வெள்ளி, 20 மே, 2022

கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி…! - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

இந்த முழு உலகிற்கும் நீங்கள் ஒரு நபராக இருக்கலாம், ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள் தான் முழு உலகமுமாக இருக்கலாம்.

 

******



 

நம்ம வீட்டுக்கு போற ரோட்டுல புதுசா சேலம் தட்டுவடைக் கடை கூட ஆரம்பிச்சிருக்காங்க தெரியுமா கதிர்??

 

ஆட்டோவில் பயணிக்கும் போது கவிதா தான் கதிரிடம் இதை சொல்லிக் கொண்டு வந்தாள்.

 

பலத்த யோசனையில் இருந்த கதிர் உடனே

 

அப்படியா! ஆமா ஏன் தட்டுவடைன்னு பேர் வந்ததுன்னு உனக்குத் தெரியுமா கவி?? என்றான்.

 

ஏன்??? 

 

அதுவா! அதை மட்டும் நீ கேட்டன்னு வையி ரொம்ப ஆச்சர்யப்பட்டு போயிடுவ!

 

அதுல என்ன ஆச்சர்யப்படற அளவுக்கு விஷயம் இருக்குடா??

 

முறுக்கு சீடைன்னு சொல்ற மாதிரி இது தட்டைன்னு சொல்வாங்க! 

 

சிலர் இதை எள்ளடைன்னு கூட சொல்லுவாங்க!

 

அப்புறம்! இரண்டு தட்டைக்கு நடுவுல வெங்காயம், தக்காளி எல்லாம் வெச்சு தருவாங்க! அது சேலத்துல கூட ரொம்ப பாப்புலராம்! இப்போ ட்ரெண்டிங்ல கூட இருந்தது! 

 

என்று வரிசையாக அதைப் பற்றிய தகவல்களை அவனிடம் சொல்லிவிட்டு.

 

போதுமா! இந்தத் தகவல் எல்லாம்?? என்றாள்.

 

இல்ல கவி! இதையெல்லாம் தாண்டி உனக்குத் தெரியாத ஒரு விஷயத்த தான் நா இப்ப சொல்லப் போறேன்! என்றான்.

 

அப்படியா!!!

 

ஆமா!! என்றான் கதிர்.

 

சரி! சொல்லேன் பார்க்கலாம்! நானும் அதை தெரிஞ்சுக்கறேன்! என்று சொல்லியவாறு அதைக் கேட்க சுவாரஸ்யத்துடன்  தயாரானாள் கவிதா!

 

அதாவது கவி!

 

அது வந்து!  

 

சங்ககாலத்துல இல்ல!

 

பொறுமையிழந்த கவிதா 'சீக்கிரம் சொல்லித் தொலையேண்டா!' என்றாள்.

இரு! இரு! கோபப்படாத!

 

அதாவது கவி..!

 

கவிதா முறைப்பதைப் பார்த்ததும். 

 

'இனியும் தாமதமாக்கினால் இவள் என்னை ஓடும் ஆட்டோவிலிருந்து தள்ளி விட்டாலும் ஒன்றும் சொல்வதற்கில்லை'.! என்று நினைத்த கதிர் முடிவாக தன் அறிவுப்பூர்வமான பதிலை சொல்லத் துவங்கினான்.

 

ஒரு விஷயத்த நீ புரிஞ்சுக்கணும் கவி! 

 

அதாவது தட்டுல வெச்சு தட்டினதால ஒருவேளை தட்டு வடைன்னு சொல்றாங்க போல! 

 

இதேமாதிரி இலைல வெச்சு தட்டியிருந்தாங்கன்னு வையி இலை வடைன்னு வெச்சிருக்கலாம்னு நினைக்கிறேன்! என்று கதிர் தன் பதிலைச் சொல்ல கவிதாவுக்கு மிகுந்த எரிச்சல் உண்டானது.

 

வெயில் இன்னிக்கு அதிகமா தான் இருக்கு போல! என்றாள் சாலையைப் பார்த்தவாறே கோபத்துடன்!

 

இல்லம்மா! நேத்த விட இன்னிக்கு கம்மி தான்! என்று  ஒரு குரல் அங்கே கேட்டிட

 

இவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் ஆட்டோவின் ட்ரைவர் தான் அந்த பதிலை சொல்லியிருந்தார் என்பது புரிய

 

இருவருக்கும் சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.

 

இவர்களின் சிரிப்புக்கான காரணம் புரியாத ஆட்டோ ட்ரைவரிடம் கதிர் தான் விளக்கமளித்தான்..🙂

 

'இவங்க என்ன தான் வெயில்னால மறை கழண்டுடுச்சு போல'ன்னு சொல்றாங்கண்ணே! என்று சொல்ல

 

அவருக்கும் என்ன சொல்வதென்று தெரியலை..!!!

 

ஆட்டோவிலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழையும் வரை அதுவரை மனதில் அழுத்திக் கொண்டிருந்த வருத்தங்களும், வேதனைகளும் கவிதாவுக்கு சற்று நேரம் மறந்து தான் போயிருந்தன.

 

காதல் மணம் புரிந்து கொண்டு இனிமையான இல்லறத்தை ரசித்து வாழ்ந்து வந்த இருவருக்கும் வருடங்கள் பல கடந்து செல்ல, குழந்தை ஆசை இதுவரை கனியாதது மிகுந்த வருத்தத்தையும், வேதனையும் தர மருத்துவரிடம் தான் சென்று வந்துள்ளார்கள்.

 

கவி! குழந்தை வரும் போது வரட்டும்டா! அதையே நினைச்சு கவலைப்பட வேணாம்! 

 

இன்னும் ஜாலியா இருக்க நமக்கு நேரம் கிடைச்சிருக்குன்னு நினைச்சுக்கலாம்! 

 

குழந்தை வந்துட்டா என்ன நீ கண்டுக்கவே மாட்ட!!

 

நல்லதே நடக்கும்னு நம்புவோம்!

 

சரி!  சாயந்திரம் அந்த தட்டுவட செட் போய் சாப்பிடுவோமா கவி! என்ன சொல்ற! என்று சிரிக்கத் துவங்கினான்!

 

இருடா! உன்ன இன்னிக்கு என்ன செய்யறேன் பாரு! என்று கதிரை துரத்தத் துவங்கினாள்..!

 

காதல் அங்கே மெல்லிசையாய் தவழ்ந்தது.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    வாசகம் நன்றாக உள்ளது. வாசகத்திற்கு பொருத்தமான கதை நகர்வு அருமை. இல்லறத்தில் இனிமை இருந்து விட்டால் அங்கு எந்தவிதமான கவலைகளுமில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. அன்புள்ள ஆதி, இன்றைய கதை அருமை! எங்கள் சேலம் தட்டு வடை செட்டும் கதையில் பங்கேற்றது சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..... நீங்கள் சேலமா? தட்டு வடை நான் இது வரை சுவைத்ததில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி காயத்ரி சந்திரசேகர் ஜி.

      நீக்கு
  6. இன்றும் கிட்டத்தட்டக் கதைக்குப் பொருந்திய வாசகம்.

    இளமையான கதை! இளமையான காதல். நன்று ஆதி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைக்குப் பொருத்தமான வாசகமும் கதையும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  7. சேலம் தட்டு வடை செட் நன்றாக இருக்கும். அது ஒரு தனியான சுவை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சேலம் தட்டு வடை நான் இது வரை சுவைத்தது இல்லை கீதா ஜி. முடிந்தால் இந்தப் பயணத்தில் சுவைக்க வேண்டும்.

      நீக்கு
  8. வாசகம் அருமை. கதையும் மிக அருமை.
    முகநூலில் படித்தேன் இங்கும் படித்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் கதையும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. முகநூலிலும் இங்கேயும் படித்து ரசித்தது் அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....