வியாழன், 12 ஜனவரி, 2023

தேரோடும் வீதியிலே - சுசீந்திரம் - பத்மநாபன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

IT’S VERY EASY TO GIVE EXAMPLE BUT IT’S VERY DIFFICULT TO BECOME AN EXAMPLE.

 

******




இப்போ தீபாவளியும் முடிஞ்சு திருக்கார்த்திகையும் வந்துக்கிட்டு போயாச்சு. சுசீந்தரத்துல மார்கழித் திருவிழா முடிஞ்சு கோட்டாறு கணபதியும், குமார கோவில் குமாரசாமியும், மருங்கூர் முருகனும் அவரவர் ஊருக்கும் திரும்பியும் போயாச்சு.  ஆனா தீபாவளி நினைவும், திருக்கார்த்திகை தீபமும், மார்கழி தேரோட்டமும்  மறக்காதுல்லா. இன்னும் திருவிழாக் கடைகள் பாதி இருக்கத்தான் செய்யி. ஏணிப்படி ஜிலேபியும், பிளாஸ்டிக் கிலுக்கும் அங்கங்க தட்டுப்படத்தான் செய்யி.

 

சுசீந்திரம் மார்கழித் திருவிழான்னா கன்னியாகுமரி மாவட்டக்காரன் குடும்பத்தோடு கொண்டாடுவான். சிவஞ்சாமியும் பத்து நாள் திருவிழாவையும் குடும்பத்தோடு கொண்டாடுவாரு.  

 

திருவிழாவுக்கு கோயில்ல கொடியேறுனாப்போதும் சாமிக்கும் அம்பாளுக்கும் இருப்புக் கொள்ளாது. ரண்டு பேரும் விதவிதமா வாகனத்துல ஏறி காலையிலேயும் சாயுங்காலமும் ஊர் சுத்த ஆரம்பிச்சுருவா. கூடவே விஷ்ணுவையும் கூட்டு சேத்துக்கிடுவா. இதப்பார்த்து அங்க கோட்டாறுல கணபதிக்கு இருப்பு கொள்ளாது. அவரு பொட்டியைக் கட்டிக்கிட்டு அம்மையையும் அப்பாவையும் பாக்கதுக்கு புறப்பட்டுருவாரு. இங்க குமாரகோவிலிலேயும் மருங்கூரிலேயும் இருக்கும் நம்ம முருகனுக்கு மட்டும் பொறுக்குமா. அவுகளும்  மூட்டை முடிச்சுகள கட்டிக்கிட்டு சுசீந்தரத்துக்கு கிளம்பிருவா. பின்னே, ஒம்பதாநாள் தேரோட்டம் முடியதுவரை  குடும்பத்தோடு சேர்ந்து ஊரை திருத்தூளி பண்ணனும்லா.

 

கோட்டாறு கணபதியும், குமார கோவில் குமாரசாமியும், மருங்கூர் சுப்பிரமணியரும் மூணாந்திருவிழாவுக்கு சுசீந்திரம் வந்துருவால்லா.  இராத்திரி பத்து பத்தரைக்கு அம்மையப்பன் ஊர் சுத்தலாம்னு கிளம்பறப்ப இங்க மக்கள்மார் சுசீந்திரம் வந்துருவா. அதான், கணபதியும், குமாரசாமியும், சுப்பிரமணியரும் சுசீந்திரம் வந்து அம்மையப்பாவை பாத்து சுத்தி வந்து ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டு ஊர்மக்கள் எல்லோருக்கும் தரிசனம் கொடுப்பால்லா, அட, அட கண்கொள்ளாக்காட்சியில்லா. இதை நாங்க மக்கள்மார் சந்திப்புன்னு சொல்லுவோம். இந்த மூணாந்திருவிழா மக்கள்மார் சந்திப்பை பாக்கதுக்கு ராசாக்கமங்கலத்துல இருந்தும் ஆராம்பொழி, தோவாளையில இருந்தும், வடிவீஸ்வரத்துல இருந்தும், ராசாவூர்ல இருந்தும், மைலாடில இருந்தும், என்னது உங்க ஊரை உட்டுட்டனா, ஆமா ஒரு ஊரு உடாம எல்லா ஊர்ல இருந்தும் கூட்டம் கூடிரும்.

 

அப்புறம் சாமிக்கு குடும்பமே ஒண்ணு கூடியாச்சுல்லா, கிடப்பு வருமா. அப்படியே தினசரி காலையிலேயும்,  ராத்திரியிலேயும் குடும்பத்தோடு ஆளுக்கொரு வாகனத்தை எடுத்துக்கிட்டு ஊரைச் சுத்த வேண்டியது.  அவுகதான் ஊரைச் சுத்துகான்னா இந்த ஊர்க்காரன் சும்மா இருப்பானா. அவனும் குடும்பத்தோடு சாமிக்கு பொறத்தாலேயே ஊரைச் சுத்த வேண்டியது. இல்லாட்டா கலையரங்கத்துல கச்சேரியையோ, சொற்பொழிவையோ, இல்லை டான்ஸையோ பாக்கேன்னு கிளம்பிற வேண்டியது. பின்னே, டிவி ஸீரியலையும், பிக்பாஸையும் பார்த்துக்கிட்டு வீட்டுல அடைஞ்சா கிடக்கணும். 




 

ஒம்பதாநாள் காலையிலே தேரோட்டம். மொத்தம் மூணு தேரு. முதல்ல பிள்ளையார் தேரு. இந்தத் தேரை இழுக்கதுன்னா சின்னப் புள்ளைகளுக்கு கொண்டாட்டம். ஏன்னா சின்னத் தேரு. சின்னப்புள்ளைகளும் மள மளன்னு சந்தோஷமா இழுத்துக் கொண்டு வந்து நிலைக்கு நிறுத்திரும். அடுத்தால சாமித்தேரு. உலகத்துக்கே சாமியில்லா. அதனால பெரிய தேரு. ஊரே கூடி இந்த தேரை இழுக்கணும். ஆஹா! அழகான அலங்காரத்தோட அந்த இரண்டு குதிரைகள் தேரை இழுப்பது போல பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கும். அதுவும் அந்த ஜனக் கூட்டத்துக்குள்ள அது நகர்ந்து வரக்கூடிய காட்சி இருக்கே! இவ்வளவு பெருசா தேரைச் செஞ்சு அதுக்குள்ள சாமியை வச்சு தெருவெல்லாம் இழுத்துக் கிட்டு வரணும்னு முதல்ல ஒருத்தன் யோசிச்சான் பாரு. சம்மதிக்கணுமய்யா! 

 

இதப்பாத்துத்தானே பொறாமை புடிச்சு 1750 வாக்குல இந்தப் பக்கமா சண்டைக்கு வந்த நவாப்போட படை தேரை தீவச்சுப் போட்டானுக. என்னத்தைச் சொல்ல, அவனுக்கு தெரிஞ்சதை அவன் செஞ்சான். வேற என்னத்தச் சொல்ல. நவாப் படைகளெல்லாம் திரும்பி போன பிறகு பக்கத்துல உள்ள தேரூர் மக்களெல்லாம் சேர்ந்து புது தேரு செய்து தந்தாளாம். அந்தத் தேருதான் இப்பம் அம்மன் தேரு. இந்த அம்மன் தேரை பொம்பிளைகள்தான் சேர்ந்து இழுப்பா. அவுகளும் பொம்பளைங்கன்னா சளைச்சவங்களான்னு கேட்டு சாமித் தேரு பின்னாடியே சர சரன்னு அம்மன் தேரை இழுத்து வந்து நிலைக்கு கொண்டு வந்துருவா.

 

ஒம்பதாநாள் திருவிழா வரை ஒரே கூத்தும் கொண்டாட்டமும்தான். என்னதான் சாமியா இருந்தாலும் இப்படியே ஊரைச் சுத்திக்கிட்டு இருந்தா சரிப்பட்டு வராதுல்லா. புள்ளைகளுக்கும் அரையாண்டு பரீட்சை லீவு முடிஞ்சு ஸ்கூலு திறந்துருமுல்லா. கணபதிக்கும் முருகனுக்கும் அவங்க ஊருக்கு போகாண்டாமா. அங்கேயும் ஆயிரம் சோலி கிடக்குமுல்லா.

 

ஒம்பதாம் திருவிழா ராத்திரி பத்து மணி போல சாமி ஊர்சுத்தப் போய் தெருவெல்லாம் திருக்கஞ்சாத்து வாங்கி ஊர் மக்களை யெல்லாம் குசலம் விசாரிச்சு கோவில் வாசல் வருகதுக்கு ராத்திரி மணி பன்னிரண்டு, ஒண்ணு ஆயிரும். கணபதியும் முருகனும் அம்மையப்பன்கிட்ட போய்ட்டு வாரோம்னு சொல்லிக்கிட்டு கிளம்பணும்லா. ஆனா அதுக்கு முன்னால அந்தக் குடும்பம் அடிக்க கூத்து இருக்கே, அதான் சப்தவர்ணம், அதைப் பாக்கதுக்கு கூட்டமான கூட்டம். ராத்திரி எட்டு மணிக்கே எட்டு திசையிலும் இருந்து வந்த கூட்டம் எடம் புடிச்சுப் போட்டு காத்திருக்கும். 

 

கோட்டாறு கணபதியும், குமாரகோவில் குமாரசாமியும், மருங்கூர் சுப்பிரமணியசாமியும் அம்மையப்பனை சுத்தி வந்து விடை பெறுவா. என்ன ஆனாலும் பெத்து வளத்த பிள்ளைகள். அதுவும் ஒருவாரமா கூடவே ஊரைச் சுத்தி கும்மாளம் போட்ட புள்ளைங்கள பிரிய மனமில்லாம சிவஞ்சாமி கோவிலுக்கு உள்ள போறதும் பிறகு வெளியே ஓடி வந்து பிள்ளைகளை பார்க்கதும், திரும்ப உள்ள போறதும் மறுபடியும் வெளியே ஓடி வந்து பிள்ளைகளை பார்க்கதும் பின்னர் ஒருகட்டத்தில் பிரிவைத் தாங்க முடியாமல் ஒரேயடியாக கோவிலுக்கு உள்ளே ஓடிப் போய்விடுவார். இந்தப் பாசப் போராட்டத்தைப் பார்த்து, வந்த ஜனமெல்லாம் கண்களை துடைத்துக் கொள்ள கணபதியும், குமாரசாமியும், சுப்பிரமணியரும் அவரவர் ஊருக்கு கிளம்புவார்கள். இந்த பிரியாவிடை நிகழ்ச்சியை "சப்தவர்ணம்" என்று அழைப்பார்கள். 

 

அப்படியே திருவிழாவுக்கு வந்தவங்க எல்லாம் அடுத்தநாளு ஆஞ்சநேய உற்சவத்தையும் ஆருத்திரா தரிசனத்தையும் பார்த்துக்கிட்டு ஊர் போய் சேருவா. பின்னே ஊர் போனால்தான் அடுத்த திருவிழாவுக்கு வர முடியும். என்ன நான் சொல்லுகது.

 

அப்புறம் புதுசா கல்யாணமான ஜோடிகள் சுசிந்தரம் தேரோட்டம் பார்ப்பது  ரொம்ப விசேஷமுல்லா. அதனால் நிறைய புது ஜோடிகளை உற்சாகமாய் காணலாம். என்னது, எனக்கு  கல்யாணமானதும் ஜோடியா சுசிந்தரம் தேரோட்டம் பார்க்க போனேனான்னு கேக்குறீங்களா. போனேன், போனேன். ஆனா எங்க தேரோட்டத்தை பாத்தேன். தங்கத் தேராட்டமா  பக்கத்துல இருந்த புதுப் பொண்டாட்டியை கூட்டத்துல அடுத்தவன் இடிக்காம பார்க்கதிலேயே பாதி நேரம் போயிற்று. என்னத்தச் சொல்ல.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,


பத்மநாபன்

12 கருத்துகள்:

  1. சுவையான, மிகச்சுவையான திருவிழா குறிப்புகள்.

    பதிலளிநீக்கு
  2. //புள்ளைங்கள பிரிய மனமில்லாம சிவஞ்சாமி கோவிலுக்கு உள்ள போறதும் பிறகு வெளியே ஓடி வந்து பிள்ளைகளை பார்க்கதும், திரும்ப உள்ள போறதும் மறுபடியும் வெளியே ஓடி வந்து பிள்ளைகளை பார்க்கதும் பின்னர் ஒருகட்டத்தில் பிரிவைத் தாங்க முடியாமல் ஒரேயடியாக கோவிலுக்கு உள்ளே ஓடிப் போய்விடுவார்.//

    சப்தவர்ணம் விளக்கம் அருமை.

    சுசீந்திரம் தேர்திருவிழா அனுபவம் அருமை.
    எனக்கும் சுசீந்தரம் தேர்திருவிழா மறக்க முடியாது. நான் தொலைந்து போய் கிடைத்தேன், அதை அம்மா சொல்லி சொல்லி மனதில் பதிந்து விட்டது.
    முன்பு உங்கள் பதிவில் சொல்லி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஏணிப்படி ஜிலேபி.... ரசனையாகவும் நிறைவாகவும் எழுத அண்ணாச்சியை அடிச்சுக்க ஆள் கிடையாதுல்லா

    பதிலளிநீக்கு
  4. கூட்டத்துல அடுத்தவன் இடிக்காம.... ஹா ஹா ஹா.... இவரு தேரோட்டத்தைப் பாக்கவா கூட்டிட்டுப் போயிருப்பாரு? சேர்ந்து வீதியுலா வர்றதுக்கல்லா போயிருப்பாரு

    பதிலளிநீக்கு
  5. நல்ல சுவாரஸ்யமான விவரிப்பு. ரசித்து படித்தேன் அண்ணாச்சி.

    பதிலளிநீக்கு
  6. ஆஹா நம்ம பப்பு அண்ணாச்சி இந்த வருஷம் சுசீந்திரம் தேரோட்டம் போய் வந்தியளோ...எத்தனை வருடங்கள் ஆச்சு.

    காணொளி கண்டு ரொம்ப ரசித்துப் பார்த்தேன்...பழைய நினைவுகள் மீண்டன.

    சுசீந்திரம் தேரோட்டம் அங்கு நடக்கும் கலை நிகழ்வுகள் எல்லாம் பார்த்து ரசித்துக் களித்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. சுசீந்திரம் தேர்திருவிழா அனுபவம் அருமை.அதுவும் அன்னாச்சியின் ஊர் மொழியில் அபாரம்.

    பதிலளிநீக்கு
  8. ஹாஹாஹா ரசித்து சிரித்து ரசித்து வாசித்தேன். நம்மூர் நாரோயிலு பாஷையிலா....செய்யி....நாங்களும் அம்மை அப்பன், குடும்பம், மக்கள் இப்படித்தான்...அம்மை அப்பனை மக்கமார் ரெண்டுபேரும் சுற்றி வந்து வணங்குவதை நாங்கள் கூடவே வேறொன்றையும் இணைத்துக் கொள்வதுண்டு புராணக்கதைதான்.

    நான் 2021 நவம்பர்ல ஊருக்குப் போயிருந்தப்ப வெள்ளம் வந்து...அப்புறம் வடிஞ்சப்பிறகு சுசீதிரம் மருங்கூர் எல்லாம் எங்க ஊர் வழியா போற பஸ்லயே போயிடலாமெ மருங்கூர் அப்படிப் போய் சுசீந்திரமும் கண்டு ஃபோட்டோ எல்லாம் புடிச்சு வைச்சிருக்கேன்.....மார்கழித் தேரோட்டம் பத்தியும் எழுதணும்னு நினைச்சிருந்தேன் . எனக்கு ஒரு வேலை மிச்சம்....அண்ணாச்சி நீங்க சொல்லிட்டிய.!!!!

    பழைய நினைவுகள் எல்லாம் வந்து...ஏங்க வைத்துவிட்டது உங்க பதிவு. தேர் அசைஞ்சு அசைஞ்சு கூட்டத்துக்கு நடுல வருவதை நீங்க எழுதியிருக்கறதையும், அம்மை அப்பன் குடும்பத்தைச் சொன்னதையும் ரொம்ப ரசித்தேன். இப்படித்தான் எங்க வீட்டுல நாங்க பேசிக் கொள்வோம் அப்ப.

    நன்றி பப்பு அண்ணாச்சி!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. கடைசில சொல்லி முடிச்சீங்க பாருங்க ஹையோ சிரிச்சு முடில....உங்க தங்கத் தேரைக் கூட்டிட்டுப் போனதைத்தான் சொல்லுதேன்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. சுசீந்திரம் சென்று தரிசித்து இருக்கிறேன் தேருக்கு அல்ல . நீங்கள் சென்ற தங்கத் தேருலா :) மிகுந்த ரசனை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....