சனி, 28 ஜனவரி, 2023

காஃபி வித் கிட்டு - 163 - அகத்திக்கீரை - சப்தம் எங்கேயிருந்து வருகிறது - லட்டு திங்க ஆசையா - வாழ்க்கை - தமிழ் கொலை - ரயில் ஜன்னலும் ரஹ்மான் பாடலும் - இலக்கியவாதி

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

PROBLEMS NEVER STAY LONG, THEY JUST PUT THE SIGNATURE IN THE EXPERIENCE BOOK OF YOUR LIFE AND MOVE AWAY.

 

******

 

இந்த வாரத்தின் எண்ணங்கள் - துவாதசியும் பசுவிற்கு அகத்திக்கிரையும்….. :  




 

கையில் ஒரு பால் தூக்கை கொடுத்து, "ஒரு லிட்டர் பால் வாங்கிட்டு வந்துடுங்களேன், பிளீஸ்…." என்று இல்லத்தரசி சொல்ல, மறு பேச்சு இல்லாமல் புறப்பட்டு விட்டேன்! அம்மணி சொல்லி கேட்காம இருந்திட முடியுமா என்ன? :)

 

வீட்டின் மிக அருகே சிறு பால்பண்ணை. சொட்டு தண்ணீர் கலக்காமல் பால் கிடைக்கிறது. லிட்டர் 50 ரூபாய்! ஆவின் பால் வீட்டுக்கு வருகிறது என்றாலும் அதிகமாக தேவைப்படும் போதெல்லாம் பண்ணைபால் தான். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை வாங்கிவிடுவது வழக்கம். 

 

இன்று அப்படிச் சென்ற போது ஒரு பெரியவர் கை நிறைய அகத்திக் கீரை வைத்துக் கொண்டு, சாலையில் இருந்த பசு மாடுக்கு வழங்க, மாடு தலையை திருப்பிக் கொண்டு சென்றது…… துவாதசி என்பதால் பலரும் இப்படியே அகத்திக் கீரை கொடுத்தால் அந்த பசுவும் தான் என்ன செய்யும்…… 

 

பார்க்கும் அனைவரும் புண்ணியம் கிடைக்கும் என்று ஒரே நாளில் அகத்திக் கீரை தந்தால் பசுவின் வயிறு கலங்கி விடாதோ…… அந்த மாடு திரும்பிப் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றியது… 

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்: VOLKSWAGEN - சப்தம் எங்கேயிருந்து?

 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக VOLKSWAGEN பழைய விளம்பரம் ஒன்று. ஜெர்மனிக்காரர்களுக்கு தங்கள் தயாரிப்புகள் மீது அப்படி ஒரு நம்பிக்கை. சப்தம் எங்கே இருந்து வருகிறது என்று சொல்லும் இந்த விளம்பரம் உங்களுக்கும் பிடிக்கலாம் - பாருங்களேன். 


  

மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை எனில் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம். 

 

Volkswagen (Squeaky Earring) 1990 Commercial - YouTube

 

*****

 

பழைய நினைப்புடா பேராண்டி : ரஜினி-கமல் பார்த்த “கண்ணா லட்டு தின்ன ஆசையா?

 

2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ரஜினி-கமல் பார்த்த “கண்ணா லட்டு தின்ன ஆசையா?” - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  

 

தினம் தினம் நாளிதழில் தில்லியின் PVR CINEMA’S ல் ”கண்ணா லட்டு தின்ன ஆசையா” போட்டிருப்பதைப் பார்த்து விட்டு, போகலாம் என இணையத்தில் முன்பதிவு செய்ய புதன் காலை பார்த்தேன். இருபது பேர் மட்டுமே பதிவு செய்திருக்க, சரி நேராகப் போனாலே கிடைக்குமென [நேரில் 100 ரூபாய், இணையத்தின் மூலம் 115 + சேவை வரி!] மாலை 07.15 காட்சிக்குச் செல்ல முடிவு செய்தேன். தனியாகப் போக வேண்டாமென நண்பர் பத்மநாபனையும் அழைத்துக் கொண்டேன்.

 

அலுவலகத்திலிருந்து நண்பரது வீட்டுக்குச் சென்று பைக்கை விட்டுவிட்டு, மெட்ரோ மூலம் மாலை 06.35 மணிக்கே தியேட்டர் சென்று நுழைவுச் சீட்டுகள் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். 07.10 க்குதான் உள்ளே விடுவோமெனச் சொல்ல, வெளியே Veg Burger Combo [190/-], Chicken Burger Combo [200/-], Large Nacho Combo [240/-], Chicken Hot Dog Combo [200/-], Big Tub Combo [240/-]   என எழுதி வைத்திருந்ததை படித்து விட்டு [பின்ன இதை விலை கொடுத்து வாங்கவா முடியும்?] படம் பார்க்க காத்திருந்த சிலரை வேடிக்கைப் பார்த்து விட்டு நுழைவு வாயில் திறந்தவுடன் உள்ளே போனோம்.

 

உள்ளே நுழைந்த பின் திரும்பினால் எங்களுக்குப் பின்னால் கதவு மூடிக்கொண்டது. காத்திருந்த மற்றவர்கள் வேறு படத்திற்கு வந்தவர்கள் போல! 07.10 தானே ஆகுது, முன்பதிவு செய்தவர்களெல்லாம் மெதுவா வருவாங்களா இருக்குமென நினைத்து எங்கள் இருக்கைகளில் அமர்ந்தோம்.

 

முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாம்!

 

******


இந்த வாரத்தின் ரசித்த வாசகம் - வாழ்க்கை 



 

******

 

இந்த வாரத்தின் தகவல் - தமிழ் கொலை :




 

திருவரங்கம் பகுதியில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஒரு அரசு கட்டிடம். அதற்கான பெயர் பலகை மேலே. தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொண்டே தமிழ் கொலை நடக்கிறது!  தற்போது தமிழகத்தில் இருப்பதால் தினமும் ரேடியோ FM கேட்க முடிகிறது.  ரேடியோ ஜாக்கி ஒருவருக்கும் ஒழுங்கு தமிழ் பேச வரவில்லை.  ழகரம் அப்படி தடுமாறுகிறது! என்ன தமிழ் பற்றோ! வெறும் பேச்சில் மட்டும் பற்று!  

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த கதை - ரயில் ஜன்னலும் ரஹ்மான் பாடலும் :

 

சொல்வனம் தளத்தில் படித்த ஒரு கதை - ரயில் ஜன்னலும் ரஹ்மான் பாடலும்!  கதையில் ரஹ்மான் பாடல் குறித்து பேசினாலும் எனக்குப் பிடித்தது இளையராஜா தான்! கதை இரயில் பயணத்தில் நடப்பதாக இருக்கிறது.  உங்களுக்கும் கதை பிடிக்கலாம்! சற்றே நீளமான கதை - முடிந்தால் சொல்வனம் தளத்தில் படியுங்களேன். 

 


******

 

இந்த வாரத்தின் ரசித்த முகநூல் இற்றை - இலக்கியவாதி :

 

முகநூலில் போகன் சங்கர் என்ற பெயரில் எழுதுபவரின் இற்றைகள் எப்போதும் ரசிப்பது.  சமீபத்தில் அப்படி ரசித்துப் படித்த ஒரு இற்றை கீழே. 

 

"நேற்றிரவு முழுவதும் என் மண்டைக்குள்ளிருந்து ஒரு விரும்பத்தகாத சப்தம் வந்துகொண்டிருந்ததா?"

 

"குறட்டை விடறே நீ!"

 

"ஓக்கே. ஒரு இலக்கியவாதி இப்படித்தான் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது"

 

******

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து….

 

10 கருத்துகள்:

  1. தப்பி எங்கும் ஓடமுடியாதபடி கோசாலையில் கட்டப்பட்டிருக்கும் பசுக்களுக்கு அகத்திக்கீரை இந்நாட்களில் திணிக்கபப்டுவதைப் பார்த்திருப்பீர்களே...!!

    ஆரம்பத்திலேயே பெண்தான் சத்தத்திற்கு காரணமாயிருக்கும் என்று யூகிக்க முடிந்தது.

    அந்தப் படத்தை பத்து பேர்தான் பார்த்திருப்பார்கள்!  சரியா?

    போகன் சங்கர் ரசிக்கக்கூடிய எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.  முன்னர் வலைப்பக்கம் ஒன்றும் நடத்தி வந்தார்.  நிறைய கவிதைகளும் எழுதுவார்.

    பதிலளிநீக்கு
  2. காணொளி நல்ல சிரிப்பு. அந்த பெண் அணிந்து இருக்கும் தொங்கட்டான் தான் சத்தம் கொடுத்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய டம்ளர்களுக்கு வேலையே டமிழ் கொலை தான்..

    பதிலளிநீக்கு
  4. அகத்திக் கீரையும் பசுமாடும் :)

    இன்றைய பகிர்வு ரசனை.

    பதிலளிநீக்கு
  5. மறு பேச்சு இல்லாமல் புறப்பட்டு விட்டேன்! அம்மணி சொல்லி கேட்காம இருந்திட முடியுமா என்ன? :)//

    ஹாஹாஹாஹா அதானே!! அப்புறம் காஃபி வித் கிட்டு காஃபி இல்லாம வந்திடுமே!!!! ஹாஹாஹா

    பண்ணையில் பால் ஆஹா!!! சூப்பர்..ஆமாம் கறந்து உடன் கிடைக்கும் பால் லிட்டர் 50 ரூபாய்.

    அகத்திக்கீரை - மாடு - விஷயத்தை ரொம்ப ரசித்தேன் ஜி. பாவம் இதாச்சும் ரோட்டுல போகுது அப்படியே போய்விடும் ஆனால் கோசாலை மாடுகளை நினைத்தால் வருத்தமா இருக்கும். திருவான்மியூர் கோயில்ல இருக்கும் கோசாலையில் எல்லாம் அதுக்கு இப்படித்தான் செய்வாங்க அது கீழே துப்பிவிடும். பின்ன?

    ஆனா பாருங்க இன்னிக்கு மட்டும்தான் கொடுக்கறாங்க

    ஆனால் மாட்டிற்குக் கண்டபடி கண்டதை கொடுப்ப்தும் குறிப்பாக வீட்டில் செய்யும் கூட்டு கறி வெங்காயம் பூண்டு கலந்தவை எல்லாம் மீந்து போனா கலந்து கழனிநீரில் கலந்து வைப்பாங்க பாருங்க....பாவம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. விளம்பரம் ரொம்ப ரசித்தேன்....அந்தப் பெண்ணைக் க்ளோசப்பில் காட்டி "மெட்டல் டோலாக்கு குலுங்குது குலுங்குதுன்னு" பாடறா மாதிரி காட்டிட்டாங்களே!!!

    ஆ!! இந்தப் படத்தைப் பார்த்தீங்களா ஜி!! நல்ல காலம் பப்பு அண்ணாச்சி கூட இருந்திருக்காரே இல்லைனா நீங்க மட்டும்! நான் தனி என் வழி தனின்ற ரஜனி டயலாக் கூட வைச்சிருக்கலாம்!! பப்பு அண்ணாச்சி கூட போனீங்களோ தப்பிச்சீங்களோ படத்தை விட அவர் பேச்சே செமையா நகைச்சுவையா இருந்திருக்கும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வாழ்க்கை வாசகம் - ரொம்பப் பிடித்தது. நான் அடிக்கடி சொல்வது....

    ரேடியோ ஜாக்கி ஒருவருக்கும் ஒழுங்கு தமிழ் பேச வரவில்லை. ழகரம் அப்படி தடுமாறுகிறது! //

    ஹையோ வெங்கட்ஜி அதை ஏன் கேக்கறீங்க....என் குரல் டெஸ்ட் நடத்தி (ஆன்லைன் ஒன்றிற்குதான்) நல்லாருக்குன்னு சொன்னவங்க தமிழ் உச்சரிப்பு சரியா இல்லைன்னுட்டாங்களே அதாவது இன்றைய தொகுப்பாளினிகள் போலப் பேசணுமாம்...கிச்சுக் குரலில் அரை குறையாகத் தமிழ்ல உச்சரிக்கணுமாம்....என்ன கொடுமை சரவணா!!

    ரயில்னு வந்திருக்கே கதையின் தலைப்பில் அப்ப கண்டிப்பா வாசிச்சே ஆகணும். வாசிக்கிறேன்

    போகன் சங்கர் - எங்கள் ஊர்க்காரர். ரசனையான எழுத்துக்குச் சொந்தக்காரர். இற்றையை ரசித்தேன்.

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கதையை வாசித்தேன். ரயில் சினேகம் காதலாகிடுச்சு! காதலுக்குத் துணை போன ரஹ்மான்!!!! அதுவும் கோயம்புத்தூர்லருந்து ஈரோடு வரதுக்குள்ளயே!!! சினிமாக்காதல் போல இருக்கு....என்றாலும் பாடல்கள் மூலம் உணர்வுகளைச் சொல்லிச் சென்றது நல்லாருந்தது...

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....