சனி, 21 ஜனவரி, 2023

முகநூல் இற்றைகள் - தமிழகம் நோக்கி ஒரு பயணம்…. - பகுதி ஒன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ATTRACT WHAT YOU EXPECT, REFLECT WHAT YOU DESIRE, BECOME WHAT YOU RESPECT, MIRROR WHAT YOU ADMIRE. 

 

******



 

என்னடா இது, இன்னிக்கு சனிக்கிழமை ஆச்சே, காஃபி வித் கிட்டு பதிவு தானே வரும், அது இல்லாமல் வேறு ஏதோ பதிவை எழுதி இருக்கேனே என்று குழப்பம் வேண்டாம்.  இன்றைக்கு சனிக்கிழமை தான்! ஆனாலும் காஃபி வித் கிட்டு பதிவுக்கு பதிலாக வேறு விஷயம் தான் இன்றைக்கு பதிவு!  சமீபத்தில், சரியாகச் சொல்வதானால் வருடத்தின் இரண்டாம் நாள் தலைநகர் தில்லியிலிருந்து புறப்பட்டு திருவரங்கம் வந்தேன்.  மாலை விமான நிலையத்தில் காத்திருந்த போது முகநூலில் இற்றைகள் எழுத ஆரம்பித்தேன்.  விமான நிலையத்திலும், இரயில் நிலையத்திலும் பார்த்த விஷயங்கள் எழுதத் தொடங்கி கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விஷயம் குறித்து எழுதி வருகிறேன் - முகநூலில் தான்! அவற்றை இங்கேயும் சேமிக்க வேண்டும் என்பதோடு, முகநூலில் இல்லாத மற்ற நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால் இங்கே இன்றைக்கு அப்படி எழுதிய பதிவிலிருந்து சில விஷயங்கள் - ஒரு தொகுப்பாக. 

 

*****

 

தமிழகம் நோக்கி….. (02.01.2023)

 

இதோ மீண்டும் ஒரு பயணம் - தமிழகம் நோக்கி…… அலுவலகத்தில் இருந்து இரண்டரை மணிக்கே புறப்பட்டு விமான நிலையத்தின் முதலாம் முனையம் வந்து சேர்ந்து விட்டேன்.  பொதுவாக பகல் நேரம் என்றால் விமான நிலையம் வருவதற்கு தில்லி மெட்ரோ பயன்படுத்துவதே வழக்கம். சாலை வழியாக வந்தால் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு திண்டாட வேண்டும். அப்படியே சாலை வழியாக வந்தால் Ola, Uber போன்ற செயலிகள் வழி வாகனம் பதிவு செய்து வருவேன். அவர்கள் வாங்கும் கட்டணம் அதிகம், அந்த ஓட்டுனர்கள் தரும் தொல்லையும் அதிகம்.

 

ஆனால் கடந்த சில மாதங்களாக தலைநகரில் இந்த செயலிகளை பயன்படுத்துவது இல்லை. அதற்கு பதில் InDrive என்ற செயலியை பயன்படுத்துகிறேன். மற்ற இரண்டைவிட இது நன்றாக இருக்கிறது. நாம் செல்ல வேண்டிய இடத்தை உள்ளீடு செய்தால் நமக்கு அருகே இருக்கும் ஓட்டுனர்கள் வரிசையாக தேவையான தொகையை நமக்கு தெரியப்படுத்த, நமக்கு ஒத்து வந்தால், அவர்களை வர வைக்கலாம். அதனால் ஓட்டுநர், பயணி என இருவருக்கும் வசதி. 

 

இன்றைக்கு நான் பயன்படுத்திய வாகனத்திற்கு கட்டணம் 210/- மட்டும். சுமார் 14 கிலோமீட்டர். திலீப் என்ற ஓட்டுநர் வந்தார். எத்தனை நாட்களாக இந்த செயலியை பயன்படுத்துகிறேன் என்று கேட்டு அவர் தரப்பில் Ola மற்றும் Uber செயலிகளால் படும் அவதிகளைச் சொன்னார். பாதிக்கும் மேல் செயலி நிறுவனங்கள் ஒட்டுனர்களிடம் இருந்து பைசா வாங்கி விடுகிறார்கள் என்றும், ஆரம்பத்தில் கொடுத்த incentive போன்றவை இப்போது தருவது இல்லை என்றும் சொன்னதோடு இந்த புதிய செயலி அவர்களுக்கும் வசதியாக உள்ளது என்று சொன்னார். 

 

சரியாக கட்டணம் வாங்கிக்கொண்டு அவர் புறப்பட, நான் பாதுகாப்பு சோதனைகளை கடந்து எனது விமானம் புறப்பட காத்திருக்கிறேன். நல்ல வேளையாக அதிக கூட்டம் இல்லை. அனைத்து சோதனைகளும் விரைவில் முடிந்துவிட்டன. என்ன, கூட்டத்தினை காரணம் காட்டி, Baggage Tag-ஐ பயணிகளே நிலையத்தில் உள்ள KIOSK மூலம் பெற்று வரவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இது பலருக்கும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்…… அதே சமயம் தெரியாதவர்களுக்கு உதவி செய்யவும் சிலர் அங்கே நியமிக்கப்பட்டு இருப்பதால் கவலை இல்லை. 

 

சென்னையில் இறங்கி நள்ளிரவில் இரயில் பிடிக்க வேண்டும் …… இன்றைய இரவு உறக்கம் இருக்கப்போவதில்லை….. அது சரி…… வைகுண்ட ஏகாதசி அன்று இரவு தூங்கக் கூடாது அல்லவா? அப்படிச் சொல்லிக் கொள்ள வேண்டியது தான்……. 

 

******

 

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்…… 

 

பொதுவாக விமான நிலையத்தில் உள்ளே நுழைந்த பிறகு எதுவும் சாப்பிடுவது இல்லை. அங்கே விற்கும் பொருட்களை பார்ப்பதோடு நிறுத்தி விடுவது நம் பாக்கெட்டுக்கு நல்லது! தவிர்க்க முடியாத சமயங்களில் மட்டுமே விமான நிலையத்தில் சாப்பிட்டு இருக்கிறேன். கோட் பட்டனை விட சற்றே பெரிதான இரண்டு இட்லியும் மஹா கண்றாவியான சட்னி மற்றும் சாம்பாரும் தந்து அதற்கு 300/- ரூபாய்க்கும் மேல் தீட்டி விடுகிறார்கள். 

 

காப்பி என்ற பெயரில் தரும் பானமும் அப்படி ஒன்றும் நன்றாக இருப்பதில்லை. 180/- + வரிகள் கொடுத்து இப்படி ஒரு (வே)சோதனை நமக்கு தேவையா என்று சும்மா இருந்துவிடுவதே வழக்கம். இன்றைக்கும் அப்படியே!

 

புறப்படும் நேரத்தில் ஒரு தேனீர் குடித்து புறப்பட்டு விட்டேன். இங்கே விமான நிலையத்தில் அப்படியே வேடிக்கை பார்த்தபடி ஓர் உலா வந்தபோது மக்கள் கூட்டம் இந்த கடைகளில் அலை மோதுகிறது.

 

நமக்கு தான் இப்படி பணத்தை விரயம் செய்ய பிடிக்கவில்லை போலும்……. மற்றவர்கள் அனுபவிக்கட்டும்…… என்னைப் பொறுத்தவரை தலைப்பில் சொன்னது போல இந்தப் பழம் புளிப்பு தான்…….

 

******

 

ராஜா காது கழுதைக் காது……

 

சில விஷயங்கள் மாறுவதே இல்லை. பயணங்களில் காதுகளை தீட்டி வைத்துக்கொண்டு சக பயணிகளின் ஸ்வாரஸ்ய சம்பாஷனைகளைக் கேட்பது அப்படி மாறாத ஒரு விஷயம்..... இந்தப் பயணத்திலும் அப்படியே! விமானங்களின் திறன் குறித்த மகனின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்துக் கொண்டு இருந்தார் அந்த அப்பா.  கணவனிடம் தனது அலைபேசியை கொடுத்து "பத்திரமாக வச்சுக்கோங்க!" என்று அவரது மனைவி கொடுத்துவிட்டு சில நிமிடங்களில் அதை அவரிடம் கேட்க, "ஏம்மா இப்பதானே கொடுத்த, உடனே கேக்கறதுக்கு நீயே வச்சுக்கலாம்...." என்று சலித்துக்கொள்ள, அவரது மனைவி சொன்ன trademark பதில்...... 

 

"கேட்டா தான் என்னவோ...... கொடுப்பேன் வாங்குவேன். ... அதுக்கு ஒரு சலிப்பா? எனக்கு செய்யணும்னா உடனே ஏதாவது சொல்லுவீங்களே! "...... 

 

அந்த கணவரை நான் பார்க்க, அவர் என்னைப் பார்க்க, "ஒரு ஆம்பளைக்கு தான் இன்னோரு ஆம்பளையோட கஷ்டம் புரியும்னு" என்கிட்ட சொல்ற மாதிரியே இருந்தது அந்த பார்வை எனக்கு....... :) 

 

******

 

Common Sense...... 

 

விமானத்தில் பயணிக்கும்போது தண்ணீர் எடுத்து வர பெரும்பாலும் அனுமதிப்பது இல்லை......  பாதி திறந்து இருக்கும் தண்ணீர் பாட்டிலை இருக்கைகளுக்கு மேலே வைத்துவிட்டு Take Off ஆன பிறகு அது சொட்டிக்கொண்டே வருகிறது!  அந்த இருக்கையில் அமர்ந்து இருந்த மனிதர் தலை வழுக்கை வேறு! தலையில் சொட்டி முகமெல்லாம் வழிய அவர் பட்ட வேதனை....... என்ன சொல்ல அந்த பாதி தண்ணீர் குப்பி வைத்த  மனிதரை!!!!!! 

 

*********

 

To continue on the topic of தண்ணீர்........

 

விமானப் பயணத்தில் இந்த முறை ஒரு கேரள நாட்டிளம் பெண்ணும் விமானப் பணிப்பெண்ணாக இருந்தார். தண்ணீர் தேவை என்று சொல்ல, திரும்பி வரும்போது தருகிறேன் என்றார். மூன்று நான்கு முறை இப்படிக்கும் அப்படிக்கும் சென்று வந்தாலும் தண்ணீர் என்னமோ தரவில்லை!  அட போம்மா நீ தண்ணியே தரவேண்டாம் போ என கண்களை மூடி உறங்க முயற்சித்தேன். பின் பக்க இருக்கையில் இருந்தவர் தெலுகுவில் மாட்லாடினார்...... "காசு கொடுத்தா தான் தண்ணி கூட கொடுப்பாங்க போல" என்று!

 

கர்நாடகா தான் தண்ணீர் தருவதில் பிரச்சனை செய்யும் என்று யார் சொன்னது? கேரளமும் பிரச்சனை செய்யும்! :) 

 

*****

இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். தமிழகம் நோக்கிய பயணக் குறிப்புகள் நாளையும் தொடரும். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து….

 

10 கருத்துகள்:

  1. ராஜா காது கழுதைக்காது மட்டும் புதிது.  மற்றவற்றை பேஸ்புக்கிலேயே படித்தேன்.  சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. கேரளாவும் தண்ணீர் தராது இரசித்தேன் ஜி...

    பதிலளிநீக்கு
  3. நமக்குத் தண்ணீர் தர யாருமே தயாராக இல்லை.
    ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  4. ஆ! இன்று சூடா காஃபி மிஸ்ஸிங்க்!!!! சரி பரவால்ல....காஃபி இல்லாம வித் கிட்டு!!!!

    அட In Drive நல்லாருக்கே. திருச்சி ஈரோடு, கோயம்புத்தூர் பகுதிகளில் ரெட் டாக்ஸி தான் பிராபல்யமாக இருக்கு கூடவே இன்னொன்று கோயம்புத்தூரில் ...Go ந்னு தொடங்கும் ஒன்று...

    Terminal - முனையம். அட நீங்க பயன்படுத்தீட்டிங்களே. நான் சமீபத்தில் தெரிந்து கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கோட் பட்டனை விட சற்றே பெரிதான//

    ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்....ஆமா, விமான நிலையத்துல எல்லாமே விலை கூடுதல்.

    ஆமாம் ஜி விமான நிலையத்தில் கூட உணவகங்களில் கூட்டம் அலைமோதும். எனக்கு ஆச்சரியமாக இருக்கும். நமக்குக் கட்டுப்படி ஆகாது. அவ்வளவுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அந்த கணவரை நான் பார்க்க, அவர் என்னைப் பார்க்க, "ஒரு ஆம்பளைக்கு தான் இன்னோரு ஆம்பளையோட கஷ்டம் புரியும்னு" என்கிட்ட சொல்ற மாதிரியே இருந்தது அந்த பார்வை எனக்கு....... :) //

    ஹாஹாஹாஹாஹா....ஆதி இதைப் பாத்துக்கோங்க!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. In Drive குறித்த தகவல்கள் அருமை சார்.
      ஓலா ஊபர் இரண்டும் நஶ்டத்தில் ஓடுகின்றன.
      ஓலாவில் காசு போட்ட சாஃப்ட் பேங்க் பெரும் ிழப்பால் பணம் போடுவதை நிறுத்திவிட்டது.
      எனவேதான் ஓட்டுனர் பாடும் திண்டாட்டம் ஆகிவிட்டது.
      விமான நிலைய உணவு விலையும் திரையறங்கு பட்சனங்கள் விலையும் கட்டுப்படி ஆவதில்லை. உணவும், வெகுநாள் பதப்படுத்தப்பட்ட்ு சூடுபடுத்தப்பட்ட உணவாதலால் நம் செரிமான உறுப்புகளும் வேலை நிறுத்தம் செய்துவிடுகின்றன.
      வடிவேல் சொன்ன மாதிரி வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கி டெக்கரேட் பண்ணி சாப்பிடும் கதை தான் இது.
      தங்கள் சொந்த ஊர் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

      நீக்கு
  7. திருவரங்கம் பயணம் சுவாரசியம் கேரளாவும் தண்ணீர் தரவில்லை ;)

    பதிலளிநீக்கு
  8. நாங்கள் சென்ற வாரம் திருவரங்கம் சென்று வந்தோம் வெங்கட் ஜி

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....