக்கலாம். இன்று முதல் சில பதிவுகளாக ருபின் பாஸ் பயணத்தில்/மலையேற்றத்தில் கிடைத்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் - அதாவது நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் பகிர்ந்து கொள்ளப் போகிறார்.  இந்தப் பயணமும் சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்த பயணம் - அதாவது 2016-ஆம் ஆண்டு செய்த பயணம் தான்.  இவ்வளவு நாட்கள் கழித்து இப்படி ஒரு பயணத் தொடர் தேவையா என்று உங்களுக்குத் தோன்றினால் அதற்கான பதில் - இப்படியான பயணத் தொடர்கள் உங்களில் சிலருக்கேனும் பயன்படலாம் எனும் நல்லெண்ணம் தான்.  

 

சரி எங்கே இருக்கிறது இந்த ருபின் பாஸ்?  இந்த மலையேற்றம் உத்திராகண்ட் மாநிலத்தில் துவங்கி ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் முடிவடையும் ஒரு மலையேற்றம். India Hikes மற்றும் Trek the Himalayas நிறுவனங்கள் இந்த மலையேற்றப் பயணங்களை ஏற்பாடு செய்கிறார்கள்.  அவர்கள் மூலமும் இந்த மலையேற்றப் பயணங்களை மேற்கொள்ளலாம் என்றாலும், நண்பர் ப்ரேம் உத்திராகண்ட் மாநிலத்தினைச் சேர்ந்தவர் என்பதால் இந்தப் பகுதிகள் குறித்த அனுபவமும், தகவல்களும் அவரிடத்தில் நிறையவே இருக்கிறது என்பதால் அவர்களாகவே சென்று வருவார்கள்.  பயணத்தொடரில் அவர் எழுதி வைத்திருந்த தகவல்கள் தவிர வேறு சில தகவல்களும் சேர்த்து இங்கே பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.  வாருங்கள் நண்பர் ப்ரேம் அவர்களின் வார்த்தைகளில் (ஆங்கில மூலம்) - எனது தமிழ் மொழிபெயர்ப்பில் பார்க்கலாம் - ஓவர் டு ப்ரேம் Bபிஷ்ட்!  - வெங்கட் நாகராஜ், புது தில்லி

 

*****



மலையேற்றத்தின் போது...
 

கேதார் தால் பயணம் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. அந்தத் தொடருக்கு நீங்கள் அனைவரும் அளித்த தொடர்ந்த ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி.  இந்தப் பதிவுடன் தொடங்கும் எனது அடுத்த பயணம் குறித்த தொடருக்கு உங்களை வரவேற்கிறேன். நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் தளம் வழி எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  எங்களது இந்தப் பயணம் 2016-ஆம் ஆண்டில் மேற்கொண்ட பயணம்.  

 

அழகானதாக மட்டுமல்லாது சவாலானதுமான மலையேற்றம் இந்த ருபின் பாஸ் மலையேற்றம். ருபின் பாஸ் ஹிமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ளது என்றாலும் இந்த மலையேற்றமானது உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள தௌலாவில் தொடங்கி மேல் நீர்வீழ்ச்சி வழி பயணித்து, 15250 அடி ருபின் பாஸ் கடந்த பிறகு ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னோர் மாவட்டத்தின் அழகிய சாங்க்லா பள்ளத்தாக்கில் முடிவடைகிறது. காடுகள், கிராமங்கள், நெல் வயல்கள், புல்வெளிகள், பனிப்பாறைகள் மற்றும் பனி நிறைந்த மலைச்சரிவுகள் வழியாக செல்லும் இந்த பாதையானது அடிப்படையில் ஆடுகள் மேய்க்கும் மேய்ப்பர்கள் பயன்படுத்தும் பாதையாகும். இந்தப் பயணத்தினை  என்னைப் போலவே உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களான ராஜேஷ் லகேடா மற்றும் ஜஸ்பால் சிங் ராவத் ஆகியோருடன் சேர்ந்து மூன்று பேர் கொண்ட குழுவாக இந்த மலையேற்றத்தினைச் செய்ய முடிவு செய்தோம். ஐந்து நாட்கள் மலையேற்றம் உட்பட ஒரு வார கால பயண அட்டவணையை உருவாக்கிக் கொண்டு அதன் படி பயணித்தோம். அந்த அனுபவங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்!

 

பயணத்தின் முதல் நாள் - 11 ஜூன் 2016:



நோய்டாவிலிருந்து சங்க்ரி...
 

எங்களது இந்தப் பயணம் தில்லியை அடுத்த நோய்டாவிலிருந்து காலை 5 மணியளவில் தொடங்கியது.  எனது நான்கு சக்கர வாகனத்தில் தான் பயணித்தோம்.  அன்றைய தினம் தில்லியிலிருந்து புறப்பட்டு கர்னால், யமுனா நகர், விகாஸ் நகர் வழியே தில்லியிலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சங்க்ரி எனும் இடத்திற்கு பயணம் செய்வது எங்களது திட்டமாக இருந்தது. சங்க்ரி எனும் சிற்றூரில் தான் அன்றைய இரவு தங்குவதற்காக GMVN (Garhwal Mandal Vikas Nigam) நடத்தும் தங்குமிடத்தில் முன்பதிவு செய்திருந்தோம். GMVN நிறைய தங்குமிடங்களை உத்திராகண்ட் மாநிலத்தின் கட்வால் பகுதியில் அமைத்திருப்பதோடு சில பயண ஏற்பாடுகளையும் செய்து தருகிறார்கள்.  அரசு நிறுவனம் என்பதால் பாதுகாப்பான இடங்களில் இந்த தங்குமிடங்கள் அமைந்திருப்பதோடு வசதிகளும் சரியாகவே இருக்கும்.  கொஞ்சம் அதிக கட்டணம் என்றாலும் சிறப்பான வசதிகளுடன் இந்த இடங்கள் இருக்குமென்பது ஒரு சிறப்பு.  உத்திராகண்ட் மாநிலத்தில் பல இடங்களில் இவர்களது தங்குமிடங்கள் உண்டு. உங்கள் வசதிக்காக, அவர்களது வசதிகளைப் பெற அவர்களது இணையதள முகவரி இங்கேஇத்தளத்தின் வழி நீங்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். 



தங்குமிடத்தின் ஒரு படம்...
 

முதல் நாள் முழுவதும் சாலைப் பயணம் தான்.  பயணம் அதிக தூரம் என்றாலும் நடுவில் சில இடங்களில் நின்று ஓய்வு எடுத்ததோடு, உணவும் உண்டு எங்கள் இலக்கை முதல் நாள் மாலை சென்றடைந்தோம்.  அடுத்த நாள் பயணம் எப்படி இருந்தது? என்னென்ன தகவல்கள் உண்டு என்பதை எல்லாம் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  தொடர்ந்து இந்தப் பயணத்தில் எங்களுடன் இணைந்திருக்க உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.  தொடர்ந்து பயணிப்போம்.

 

ப்ரேம் Bபிஷ்ட்

 

******

 

நண்பர் ப்ரேம் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம்.  பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே!  விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

24 கருத்துகள்:

  1. சுப கிருது வருகவே..
    சுகங்கள் எல்லாம் தருகவே..
    அறங்கள் எங்கும் பெருகவே..
    அமுதத் தமிழ் நிறைகவே!..

    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  2. வாசகம் நன்று.  அவரவர் மனஅளவின்படி அமைகிறது அவரவர் வாழ்க்கை.

    பயணத்தொடரைத் தொடர்கிறேன்.  கிலோமீட்டர் கணக்கில் எவ்வளவு கிலோமீட்டர் இருக்கும்?  வெளியிட்டிருக்கும் படம் அழகோ அழகு.  மலை முகடு போல...  அங்கு செல்ல பாதைகள், கட்டிடங்கள்...  பின்னால் மலைகள், .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம். மலை உயரம் சொல்லும் போது பொதுவாக மீட்டர் கணக்கில் தான் சொல்வது வழக்கம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. தேவையா என்று உங்களுக்குத் தோன்றினால் அதற்கான பதில் - இப்படியான பயணத் தொடர்கள் உங்களில் சிலருக்கேனும் பயன்படலாம் எனும் நல்லெண்ணம் தான். //

    கண்டிப்பாக ஜி! பயன்படும்.

    நானும் ஒரு பழைய பதிவு வைத்திருக்கிறேன் விசாகப்பட்டினம் பயணப் பதிவு!!! ஹாஹாஹா....எப்போது பகிர்ந்தாலும் பயன்படும் என்று எனக்கும் தோன்றும். அதாவது இப்போதைய அனுபவங்கள், நடைமுறைகள் மாறியிருக்கலாம் ஆனால் இடங்கள் பற்றிய தகவல்கள் அறியலாம் கொடுக்கலாமே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் குறித்த தொடர்கள் நல்லது தான் என்றாலும் அவ்வப்போது இப்படி கேட்க வேண்டியிருக்கிறது. :(

      பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. வாசகம் அருமை. ஆமாம் ஒவ்வொருவர் அதை எப்படி அணுகுகிறார்களோ அப்படி அமையும்.

    முதல் படம் அட்டகாசம் ஜி!! முகடு! வாவ் அதுவும் ஒரு ரெர்டோ எஃபக்ட்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் முதல் படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. மேப் பார்த்தால் கங்கோத்ரி நடுவில் இந்தப்பக்கம் கேதார்நாத் அந்தப் பக்கம் சங்க்ரி....ஆனால் சங்கரி ஹிமாச்சலில், கேதார்நாத் உத்ரகான்ட் !!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மலையேற்றத்தில் இரண்டு மாநிலங்களும் உண்டு கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. பயணம் நல்லது - ஆதலினால் பயணம் செய்வோம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. கிட்டத்தட்ட ஒரே தூரம் தானோ கேதார்நாத்-சங்க்ரி --- வேணா கொஞ்சம் வித்தியாசம் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதாவது தூரத்தைப் பொருத்தவரை. ஏறுவது என்பது, அனுபவங்கள் கண்டிப்பாக வேறாகத்தான் இருக்கும்.

    அறிய ஆவலுடன்...

    .//பயணத்தொடரில் அவர் எழுதி வைத்திருந்த தகவல்கள் தவிர வேறு சில தகவல்களும் சேர்த்து இங்கே பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். //

    சூப்பர் ஜி.!!! இணையதள முகவரி குறித்துக் கொண்டேன். நல்ல பாதுகாப்பான தங்குமிடங்கள் இருப்பது நல்ல விஷயம்.

    ஆவலுடன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்கள் கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. நண்பரின் பயணத் தொடர் ஆரம்பம். படங்கள் அம்சமாக இருக்கின்றன. இந்த மலையேற்றம் எப்படி இருக்கப் போகிறது என்பதை அறிய ஆர்வத்துடன் தொடர்கிறேன்.

    விஷு வாழ்த்துகள் வெங்கட்ஜி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. சுவாரஸ்யமான தொடக்கம் பயணம் நன்று ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தின் தொடக்கம் - தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  10. ப்ரேம் Bபிஷ்டின் ஆரம்பமே அருமையாக உள்ளது். ருபின் பாஸ் பற்றிய தகவல்கள் அறிய ஆவலாக உள்ளேன். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      நீக்கு
  11. பயணத் தொடர் நன்றாக இருக்கிறது. பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
    2. பயணத்தொடர் நன்றாக உள்ளது தொடங்குகிறேன்.

      நீக்கு
    3. பயணத் தொடர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....