வெள்ளி, 1 ஜூலை, 2022

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி பன்னிரண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பக்தி, நம்பிக்கை, முயற்சி, பொறுமை, இவை நான்கையும் ஒரு போதும் இழந்துவிடாதீர்கள்; பலன் சீக்கிரம் கிடைக்காமல் இருக்கலாம் - ஆனால் நிச்சயம் கிடைக்கும்.


******

 

நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


1. நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு. 


2. நதிக்கரை நகரங்கள் - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  


3. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 


4. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி. 


5. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 


6. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட்.


7. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - காலை உணவு.


8. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட்.


9. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.


10. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.


11. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.


சென்ற பகுதியில் நவநரசிம்மர் கோவில் குறித்து பார்த்தோம். இந்தப் பகுதியில் ஹனுமனின் கோவில் ஒன்றைக் காணலாம். ஹனுமான் Gகடி (Hanuman Garhi) என்று அழைக்கப்படும் கோவில் ஒன்று நைமிசாரண்யத்தில் பார்க்க வேண்டிய கோவில்களில் ஒன்று. மிகவும் புராதானமான இந்தக் கோவிலில் பிரம்மாண்டமான ஹனுமன் சிலை இருக்கிறது. அமைதியான சூழலில் அமைந்து இருக்கும் இந்தக் கோவிலுக்கு நாங்கள் சென்ற நேரம் மதியம், நல்ல வெய்யில் வேறு! அடிக்கிற வெய்யில் தந்த கொடுமை இல்லாமல் அங்கே நடந்த வேறு ஒரு விஷயமும் எங்களைக் கோபம் கொள்ள வைத்தது! அது குறித்து கடைசியில் சொல்கிறேன். முதலில் நல்ல விஷயத்தைப் பார்க்கலாமே! 


அழகான ஹனுமனின் சிலை - தோள்களில் ஒரு புறம் இராமனும் மறுபுறம் இலக்குவனும் அமர்ந்து கொள்ள, பாதாள லோகத்தில் இருந்து புறப்பட்டு பூமியை அடைந்த கோலம்! பாதாள லோகத்தில ஹனுமனுக்கும் இராம இலக்குவனுக்கும் என்ன வேலை? அஹி இராவணன் என அழைக்கப்படும் இராவணனின் சகோதரன் இராம இலக்குவனை பாதாள லோகத்திற்கு கடத்திச் சென்று அவர்கள் மயங்கியிருந்த சமயம், அவர்கள் இருவரையும் Bபலியிட இருக்க, ஹனுமன் அங்கே சென்று அரக்கனைக் கொன்று இராம இலக்குவனை மீட்டு வந்ததாக ஒரு கதை க்ருத்திவாஸ் இராமாயணத்தில்  இருக்கிறதாம். இதே ரூபத்தில் இங்கே இருக்கும் கோவிலில் ஹனுமனின் சிலை அமைத்து இருக்கிறார்கள். மேலே அண்ணாந்து பார்க்கும்படி முகமும், குனிந்து பார்க்கும்படி கால்களும் அமைந்த சிலை. மிகவும் அழகான சிலை. செந்தூரம் பூசிக்கொண்டு பிரம்மாண்டமாக இருக்கும் இவரை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.


அங்கே நாங்கள் சென்ற நேரம் மதிய உணவு வேளை என்பதால் அருகே இருக்கும் பாடசாலையில் இருந்து வந்திருந்த அனைவருக்கும் மட்டுமல்லாது இன்னும் பலருக்கும் கோவில் சார்பாக உணவு - வரிசையாக அமர வைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு கேட்டு வாங்கி சாப்பிடுங்கள், உணவை வீணாக்காமல் சாப்பிடுங்கள் என்று ஒரு பெரியவர் ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்தவண்ணம் இருந்தார். பூரி, சப்ஜி, சாதம், ஹல்வா தான் மெனு. பிரம்மாண்டமான வாணலியில் பொரித்து எடுக்கும் பூரிகளைப் பார்த்ததே வயிறு நிறைந்தது போல ஆகிவிட்டது எனக்கு. 


நாங்கள் உணவு உண்டு கொண்டிருந்தவர்களைக் கடந்து கோவிலுக்குச் சென்று ஹனுமனை தரிசித்தோம். அங்கேயும் ஒலிபெருக்கி மூலம் வரும் அனைவரிடமும் காசு கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் ஹனுமனை நிதானமாக தரிசித்து அந்த திருப்தியுடன் அங்கிருந்து விலக, காசு கேட்டுக் கொண்டிருந்தவர் "என்ன அவ்வளவு தானா, பார்த்துவிட்டு போய்க்கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? காசு கொடுக்க வேண்டாமா? என்ன வித பக்தி உங்களுடையது?" என்று கேட்க எனக்கும் நண்பருக்கும் கோபம் வந்தது. ஒன்றும் பேசாமல் அங்கிருந்து நகர வழியில் இன்னுமொருவர் கையில் துணியில் செய்யப்பட்ட Gகதை கொண்டு பக்தர்களை முதுகில் தட்டிக்கொண்டே காசு கேட்டார். 

உங்களுக்காகவே எடுத்த காணொளி - அயோத்யா நகரிலிருந்து… சரியான நேரத்தில் பின்னால் பிரசங்கம் செய்பவர் “ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல!” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். 


வட இந்தியாவில் கோவில்களுக்குச் செல்லும்போது அங்கே இருக்கும் பூசாரிகள் பக்தர்களின் தோளை பிடித்து அழுத்திக் கொண்டு மற்றொரு கையால் தொடர்ந்து அடிப்பது, சரி தட்டிக் கொடுப்பது என்று வைத்துக் கொள்வோம், வழக்கமாக உள்ளது. பல இடங்களில் இப்படி அடி வாங்கியது உண்டு. முன்னே இருப்பவருக்கு, கொடுக்கும் அடி கொஞ்சம் பலமாக இருந்தால், ஹிந்தி மொழியில் சொல்வது போல, Pபத்லி Gகலி அதாவது குறுகிய இடைவெளியில் அவர்களிடமிருந்து தப்பித்து விடுவதும் உண்டு! 


சில கோவில்களில் இப்படி தப்பித்துச் செல்வது கடினம். எப்படியும் இரண்டு மூன்று தட்டுகள் கிடைத்து விடும்! ஒரு சில கோயில்களில் கைகளால் தட்டுவார்கள் என்றால் சில கோவில்களில் மயிலிறகுகள் சேர்த்து செய்யப்பட்ட அமைப்பு கொண்டும் முதுகிலும் தலையிலும் தட்டுவார்கள்! ஹனுமான் கோயில் என்றால் ஹனுமனின் கையில் வைத்திருக்கும் GகDhதை போன்று துணியால் செய்து அதைக்கொண்டு கூட அடி கொடுப்பார்கள்! ஆக ஏதோ ஒரு வகையில் அடி/தட்டு வாங்காமல் நாம் வர முடியாது.


கூப்பிட்டுக் கூப்பிட்டு அவர்கள் அடி கொடுப்பதை நான்பல ஊர்களில் பார்த்ததுண்டு. வட இந்தியாவில் இவர்களிடம் இப்படி அடி வாங்குவதை, அந்த ஊர் மக்கள், அந்தந்த பகவானே ஆசீர்வதிப்பதாக நினைக்கிறார்கள். அதனால் தானாகவே அங்கே முன் சென்று தங்களை அடிக்க வைப்பார்கள். நான் பல இடங்களில்/ஊர்களில் அப்படியே நழுவி விடுவது வழக்கம் - அவர்கள் கூப்பிட்டாலும் காது கேட்காத மாதிரி நகர்ந்து விடுவேன்.


நமக்கு தான் இந்த விஷயம் தெரியுமே! அதனால் கோவிலில்  Gகதை கொண்டு பக்தர்களை முதுகில் தட்டிக்கொண்டே இருந்தவர் பக்கம் பார்க்காமல் படிகளில் இறங்கி கீழே வந்துவிட்டேன். காசு கொடுப்பதும் கொடுக்காமல் போவதும் பக்தர்களின் விருப்பம் என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பதும், கொடுக்காதவர்களை திட்டுவதும் என்ன டிசைனோ? அதுவும் கோவிலில் இப்படிச் செய்வது சரியில்லை என்பதை உணராதவர்களிடம் என்ன சொல்லி திருத்த? அவர்களின் நினைவை நீக்கி, ஹனுமனின் நினைவுகளோடு மட்டும் அங்கிருந்து அகன்றோம். அவரது உருவம் இன்னமும் கண் முன்னே! அடுத்த பகுதியில் வேறு சில தகவல்களுடன் உங்களை சந்திக்கிறேன்.  தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 


*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….

10 கருத்துகள்:

 1. நானும் இந்த இடம் பார்த்தேன் என்பது எனக்கு சந்தோஷம்.  செல்லும் வழியிலேயே நிறைய கட்டுப்பாடுகளை அதட்டலாய்ச் சொன்னார்கள்.

  இங்கா, இன்னோர் இடத்திலா, நினைவில்லை, இறங்கி வரும் வழியில் இரண்டு முனிவர்களுக்கும் கோவில் இருந்ததாக நினைவு.

  பதிலளிநீக்கு
 2. மிக அருமையான ஹனுமான் கோவில். இன்னொன்று அயோத்தியில் உள்ளது.

  கயாவில் விளாம்பழத்தை விட்டுவிட்டேன். அடுத்து நைமிசாரண்யம் வந்தபோது இந்தக் கோவிலின் அருகே ஏகப்பட்ட விளாம்பழம் விற்கும் கடைகள், ஒன்று பத்து ரூபாய்... ம்ஹ்ம் என்று நினைத்துக்கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 3. பக்தியில் மனம் விரிசல் விழுவது இதனால்தான்...

  பதிலளிநீக்கு
 4. ஜி! ஹனுமான் ஆஹா! மை டியர் ஹனுமான்!! இஷ்ட தெய்வம். பார்த்துக் கொண்டே இருக்கலாம் நீங்கல் சொல்வது போல்.
  அஹி ராவணன்/ மயில் ராவணன் என்று இதே கதை என் பாட்டி-தாத்தா சொல்லிக் கேட்டதுண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
 5. ஆம் ஜி வட இந்தியக் கோயில்கள் சிலதில் இப்படிச் செய்கிறார்கள். நம்மூரில் பெருமாள் கோயில்களில் சடாரி வைப்பது போல் என்று நினைத்துக் கொண்டேன். எனவே முதல் முறை இப்படி வாங்கிய அனுபவத்தில் மறு முறை எல்லாம் வாங்க வில்லை கூப்பிட்டாலும் நழுவி விட்டேன். அவர்களே நெற்றியில் சாந்தும்/விபூதி வைத்துவிடுவார்கள். அதையும் நான் வாங்காமல் நழுவி விடுவேன்.

  காணொளி கண்டேன்..மயிலறகு மெதுவாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். Ek, dho, theen நன்றாகக் கேட்டது!!!!!

  இப்போதுதான் பகுதி ஐந்து வாசிக்க எடுத்ததும் மா லலிதா தேவி சென்னைப் பயணத்தில் இருந்த போது மொபைலில் வாசித்தது நினைவு வந்தது. கருத்து இட முடியவில்லை அப்போது.

  கீதா

  பதிலளிநீக்கு
 6. இப்படியும் தொல்லை சில இடங்களில் உண்டு...

  பதிலளிநீக்கு
 7. அனுமர் சிலை படிக்கும்போதே கண்முன்னே விரிகிறது.

  அடிப்பது நினைத்தாலே பயமாக இருக்கிறது . பணம் வாங்குவதிலும் குறிப்பாக இருப்பது தொல்லையே.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. பயணப் பதிவும் நன்றாக உள்ளது.

  ஸ்ரீ இராம லெஷ்மணரை சுமந்து செல்லும் பக்தராக ஆஞ்சநேயர் சிலை வெகு அற்புதமாக உள்ளது. இந்த புராண கதையும் நான் எப்போதோ கேள்விப்பட்ட மாதிரி நினைவிருக்கிறது. நீங்கள் சொல்வது போல் ஆஞ்சநேயரையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போலத்தான் தோன்றுகிறது. அற்புத கோலம். பக்தியுடன் வணங்கி கொண்டேன்.

  காணொளி கண்டேன். அங்கெல்லாம் தட்சணைகள் தரவில்லையென்றால் சற்றேனும் சிறிய அடிகளாக அடித்தேனும் வாங்குவது நினைத்தாலும் சற்று பயமாகத்தான் உள்ளது. எப்படி தைரியமாக நீங்கள் சென்று தீர்த்தம், பிரசாதம் பெற்று கொண்டீர்களோ .. கஸ்டந்தான்... இங்கு பக்தர்கள் கோவில்களில் கற்பூரத்தட்டில் போடும் காணிக்கைகளை அப்படியே உண்டியலில் போட்டு விடுகின்றனர். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. ஆஞ்சிநேயர் குறித்த தகவல்கள் அருமை சார்.
  விலைவாசி உயர்வு பிரச்சனை அதிகரிக்க, இந்த காசு கேட்டு மிரட்டும் தொனி மேலும் அதிகரிக்கும்.

  பதிலளிநீக்கு
 10. வட இந்தியாவில் கோவில்களுக்குச் செல்லும்போது அங்கே இருக்கும் பூசாரிகள் பக்தர்களின் தோளை பிடித்து அழுத்திக் கொண்டு மற்றொரு கையால் தொடர்ந்து அடிப்பது, சரி தட்டிக் கொடுப்பது என்று வைத்துக் கொள்வோம், வழக்கமாக உள்ளது.

  வியப்பாக இருக்கிறது ஐயா

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....