ஞாயிறு, 29 ஜனவரி, 2023

முகநூல் இற்றைகள் - காணாமல் போன கல்லுரல்….. - மாகாளிக்கிழங்கு மஹாத்மியம்….


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

TRY AND APPRECIATE THOSE WHO GOSSIP ABOUT YOU, IT’S NOT EASY FOR SOMEONE TO LEAVE THEIR PROBLEMS AND CARRY YOURS ON THEIR HEAD. 

 

******

 

காணாமல் போன கல்லுரல்….. 

எங்கள் வீடு அமைந்து இருக்கும் பகுதியில் புதிதாக நிறைய தனி வீடுகள்/அடுக்குமாடி குடியிருப்புகள் வந்த வண்ணமே இருக்கின்றன. முன்பு அந்த இடங்கள் தென்னந்தோப்புகளாகவும், மாந்தோப்புகளாகவும் இருந்தவை. கூடவே சில சிறு குடிசைகளை உள்ளடக்கிய பகுதிகள். கொஞ்சம் கொஞ்சமாக அவை எல்லாம் அழிக்கப்பட்டு தனி வீடுகளாக, அடுக்குமாடி குடியிருப்புகள் ஆக மாறிவிட்டன. 

 

அதுவும் கடந்த சில ஆண்டுகளாக நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. இன்னும் சில ஆண்டுகளில் தோப்புகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மாறிவிடும் என்று தோன்றுகிறது. தினமும் இந்தப் பகுதிகளில் மாலை நேரங்களில் கொஞ்சம் தூரம் ஒரு நடை நடப்பது ஒவ்வொரு திருவரங்கப் பயணத்திலும் உண்டு. இந்த முறையும் அப்படியே கடந்து இரண்டு தினங்களாக நடந்து கொண்டிருக்கிறேன். 

 

இந்த முறைக்கும் சென்ற முறைக்கும் இடையே இன்னும் சில புதிய கட்டிடங்கள் வர ஆரம்பித்துவிட்டன. சிலர் பெரிய மாளிகைகளை கட்ட, சிலர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுகிறார்கள். அந்த இடங்களில் நடந்து வரும்போது, சாலை ஓரங்களில் படத்தில் காண்பித்து இருக்கும் கல் உரல்,  இயந்திரம் போன்றவை தேவையில்லை என்று தூக்கிப் போட்டவை கேட்பாரற்று கிடக்கிறது. எத்தனை வருடங்களாக பயன்பட்டு வந்த அந்த உபகரணங்கள் யாருக்கும் உபயோகப்படாமல் கிடக்கிறது. 

 

அவை இன்னும் பயன்படும் என்றாலும் அவற்றை பயன்படுத்த நாம் தான் தயாராக இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரமயமான வாழ்க்கைக்கு பழகி விட்டோம். நெய்வேலியில் இருந்த வரை கல் உரல், இயந்திரம், அம்மி என அனைத்தும் இருந்தது. நானும் இவற்றை எல்லாம் பயன்படுத்தியது உண்டு. இட்லி/தோசை மாவு அரைப்பது, மர/இரும்பு உலக்கை கொண்டு மாவு இடிப்பது,  சட்னி/சாம்பாருக்கு அம்மியில் அரைப்பது என் எல்லாம் செய்திருக்கிறேன். 

 

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று சொல்லிக்கொண்டு இருந்தாலும் இது போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டே வருகிறோம் என்ற எண்ணம், கேட்பாரற்று கிடக்கும் இந்த பொருட்களைப் பார்க்கும் போது வராமல் இல்லை…… இன்னும் எத்தனை எத்தனை விஷயங்களை இப்படியே இழக்கப் போகிறோமோ? மாற்றங்கள் ஒன்று மட்டுமே மாறாதது என்றாலும்?

 

*****

 

மாகாளிக்கிழங்கு மஹாத்மியம்…. 


மாலை நேரம் நகர் வலம் வந்து அப்படியே சித்திரை வீதியில் தேவையான காய்கறிகளும் வாங்கி வரலாம் என்று புறப்பட்டேன்.  கூடவே இல்லத்தரசியும்! கடை வீதி முழுவதும் கலகலவென கூட்டம்.  திருவரங்கம் எப்போதுமே மக்கள் கூட்டம் அலைமோதும் படிதான்! அதுவும் இப்போது தான் வைகுண்ட ஏகாதசி முடிந்து உற்சவம் நடந்து கொண்டிருக்கிறது.  மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.  எங்கே பார்த்தாலும் மனிதத் தலைகள்! பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்த வண்ணமே இருக்கிறார்கள்.  கூட்டத்துடன் கூட்டமாக நாங்களும் ஜோதியில் கலந்தோம்! 
 


மாங்காய் இஞ்சி...

காய்கறிகள் தனித்தனியே வாங்கி நாம் கஷ்டப்பட வேண்டாம் என பல வித காய்கறிகளும் கலந்து, சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை கலந்து, அப்படியே குமித்து வைத்து இருந்தார்கள்.  கிலோ 200/- மட்டும்.  தேவையான அளவு வாங்கிக் கொண்டு வந்து கூட்டு செய்தால் போதும்! 50/- ரூபாய் கொடுத்து ¼ கிலோ மட்டும் வாங்கிக் கொண்டோம் - எங்கள் வீட்டில் குழம்புக்கு இவ்வளவு போதும்! மற்ற தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டு அப்படியே நகர்ந்தால் ஒரு இடத்தில் மாங்காய் இஞ்சியும், மாகாளிக்கிழங்கும் குவித்து வைத்திருந்தார்கள்.  மாங்காய் இஞ்சி கிலோ 100/- ரூபாய்! மாகாளி கிலோ 80 ரூபாய், 120 ரூபாய் என இரண்டு விதமாக!  மாங்காய் இஞ்சி மட்டும் அரை கிலோ வாங்கி வந்தோம்.  அது இன்று இரண்டு விதமாக தயாராகி இருக்கிறது! தோல் சீவி, துருவிக் கொடுத்தது நான்! :) 

 

சரி மாகாளிக்கிழங்கு ஏன் வாங்கவில்லை?மாகாளிக்கிழங்கு.....

 

எனக்கு சிறு வயதிலிருந்தே அதன் வாடை பிடிக்காது!  பிடித்தவர்களுக்கு அந்த வாசனை ஓஹோ ரகம்! பிடிக்காதவர்களுக்கு அதன் வாடை குமட்டல் தரக்கூடியது! நெய்வேலியில் இருந்த வரை எங்கள் வீட்டில் அப்பாவும் மூத்த சகோதரியும் மட்டுமே விரும்பி சாப்பிடுவார்கள்.  வேறு யாருக்கும் பிடிக்காது.  இப்போதும் எனக்கு பிடிக்காது! எனது இல்லத்தரசிக்கும் பிடிக்காது [ நல்ல வேளையாக :) ] - மூட்டைப்பூச்சி மருந்து நாத்தம் என்பார்! அது என்னவோ பலருக்கும் இந்த மாகாளிக்கிழங்கு பிடிப்பதே இல்லை.  தில்லி நண்பர் ஒவ்வொரு முறை நான் திருவரங்கம் வரும்போதும் “டேய் மாகாளிக்கிழங்கு வாங்கிட்டு வா!” என்பார். என் இல்லத்தரசிக்கு அதன் வாடை பிடிக்காது என்று தெரிந்ததால், வேண்டுமென்றே, “முடிஞ்சா ஊறுகாய் போட்டு தரச்சொல்லு!” என்று வம்புக்கு இழுப்பார் எனது இல்லத்தரசியை! 

 

தெரிந்த கடை என்பதால் மாகாளிக்கிழங்கு வாங்காமல் படம் மட்டும் எடுத்துக் கொண்டேன்! தில்லியில் பல விஷயங்கள் பிடித்ததாய் இருந்தாலும் இந்த மாதிரி கடை வீதிகளில் உலா வந்து, இங்கே கிடைக்கும் மாங்காய் இஞ்சி போன்ற பிடித்த விஷயங்களை வாங்க முடியாது என்பது மனதுக்கு வருத்தம் தரும் விஷயம் தான்! ஒன்று இருந்தால் மற்றொன்று இருக்காது என்பது தானே நிதர்சனம்.  அங்கே கிடைப்பது இங்கே கிடைக்காது! இங்கே கிடைப்பது அங்கே கிடைக்காது!  அந்த அந்த இடத்தில் கிடப்பதை அனுபவிக்க வேண்டியது தான்! 

 

******

 

இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து….

 

8 கருத்துகள்:

 1. தேவகோட்டை வீதிகளில் இப்படி உரல், அம்மிகள் கிடப்பது பெருகி விட்டது. நானும் புகைப்படங்கள் எடுத்து வைத்து இருக்கிறேன் ஜி

  பதிலளிநீக்கு
 2. வீதிக்கு வந்துவிட்டது பொருட்கள் ;( ஒருகாலத்தில் இவை இல்லாமல் அடுப்பே பத்த முடியாது என்று இருந்த காலம்..

  நாங்கள் இவற்றை எல்லாம் எங்கள் வீட்டு வாசலில் அழகுக்காக மறக்காமல் வைத்துள்ளோம். அரிக்கன் விளக்கு, வாசல் இருபுறமும் தொங்க விட்டுள்ளோம்.

  பதிலளிநீக்கு
 3. எங்கள் வீட்டில் உள்ள ஆட்டுரலை மறைத்து வைத்துள்ளேன். ஏனென்றால் எங்கள் வீட்டில் இட்லி தோசை மாவு அரைப்பதற்கு அரிசி உளுந்து ஊறப்போட்டால் மின்வாரியத்திற்கு தகவல் தெரிந்து மின்சாரம் காணாமல் போய் விடுகிறது.

  பதிலளிநீக்கு
 4. அனைத்து மாற்றங்களுக்கும் ஒரு முடிவும் உண்டு...

  பதிலளிநீக்கு
 5. ஆமாம் ஜி கல்லுரல் அம்மி எல்லாம் காணாமல் அதுவும் இப்படி சில இடங்களில் மண்ணில் புதையுண்டு அல்லது வேண்டாம் என்று விட்டிருப்பது பார்க்கிறேன், இங்கு முன்னிருந்த வீட்டில் அடுக்களையில் தரையோடு பதித்த உரல் இருந்தது, அதுவும் கரெக்ட்டா இட்லு தோசைக்கு ஊறப்போடும் தினம் அலல்து சட்னி அரைக்கும் தினம் கரெக்ட்டா மின்சாரக் கண்ணே என்று மின்சாரம் போய்விடும்... அதில் நான் அரைத்ததுண்டு, சட்னி, மாவு எல்லாம். இப்போதைய வீட்டில் இல்லை. ஆசை உண்டு ஆனால் வீடு வீடாக மாறும் ஜிப்சியாச்சே நாங்க!!

  கீதா

  பதிலளிநீக்கு
 6. ஓ அங்கும் நறுக்கிய காய்கள் வந்துவிட்டதா!! இங்கும் எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் இருக்கு. உரித்த பூண்டு, சின்ன வெங்காயம் எல்லாம். அங்கு ஃப்ரெஷ்ஷாக இருக்கும் என்று படத்துல தெரியுது

  மா இஞ்சி, மாகாளி இரண்டுமே ரொம்பப் பிடிக்கும். எனக்கென்னவோ மாகாளி வெனிலா மணம் போன்று தோன்றும்!!!!!!
  இங்கு வந்து இரண்டுமே அபூர்வம். சென்னையில் இருந்த வரை கண்டிப்பாக இரண்டுமே வாங்கிவிடுவதுண்டு,

  //தோல் சீவி, துருவிக் கொடுத்தது நான்! // ஹாஹாஹா 'யாமிருக்க பயமென்!!!'

  கீதா

  பதிலளிநீக்கு
 7. அம்மி கல்லுரல்கள் காணாமல் போவது வருத்தம்தான் எனக்கும்.  தடுக்க முடியாத இயலாமை!  காலத்தின் கோலம்.  எனக்கு மா இஞ்சி, மாகாளி இரண்டுமே பிடிக்கும்.  மா இஞ்சி கொஞ்சம் அதிகம் சாப்பிட்டால் பித்தம் என்பார்கள்.  மாகாளி எனக்கும் முதலில் பிடிக்காமல் இருந்தது.  பின்னர் பிடித்து விட்டது.

  பதிலளிநீக்கு
 8. அம்மியும் ஆட்டுரலும் வேண்டாம் என்பவர்கள் எனக்கு அனுப்பி வைக்கலாம் அதை பயன்படுத்த நான் ரெடி

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....