திங்கள், 19 டிசம்பர், 2022

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பராலி பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

YOU CAN NOT TRAVEL BACK IN TIME TO FIX YOUR MISTAKES, BUT YOU CAN LEARN FROM THEM AND FORGIVE YOURSELF FOR NOT KNOWING BETTER. 

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி இரண்டு



 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் -  முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம்விதி ஒன்று

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

இரண்டாம் விதி சொல்வது, "நண்பர்களை மட்டும் மலை போல நம்பாதே! எதிரிகளை உபயோகிக்கவும் கற்றுக்கொள்". 

 

மூல நூலில், இதை "NEVER PUT TOO MUCH TRUST IN FRIENDS, LEARN HOW TO USE ENEMIES" என்கிறார் எழுத்தாளர். 

 

நண்பர்களையே சந்தேகிப்பதா! போன்ற பல சர்ச்சையான விவாதங்களைத் தூண்டிய இவ்விதியை சரியாக புரிந்துகொள்வதே, வலிமைக்கான வழிகளை அறிவதன் முக்கிய படிநிலை எனலாம். 

 

வாழ்வில், எந்த கட்டத்திலும் நமக்கு தோளோடு தோள் நிற்கும் நண்பர்கள் அமைவது மிக அரிது. 

 

அத்தகைய சிலரைத் தவிர, நம்மால் ஏற்படும் பயன் கருதியே பெரும்பாலோர் நட்பு பாராட்டுவதை உணரலாம். 

 

இந்நிலையில், தரமான நண்பர்களை அடையாளம் காண்பதின் மூலம், எந்நிலையிலும், நம் மீதான பொறாமையால் எதிரியாகக் கூடியவர்களை நம் வலிமையைப் பெருக்கும் கருவிகளாக மாற்றும் உக்திகளை விளக்கியதே இவ்விதியின் சிறப்பு அம்சம். 

 

எதிரியே இல்லாத சூழல் இருந்தால், எதிரியை உருவாக்குமாறும் விதி கூறுகிறது. 

 

இதில், பிறரை பகைத்துக்கொண்டு எதிரியாக்கச் சொல்வதாக  எண்ணாமல், எதிரியாக மாறக்கூடிய நண்பர்களை முதலிலேயே அடையாளம் காண நூல் வலியுறுத்துவதாக புரிந்துகொள்வதே சரியானது. 

 

நாளைய எதிரியாக மாறக்கூடிய இன்றைய நண்பர்களை, அவர்களின் புறங்கூறும் இயல்பாலேயே எளிதில் அடையாளம் காணலாம் என்பது நான் பெரும் வலிகளை அனுபவித்து அடைந்த வாழ்க்கைப் பாடம். 

 

மற்றோர் ரகசியங்களையும், குறைகளையும் நம்மிடம் கூறுவோர், நிச்சயம் நம் ரகசியங்களையும், பலவீனங்களையும்  அறிந்து, ஆதாயம் கிட்டும் இடங்களில், நம்மைக் கவிழ்க்கவே அவற்றை உபயோகிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். 

 

அத்தகையோரை எச்சரிக்கையுடன் கனிவாக கையாண்டு, நம் சுற்றத்தார் குறித்து அறிந்துகொள்ளும் கருவிகளாக அவர்களை பயன்படுத்துவது நமக்கு மிகவும் பயனளிக்கும். 

 

உண்மையான நண்பர்களை விட, எதிரியாக மாறக்கூடிய இவர்களே, தம்மை நல்லவர்களாக நிருபிக்க மிகவும் உழைப்பதை அன்றாட வாழ்வில் பார்த்திருப்போம். 

 

அத்தகையோர் உழைப்பை, நம் நலனுக்காக பயன்படுத்தி நம் வலிமையைப் பெருக்கும் வாய்ப்புகளை, பல வரலாற்று உதாரணங்களுடன் நூல் விளக்கியுள்ளது. 

 

அமெரிக்காவை எதிர்க்க இந்தியாவை ஆதரிக்கும் ருஶ்ஶியாவையும், சீனாவை எதிர்க்க இந்தியாவை ஆதரிக்கும் அமெரிக்காவையும் சரியாகப் பயன்படுத்தும் இந்தியாவின் ராஜதந்திர நட்பில், இவ்விதியின்  நடைமுறைப் பயனை தினமும் காண்கிறோம். 

 

இதில், எவரும் சுரண்டப்படாமல், இந்தியர் அனைவருக்கும் நன்மையே விளைவது இவ்விதியின் நேர்மறையான விளைவே ஆகும். 

 

இத்தகைய எதிரிகளின் சிறு தவறுகளை, ஆரம்பத்திலேயே வெளிப்படையாக அவர்கள் உணர மன்னிப்பதன் மூலம், அவர்களை நம் விசுவாசிகளாகவும் மாற்றும் சாத்தியக்கூறுகளை நூல் சில உதாரணங்களோடு விளக்கியுள்ளது. 

 

இதைத்தான் அமெரிக்க முன்னாள் அதிபர் திரு ஆபிரஹாம் லிங்கன் அவர்கள், "உன் எதிரிகளை நண்பனாக்குவதன் மூலம், பகைமையை ஆக்கப்பூர்வமாக அழித்துவிடலாம்" என்றார். 

 

இங்கனம் விதியைச் சரியாக அறிவதால், துரோகம் போன்ற அதிர்ச்சிகளால் பாதிக்கப்படாமல், நம் வலிமை பெருகுவது உறுதி. 

 

இக்கருத்துக்கள், திருக்குறளின் பொருட்பால் பகுதி, அர்த்தசாஸ்திரம் போன்ற நூல்களிலும் விளக்கப்பட்டிருப்பதை நாம் அறிவதால், நூலின் விதிகள், எக்கால மனிதருக்கும் பொருந்துவதை உணரலாம். 

 

எனினும், நம் நலனுக்காக பிறரின் பலவீனங்களை இங்கனம் கையாளுவது அறமா என்னும் கேள்வி தொடர்ந்து எழுவதை என்னாலும் தவிர்க்க முடியவில்லை. 

 

இதற்கான விடைகளாக, நம்மை ஆக்கப்பூர்வமானவர்களாக மாற்றவல்லவகையில் படைக்கப்பட்ட அடுத்தடுத்த விதிகளை தொடர்ந்து சுவைக்கலாம். 

 

நூல் குறித்த விவாதம் தொடரும். 

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

14 கருத்துகள்:

  1. இன்றைய விதியில் பெரிதாக ஆட்சேபிப்பதற்கு எதுவும் இல்லை.  உடன்பாடே.

    ன்,ண் , உபயோகம் போன்ற எழுத்துப்பிழைகள் நிறைய இருக்கின்றன.  திருத்தி விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
      எழுத்துப்பிழைகளையும் விரைவி் திருத்துகிறோம் சார்.

      நீக்கு
  2. விதி என்பதை விட அறிவுரை என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. விதி என்றால் சட்டம் என்பது போல் அர்த்தம் வருகிறது. அறிவுரைகள் பொது. ஏற்பதும் ஏற்காததும் அவர் அவர் இஷ்டம். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. ஆம் Jayakumar ஐய்யா.
    ஏர்ப்பதும் ஏர்க்காததும் அவரவர் இஶ்டமே.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. மிகச் சரி ஐய்யா.
      தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்விர்க்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
  5. அலசல் சிறப்பாக இருக்கிறது தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  6. நல்ல பாயின்ட் தான். கிட்டத்தட்ட. இரண்டாவது win win situation? முதல் பாயின்ட் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா மேடம்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு. தொடருட்டும்

    பதிலளிநீக்கு
  9. மிக்க நன்றி ராமசாமி சார்.

    பதிலளிநீக்கு
  10. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி மாதேவி மேடம்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....