ஞாயிறு, 24 ஜூலை, 2022

கதம்பம் - 24072022 - மண்டலா - மறதி - எங்கும்! - பாலங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் முகநூல் இற்றைகளின் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

கவலைகளை நிரந்தரமாக்கினால் நோயாளி; தற்காலிகமாக வைத்திருந்தால் புத்திசாலி; கவலையே இல்லாமல் இருந்தால் ஞானி! 

 

******


மகளின் மண்டலா ஆர்ட்:

 

மகள் சமீபத்தில் வரைந்த ஒரு மண்டலா ஆர்ட் உங்கள் பார்வைக்கு!


 

******

 

மறதி : 

மறந்தே போயிட்டேன் கண்ணா!

 

என்னம்மா!

 

பிரஷ் பண்ணவே இல்ல!

 

ஐந்தரைக்கு எழுந்து குளிக்கப் போனதும் பின்னலை அவிழ்த்து கொண்டை போடும் போது தான் நேத்து பூக்காரர் வந்தாரே! அப்போ இன்னிக்கு வெள்ளிக்கிழமை ஆச்சே! தலைக்கு தண்ணி விட்டுக்கணும் என்று ஞாபகம் வந்தது! 

 

சரி! குளித்து விட்டு வந்து அடுப்பில் ஒருபுறம் குக்கரும், இன்னொரு புறம் பாலும் வைக்கும் போது தான் பிரஷ் பண்ணலன்னு ஞாபகம் வந்தது!!

 

சரிம்மா! போய் பிரஷ் பண்ணிட்டு வா! என்றாள் மகள்.

 

இரு கண்ணா! குக்கர் வெச்சிட்டு போறேன்! பிரஷ் பண்றதுக்குள்ள விசில் வந்துடும்! பாலை பார்த்துக்கோ! இதோ வந்துடறேன்! என்று பிரஷ் பண்ண ஓடினேன்..🙂

 

அப்புறம் வயதானவர்களுக்கு முதல் காஃபி, இரண்டாம் காஃபி, சமையல், மகளுக்கு தலைவாரி பின்னலிட்டு, லஞ்ச் பாக்ஸ் பேக் பண்ணிக் கொடுத்து 8:30 மணி வரை ஓட்டம்!

 

அடுத்து வயதானவர்களுக்கு 9:30 க்கு சாப்பாடு போடணும். இன்னிக்கு ஏகாதசியா! அப்போ மூணு பேருக்கு சமையல், ஒருத்தருக்கு பலகாரம்! அதற்குள் வீடு பெருக்கி, துடைத்து, துணிகளை  துவைக்கப் போட்டு என்று ஓட்டம்!

 

இப்போதெல்லாம் நிறைய மறதி வந்து விடுகிறது. செய்யும் வேலைகளிலும் பெரிதாக ஈடுபாடு இல்லை. பொறுமையும் இல்லை! எங்கு இருக்கிறோம் என்பதை மறந்து ஆட்டோவுக்கு தவறான லொகேஷனை சொல்கிறேன். பேசிக் கொண்டிருக்கும் விஷயம் சட்டென மறந்து போய் விடுபட்டு போகிறது. 

 

இரவிலும் சட்டென குளிர்கிறது. மெலிதான ஒரு bedspread போர்த்திக் கொண்டு விட்டால் வியர்க்கிறது. அதை எடுத்ததும் மீண்டும் சில நிமிடங்களில் குளிர்கிறது. நடு இரவில் முழிப்பு வந்து விட்டால் அதன் பின்பு உறக்கம் வருவதில்லை.

 

இதெல்லாம் 40+ மாற்றங்கள் என்று நினைக்கிறேன். இதுவும் கடந்து போகட்டும்!

 

******

 

எங்கும் :

 

செல்ஃபோன் கடைக்குச் சென்றால் அங்கே தன் செல்ஃபோனை சரி செய்யக் கொடுத்த நபரின் பேரை கடைக்காரர் கேட்டால்… 

 

வெங்கட்ராமன்! என்றார்.

 

காலை fmல் இன்றைய சிறப்பு நிபுணராக திரு. வெங்கட்ராமன் அவர்கள் நம்மிடையே பேச இருக்கிறார். என்று காதில் ஒலித்தது.

 

காய்கறி சந்தைக்குச் சென்றால் அருகில் நின்று தக்காளி வாங்கிக் கொண்டிருந்த பெண்மணி அவரின் தோழியிடம் வெங்கட்ராம மாமா எப்படி இருக்கார்? செளக்யமா! என்று கேட்கிறார்.

 

ஸர்வம் சக்தி மயம்! என்பது போல் என்னைச் சுற்றி வெங்கட் மயம் தான்..🙂  

 

******

 

பாலங்கள் - உலா:


 

நான் சொல்ற லொகேஷன் உனக்கு புரியறதா?? அந்த ரோட்லேயே 100 மீட்டர் போனா ரெண்டு பக்கமும் கடைகள் இருக்கும். அங்கேயே சின்ன சின்ன சந்துகள் கூட இருக்கும். அதுல எல்லாம் போயிடாத!!

 

சரி! நான் பாத்துக்கறேன்..!

 

பார்த்து போயிட்டு வாங்க! என்ன!

 

ம்ம்ம்..!

 

அவளுக்கு கைடெல்லாம் வாங்கணும். நாளைக்கு அவ ஸ்கூல்ல இருந்து வந்ததும் டவுனுக்கு போலாம்னு இருக்கேன் என்றதற்கு தான் மேலே என்னவர் தந்த அட்வைஸ்..🙂

 

ஓலா புக் செய்து கிளம்பினோம். 

 

மெயின் கார்ட்ல எங்கம்மா போகணும் என்று கேட்டார் டிரைவர்!

 

அகஸ்தியர் பப்ளிகேஷன் நீங்க மெயின் கார்ட்ல விட்டுடுங்கண்ணே! நாங்க போயிக்கறோம்.. என்றேன்.

 

நான் படிக்கற காலத்துலேர்ந்து அகஸ்தியர் இருக்கும்மா. க்ரூப் தேர்வெல்லாம் எழுதறாங்க பாரும்மா. எல்லாமே கிடைக்கும். இந்த சந்து வழியா அகஸ்தியர் கிட்டயே விட்டுடறேன். என்றார்.

 

இறங்கினதும் மகள், அம்மா! இந்த சந்து வழியால்லாம்  நான் வந்ததே இல்லம்மா! என்றாள்.

 

அப்பா என்னை அழைச்சிண்டு வந்திருக்கா! இப்படி போனா அப்படி வரலாம்னு நிறைய சொல்வா! ஆனா அப்போ அப்பாவோட சட்டையும், அந்த உயரமும் மட்டும் தான் எனக்குத் தெரியும்! கைய பிடிச்சிண்டு பின்னாடியே போவேன்! என்றேன்..🙂

 

அப்பா தி க்ரேட்! என்றாள்.

 

கைடெல்லாம் தேடி வாங்கிக் கொண்டதும், அம்மா! நான் ரொம்ப நாளா வாங்கணும்னு நினைச்ச புத்தகம்மா! என்று கேட்டாள்.

 

அக்னி சிறகுகள்!

 

வாங்கிக் கொண்டோம். அடுத்து என்னுடைய டெர்ன்!

 

சிவசங்கரி மேடத்தோட பாலங்கள் இருக்கா! என்று கேட்டுப் பார்த்தேன்.

 

வாடகை நூலகத்தில் எடுத்து இரண்டு நாட்களில் திருப்பித் தந்தது. எனக்கே எனக்காக என் புத்தக அலமாரியில் வைத்துக் கொள்ளணும்னு நீண்ட நாட்களாக ஆசை!

 

போன வாரம் கூட இருந்தது மேடம்! நானும் படிச்சிருக்கேன்! தலைமுறை தலைமுறையா கொண்டு போவாங்க! என்றார்.

 

மூத்த தலைமுறையில் உள்ள 'சிவகாமு' தான் என்னைக் கவர்ந்தவர் என்று சொல்லி விட்டு கிளம்பினேன். எப்போது என் கையில் கிடைக்கணும்னு இருக்கோ! அப்போது தானே கிடைக்கும்!

 

டவுனுக்குச் சென்றால் எழுதப்படாத விதியாக 'மதுரை ஃபேமஸ்  ஜிகிர்தண்டா' கடைக்குச் செல்வதும் எங்கள் வழக்கம்!

 

போன தடவ 'குட்டி பையன்' மாதிரி வேக வேகமா சாப்ட்டுட்டு 'வேற ஸ்பூன் வைக்கப்படாதோ! வாயெல்லாம் கிழிக்கிறது'ன்னு அப்பா சொன்னா! என்று சொல்லி சிரித்துக் கொண்டே சுவைத்தேன்..🙂 

 

என்னமோ! இன்று அத்தனை ருசியாயில்லை..🙂

 

அம்மா! போன வருஷ கைட எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணுக்கு குடுத்திடட்டுமா!. பாவம்! அவ எதுக்கு வாங்கிண்டு! என்கிட்ட சும்மா தானே இருக்கு! என்றாள்.

 

அப்படியே அப்பா தான்! என்றேன்:)

 

இருவரும் பேசியபடியே மீண்டும் ஓலாவை புக் செய்து கொண்டு வீடு திரும்பினோம்.

 

பின் குறிப்பு - வீடு திரும்பிய பின்னர் என்னவரிடமிருந்து 'பாலங்கள்' ஆர்டர் செய்து விட்டதாக. மெசேஜ்:)

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

14 கருத்துகள்:

 1. நிகழ்வுகளை சொன்ன விதம் சுவாரஸ்யமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 2. முகநூலிலும் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. கில்லர்ஜி துரத்திட்டு இருக்கார்! :)

  பதிலளிநீக்கு
 4. மகளின் கலைத்திறனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரி

  வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது.

  கதம்பமாக நீங்கள் தந்த விபரங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. தங்கள் மகள் வரைந்த மண்டேலா ஓவியம் மிக அழகாக உள்ளது. வரைந்த அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  உங்களைச் சுற்றி எங்கும், எப்போதும் உங்கள் கணவரின் நினைவுகள் உள்ளதால், உங்கள் இருவர் நினைவுகளின் ஒரு பாலமாக இறுதியில் சிவசங்கரி அவர்களின் "பாலங்கள்" உங்களுக்கு கிடைத்து விட்டது. வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. ரோஷ்ணியின் மண்டலா ஆர்ட் சூப்பர்

  பதிலளிநீக்கு
 7. அனைத்தும் அருமை. முகநூலில் படித்து விட்டேன், இங்கு மீண்டும் படித்தேன்.
  ரோஷ்ணியின் ஓவியம் அருமை.

  பதிலளிநீக்கு
 8. மண்டலா ஆர்ட் அருமை. தொகுப்பு சுவாரஸ்யம். ‘பாலங்கள்’ நான் அனுப்பி வைக்கவா எனக் கேட்க நினைத்தேன். ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டு விட்டது அறிந்து மகிழ்ச்சி:).

  பதிலளிநீக்கு
 9. ரோஷ்ணியின் மண்டலா ஓவியம் அருமை. வாழ்த்துகள். உங்கள் மற்ற அனுபவங்களும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 10. ரோஷிணி Rocks!!! செமையா இருக்கு. முதல்ல பெட்ஷீட் என்று நினைத்துவிட்டேன்!!!! அத்தனை அழகு! ரோஷிணி குட்டிக்கு வாழ்த்துகள்!

  வெங்கட்ஜி யை நீங்கள் இருவருமே ரொம்பவும் மிஸ் செய்கிறீர்கள் என்பது தெரிகிறது

  ஆதி 40 க்குப் பிறகு வரும் சில தொந்தரவுகளோடு உங்களின் தினசரிக்கான கூடுதல் பொறுப்புகளும் சேர்ந்துதான் இந்த மாற்றங்கள். நானும் இதே காலகட்டத்தைக் கடந்துவந்துவிட்டாலும் இப்போதும் பொறுப்பு மட்டும் விடவில்லை. மறதியும் நிழலாய்த் தொடர்கிறது. ஆனால் இந்த மறதி பெரிய பெயரைத் தாங்கி வந்துவிடக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறேன்.
  நீங்கள் புத்தகக் கடையில் பாலங்கள் கேட்க அந்தப் பாலங்கள் தில்லியை இணைத்து ஆர்டரே செய்துவிட்டார் பாருங்கள்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 11. அங்கும் பார்த்தேன். உங்கள் மகளுக்கு வாழ்த்துகள். நல்ல திறமை

  துளசிதரன்

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....