புதன், 18 ஜனவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி பதினைந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட லட்டு பிரசாதம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

KNOWING OTHERS IS WISDOM; KNOWING YOURSELF IS ENLIGHTENMENT. 

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி பதினைந்து


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

பதினைந்தாம் விதி சொல்வது, "எதிரியை முற்றிலுமாக அழித்தொழித்துவிடு". 

 

மூல நூலில், இதை "CRUSH YOUR ENEMY TOTALLY" என்கிறார் எழுத்தாளர். 

 

மிகவும் சர்ச்சைக்குரிய இவ்விதிப்படி, எதிரியின் மிகச் சிறு துளியையும் விட்டு வைத்தால், நாம் கொடூரமான வகையில் பழிவாங்கப்படுவோம் என அச்சுறுத்துகிறார் நூலாசிரியர். 

 

அரசியல், ராணுவம், உளவு போன்ற துறைகளில் மிக இன்றியமையாததான இவ்விதி, சராசரி வாழ்க்கைக்கு எப்படிப் பொருந்தும் எனும் கேள்விக்கு நூலில் பதில் இல்லை. 

 

எதிரிகளைச் சிறப்பாக உபயோகிக்க பல அறிவுரைகளை வழங்கிய இரண்டாம் விதிக்கு மாற்றாக, அவர்களை முற்றிலுமாக அழிக்கக் கூறுவது ஏன்? எனும் கேள்வியும் எழுகிறது. 

 

சாதாரண மனிதர்களான நமக்கு, எதிரி எனப்படுபவர் எவர் என்பதையும், அழித்தொழிப்பதன் பின்னுள்ள விளக்கத்தையும் பின்வருமாறு புரிந்துகொள்ளுதலே மிகவும் பயனளிக்கும். 

 

நம்மைப் போன்றோருக்கான பெரிய பிரச்சனை, நம்மை நித்தமும் பாடாய்ப் படுத்தும் எண்ணற்ற பொறுப்புகளே. 

 

அவற்றை சரியாக ஒழுங்குபடுத்த இயலாதவர்களுக்கோ அவ்வேலைகளும், பொறுப்புகளுமே பெரும் எதிரிகளாக மாறி அவர்கள் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதோடு, வாழ்வின் மீதான வெறுப்பையும் ஏற்படுத்துவதுண்டு. 

 

அவற்றுள் நமக்கு மிகவும் பயனளிக்கவல்ல வேலைகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை இவ்விதிப்படி உடனே தீர்த்துக் கட்ட நான் உபயோகிக்க முயலும் பிரபலமான உத்தி, முன்னாள் அமெரிக்க அதிபர் திரு ஐசன் ஹோவர் அவர்களின் கோட்பாடான "4 Quadrants of Time Management" ஆகும். 

 

இக்கோட்பாட்டின் படி, நமக்குள்ள வேலைப் பொறுப்புகளை கீழ்கண்டவாறு நான்கு பகுதிகளாக "Quadrants" பிரிக்கலாம். 

 

1. அவசரமும் முக்கியமானதுமான பொறுப்புகள். 

2. அவசரமற்ற ஆனால் முக்கியமான பொறுப்புகள்.  

3. அவசரமும் முக்கியமற்றதுமான பொறுப்புகள். 

4. அவசரமற்றதும் முக்கியமற்றதுமான பொறுப்புகள். 

 

இயல்பாகவே, முதல் வகை பொறுப்புகளிலேயே பெரும்பாலோர் எப்போதும் சிக்கியிருப்பதால், வேலைகள் மிச்சமிருப்பதாகவே எல்லா சமயங்களிலும் தோன்றி பெரும் மன அழுத்தத்தில் இருப்பதுண்டு. 

 

இதைத் தவிர்க்கவே, இரண்டாம் வகையான, அவசரமற்ற ஆனால் வருங்காலத்தில் முக்கியமானதாக மாறக்கூடியதான பொறுப்புகளின் மீது நம் தனிமையான ஓய்வு நேரங்களில் கவனம் செலுத்த இக்கோட்பாடு பரிந்துரை செய்கிறது. 

 

அவரவர் சூழலுக்கு ஏற்ப அத்தகைய நேரத்தை விடியல் காலையாகவோ, பயண நேரமாகவோ, மத்திய உணவுக்குப் பிந்தையதாகவோ, இரவில் தூங்குவதற்கு முன்னதான நேரமாகவோ முடிவுசெய்துகொள்ளலாம். 

 

முதல் வகை அவசரமான பொறுப்புகளிலிருந்து நாம் கற்ற பாடங்களையும், அவற்றை வருங்காலங்களில் தவிர்ப்பதற்கான வழிவகைகள் குறித்தும், அதற்காக மேம்படுத்தவேண்டிய திறமைகள் குறித்தும் இத்தகைய நேரங்களில் சிந்தித்து ஒரு சிறந்த இலக்கை முதலில் வடிவமைக்க இயலும். 

 

அவ்விலக்கை சிறு சிறு கூறுகளாகப் பிரித்து, அவற்றை அடையத் தேவையான நூல்களை வாசிக்கவும், பயிற்சிகளை மேற்கொள்ளவும் இந்த நேரத்தை உபயோகிக்கையில், முதல் பகுதி அவசர பொறுப்புகளை  வருங்காலங்களில் திறம்படச் சமாளிக்க முடியும். 

 

படிப்படியாக, மூன்றாம் மற்றும் நான்காம் வகைப் பொறுப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை உரியவர்களிடம் பொறுமையாக ஒப்படைத்துவிட்டு, நாம் ஒதுங்கிக்கொள்ள இயலும். 

 

இதனால், பத்தாம் விதிப்படி, தேவையற்ற பொறுப்புகளையும், எதிர்மறை மனிதர்களையும் தவிர்த்துவிட்டு, நமக்கான பயனுள்ள பொறுப்புகளைத் திறம்படக் கையாண்டு முடித்துவிட இயலும். 

 

இதை மிகவும் சரியான முறையில் செயல்படுத்தி பெரும் வெற்றி பெற்றவர்களில், எனக்கு உடனே நினைவுக்கு வருபவர், கோயம்பத்தூரில் "Sasi Creative School Of Architecture" கல்லூரியை உருவாக்கிய திரு ராஜ் தீபன் சுவாமினாதன் அவர்களே. 

 

விளம்பரத்துறை நிறுவனத்தை நடத்தும் தம் குடும்பத்தின் எதிர்ப்பார்ப்புக்கிணங்க, அமெரிக்காவில், விளம்பரப் படிப்பில் பட்டப் படிப்பை முடித்திருக்கிறார். 

 

அங்கே பேராசிரியராகப் பணிபுரிகையில், தம் இயல்பான ஆர்வம், மாணவர்களுக்குக்  கற்பிப்பதிலேயே இருப்பதை உணர்ந்து ஒரு கல்லூரியை நிறுவும் பெரும் கனவை நோக்கி அடியெடுத்து வைத்தார். 

 

அதன் விளைவாக, கட்டுமானப் படிப்பை, பல துறைகளில் படைப்பூக்கத்துடன் உபயோகிக்கப் பயிற்றுவிக்கும் மேற்குறிப்பிட்டக் கல்லூரியைத் தொடங்கி, பல திறமையாளர்களை இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறார். 

 

இவரைப் போல், நம் பொறுப்புகளை எதிரிகளாக்காமல், நம்மை மேம்படுத்தும் நண்பர்களாக மாற்றுவதே, இவ்விதியின் நேர்மறையான நடைமுறைப் பயன்பாடாகப் புரிந்துகொள்ளலாம். 

 

இதன் அடுத்தபடியாக, பெரும் ஆளுமைகள், தம் மதிப்பை மேலும் உயர்த்த அவ்வப்போது கையாளும் தலைசிறந்த உத்தி ஒன்றை அடுத்த விதியில் அறிந்துகொள்ளலாமா?

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

11 கருத்துகள்:

  1. விதியிலிருந்து விலகி விளக்கம் எங்கோ சென்று விட்டது போல தோன்றியது. ஆனாலும் அன்றாட வாழ்வில் செயல்படுத்த முடியாத விதி.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்வில் மன நிம்மதியை வழங்கும் வழியைச் சொல்லும் குறள் இது.
      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ஐய்யா.

      நீக்கு
  3. 'நமதுபொறுப்புக்களை எதிரிகள் ஆக்காமல் நம்மை மேம்படுத்தும் நண்பர்களாக மாற்றுவதே வழி.'
    நல்ல வழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி மேடம்.

      நீக்கு
  4. இந்த விதி நாட்டிற்குச் சிறப்பாகப் பொருந்தும். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கடினம். இப்படி அர்த்தம் கொள்ளலாம். எதிரிகள் என்று நாம் நினைப்போரை நம்மால் முடிந்தால் அவர்களிடம் இருக்கும் அந்த நெகட்டிவ் எண்ணத்தை அழித்தல் என்று கொள்ளலாம். கெட்ட குணங்களைப் போக்க முயற்சித்தல், இப்படி. டிடி அவர்களுக்கும் நன்மை செய்தல் என்பதான வழி முறைகளில்...ஒரு சிலரிடம் நடக்க வாய்ப்புண்டு..ஆனால் நடைமுறையில் எல்லாரிடமும் இது சாத்தியமில்லை. மிகவும் கஷ்டம். நான் மாற மாட்டேன் என் கெட்ட எண்ணங்களை மாற்றிக் கொள்ள மாட்டேன் திருந்த மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்போரைத் தவிர்த்துவிடுதல் நலம், அப்படியும் சிலரைத் தவிர்க்கவும் முடியாமல் அவதிப்படும் நிலையும் வருகின்றதுதான்.

    இந்த விதிக்கு ரொம்பப் பொருந்திய உதாரணம் இல்லையோ அரவிந்த் நீங்கள் கொடுத்திருப்பது?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி அவர்களுக்கும்// மன்னிக்கவும்....டிடி சொல்லியிருக்கும் குறள் போல் அவர்களுக்கும் என்பது இடையில் விட்டுப் போச்சு

      கீதா

      நீக்கு
    2. ஆம் மேடம். விதி பொதுமக்கள் வாழ்வுக்கு பொருந்தாது என்பதால், ஒரு நேர நிர்வாகக் கொள்கையை சற்று பொருத்தி கூற முயர்ச்சித்தேன்.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி மேடம்.

      நீக்கு
  5. போர் களத்தில் எதிரியை விட்டு வைக்காமல் ஒழிக்கலாம். மற்ற தொழில் எதிரிகள், உறவுகளில் எதிரிகளை இப்படி ஒழிக்க முடியாது.


    //தேவையற்ற பொறுப்புகளையும், எதிர்மறை மனிதர்களையும் தவிர்த்துவிட்டு, நமக்கான பயனுள்ள பொறுப்புகளைத் திறம்படக் கையாண்டு முடித்துவிட இயலும். //

    ஆமாம்.

    "துஷ்டாரை கண்டால் தூர விலகு" என்று சொல்வது போல விலகி நின்று அவர்கள் மனம் திருந்த வாழ்த்தலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கோமதியரசு மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....