செவ்வாய், 6 டிசம்பர், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி 103 – சுயசார்பு வாழ்க்கை!!

 


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட பசுமை காப்போம் - சிறுகதை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

எல்லா புயல்களும் உங்கள் வாழ்க்கையை சீர்குலைக்க வருவதில்லை; சில சில உங்கள் பாதையைத் தெளிவுபடுத்த வருகின்றன.

 

******


யாரிவள் தொடரின் முந்தைய பகுதிகள் அனைத்தும் இந்தச் சுட்டி வழி படிக்கலாம்.


 

அவளின் அன்றாட வாழ்க்கை ஒரே நேர்க்கோட்டுப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது! பெரிதாக மாற்றங்கள் ஏதும் இன்றி வழக்கமான வேலைகளும், கடமைகளும் என சென்று கொண்டிருந்தது! மகள் வளர வளர அவளின் பொறுப்புகளும் கூடிப் போனது! 

 

வீட்டு பொறுப்புகளோடு புதிதாக மாறியிருக்கும் குடியிருப்பிலும் அவளுக்கு பொறுப்புகள் தரப்பட்டது! தன்னால் இயன்ற வரை அவற்றையும் திறம்பட செய்தாள்! தன்னுடைய வீட்டைப் போல் நம்மை சுற்றியிருக்கும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் என்பதால் அதற்கான திட்டமிடுதலுடன் பணி செய்தாள்! 

 

இதன் மூலம் மற்றவர்களின் பார்வையில் அவளைக் குறித்தான மதிப்பும் கூடியது! தனித்து இருந்தாலும் அவளால் குடும்ப பொறுப்புகளோடு பொதுக் காரியங்களிலும் ஈடுபட்டு எல்லாவற்றையும் திட்டமிட்டு திறம்பட செய்ய முடிகிறதே! என்று பேசிக் கொண்டார்கள்!  

 

அவளுக்கும் சிறுவயது முதலே சமுதாயத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற சிந்தனையுடன் தானே வளர்ந்தாள்! அதனால் இந்த மாதிரியான பொறுப்புகள் அவளுக்கு மகிழ்ச்சியையே தந்தது! வாழ்க்கை இப்படியான பாதையில் சென்று கொண்டிருக்க, சட்டென்று ஏற்படும் உடல்நலக் குறைவால் இயல்பு வாழ்க்கையில் ஒரு தேக்கம் உண்டாகும் தானே!! 

 

ஹார்மோனல் இம்பேலன்ஸால் மாதச் சுழற்சியில் ஏற்பட்ட பிரச்சினை சில வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்க, அவ்வப்போது மருத்துவரிடம் சென்று காண்பிப்பதும், மருந்துகளை எடுத்துக் கொள்வதும், உணவு முறையில் மாற்றம் செய்வதும், உடற்பயிற்சிகளை செய்வதுமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது! 

 

தொடர்ந்த இந்த மாதச் சுழற்சி பிரச்சினையால் அவளுக்கு மனதில் ஒருவித வெறுப்பு உண்டானது! மனதிற்கு அயர்ச்சியையும் தந்தது! இப்படியிருக்க திடீரென்று ஒருநாள் தூங்கி எழுந்திருக்கும் போது பார்ப்பதெல்லாம் இரண்டிரண்டாக தெரிந்தது! பின்பு அதுவே பத்து நிமிடங்களில் சரியானது! 

 

என்ன இது!!! புதிதாய்! சரி! கொஞ்சம் காத்திருந்து தான் பார்ப்போமே! என்று இருந்தாள்! அன்றாடம் தூங்கி எழுந்ததும் இப்படியொரு நிலை என்றாகி விட கண் மருத்துவரிடம் சென்று காண்பித்தாள்! எல்லா பரிசோதனைகளையும் செய்து பார்த்த மருத்துவர் இது கண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல! நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை! என்று சொல்லி விட்டார்! 

 

இதற்கு முன் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் 'தலையில்  அடிபட்டிருக்கிறதா' என்றும் அவளிடம்  கேட்டார்! அவளும் கலக்கத்துடன் யோசித்து விட்டு காயங்கள் ஏற்படுமளவு ஏதும் இல்லை! என்று சொன்னாள்! சரி! எதற்கும் நரம்பியல் துறை மருத்துவரை பார்த்து விடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்!

 

பயமும், குழப்பமும் அவளுக்குள் குடி கொண்டது!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

6 கருத்துகள்:

 1. அடுத்தது என்ன என்று கவலையுடன் காத்திருக்க வைத்து விட்டீர்கள்...

  பதிலளிநீக்கு
 2. அதிர்ச்சி தரும் செய்தி தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 3. பொதுக்காரியங்களில் திறம்பட பணியாற்றிய தருணங்களில் உடல்நலப் பிரச்சினை வேறு. அதையும் சமாளித்து இருப்பீர்கள் என நம்புகிறோம்.

  பதிலளிநீக்கு
 4. ஆதி...என்ன இது குண்டைத் தூக்கிப் போடுறீங்க...இதனிடையேயும் மற்ற பணிகளையும் பார்த்துக் கொண்டு வந்திருக்கீங்க. எதுவும் பெரிதாக இருக்காது என்று நினைக்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....