செவ்வாய், 5 ஏப்ரல், 2022

வாத்தியார் மகன் - பத்மநாபன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய யாரிவள் பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படி(பார்)க்கலாமே! இன்று காலை வெளியிட்ட யாரிவள் பதிவினையும் படிக்காதவர்கள் படிக்க வேண்டுகிறேன். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

BRING LOVE WHEREVER YOU GO; SHINE LIGHT WHEREVER IT’S DARK: LEAVE BLESSINGS WHEREVER YOU’VE BEEN; BE KIND WHEREVER YOU ARE - MARY DAVIS.

 

******

 

சற்றே இடைவெளிக்குப் பிறகு நண்பர் பத்மநாபன் அவர்கள் ஒரு அனுபவப் பதிவினை எழுதி இருக்கிறார்.  வழமை போல ஸ்வாரஸ்யமாக எழுதி இருக்கிறார் என்பதைச் சொல்லவே தேவையில்லை.  வாருங்கள் அவரது அனுபவத்தினை படிக்கலாம் - வெங்கட் நாகராஜ், புது தில்லி.

 

*****



 

தம்பி! நீங்க நம்ம ஈஸ்வரவுள்ள வாத்தியாருக்க மவன்தானே. பாத்த உடனே கண்டு பிடிச்சட்டமுல்லா. அவர் மாதிரியே தலைக்கு மொசைக் போட்டிருக்கே. நான் அவருகிட்ட எட்டாங் கிளாஸ் படிச்சேன், பாத்துக்கிடுங்க. நல்ல மனுஷன். 

 

யாரோ முகம் தெரியாத மனிதர் வழியில் பார்த்து  விசாரிக்கிறார் என்றால் அப்பா வாத்தியாராய் இருந்ததுதான்.

 

ஆனால் வாத்தியார் மகனா இருக்கது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத்தானே தெரியும். அதுவும் அவர் வேலை பாத்த அதே ஸ்கூலிலேயே படிக்கது இருக்கே, ரொம்ப கஸ்டமப்பா. 

 

வாத்தியாருன்னா பயலுக பேரு வைக்காம இருப்பானுகளா. எங்க அப்பாவுக்கும் பேரு வச்சானுகளே. அதுவும் ஒரு பேரு இல்ல. மூணு நாலு பேரு வச்சானுக. என்ன என்ன பேருன்னுதானே கேக்குறீங்க. அது எதுக்கு இப்போ. ஆனா ஒருத்தன் பேரு வச்சானய்யா, 'தென்னாட்டு காந்தி'ன்னு. கொஞ்சம் டீஸன்டா இருந்தது. I liked it. அவருக்கு பேரு வச்சீங்க சரி. என்னை எதுக்குடா வம்புக்கு இழுக்கிறீங்க. என்ன பார்த்தா தென்னாட்டு காந்திக்கு மகனே வாடான்னு கூப்பிட்டு சந்தோஷப்பட்டுப்பானுங்க. சரி, அவனுக சந்தோஷத்தை நாம் எதுக்கு கெடுக்கணும்.

 

மாங்கு மாங்குன்னு படிச்சு கிளாஸ்ல ஒண்ணாம் ரேங்கு வாங்கிருப்போம். இந்த ரெண்டாம் ரேங்கு வாங்குனவன் முறைப்பான். நம்ம வாத்தியாரு உங்க அப்பாவுக்கு ஃப்ரெண்ட். அதனால உனக்கு அதிகமா மார்க் போட்டுட்டாரு. இல்லாட்டா நான்தான் மொத ரேங்கு வாங்கியிருப்பேன்னு பொலம்புவான். போடே, போடே புலம்பிக்கிட்டு போடேன்னு உட்டுர வேண்டியதுதான்.

 

கொஞ்சநாள் முன்னால்  ஆதி வெங்கட் அவங்களோட யாரிவள் தொடரில் திறந்தவெளி திரைப்பட அனுபவத்தை எழுதியிருந்தார். அதை படித்தவுடன் என்னோட நினைவும் பின்னால் போயிற்று. திருவிழா சமயங்களில் ஊரை சுற்றி சுற்றி சினிமா போடுவார்கள். என்ன பிரச்சினையின்னா ராத்திரி சினிமா பாக்க போறதுக்கு அப்பாகிட்ட பெர்மிஷன் வாங்கிறதுதான்.  அடுத்த நாளு ஸ்கூல் லீவா இருக்கணும். ரெண்டாவது கூட வர ஃப்ரெண்ட் அப்பாகிட்ட நல்ல பேரு வாங்கியிருக்கணும். அது பிரச்சனை இல்ல. பக்கத்து வீட்டு மாதவன் இருக்கான். அவன் வீட்டு பர்மிஷனுக்கு நானு. 

 

இப்படித்தான் கொண்டையான் குளத்தம்மன் கோயில் முன்னால சினிமா போடுகான். எட்டு மணிக்கெல்லாம் நாங்க நாலு பேரு ஆஜர். சினிமா போடுகதுக்கு ஆயத்தம் நடந்துக்கிட்டு இருக்கு. நாங்க நல்ல இடமா பார்த்து வட்டமா உக்கார்ந்து கப்பலண்டி வாங்கி கொறிச்சுக்கிட்டே இப்போ பயில்வான் ரங்கநாதன் பண்ற வேலையை பண்ணிக்கிட்டு இருந்தோம். கப்பலண்டின்னா என்னதா.  அதுதான் நிலக்கடலை, அட  வேர்க்கடலைப்பா. என்னது நீங்க மல்லாட்டைன்னு சொல்லுவேளா.  சரி, மல்லாட்டையை ரசிச்சு திண்ணுக்கிட்டு இருந்தா, முதுகில் பொளேர்னு ஒரு அறை விழுது. 'என்ட அம்மே'ன்னு திரும்பிப் பார்த்தா எவனோ ஒரு தடிப்பய. எங்க ‌‌‌‌‌‌ஸ்கூல்ல பாத்த மாதிரி இருக்கு. நான் திரும்பிப் பார்த்ததும் அவன் ஸாரி ஸாரி ஆளு மாறிட்டது. நான் என் ஃப்ரெண்ட்டுன்னு தப்பா அடிச்சிட்டேன். பொறத்த இருந்து பார்க்க ஒரே மாதிரி இருந்ததா. வெரி ஸாரி ன்னுக்கிட்டு போய்க்கிட்டு இருக்கான். நான் முதுக தடவிக்கிட்டு மல்லாட்டைக்கு திரும்ப வந்துட்டேன். அவனை சும்மாவா விட்டீர்ன்னுதானே கேக்குறீங்க. என்னோட பர்சனாலிட்டிக்கு மன்னிச்சு சும்மா விட்டு விடுவதுதான் எனக்கு நல்லது.  கூட வந்த ஃப்ரெண்ட்ஸ் யாராவது கேட்டாத்தான் உண்டு. அவனுக தான் மல்லாட்டையோட மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கானுங்களே!

 

இன்னும் ஒரு பத்து நிமிஷம் போச்சு. திரை கட்டற வேலை தத்தரமா நடந்துக்கிட்டு இருக்கு. திரும்பவும் முதுகில் பொளேர்னு ஒரு அடி. கொதிச்சுப் போய் திரும்பிப் பார்த்தா வேற ஒருத்தன். அவனையும் எங்க ஸ்கூலிலே பாத்திருக்கேன். அவனும் ஸாரி ஸாரி ஆளு மாறிடுச்சுன்னு என் முதுக தடவுகான். என்னடா இது, வந்தான்..சுட்டான்..செத்தான்..ரிப்பீட்டுங்க கதையா போச்சேன்னு அவனையும் மன்னிச்சு உண்டாச்சு. அவன் என் ஃப்ரெண்ட்டு ஒருத்தனுக்கு தெரிஞ்ச பையன். இனி எவன் வந்து முதுகில் போடப் போறானோன்னு கவலையிலேயே நேரம் ஓடிப் போச்சு. ஒரு மல்லாட்டைய நிம்மதியா தின்ன முடியுதாப்பா!

 

அப்புறமாத்தான் தெரிஞ்சுது. பாவிப்பசங்க வேணுமுன்னேதான் வச்சு செஞ்சுருக்கானுங்கன்னு. எல்லாத்துக்கும் காரணம் எங்க அப்பாதான். எங்க அப்பா பொதுவா மாணவர்களை அடிக்க மாட்டாரு. தினசரி க்ளாஸ் வந்ததும் முந்தின நாள் எடுத்த பாடத்தில் இருந்து ஒரு கேள்வி கேப்பாரு. வழக்கம் போல ஒரு பயலுக்கும் விடை தெரியாது. உடனே எங்க அப்பா 'ஆல் ஸ்டேன்ட் அப்' ன்னு சொல்லுவாரு. ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு 'ஆல் ஸிட்டவுன்' ன்னுவாரு. அதுதான் பனிஷ்மென்ட். என்னத்த பனிஷ்மென்ட். கூட்டமாக பண்ணறதால ஜாலியாத்தான் இருக்கும். 

 

என்னைக்காவது  அடிக்கணும்னு அவருக்கு ஆசை வந்துரும். வழக்கம்போல வந்ததும் கேள்வி கேப்பாரு. வழக்கம் போல ஒருத்தனுக்கும் தெரியாது. ஆல் ஸ்டேன்ட் அப். எல்லோரும் எழுந்து நின்றதும் கம்பை எடுத்து ஆளுக்கு ரண்டு அடி. சமத்துவப் பொங்கல், எல்லோருக்கும். பாவமா இருக்கும், பசங்களை பார்த்து இல்ல.  எங்க அப்பாவைப் பார்த்து பாவமா இருக்கும். பின்னே, நாற்பது மாணவ மணிகளை அடித்தால் கை வலிக்காதா.

 

இப்படி அடிவாங்கிய ரண்டு பயலுகதான் அடுத்த நாள் என்னைப் பார்த்ததும் வச்சு செஞ்சது. தந்தை செய்த புண்ணியம் பிள்ளைக்கு. 

 

ஆனால் இப்போல்லாம் வாத்தியாரே பயந்து பயந்துதான் ஸ்கூல் போறாங்களாம், அப்படியா!

 

பத்மநாபன்

 

******

 

இந்த நாளின் இரண்டாம் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

20 கருத்துகள்:

  1. ஹை அட! பப்பு அண்ணாச்சி மீண்டும்!!

    வாசித்து வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்று இடைவெளிக்குப் பிறகு பத்து அண்ணாச்சியின் பதிவினை வெளியிடுவதில் எனக்கும் ஆனந்தம் கீதா ஜி.

      நீக்கு
  2. ஹாஹாஹா...சினிமா எங்கூர்லயும் இப்படித்தான் கப்பலண்டி கொறிச்சிக்கிட்டே..

    நாரோயில் மணமே மணம் தான். சமீபத்துல போயிருந்தப்போ அந்த தமிழ் மணத்தை ரசித்து, உங்கூரு பக்கம் போனேன்லா...உங்கூருன்னா ஊருக்குள்ள எல்லாம் இல்ல பக்கத்துல..அப்ப அட பப்பு அண்ணாச்சி ஊரு கிட்டத்தானேன்னு நினைத்துக் கொண்டேன்

    நல்லகாலம் இன்னமும் அந்தப் பக்கம் போற வழி எல்லாம் தென்னையும், மாவும் சோலையுமாத்தான் இருக்கு.

    இப்பவும் வீட்டுல கப்பலண்டி, நிலக்கடலைன்னுதான் வாயில வருது.

    இருட்டுல அந்தப் பையனுக்கு அடையாளம் தெரியலை போல!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாகர்கோவில் கன்னியாகுமரி பகுதிகளில் ஒரு வாரமாவது பயணிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு கீதா ஜி. வாய்ப்பு எப்போது கிடைக்குமோ?

      பதிவு குறித்த உங்களது கருத்துக்களையும் உங்களது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  3. ரவுண்டு கட்டி அடிக்க ஆளு வந்துருந்தாங்க போல!!!! இருட்டுல தெரியலைன்னு ஆளுமாறிப் போச்சுன்னு சும்மா சொன்னானுங்களோ!!!??

    பாத்தின்ங்களா நான் நினைச்சது சரியாப் போச்சு வேணும்மினுதான் செஞ்சிருக்கானுங்க

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல நாள் காத்திருந்து இப்படி செய்து விட்டார்கள் போலும்! வச்சு செய்யறது என்பது இதுதானோ?

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம்கனிந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. வழக்கம் போல ரொம்ப நல்லா எழுதியிருக்காரு. மிகவும் ரசித்து வாசித்தேன்... கூடவே நான் இழந்த அந்த திருநெவேலி/நாரோயில் பாஷை மனதில் வந்து போனது.

    //இப்போ பயில்வான் ரங்கநாதன் பண்ற வேலையை// - அண்ணாச்சி இதையும் வுடாம பாக்காகளா? கூடவே //யாரிவள் தொடரில்// இதையும் படிக்காகளா... நடத்துங்கவே நடத்துங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன். தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

      நீக்கு
  5. எங்க அப்பாவைப் பார்த்து பாவமா இருக்கும். பின்னே, நாற்பது மாணவ மணிகளை அடித்தால் கை வலிக்காதா.//

    ஹாஹாஹா ..

    இப்பல்லாம் அந்த அடி கார்ப்போரல் பனிஷ்மென்ட் நு டீச்சரை உள்ளார போட்டுருவாங்க. // சமத்துவப் பொங்கல், எல்லோருக்கும். // ஹாஹாஹா அது அப்ப இப்பா டீச்சருக்கு சமத்துவ கூழு/களி! கேஸ் போட்டுருவாங்க.

    சுவாரசியமான எழுத்து. ரசித்தேன் மீண்டும் நாரோயில் மணம்!!

    ஊருக்குப் போயிட்டு திரும்ப வர மனசே இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது வாத்தியார் மாணவனை அடிப்பதை விடுங்கள் அடித்து விடுவேன் என்று சொல்வதே தவறாக ஆகிவிட்டது. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. //வாத்தியாரே பயந்து பயந்துதான்// - நான் சொல்லுறது 18 வருஷத்துக்கு முந்தின கதை. நான் வெகேஷன்ல பாளையங்கோட்டை போயிருந்தேன். நான் இருந்த ஹாஸ்டல்லாம் (10ம் வகுப்பு வரை, +1+2, கல்லூரி) பார்த்தேன். பொறவு எங்க ஹாஸ்டல் வார்டனா/ஸ்கூல் அசிஸ்டெண்ட் ஹெட் மாஸ்டரா இருந்த ஃபாதரை, அவருடைய ஹாஸ்டல்ல (இது காலேஜ் காம்பவுண்ட்ல இருக்கு) மாம்பழங்களோடு பார்க்கப்போனேன். அவர்கிட்ட பேசிக்கிட்டிருந்தபோது, முந்தி மாதிரி இப்போல்லாம் இல்லை. பிள்ளைகளை ஒண்ணும் சொல்ல முடியறதில்லை. ஏதேனும் திட்டினாலே, இந்த ஃபாதருக்கும் அந்த மதருக்கும் ஒரு இது ன்னு சுவத்துக கரியால எழுதிடறாங்க... இல்லைனா, நம்ம பேரை எளுதிவச்சுட்டு மருந்தக் குடிச்சுடுவானோன்னு ரொம்ப பயமா இருக்கு. அதனால நாங்க ஒண்ணும் சொல்லறதில்லைனு சொன்னார்.

    அப்போ எனக்கு, நான் 10ம் வகுப்பு ஹாஸ்டல்ல இருந்தபோது நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அங்க ராமமூர்த்தி அப்புறம் இன்னொருத்தர் (சட்னு பேர் நினைவுக்கு வரலை..ஆனால் ஸ்ரீதேவிக்குச் சொந்தக்காரப் பையன்... இந்த இரண்டு பேரும் வளத்தி ஜாஸ்தி... ஒவ்வொரு கிளாஸும் கொஞ்சம் அதிகமாகவே படிச்சுப் படிச்சு பத்தாப்பு வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்) இவங்க ரெண்டுபேரும் படிப்புல ரொம்ப ரொம்ப சுமார் (அப்போ நானெல்லாம்... கொஞ்சம் சுமார்). எங்க ஸ்டடி ரூம் (அது ஒரு ஹால் மாதிரி. அதுலதான் எங்க டெஸ்க்ல எங்க பொருட்கள் எல்லாமே இருக்கும்)ல, நாங்க படிக்கறோமான்னு பார்க்க ஒரு ப்ரதர் இருப்பார் (ஃபாதருக்கு கீழ் நிலை). அவர் எங்க எல்லாரையும் பார்த்து, இது பத்தாப்பு... அதுனால உங்களுக்கெல்லாம் பாடம் புரியலைனா உங்களுக்குள்ளேயே க்ரூப்பா பிரிச்சு, நல்லாப் படிக்கறவங்களை பாடம் எடுக்கச் சொல்லப்போறேன்... என்றெல்லாம் சொல்லிக்கிட்டு வந்தவர்.. அந்த ஸ்ரீதேவி சொந்தக்காரனைப் பார்த்து, நீ என்ன நூத்துக்குப் பத்து மார்க் கூட வாங்கலை... உனக்கு நாந்தான் டியூஷன் எடுக்கணும்னு சொன்னார். எல்லார் முன்பும், லீடர் போல இருக்கற அவனைப் பார்த்து இப்படி அந்த ப்ரதர் சொல்லவும், அவனுக்கு ரோஷம் அதிகமாகி, நீங்களே டிகிரி முடிச்ச மாதிரித் தெரியலை...இதுல உங்ககிட்ட டியூஷன் படிச்சா விளங்கிடும் என்று எல்லார் முன்னாலயும் சத்தமாச் சொல்லிட்டான்... (இது 79ல)

    சமீபத்துல என் உறவினர் சொன்னது (அவரும் அவர் மனைவியும் டீச்சரா இருக்காங்க. அவர், +2க்கெல்லாம் பாடம் எடுக்கிறார்). பசங்க தண்ணி போட்டுட்டு வருவாங்க. ஒண்ணும் சொல்லமுடியாது. சொன்னா அவனோ இல்லை அவனது அப்பா அம்மாவோ அடிக்க வந்தாலும் வந்திடுவாங்க... இந்தப் பசங்களும் கட்டையால அடிக்கத் தயங்கமாட்டாங்க... குடி அப்படி மாத்திவச்சிருக்கு என்றார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு நெல்லைத் தமிழன். இப்போதைய சூழல் முற்றிலும் மாறுபட்டது தான். மாணவர்களை கடிந்து கொள்வதைக் கூட தவறாகவே சித்தரித்து விடும் நாட்கள் இவை.

      நீக்கு
  7. சுவாரஸ்யம்.  இந்த காமெடியை ஏதோ ஒரு படத்திலும் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பதிவு குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. வழக்கம்போல கலகலப்பான அசத்தலான அணுபவங்கள்.
    பயல்வான் அவர்கள் பெயரச் சொன்னா இப்படித்தான் அடி விழும் சார்.
    அவரே வெறும் கையால பதினஞ்சு பேர விளாசிருரதா சொல்லுரார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி அரவிந்த்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. ரசித்து வாசித்தேன். இருந்தது கல்லூரிப்படிப்பிற்காக மட்டுமே என்றாலும் நாகர்கோவில் நினைவுகள் வந்தது அந்த வட்டார வழக்கு நினைவுக்கு வந்தது.

    சுவாரசியாமான அனுபவங்கள். ஆசிரியர் மகனாக இருப்பதும் கடினம்தான், அதே போன்று ஆசிரியரின் குழந்தைகள் அவர் வேலை பார்க்கும் பள்ளியிலேயே படிப்பதும் ஆசிரியருக்குச் சில சமயம் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துவதும் உண்டுதான். எங்கள் வீட்டில் நாங்கள் இருவருமே ஆசிரியர்கள் என்பதால் அனுபவம் உண்டு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த கருத்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....