புதன், 11 ஜனவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி பன்னிரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அயோத்யாஜி நகர் உலா  பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

LIFE CANNOT BE CHANGED IN A MINUTE BUT DECISION TAKEN IN A MINUTE CHANGES EVERYTHING IN LIFE; ALWAYS STAY CALM BEFORE YOU DECIDE.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி பன்னிரண்டு


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

பன்னிரெண்டாம் விதி சொல்வது, "சூழலுக்கேற்ற உண்மையையும் தாராள குணத்தையும் உபயோகித்தால், எப்படிப்பட்ட எதிரியையும் நிராயுதபாணி ஆக்கலாம்". 

 

மூல நூலில், இதை "USE SELECTIVE HONESTY AND GENEROSITY TO DISARM YOUR VICTIM" என்கிறார் எழுத்தாளர். 

 

பிறர் நம்மைச் சார்ந்திருக்குமாறு மாற்றிவிட்டோம் என்றால், நமக்கு முழு சுதந்திரம் கிடைக்கும் என சென்ற விதி வலியுறுத்தியது. 

 

இத்தகைய சூழலை உபயோகித்து நம் உழைப்பைச் சுரண்டுவோரையும்,  நமக்கு துரோகம் செய்யக்கூடுவோரையும் அடையாளம் காணும் சீரிய நுட்பத்தையே இவ்விதி விளக்குகிறது. 

 

"உண்மை என்பது எப்போதும் ஒன்று தானே? எப்படி சூழலுக்கேற்ப மாறுபடலாம்?" போன்ற கேள்விகள் உங்களைப் போல் எனக்கும் எழுந்தது. 

 

உண்மை என்பது மிகவும் வலுவான ஆயுதம் என்பதால், அதைக் கேட்போரின் மனநிலைக்கு ஏற்பவும், புரிந்துகொள்ளும் தன்மைக்கு ஏற்பவும், அவர்கள் நோக்கத்தை அறிந்துகொள்ளும் சூழலுக்கேற்பவும் சற்று நுட்பமாகக் கையாளப்படும் கட்டாயத்தைப் பின்வரும் உதாரணங்களால் புரிந்துகொள்ளலாமா? 

 

கன்னியாகுமரியில் ஒரு மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் சமீபத்தில் நடந்த இந்நிகழ்ச்சி செய்தியாக வெளிவந்தது. 

மீனவர்களிடமிருந்து மீன்களை வாங்கும் பொறுப்பில் இருந்த திரு டேனியல் செபாஸ்டீன், சமீபத்தில் மீன் வாங்கியது போல் போலியான ஆவணங்களை உருவாக்கி சுமார் 27,000 ரூபாய் கையாடல் செய்திருப்பதை அவன் மேலாளர் திரு வசந்த் அவர்கள் கண்டுபிடித்தார். 

 

உடனே செபாஸ்டீனை அழைத்து, "உன் திருட்டுத்தனங்கள் அனைத்தையும் அறிவேன், மரியாதையாகப் பணம் முழுவதையும் கொடுத்துவிட்டால் உன் வேலை தப்பிக்கும்!" எனக் கூறி தம் தாராள குணத்தை வெளிப்படுத்தினார் வசந்த். 

சற்று ஆடிப்போன செபாஸ்டீன், போட்டிக்குத் தன் தாராள குணத்தையும் காட்டி சுமார் ஐந்து லட்சங்களை ஒப்படைத்திருக்கிறான். 

 

வெறும் 27,000 ரூபாய் என நினைத்தால் ஐந்து லட்சங்கள் வெளிவருகிறதே என அதிர்ந்த வசந்த் மேலும் மிரட்ட, மேலும் இருபத்தைந்து லட்சங்களை ஒப்படைத்திருக்கிறான் செபாஸ்டீன். 

 

அதிர்ச்சியில் ஆடிப்போன நிர்வாகம், செபாஸ்டீனின் சொத்துக்களை சோதனையிட, நீண்ட காலமாகக் கையாடல் செய்து சுமார் 2.1 கோடிகள் சுருட்டியிருந்த உண்மை வெளிவந்தது. 

 

ஆரம்பத்தில் மேலாளர் அறிந்திருந்த வெறும் 27,000 ரூபாய் கையாடலைச் சுட்டிக்காட்டி கண்டித்திருந்தால், செபாஸ்டீன் எச்சரிக்கையாகி தப்பித்திருப்பான். 

 

எனவேதான், ஏமாற்றுவோரைத் துப்பறிய, சூழலுக்கேற்ப உண்மையை வெளியிடும் நுட்பம் மிகவும் அவசியமாகிறது. 

 

உலக மருத்துவ முறைகளில், அலோபதி மருத்துவ முறை பெரிதளவில் ஏற்கப்பட்டிருப்பதற்கு, மக்கள் மனநிலைக்குத் தகுந்த அளவில் நோய் குறித்த உண்மைகளை வெளியிடும் தன்மையே காரணமாக நான் சொல்வேன். 

 

நம் பாரம்பரிய மருத்துவ முறைகளோ, இளைஞர் இளைஞிகளுக்கும் கடினமான உணவுக் கட்டுப்பாட்டையே பரிந்துரைப்பதால், பெரும்பாலான மக்கள் விலகிச் சென்று துரித மருந்துகளிடம் வாழ்நாள் முழுதும் தஞ்சமடைவதைக் காண்கிறோம். 

 

நமக்குப் பிடித்த ஆசிரியர்கள் கூட, நம் புரிதலுக்கேற்ப கல்வியை சுவாரசியமாக வழங்கியவர்களாகத்தான் இருப்பர். 

 

இப்படி, உண்மைகளை கேட்போருக்குத் தகுந்தவாறு உரைக்கும் நுட்பம் இன்றைய கலியுலகத்தில் மட்டுமே ஏற்பட்டிருப்பதாக நினைத்தால், அதுவும் தவறே. 

 

உண்மையின் உருவமாக மஹாபாரதத்தில் நாம் காணும் தருமர் கூட, அஸ்வத்தாமனின் இறப்பை வெளிப்படையாகவும், ஆனால் அதே சமயத்தில் "அது ஒரு யானை" என்பதை, துரோணர் கேட்காதபடி அமைதியாகவும் கூற நேர்ந்தது. 

 

இதுபோன்ற உதாரணங்கள், காலகாலத்திற்கும் நடப்பதை பல மாந்தர் அனுபவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

 

தன் மீதான நன்மதிப்பு உருவாகும் வரை உண்மையை பேசிவிட்டு, பின்னர் ஏமாற்றும் உதாரணங்களோடு நூல் இவ்விதியை விளக்கியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. 

 

எனவேதான், அப்படிப்பட்டோரிடம் எச்சரிக்கையாக இருந்து, அவர்களை அடையாளம் காணும் வகையில் இவ்விதியைப் புரிந்துகொள்ளுமாறு மேற்சொன்ன உதாரணங்கள் மூலம் நான் பரிந்துரை செய்கிறேன். 

 

இப்படிப்பட்ட உக்திகளைக் கையாள, நம் சுற்றத்தார் குறித்த தகவல்களைத் திரட்டும் பணிக்கு பலரின் உதவி தேவைப்படும். 

 

அத்தகைய உதவியை வெற்றிகரமாகப் பெறும் சிறப்பான உத்தியை அடுத்த விதியில் சுவைக்கலாமா? 

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

14 கருத்துகள்:

  1. நல்ல கட்டுரை. நல்ல விதி. விதியை இன்னும் சூழலுக்கேற்றவாறு பயன்படுத்தினால் சிறப்பாக பயன்படுத்தலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக அனைத்து விதிகளும் இரு பக்கமும் கூரான கத்தி போன்றதே.
      தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. உண்மைகளை வெளிக்கொண்டு வருவதும் ஒரு கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அணுபவத்தால் நமக்கு கைவரும் சிக்கலான கலை.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. இது நல்ல விதி அரவிந்த். உண்மையை வெளிக் கொணர தனி டெக்னிக் வேண்டும்...அதே சமயம் சூழலுக்கேற்ப உண்மையை உரைப்பதும் என்பதற்கு தருமர் உதாரணம் என்னளவில் கொஞ்சம் உதைக்கிறது. துரோணருக்குக் கேட்காத அளவு மெலிதாகச் சொல்வதும் கூட ஒரு சின்ன கள்ளத்தனத்தால்தானே அப்போ அங்கு உண்மை கொஞ்சம் பின் வாங்குகிறது இல்லையா? மற்ற விளக்கங்கள் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ாம் மேடம்.
      மஹாபாரதத்தில் அறம் மீரப்படும்போதெல்லாம், நோக்கமே முக்கியம், வழி முக்கியம் அல்ல என கன்னபிரான் தரப்பில் சொல்லப்படுவதைக் கேட்டிருப்போம்.
      இன்றைய வியாபாரிகளும் அதையே சொல்கின்றனர்.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு
  4. //உண்மைகளை கேட்போருக்குத் தகுந்தவாறு உரைக்கும் நுட்பம் இன்றைய கலியுலகத்தில் மட்டுமே ஏற்பட்டிருப்பதாக நினைத்தால், அதுவும் தவறே. //

    ஆமாம், உண்மைகளை கேட்போருக்கு தகுந்தவாறு உரைக்கும் திறமை மிகவும் நுட்பமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மேடம்.
      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. அதில் சந்தேகமே இல்லை.
      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
    2. 'ஏமாற்றுவோரைத் துப்பறிய, சூழலுக்கேற்ப உண்மையை வெளியிடும் நுட்பம் மிகவும் அவசியமாகிறது' நல்ல முறை.

      நீக்கு
    3. தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி மேடம்.

      நீக்கு
  6. நல்ல விதி. உண்மையை மட்டுமல்ல பொய்யை கூட சமய சந்தர்ப்பம் அறிந்தே சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச்சரி சஐய்யா.
      தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி பத்மநாபன் ஐய்யா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....