செவ்வாய், 3 ஜனவரி, 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

THE HAPPINESS OF YOUR LIFE DEPENDS ON THE QUALITY OF YOUR THOUGHTS.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள்

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட்.

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு.

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட்.

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா



எங்களுக்கான பேருந்து...
 

நைமிசாரண்யம் நகரில் ஒரே நாளில் பல இடங்கள் பார்த்து அன்றைய இரவு அங்கே உறங்கிய நாங்கள் அடுத்த நாள் அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து குளித்து விட்டோம்.  எந்த ஒரு புண்ணிய ஸ்தலத்திற்குச் சென்றாலும் ஒரு இரவேனும் தங்க வேண்டும் என்று சொல்வார்கள். சில இடங்களில் வசதி இருக்கிறதோ இல்லையோ தங்குவதுண்டு.  நைமிசாரண்யத்தில் ஓரளவுக்கு வசதிகள் இருக்கிறது.  இங்கே வந்து தங்கி கோவில்களில் தரிசனம் செய்து கொள்ள விரும்புபவர்கள் தங்க வசதிகள் இருப்பதால் ஒரு இரவேனும் தங்கி நின்று நிதானித்து கோவில்களில் தரிசனம் செய்து புறப்படலாம்.  நாங்கள் ஒரு நாள் முழுவதும் அங்கே இருந்து, முடிந்த வரை இந்த திவ்ய க்ஷேத்திரத்தில் இருந்த கோவில்களில் தரிசனம் பெற்று மனதில் நிம்மதி அடைந்தோம்.  அடுத்த நாள் அதிகாலை தங்குமிடத்திலிருந்து புறப்பட்ட போது மணி 05.00.  முதல் நாள் இரவே தங்குமிட உரிமையாளரிடம் கட்டணம் கொடுத்து சொல்லி விட்டோம் என்பதால் காலை நேர பரபரப்பில் இதையும் செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை. 



பேருந்து நிலையம்...
 

தங்குமிடத்தின் அருகே இருந்த சிறு கடையில் குல்லட் (மண் குடுவை) - இல் தேநீர் அருந்தினோம்.  காலை நேரத்து இளம் குளிரில் அந்த தேநீர் எங்களுக்கு மிகவும் அவசியமாக இருந்தது.  காலை நேரமே பேட்டரி ரிக்ஷாக்கள் இயங்க ஆரம்பித்து விடுகின்றன என்பதால் பேருந்து நிலையம் வரை செல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு பேட்டரி ரிக்ஷாவில் Neemsar எனும் நைமிசாரண்யம் நகரின் வெளிப்புறத்தில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு (ஹிந்தியில் Bபஸ் அட்டா (adda) சென்று சேர்ந்து விட்டோம்.  எங்களைத் தவிர அங்கே வேறு பயணிகள் யாருமில்லை! அந்த பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு அரசு ஊழியரிடம் விசாரிக்க  இன்னும் சற்று நேரத்தில் பேருந்து வந்து சேரும் என்றும் இங்கேயிருந்து தான் லக்னோ வரை செல்லும் என்பதால் உங்களுக்கு இடம் கிடைப்பதில் பிரச்சனை இல்லை என்றும் சொல்ல, அந்த காலை நேரத்தில் ஒன்றிரண்டு படங்களை எடுத்துக் கொண்டிருந்தோம்.  பேருந்தும் வந்து சேர்ந்தது.  அங்கிருந்து லக்னோ வரை செல்ல சாதாரண பேருந்து தான். ஒருவருக்கு 116 ரூபாய் கட்டணம். எங்கள் மூவருக்குமான பயணச் சீட்டினை வாங்கிக் கொண்டு பேருந்துக்குள்ளும் சில படங்கள் எடுத்துக் கொண்டோம்.  



பேருந்து நிலையத்தில் ஒரு இலையுதிர்த்த மரம்...
 

பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஒரு சாலை சந்திப்பில் நின்றது.  சில நிமிடங்கள் அங்கே நிற்கும் என்று சொல்ல, கீழே இறங்கி அங்கே இருந்த ஒரு பழக்கடையில் திராட்சையும் வாழைப்பழமும் வாங்கிக் கொண்டோம்.  அங்கேயே தண்ணீர் வாங்கி திராட்சைப் பழங்களை சுத்தம் செய்து கொண்டோம்.  சாலைகள் பெரும்பாலும் புழுதி நிறைந்தவை என்பதால் பழங்களின் மீது நிறைய புழுதி இருக்கும்.  அதனால் அப்படியே சாப்பிட முடியாது. தண்ணீரும் இருந்ததால் சுத்தம் செய்து பேருந்திலேயே சாப்பிட முடிந்தது.  சிறப்பான சுவையுடன் இருந்த திராட்சையையும் வாழைப்பழத்தினையும் பேருந்திலேயே சுவைத்தோம்.  வழியில் உணவகங்கள் எதிலும் நிறுத்தாமல் சென்றதால் பழங்கள் வாங்கிக் கொண்டது நல்லதாகப் போயிற்று.  



பேருந்து புறப்படும் நேரம் - ஹிந்தியில் ஒரு பட்டியல்...
 

உத்திரப் பிரதேசத்தில் பேருந்து வசதிகள் தற்போது அதிகரித்து இருந்தாலும் இருக்கும் மக்கள் தொகைக்கு எத்தனை பேருந்து வசதிகள் இருந்தாலும் குறைவே.  அதனால் பேருந்து ஓட்டுனர்கள் முடிந்தவரை பயணிகளை நின்று நிதானித்து ஏற்றிக் கொண்டு செல்வதால், பேருந்தில் நிறைய மக்கள் கூட்டம் - நின்றபடியும் பயணிப்பது வழக்கமாகவே இருக்கும்.  எங்கள் பேருந்திலும் நிறைய கூட்டம்.  கல்லூரிக்கு செல்லும் இளைஞிகளும் இளைஞர்களும் நிறையவே இருந்தார்கள். அவர்களில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.  படிப்பதற்காகவே தினமும் 100 கிலோ மீட்டருக்கும் அதிகமாகவே பயணிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. அடிப்படை வசதிகள் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றாலும் இன்னும் அதிகரிக்க வேண்டும்.  ஒரு வழியாக லக்னோ நகரம் வரை சென்று அங்கேயிருந்து அடுத்த நதிகரை நகரம் நோக்கி பயணம் மேற்கொள்ள வேண்டும். லக்னோ நகரிலிருந்து அடுத்த நதிக்கரை நோக்கி பயணம் செய்ய எந்த பேருந்து கிடைத்தது, எப்போது அந்த நகரம் சென்று சேர்ந்தோம் போன்ற தகவல்களை வரும் பகுதியில் சொல்கிறேன். தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

12 கருத்துகள்:

  1. பயண அமைப்பாளர்களுடன் ஒரு குழுவாகச் செல்லும் நேரங்களில் இரவுத் தங்கல்  சில இடங்களில் சாத்தியமில்லாமல் போகிறது.  யு பி முன்னேற்றம் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயண ஏற்பாடு செய்ப்பவர்கள் பெரும்பாலும் இரவில் பயணிக்க விரும்புவார்கள் - காரணம் தங்க வைக்கும் செலவு இல்லை. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இந்த மாதிரி நண்பர்களோடு பிரயாணிக்கும்போது நிதானமாக எல்லா இடங்களுக்கும் சென்றுவர முடியும்.

    மூன்றுமுறை நைமிசாரண்யம் சென்றிருக்கிறேன். நிதானமாக எல்லா இடங்களையும் பார்த்தோம் என்ற திருப்தி இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர்களுடன் செல்வது பல விஷயங்களில் வசதி. பயண ஏற்பாடு செய்பவர்கள் அவர்களது லாபத்திற்கு மட்டுமே செயல்படுவார்கள். ஆன்மீக குழுவாக இருந்தாலும் அவர்கள் செல்லும் இடத்திற்கு மட்டுமே செல்ல முடியும். தங்கள் அன்பிற்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. பயண விவரங்கள் அருமை.

    //படிப்பதற்காகவே தினமும் 100 கிலோ மீட்டருக்கும் அதிகமாகவே பயணிக்கிறார்கள்//

    இன்னும் நிறைய பேருந்து இருந்தால் நன்றாக இருக்கும் படிக்கும் குழந்தைகளுக்கு வசதி செய்து தரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதி அம்மா. இன்னும் நிறைய மாற்றங்கள் தேவை. எல்லாம் வரும் என்ற நம்பிக்கை வைப்போம். சீக்கிரமாக நடந்தால் நல்லதே.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருப்பதற்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. விவரங்கள் அருமை, ஜி.

    பழங்கள் வாங்கிக் கொண்டது நல்லது.

    வசதிகள் குறிப்பாகக் கல்லூரி வசதிகள் இன்னும் வந்தால் நல்லதுதான். பாவம் 100 கிமீ தினமும் பயணித்து களைப்பாகி படிக்க எத்தனை கஷ்டம் பாவம் குழந்தைகள். நிறைய பேருந்துகள் விடலாம் ...

    அடுத்த இடம் என்ன என்று அறிய ஆவலுடன் தொடர்கிறேன் ஜி.

    வாசகம் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் பயனுள்ளதாக அமைந்தால் மகிழ்ச்சி கீதா ஜி. தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருப்பதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....