சனி, 30 ஜூலை, 2022

சிறகுகள் - சிறுகதை - ஆதி வெங்கட்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிஇந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நல்லதாக நடந்தவைகளை எண்ணிக்கொள்ள வேண்டும். இனி நடப்பவை நல்லதாகவே இருக்கும்.

 

******


 

சரசு! சரசு!

 

அண்ணி!

 

பின்னாடி ஏனமெல்லாம் போட்டிருந்தனே! கழுவி வெச்சியா??

 

எல்லாத்தையும் கழுவி வெயில்ல வெச்சிருக்கேன் அண்ணி! காய்ஞ்சதும் எடுத்து ஷெல்ஃப்ல அடுக்கிடறேன்.

 

சரி! சரி! அப்புறம் துணி கெடந்ததே!

 

அலசி காய போட்டுட்டேன்!

 

சரி! வீட்டுல ஏதாவது வேலை கெடக்காப் பாரு! சும்மா டிவி பாத்துட்டு இருக்காத! என்ன!

 

சரிங்கண்ணி!

 

கட்டளைகளை ஒவ்வொன்றாக  பிறப்பித்தாள் அண்ணி கமலா. நாத்தனார் சரசு இவர்களுடன் தான் இருக்க வேண்டியிருந்தது. 

 

அவளுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இதுவரை அமையவில்லை. உலகம் அறியாத அப்பாவி பெண்ணாகவே சரசுவும் இருந்து விட்டாள். அம்மாவும் அப்பாவும் இருந்தவரை சரசுவுக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை. அவள் வெகுளித்தனத்தை பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டார்கள்.

 

அண்ணன் அண்ணியின் பொறுப்பில் வந்த பின் சரசுவின் வாழ்க்கைப் பாதை மாறிப் போனது. அண்ணனுக்காவது இவள் மீது சற்று கரிசனம் உண்டு. அண்ணி என்றும் இவளை ஒரு கொத்தடிமை போல தான் நடத்தினாள். வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து கொடுத்தாலும் அவளுக்கு திருப்தி ஏற்படவில்லை.

 

சரசுவுக்கு நேரம் கிடைக்கும் போது ஓவியம் வரைவாள். அதுவும் யாருக்கும் அறியாமல்! மதிய உணவுக்குப் பின் அண்ணி தூங்கிக் கொண்டிருந்த வேளையில் ஒருநாள் வீட்டின் பின்பக்கம் அமர்ந்து ஓவியம் வரையலாம் என அமர்ந்த நொடி..!!

 

வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே கறுப்பு நிற திட்டுகளுடன் கூடிய அழகிய புறா ஒன்று இவளருகில் வந்து அமர்ந்தது! அதைப் பார்த்ததும் சரசுவின் மனம் லேசானது போல உணர்ந்தாள். மனதை கொள்ளை கொண்ட  அந்த புறாவை வரையலாம் என்று ஆரம்பித்தாள்.

 

அதன் கண்கள், கால்கள், சிறகுகள் என்று பார்த்து பார்த்து வரைந்தாள். அந்தப் புறாவும் இவள் வரைந்து முடிக்கும் வரை இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்தது.

 

இறைவனால் படைக்கப்பட்ட எத்தனை அழகிய படைப்பு!!

 

எப்போது நினைத்தாலும் பறக்க முடிகிறது! கிடைக்கும் உணவை உண்டு சுகமாக வாழ்கிறது! அதற்கென்று கனவுகள், கவலைகள், பொறுப்புகள், சிந்தனைகள் இப்படி ஏதாவது இருக்குமா? நான் ஒரு புறாவாக பிறந்திருக்கலாம்.

 

இந்த புறாவைப் போல் என்னாலும் பறக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! எல்லாவற்றையும் மறந்து எங்கு பிடிக்கிறதோ அங்கு சென்று வாழலாம்! என்று நினைத்தாள்!

 

இப்படி தன் எண்ணங்களை சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் அவளின் அண்ணியின் அதிகாரக் குரல் ஒலித்தது! புறாவும் சட்டென்று பறந்து போனது.

 

என்ன! பகல் கனவு கண்டுகிட்டு இருக்கியா! இருக்கிறத விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசப்படுறியா?? அப்டில்லாம் நடந்துட்டா தான் பரவாயில்லயே! ம்ம்ம்!

 

போய் வேலையப் பாரு! டீ போட்டு எடுத்தா!

 

சரிங்கண்ணி! என்று சொல்லி நகர்ந்தாள் சரசு..!

 

சரசுவின் மனதுக்குள் அந்த புறாவைப் பற்றிய சிந்தனைகள் தான் வியாபித்திருந்தது..! இவளின் சிந்தனைகளைத் தூண்டவே அந்தப் புறாவும் காட்சி தந்ததோ!

 

மனிதர்களைக் கண்டதும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எப்படி சட்டென்று சிறகடித்து பறந்ததோ! அப்படி நானும் ஒருநாள் இந்த இறுக்கமான சூழ்நிலையை விட்டு பறந்து விடுவேன்! எனக்கான பாதை உருவாகும் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. 

 

நிச்சயம் உருவாகும் என்று சிந்தித்தவாறே அவளின் அண்ணிக்காக  டீ போட ஆரம்பித்தாள்.

 

சரசுவின் நிலை ஒருநாள் மாறும் என்று நாமும் நம்புவோம்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஆதி!

    கதை நன்று. கண்டிப்பாக மாறும்....என்பதைத் தொடர்ந்து எழுதலாமே. அவளின் வாழ்க்கை எப்படி ஆனது என்று பலவித கற்பனைகளில் யதார்த்தம் கலந்து நீங்கள் எழுதலாமே ஆதி

    நிறைய Scope உள்ள கரு. எழுத முயற்சி செய்யுங்கள், வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பாவம் சரசு மாதிரி ஜீவன்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஸ்ரீராம்... இதைச் சொல்ல நினைத்து விட்டுப் போச்சு....

      கீதா

      நீக்கு
  3. சரசுவைப்போல் பலருடைய வாழ்க்கை இந்த சமூகத்தில் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றனர்... இதுவும் மாற பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  4. சரசு போன்ற அப்பாவிகளைப் பலரும் இப்படித்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பாவம் சரசு. கதை நன்றாக இருக்கிறது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  5. இப்படியும் அப்பாவியான ஜீவன்கள் சிலர். சரசுவின் எண்ணம் போல் வாழ்வு அமையட்டும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....