அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு
பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
குறை
சொன்னது யாரென்பதை இரண்டாவது பார்; உன்னை யாரேனும் குறை சொன்னால், சொல்லப்படட குறை
உன்னிடம் உள்ளதா என்று முதலாவதாக பார்!
******
அன்பின் நண்பர்களுக்கு, இந்த நாளில் நண்பர் அரவிந்த் அவர்களின்
வாசிப்பனுபவம் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. வாருங்கள் அவரது வாசிப்பனுபவத்தினை
வாசிக்கலாம்! - வெங்கட் நாகராஜ், திருவரங்கத்திலிருந்து….
******
ஹாரி
பாட்டர்: உலகின் பலம் வாய்ந்த ஆயுதத்தை நோக்கிய ஒரு தேடல்
உலகிலேயே பலம் வாய்ந்த ஆயுதம் என்ன எனக் கேட்டால், அணுகுண்டு முதல் பல
உயிர்க்கொல்லி ஆயுதங்களை வரிசைப் படுத்துவது இயல்பு.
அதற்கும் அப்பால், அறிவு, தன்னம்பிக்கை போன்றவற்றையும் உளவியல் ரீதியாகக்
குறிப்பிடுவோர் உண்டு. எதிரிகளை அழிக்க உபயோகப்படும் ஆயுதம் எவ்வளவு பலம்
வாய்ந்ததாக இருப்பினும், அது ஏவியவரையும் அழிப்பதே வரலாற்றில் மீண்டும் மீண்டும்
நிகழ்கிறது.
இச்சூழலில், அனைவரையும் அரவணைத்து, உலகை உய்விக்கச் செய்யும் பலம் வாய்ந்த,
ஆக்கப்பூர்வமுமான ஆயுதம் குறித்து உணரச் செய்ததே திருமதி ஜே. கே. ரௌலிங் அவர்களின்
“ஹாரி பாட்டர்” என்னும் தொடர்கதையாக 1991 முதல் வெளிவந்த ஏழு நூல்கள்.
உலகே நடுங்கும் வாள்டமோர்ட் என்னும் தீய சக்திகளின் தலைவன், வெறும் ஒரு
வயது சிறுவனான நாயகன் ஹாரி பாட்டரைக் கொல்ல முயன்று, ஹாரியின் பெற்றோரை மாய்த்து,
சிறுவனைக் கொல்ல முடியாமல் காணாமல் போகிறான்.
தன் பெற்றோரை ஒரு வயதிலேயே இழந்த ஹாரி பாட்டர், உறவினர் வீட்டில் பரிதாபமாக
விடப்பட்டு, பின்னர் வலுக்கட்டாயமாக ஹாக்ஸ்வேர்டு என்னும் மாயாஜாலப் பள்ளியில்
சேர்க்கப்படுகிறான்.
தன்னைக் குறித்து தன்னைவிடப் பலர் ஏற்கனவே அறிந்ததைக் கண்டு வியக்கும்
ஹாரி, தன்னை விரும்புவோரின் அக்கறை, காரணம் புரியாமல் வெறுப்போரின் வசைகள் எனப்
பலதரப்பு மக்களால் அலைக்கழிக்கப்படுகிறான்.
இதற்கிடையே, வாள்டமோர்ட் தன்னைக் கொல்ல முயன்றது ஏன்? தான் அவனை வென்றது
எங்கனம், வாள்டமோர்ட் ஏன் காணாமல் போனான்? போன்ற மர்மங்களோடு தன் ஆற்றலையும்,
வாழ்வின் நோக்கத்தையும் ஹாரி உணர்வதே சுவாரசியமும் பரபரப்பும் நிறைந்த
இப்புதினத்தின் கதைச் சுருக்கம்.
“Lord Voldemort makes his presents conspicuously by his absence” என என்
ஆங்கில இலக்கியப் பேராசிரியர் பெருமையுடன் கூறுவார். அதற்கேற்ப, கதையின் வில்லன்,
நூலின் சிற்சில பகுதிகளிலேயே நேரடியாக வந்தபோதிலும், அவன் குறித்தே நூல் முழுதும்
கதாபாத்திரங்கள் வாதிக்கும் நுட்பமே, கதையைப் பக்கத்திற்குப் பக்கம் பயம் கலந்த
பரபரப்போடு நம்மை பயணிக்கச் செய்கிறது.
புதினத்தின் சுவாரசியத்தை மேலும் கூட்டுவது, ஹாரியின் பலவீனங்களை
உபயோகிக்கும் தீயவர்கள், அச்செயல்களாலேயே அவன் ஆற்றல்களை உணரச் செய்த தருணங்களே.
எதார்த்த உலகம், மாய உலகம் என மாறி மாறி பயணிக்கும் இப்புதினம், சிறுவர்கள்
ரசிக்கும் வகையில் மாய உலக பிரம்மாண்டங்களோடு படைக்கப்பட்டதே, இந்நூலின்
வெற்றிக்கும், இதைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களின் மாபெரும் வசூல்
சாதனைக்கும் முக்கியக் காரணம் ஆகும்.
வெளிப்படையாக மாயாஜாலக் கதை போல் தோற்றமளிக்கும் இப்புதினம், உள்ளார்ந்த
பற்பல அறிய கருத்துக்களை விவாதிப்பதாலேயே, இன்றளவும் பேசப்படும் நூலாக உள்ளது.
ஆங்கில இலக்கியம் படித்த இந்நூலின் எழுத்தாளர், உறவுகளின் இழப்பு,
விவாகரத்து, வாழ்வாதாரம் இன்றி குழந்தையுடன் தனித்து விடப்பட்ட பரிதாபம் உள்ளிட்ட
பல சிக்கல்களிலிருந்து மீண்டு வந்த வரலாற்றை அறிந்து இப்புதினத்தைப் படித்தால்,
வாசகருக்கு ஹாரியின் கதாப்பாத்திர வடிவமைப்பு குறித்த பற்பல திறப்புகள் ஏற்படுவது
உறுதி.
உதாரணமாக, ஹாரியின் ஆன்மாவை வால்டெமோர்ட் ஆக்கிரமிக்க முயலும்போது ஏற்படும்
உணர்வுகளை, எழுத்தாளர், தாம் ஏமாற்றப்பட்டக் காலங்களில் உலகின்மீது உருவான
காழ்ப்பிலிருந்து மீண்டு வந்த போராட்ட அனுபவங்களோடு ஒப்பிட இயலும்.
“தெரியாத ஒன்றைக் குறித்த பயம், ஒரு கொடுங்கோலனைக் குறித்து நாம்
கொண்டிருக்கும் பயத்தைவிட அதிகமாக நம்மை முடக்கிப் போட்டுவிடும்” என்பது இஸ்ரேலிய
வரலாற்றியலாளரான யுவால் நோவா ஹராரியின் கூற்று.
அக்கூற்றிற்கேற்ப, “சாவிடமிருந்து ஓடுபவன்” என்னும் பொருள் தரும் வகையில்,
வில்லனின் பெயர் வைக்கப்பட்டிருப்பது, நூலாசிரியரின் கருத்துகளை வாசகர் மனதில்
ஆழப் பதியவைக்கும் சிறப்பான அம்சமாகும்.
அதற்கும் அப்பால், உலகே நடுங்கும் வால்டெமோர்ட்டின் கோபத்திற்கும்,
கொடூரமான செயல்களுக்கும் பின்னால் இருப்பது இறப்பின் மீதான அவனின் அச்சமே என்பதை
உணர்த்தி, மனிதனாக வாழ்வதன் அடையாளங்களை ஹாரிக்குப் புரிய வைக்கும் பேராசிரியர்
டம்பிள்டரின் சொற்கள், இந்நூல் வாயிலாக ஆசிரியர், வாசகர்களுக்குக் கடத்தும்
செய்திகள் ஆகும்.
இறப்பு உள்ளிட்ட நம்மை அச்சுறுத்துபவற்றை வெல்லவல்ல உலகின் பலம் வாய்ந்த
ஆயுதம் குறித்த பேராசிரியரின் சொற்கள், ஆரம்பத்தில் திகைப்பையும், பின்னர் ஆழமான
புரிதல்களையும் வழங்குபவை.
அத்தகைய ஆயுதத்தின் அசல் உருவமாக செவெரஸ் ஸ்நேப்ஸை உணர்ந்து, பேராசிரியரே
பேச்சற்று நிற்கும் காட்சியே, நூலின் உச்சகட்ட உணர்வுகளை வாசகர்கள் அனுபவிக்கும்
தருணம்.
அத்தகைய ஆயுதத்தின் வலிமையை உணர்ந்த பின், தன்னைக் கொல்ல முயலும்
வால்டெமோர்டையே மீட்க ஹாரி இறுதிவரை முயர்ச்சித்தது நூலின் நெகிழ்ச்சியான
பகுதிகள்.
இவ்வாறு, அனைத்துத் தரப்பினரையும் கவரவல்ல அம்சங்கள் நிறைந்த இந்நூலின்
தமிழாக்கத்தையும் கிண்டிலில் வாசித்து மகிழலாம்.
வாழ்வின் உண்மையான மர்மம் நாம் இறந்த பிறகு என்ன நிகழ்கிறது என்பது அல்ல,
மாறாக, நாம் இறப்பதற்கு முன்பாக என்ன நிகழ்கிறது என்பதுதான்.
எனவே, நம் நேச உணர்வால், உள்ளத்தின் மாசுகளைக் களைந்து நம் உலக வாழ்விற்கு
ஒரு புது அர்த்தத்தைக் கொடுப்போம்.
நட்புடன்,
இரா.
அரவிந்த்
******
இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக
தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும்
வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து…
ஒரு நேரத்தில் ஹாரி பாட்டர் ஹாரி பாட்டர் என்று உலகமே அரற்றியபோது அதைப் படிக்கும் ஆர்வம் இருந்தது. அப்புறம் மறந்து போனது. சாதாரண நிலையில் இருந்த அதன் எழுத்தாளர் கோடீஸ்வரியானார் என்பதை படித்து வியந்திருக்கிறேன். புத்தகத்தில் உள்ள விஷயங்களுக்கு நிறைய விளக்கங்கள் கொடுத்திருக்கிறார் அர்விந்த். படிக்க முயல்கிறேன்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
நீக்குஇயலும்போது நூலை வாசியுங்கள்.
அருமையான விமர்சனம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி KILLERGEE சார்.
நீக்குயுவால் நோவா ஹராரியின் அவர்களின் கூற்று விரைவில் அனைவரும் உணரலாம்...
பதிலளிநீக்குஆம் ஐய்யா. அவரின் கூற்று மிகச்சரி.
நீக்குஅவர் எழுதிய சேப்பியன்ஸ் நூல் அறிமுகமும் விரைவில் வரவிருக்கிறது.
அதில் அவரின் மேலான சிந்தனைகள் பகிரப்படும்.
தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.
அழகான அருமையான விமர்சனம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி துரை செல்வராஜூ சார்.
நீக்கு//வாழ்வின் உண்மையான மர்மம் நாம் இறந்த பிறகு என்ன நிகழ்கிறது என்பது அல்ல, மாறாக, நாம் இறப்பதற்கு முன்பாக என்ன நிகழ்கிறது என்பதுதான்.
பதிலளிநீக்கு//எனவே, நம் நேச உணர்வால், உள்ளத்தின் மாசுகளைக் களைந்து நம் உலக வாழ்விற்கு ஒரு புது அர்த்தத்தைக் கொடுப்போம்.//
அருமை.
அருமையான விமர்சனம்.
தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் மனம் நிறைந்த நன்றிகள் கோமதி அரசு மேடம்.
நீக்குஇயலும்போது நூலை வாசியுங்கள்.
வாசகம் நன்று.
பதிலளிநீக்குஹாரி பாட்டர் படம் பார்த்தேன். படம் என்னை அது ஈர்க்கவில்லை. ஆனால் அரவிந்த் எழுதியிருக்கும் விளக்கங்களை வாசித்த போது அட இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று அதுவும் கடைசி வரிகள் அருமை.
அரவிந்த் உங்களின் வாசிப்பு எனக்குப் பிரமிப்பு!
வாழ்த்துகள்.
கீதா
மிக்க நன்றி கீதா மேடம்.
நீக்குஎன் ஆங்கில இலக்கியப் பேராசிரியர்களும், எஸ். றா. போன்ற எழுத்தாளர்களின் உறைகளுமே, ஒரு நூலை ஆழ்ந்து புரிந்துகொள்ளும் பக்குவத்தை ஓரளவு வழங்கியுள்ளது.
வெங்கட்ஜி முந்தைய பதிவுகளையும் வாசித்தேன். யாரிவள் பகுதியை வாசித்து வருகிறேன். அனுபவங்களைச் சொல்லும் விதம் அருமை.
பதிலளிநீக்குகங்கோத்ரி படங்களைப் பார்த்து மகிழ்ந்தேன். பயணப் பதிவு வருவதையும் அறிகிறேன். அம்மா, மகளின் அழைப்பிற்குக் காத்திருத்தல், மகள் விளிக்க நினைக்கும் போது அம்மாவின் கடைசித் தருணங்கள் என்று மனதைப் பிழிந்த காணொளி. காஃபிவித் கிட்டு ரசித்தேன்.
இன்றைய பதிவில்,
ஹாரிபாட்டர் குழந்தைகளிடையே மிகவும் பிரபலமான படம். கதையும்தான். அரவிந்த், கதையின் உட்கருத்துகளைப் பகிர்ந்த விதம் நன்று. அரவிந்திற்கு வாழ்த்துகள்.
துளசிதரன்
தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் மனம் நிறைந்த நன்றிகள் துளசிதரன் சார்.
நீக்குஹாரிபாட்டர் கதையை அழகாக தந்துள்ளார் அரவிந்த்.
பதிலளிநீக்குபுத்தகம் வந்தவேளை ஒரே அமர்களம்தான் மகள் முன்பதிவு செய்து வைத்தே மிக்க ஆவலுடன் வாங்கி படித்தாள் ரெளலிங்க்கு தபாலும் எழுதிஅனுப்பினாள் அவர்களும் பதில் கடிதம் அனுப்பி இருந்தார்கள். பின்பு .படமும் பார்த்தோம்.
மிக்க நன்றி மாதேவி மேடம்.
நீக்குஹாரி பாட்டரைப் படிக்கும் வயது கடந்துவிட்டதால், அதில் என்ன தான் இருக்கிறது என்று புரியாமல் இருந்தேன். மிகச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார் அரவிந்த். அவருக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விற்கும் மனம் நிறைந்த நன்றிகள் இராய செல்லப்பா சார்.
நீக்கு