புதன், 20 ஏப்ரல், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி பத்தொன்பது – ஒண்ணார் ரூபாய் வண்டிக்காரர்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ருபின் பாஸ் மலையேற்றம் - பகுதி இரண்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

LEARN HOW TO ADMIT YOU’RE WRONG AND BE WILLING TO LISTEN. 

 

****** 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

பகுதி பதினெட்டு இங்கே! 

 

யாரிவள்! பகுதி பத்தொன்பது - ஒண்ணார் ரூபாய் வண்டிக்காரர்!

 

இவள் இருந்த அரசுக் குடியிருப்பில் மாதம் ஒருமுறை ஒரு தள்ளுவண்டிக்காரர் வருவார். அவரின் வருகையை எல்லோர் வீட்டிலும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். குடியிருப்புக்குள் வந்ததும் அந்த வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி விடுவார். வண்டியைச் சுற்றிலும் பெண்கள் குழுமி விடுவார்கள்.

 

சீப்பு, மை, பவுடர், ப்ரோ பென்சில், முகம் பார்க்கும் கண்ணாடி, வளையல்கள், பொட்டு, காதணிகள் என்று வண்டி முழுவதும் நிறைந்திருக்கும். எதையெடுத்தாலும் 10 ரூ என்று இப்போது கடைவிரிப்பது போன்று இவரிடம்  உள்ள பெரும்பாலான பொருட்கள் 1.50 ரூபாயில் கிடைக்கும்!! அதனால் இவர் பெயரும் ஒண்ணார் ரூபாய் வண்டிக்காரர் என்று ஆனது!

 

இவரைப் போலவே மாதம் ஒருமுறை அலுமினியத்தில் செய்த பெட்டி ஒன்றை வைத்துக் கொண்டு வியாபாரி ஒருவர் வருவார். அவரிடம் மசாலாப் பொருட்களான பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்றவையும் செர்ரி, சீரக மிட்டாய் , சூட மிட்டாய் போன்ற குட்டீஸுக்கு விருப்பமான பொருட்களும் இருக்கும். 

 

குட்டி குட்டியாக எண்ணெய் கேன், டேபிள் ஃபேன் போன்ற வடிவங்களில் சீரக மிட்டாய் அடைக்கப்பட்டிருக்கும். மிட்டாய் தீர்ந்த பிறகு அந்தப் பொருட்களை இவர்களின் விளையாட்டில் வைத்துக் கொள்வார்கள். இன்னும் மிட்டாயில் நெக்லஸ், வளையல், வாட்ச் என்று வேறு செய்து தருவார்களே! கடைசியாக கன்னத்தில் ஒரு கொசுறும் ஒட்டி விடுவார்கள்...🙂

 

எடையே நாலாணாவே!

எடையே நாலாணாவே!

நாலாணாவே! நாலாணாவே! 

 

இப்படி ஒரு பாடலைப் பாடியவாறு அன்றாடம் ஒரு பூக்காரர் குடியிருப்புக்கு வருவார்! 8 எடை கொண்டது 50 கிராம்! நமக்கு தேவையானதை அதற்கு தகுந்தவாறு கணக்கிட்டு வாங்கிக் கொள்ளலாம். 

 

அம்மா இவளுக்காக ஊட்டியிலிருந்து வரும் ரோஜாக்களும், பலவித நிறங்களில் வரும் டேலியாக்களும் இன்னும் டிசம்பர் பூக்கள், கனகாம்பரம், மல்லி, முல்லை, செண்பகம் என்று எதையாவது வாங்கி வைப்பாள். ரோஜாக்களையும், டேலியாக்களையும் பத்திரமாக தண்ணீரில் போட்டு வைத்து பள்ளிக்கு வைத்துக் கொண்டு செல்வாள்.

 

இவளுக்கு தலைநிறைய பூ வைத்துக் கொள்வதில் அத்தனை விருப்பம் இல்லை! எப்போதும் கொஞ்சமாகத் தான் வைத்துக் கொள்வாள். ஜாதிப்பூவின் மேல் மட்டும் தனி ஈடுபாடு இவளுக்குண்டு! மொட்டாக தொடுத்த ஜாதிமல்லி கொஞ்சம் கொஞ்சமாக மலரும் போது வரும் சுகந்தம் அலாதியானது!

 

இதமான மாலை நேரத்தில், இவளுக்குள் தோன்றும் எண்ணங்களுடனும், கனவுகளுடனும் வானொலியில் ஒலிக்கும் மனதை மயக்கும் ராஜா சாரின் பாடல்களும், அந்தச் சூழலை சுகந்தமாக்கும் ஜாதிமல்லியும் எப்போது நினைத்தாலும் மனதிற்கு மிகவும் ரம்மியமாகத் தோன்றும். 

 

இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்தப் பெண்! தொடர்ந்து பார்க்கலாம்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

20 கருத்துகள்:

 1. ஒண்ணார் ரூபாய் வண்டிக்காரர். பொருத்தமான பெயர் சட்டென வைத்து விடுகிறோம்! இப்போது இது மாதிரி சிறு வியாபாரிகளுக்கு காலமில்லை. அலலது இது மாதிரி குடியிருப்புகளில் இன்னமு அவர்கள் வியாபாரம் நடந்து வருகிறதோ என்னவோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சின்னச் சின்ன ஊர்களில் இன்னமும் இந்த மாதிரி வண்டிகள் வருவதுண்டு. தில்லியில் இப்படியான ஒரு மனிதர் வருவது குறித்து முன்பு இங்கே எழுதி இருக்கிறேன் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 2. கதவு மூடிய குடியிருப்புகளில் (gated communities) வண்டிக்காரர்களை அனுமதிப்பதில்லை. உள்ளேயே ஒரு கடை இருக்கும் என்பதால். விலை எப்படியிருந்தாலும் அங்குதான் வாங்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில இடங்களில் அனுமதிப்பதில்லை தான். அந்த மாதிரி கடைகளில் விலை அதிகம் தான் - ஒன்றும் செய்வதற்கில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி இராய செல்லப்பா ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. இப்போது எதை எடுத்தாலும் இருபது ரூபாய்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருபது ரூபாய்! சில இடங்களில் நாற்பது ரூபாய்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 5. அருமையான நினைவுகள் ஆதி.

  இப்போதும் எங்கள் பகுதியில் இந்த வண்டிக்காரர்கள் பொட்டு, சீப்பு, வளையல் விற்வர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். காய், பழங்கள் விற்பவர்கள் வருகிறார்கள்., கத்தி சாணை பிடிப்பவர், பழைய சாமான் எடுப்பவர் அவ்வப்போது...வீட்டு முக்கில் பொட்டு சீப்பு விற்பவர் தன் வண்டியை மாலையில் நிற்க வைத்திருப்பார். பார்க்கவே ஒருசந்தோஷம் வரும். அவரிட்ம் தான் பொட்டு, வாங்குவதுண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதும் உங்கள் வீட்டின் அருகில் இந்த மாதிரி ஒரு கடை இருப்பது நல்லது தான். மகிழ்ச்சியும் கூட.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

   நீக்கு
 6. சிறு வியாபாரிகளுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு. பாவம் அவர்கள் தெரு தெருவாக வண்டியைத்தள்ளிக் கொண்டு சென்று பிழைப்பு. பெரும்பான்மை நேரங்களில் அவர்களிடம் வாங்குவதுண்டு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது போன்ற சிறு வியாபாரிகளுக்கு ஆதரவு கொடுப்பது அவசியமான ஒன்றும் கூட கீதா ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.

   நீக்கு
 9. எடையே நாலாணாவே!

  எடையே நாலாணாவே!

  நாலாணாவே! நாலாணாவே! //

  கோவையில் நான் கேட்டது இல்லையே!
  புதிதாக இருக்கிறது செய்தி. அத்தைக்கு தெரிந்து இருக்கும்.
  ஜாதிமல்லி கோவையில் எப்போதும் கிடைக்கும். அழகாய் தொடுத்தும் உதிரியாகவும் கிடைக்கும். அதன் காம்பு நீட்டமாக இருப்பதால் கட்ட வசதி எனக்கு.

  நிறை செய்திகள் அருமையாக இருக்கிறது. நினைவுகள் பகிர்வு அருமை தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 10. நமது ஊரில் வளையல்காரர் வருவதில்லை பெரிய கோவில் திருவிழாக்களில் வளையல்கடைகள் போட்டிருப்பார்கள் ஆசை இருந்தும் கேட்க தயக்கம் அம்மா தனியே எங்கும் செல்லமாட்டா அப்பா அழைத்துச்சென்று வாங்கித் தந்தால்தான் அன்று மனம் செட்டைகட்டி பறக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....