வெள்ளி, 8 ஜூலை, 2022

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட திருச்செந்தூரின் கடலோரத்தில்! பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

PATIENCE IS THE KEY THAT CONNECTS EFFORTS TO SUCCESS. 

 

******

 

நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

1. நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு

 

2. நதிக்கரை நகரங்கள் - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

3. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள்

 

4. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி

 

5. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி

 

6. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட்.

 

7. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - காலை உணவு.

 

8. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட்.

 

9. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

10. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

11. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

12. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

சென்ற பகுதியில் ஹனுமான் Gகடி என்ற பெயரில் அழைக்கப்படும் ஹனுமனின் கோவில் குறித்து பார்த்தோம்.  இந்தப் பகுதியில் நைமிசாரண்யம் குறித்த வேறு சில தகவல்களை பார்க்கலாம். 




வ்யாஸ் Gdhத்dhதி நுழைவாயில் அருகே பதாகைகள்... 

வ்யாஸ் Gdhத்dhதி, நைமிசாரண்யம், உத்திரப் பிரதேசம்..... சுமார் 6000 வருடங்கள் பழைமையான ஆலமரம் ஒன்றின் கீழே அமர்ந்து தான் வியாச மஹரிஷி, நான்கு வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்களையும், பதினெட்டு புராணங்கள், எண்ணற்ற சாஸ்திரங்கள் ஆகியவற்றை தனது சிஷ்யர்களுக்கு போதித்ததாக நம்பிக்கை. அவர் காலத்தில் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து தான் இதை எல்லாம் செய்தார் என்பதால் இந்த ஆல மரத்தடி தான் வ்யாஸ் Gdhத்dhதி என்றாலும் தற்போது அங்கே ஆலமரத்தின் அருகே ஒரு கோயில் அமைத்து ஒரு பட்டுத் துணியால் மூடி வைத்து இருக்கிறார்கள். கோயிலில் ஶ்ரீராமர் பரிவாரத்துடனும் காலடியில் ஹனுமானுடனும் இருக்கும் கோயில் அமைந்திருக்கிறது. இங்கே கோயிலில் இருப்பவர்கள் வரும் அனைத்து பக்தர்களிடமும் பண வசூல் செய்வதில் குறியாக இருக்கிறார்கள். இந்தப் பகுதியில் இன்னும் சில பார்க்க வேண்டிய இடங்களும் உள்ளன.



வ்யாஸ் Gdhத்dhதி கோவில் உள்ளே...

 

இந்த இடத்தில் அமர்ந்து வேதங்களை பாராயணம் செய்வதும், சப்தாஹம் எனப்படும் ஒரு வார கால உபன்யாசம் நடத்துவதும் மிகவும் பலன் தரக்கூடியது என்பதால் இங்கே அடிக்கடி இப்படியான நிகழ்வுகள் நடக்கின்றன.  பல ஊர்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் உபன்யாசகர்களும் பக்தர்களும் இங்கே வந்து, வாரக் கணக்கில் தங்கி உபன்யாசங்கள், பாராயணங்கள் செய்வது வாடிக்கையான விஷயம்.  எப்போதும் இப்படி நடக்கும் என்றாலும் சில குறிப்பிட்ட மாதங்களில் இந்த மாதிரி நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன என்றும் சொல்கிறார்கள். நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வந்தாலும் தங்கும் அளவுக்கு வசதிகள் இங்கே இருக்கும் தரம்ஷாலாக்களிலும் ஆஸ்ரமங்களிலும் உண்டு என்பதும் தகவல்.  தனியார் தங்கும் விடுதிகள் குறைவு என்றாலும் இது போன்ற தரம்ஷாலாக்களும் ஆஸ்ரமங்களும் அந்த குறை தெரியாமல் இருக்க பெரிதும் உதவுகின்றன.  நாங்கள் சென்ற கோவில்கள், ஆஸ்ரமங்கள் போன்றவற்றில் தங்கியிருந்த சிலரையும் பார்க்க முடிந்தது.  

 

இதே இடத்தில் ஷுக்தேவ் எனப்படும் சுகப் பிரம்ஹ ரிஷி அவர்களுடைய Gdhத்dhதி என்ப்படும் இடமும் அமைந்திருக்கிறது.  ஷுக்தேவ் இங்கே அமர்ந்து வேத பாராயணங்களுக்கான விளக்கங்களை தன்னுடைய சீடர்களுக்கு போதித்ததாகவும் நம்பிக்கை.  இந்த இடங்கள் அமைந்திருக்கும் இடமும் நிறைய மரங்கள் நிறைந்த பகுதியில் இருப்பதால் மிகவும் அழகாக இருக்கின்றது.  நிறைய இடமும் இருப்பதால் நீங்கள் செல்லும் வாகனங்களை நிறுத்தவும் போதிய இடவசதி உண்டு.  இந்தப் பகுதியிலும் சற்றே பெரிய யாகசாலையும், யாககுண்டமும் அமைந்திருக்கிறது.  தொடர்ந்து இங்கே யாகங்கள் நடைபெறுவது வாடிக்கை.  யாகங்கள் இல்லாதபோதும், இங்கே தொடர்ந்து யாககுண்டத்தில் அக்னி இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.  எல்லா இடங்களையும் பார்த்துக் கொண்டு திரும்பி வந்து விடாமல் முடிந்தால் வேத பாராயணங்கள் முழங்கிய இந்த இடத்தில் சற்று நேரம் ஆற அமர அமர்ந்து உங்களுக்குத் தெரிந்த ஸ்லோகங்களையாவது - விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற ஸ்லோகங்களை பாராயணம் செய்யலாம்.   கோவில் வளாகத்தில் வேறு என்ன இருக்கிறது என்பதையும் சொல்லி விடுகிறேன். 



மனு - ஷத்ரூபா கோவில் அமைந்திருக்கும் இடம் குறித்த தகவல்...

இதே பகுதியில் மனு - ஷத்ரூபா ஆகிய இருவருக்குமான கோவிலும் இருக்கிறது. மஹா பிரளயத்திற்குப் பிறகு இந்த உலகு அமைவதற்குக் காரணமான மனுவின் கோவில் இங்கே இருக்கிறது.  சிறியதாக இருந்தாலும் கோவில் அழகு.  கோவிலில் இருந்த பூஜாரி யாருடனோ பேசிக் கொண்டிருந்ததால் எங்களை அவ்வளவாக கவனிக்கவில்லை - சர்க்கரை உருண்டைகளை பிரசாதமாகக் கொடுத்து விட்டு அவர் வேலையில் மும்மரமாக இருந்தார்.  அதனால் நின்று நிதானித்து கோவிலில் இருந்த சிற்பங்களையும் மற்ற இடங்களையும் பார்க்க முடிந்தது. அமைதியான கோவில். இங்கேயும் யாக குண்டங்களும், பாராயணங்களுக்கான வசதிகளும் இருக்கின்றன.  சப்தாஹம், வேத உபன்யாசங்கள் போன்றவற்றை இங்கே நிகழ்த்துவது சிறப்பான விஷயம் என்பதால் அடிக்கடி இங்கே இது போன்ற நிகழ்வுகளை நடத்துகிறார்கள்.  அது போன்ற நிகழ்வுகளில் உங்களுக்கு கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பங்கு கொள்ளலாம்! 



நிம்பு சோடா...
 

வாசலில் இருந்த ஒரு தள்ளு வண்டியில் ஜல் ஜீரா, மற்றும் எலுமிச்சை சோடா விற்றுக் கொண்டிருந்த இளைஞர் சற்றே கோபமானவர் போலும். மசாலா என்ன போடுகிறார் என்று கேட்க, சோடாவை ஒரு குலுக்கு குலுக்கி எங்கள் மீது விழச் செய்து எங்களையும் கோபம் கொள்ள வைத்தார். அவரிடம் பேசிப் பயனில்லை - அவரைப் போன்றே அவர் போட்டுக் கொடுத்த சோடாவின் சுவையும் நன்றாக இல்லை!  சிறப்பாகச் சென்று கொண்டிருந்த பயணத்தில் இது போன்ற ஒரு நிகழ்வு தேவையானதாக இல்லை - இருந்தாலும் இதையும் கடந்து வந்தோம்.  இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள் - அதையும் கடந்து தான் நாம் வர வேண்டும் என்பது அவ்வப்போது நமக்குக் கிடைக்கும் பாடம்! இந்த இடங்களைக் கவனமாக பார்த்து வந்தாலும் ஏதோ மனதுக்கு உகந்ததாக இந்த இடம் இருக்கவில்லை. 🙁

 

அடுத்த பகுதியில் வேறு சில தகவல்களுடன் உங்களை சந்திக்கிறேன்.  தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

10 கருத்துகள்:

  1. எங்கள் ட்ராவல்ஸ் ஆள் இவற்றை போகிற போக்கில் கைகாட்டி காட்டிச்சென்றார்!

    பதிலளிநீக்கு
  2. தகவல்கள் சிறப்பு வெங்கட்ஜி.

    பயணங்களில் இப்படி சில மனதுக்கு ஒவ்வாத நிகழ்வுகள் நடக்கும்தான். அதுவும் ஒரு அனுபவமே. அவர் ஏன் கோபப்பட்டாரோ? மசாலா என்ன என்று கேட்டால் சொல்லிவிட்டுப் போகலாம். அப்படிச் சொல்லாத போது நமக்குச் சந்தேகம் வருமே...

    ஒரு சிலர் இப்படித்தான். வயிற்றைப் பதம் பார்க்கவில்லை என்று தெரிகிறது. நல்லகாலம், மசாலா என்ன என்று தெரியாமல் குடிக்காமல் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. பயணத்தில் இது போன்ற ஒரு நிகழ்வு தேவையானதாக இல்லை - இருந்தாலும் இதையும் கடந்து வந்தோம். இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்வார்கள் -
    பொருட்படுத்தாமல் கடந்து செல்லத்தான் வேண்டும்

    பதிலளிநீக்கு
  4. பயண விவரங்கள் எல்லாமே சிறப்பு. நிறைய அறிந்துகொள்ள முடிகிறது. வெளியில் இப்படியான உணவகங்களில் உணவு உண்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். ஆனால் வேறு வழியில்லையே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  5. நிழல் தரும் ஆசிரமத்தின் கீழ் அமர்ந்து வியாசர்பாடி மகரிஷி தொண்டர்களுக்கு நான்கு வேதங்களை உபதேசித்த சிறப்பான இடம் தரிசித்த மகிழ்ச்சியான வேளையில்........

    சிலரின் நடவடிக்கைகளால் பார்க்க சென்ற இடமும் மனதுக்கு நிறைவாக இருந்திருக்காது.

    பதிலளிநீக்கு
  6. தகவல்களை உள்ளடக்கிய தரமானதொரு பயணக் கட்டுரை

    பதிலளிநீக்கு
  7. இந்த இடங்களை தரிசனம் செய்திருக்கிறேன். ;மூன்று முறை). கடைசியாகச் சென்றபோது காசு டிமான்ட் அதிகமாக இருந்தது. (குருக்ஷஏத்ர பீஷ்மர் அம்புப்படுக்கை இடத்திலும்). காசு கொடுக்கலைனா கோபம் காண்பிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  8. சோடாக்கார்ர் முகம் உங்களால் மறக்கவே முடியாது

    பதிலளிநீக்கு
  9. வெங்கட் பதிவு ஒன்றும் போடவில்லையா? அல்லது எனக்கு தெரியமாட்டேன் என்கிறதா ?

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....