சனி, 24 டிசம்பர், 2022

காஃபி வித் கிட்டு - 159 - கர்த்தவ்ய பாத் - ஞீலிவனேஸ்வரர் - கவலை - முதுமை - சவுக்காரம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

A GOOD HEART AND A GOOD NATURE ARE TWO DIFFERENT ISSUES; A GOOD HEART CAN WIN MANY RELATIONSHIPS AND A GOOD NATURE CAN WIN YOU MANY HEARTS!

 

******

 

இந்த வாரத்தின் சுற்றுலா - தலைநகர் தில்லி - கர்த்தவ்ய பாத் :  



புதிதாக அமைக்கப்பட்ட நேதாஜி சிலை முன்னர் நானும் நண்பரும்…



தலைநகர் தில்லி – ஒரு சிறு காணொளி!

 

அலுவலகத்தின் வெகு அருகிலேயே இந்தியா கேட் இருப்பதால் பலமுறை அந்த வழியே செல்வதுண்டு.  ராஜ்பத் எனும் பெயரிலிருந்து கர்தவ்ய பாத் என்ற பெயரில் ராஜபாட்டை சீரமைக்கப்பட்ட பிறகு, அந்த பாதையில் இறங்கி நடக்கவில்லை.   அழகான மாற்றங்கள் நிறைய செய்திருப்பதோடு, பொதுமக்களுக்கான கூடுதல் வசதிகளும் செய்திருக்கிறார்கள் என்றாலும் நேரடியாக சென்று பார்க்கவில்லை.  சமீபத்தில் சக பதிவர் அமுதா கிருஷ்ணா அவர்கள் ஒரு குழுவினரை மணாலி வரை அழைத்துச் சென்றபோது வழியில் சில மணி நேரம் வரை தில்லியில் இருக்க நேர்ந்ததால் அவர்கள் அனைவரையும் இந்தியா கேட் பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்தேன்.  அடுத்த இரண்டு நாட்களுக்குள் சென்னையிலிருந்து கல்லூரி நண்பர் ஒருவர் அலுவல் சம்பந்தமாக வர, அவர் வேலை முடிந்தபிறகு நிறைய நேரம் இருந்ததால், எங்கேயாவது செல்லலாமா? என்று கேட்டவுடன் அவரையும் இந்தியா கேட் பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்தேன்.  அழகான மாற்றங்கள் செய்திருக்கிறார்கள்.  அங்கே குழுவினரில் ஒரு பெண் எடுத்த காணொளியும் நண்பர் எடுத்த நிழற்படமும் இங்கே சேர்த்திருக்கிறேன். 

 

******

பழைய நினைப்புடா பேராண்டி : எமதர்மராஜனும் ஞீலிவனேஸ்வரரும்

 

2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - எமதர்மராஜனும் ஞீலிவனேஸ்வரரும் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


 

திருச்சியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இடம் திருப்பைஞ்சீலி.  திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சில நகரப் பேருந்துகள் இந்த திருப்பைஞ்சீலி வழியே செல்கின்றன. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாலை நான்கு மணிக்கு புறப்படும் நகரப் பேருந்து ஒன்றில் நான் அமர்ந்து கொண்டேன். திருப்பைஞ்சீலி வரை மட்டுமே செல்லும் என்று என்னைப் பார்த்து சொன்ன பேருந்தின் நடத்துனரிடம், நானும் அங்கே தான் செல்லவேண்டும் எனச் சொல்லி ஒரு பயணச் சீட்டு வாங்கிக் கொண்டேன்.

 

இந்தப் பேருந்து ஏதோ வழி மாறி, வயலுக்குள் போகிறதோ என எண்ணும்படி தான் சென்றது. கேட்டால் இந்த பேருந்தின் ரூட்டு இது தான் சார் என்றார் நடத்துனர். கொள்ளிடக்கரையை ஒட்டிய சிறு கிராமம் ஒன்றின் உள்ளே சென்று ஒரு வழியாக திருப்பைஞ்சீலி அடைந்தது. கோவில் வாசலிலேயே இறக்கி விட்டார் ஓட்டுனர்.  வாசலில் இருந்த ஒரு தேரினை படம் எடுத்துக் கொண்டு முன்னேற, மொட்டைக் கோபுரம் ஒன்று என்னை வரவேற்றது. அதனையும் படம் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன்.

 

இந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் பெயர் ஞீலிவனேஸ்வரர், இறைவி விசாலாட்சி.  திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரரால் பதிகம் பாடப்பெற்ற இத்தலத்தில் ஞீலி எனப்படும் ஒருவகை கல்வாழை தான் ஸ்தலவிருக்ஷம். மொட்டை கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் மிகவும் சிதிலடைந்து உள்ளது. மொட்டை கோபுரம் கூட பராமரிப்பு இல்லாது தான் இருக்கின்றது.

 

இனிமையான நினைவுகள்…  முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாம்!

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த முகநூல் இற்றை: கவலை

 

பல விஷயங்கள் நம்மை கவலை கொள்ள வைக்கின்றன.  ஏதோ ஒன்று நம் அனைவரையும் கவலை கொள்ள வைத்துக் கொண்டே இருக்கிறது.  கவலை கொள்ள விஷயங்கள் எதுவுமே இல்லை என்று கூட சிலர் கவலைப் படுவதுண்டு.  முகநூலில் தற்போது அதிகம் இல்லை என்றாலும் சமீபத்தில் உலா வந்தபோது பார்த்த ஒரு முகநூல் இற்றை எழுத்தாளர் கே.பி. ஜனார்த்தனன் அவர்களுடைய இற்றை! அந்த இற்றை கீழே!

 

யோசித்துப் பார்த்தால் வாழ்க்கையில் கவலைப்பட என்று ஒன்றுமே இல்லை, வாழத்தான் ஏதேதோ இருக்கிறது, அந்தக் கவலை உட்பட!

 

சிறப்பாக சொல்லி இருக்கிறார் அல்லவா?  எழுத்தாளர், நண்பர் திரு ஜனார்த்தனன் அவர்களுக்கு நன்றி.

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம் - முதுமை :


 

இணையத்தில் பார்க்கும் சில நிழற்படங்கள் நம்மை ஏதோ செய்து விடும் தன்மை கொண்டவை.  சமீபத்தில் பார்த்த ஒரு நிழற்படம் அப்படி தான் ஏதோ செய்து விட்டது.  முதுமை தரும் சுருக்கங்கள் தான் எத்தனை அழகு என்று தோன்றச் செய்யும் நிழற்படம் என்று தோன்றியது எனக்கு!  படம் பார்த்த போது உங்களுக்குத் தோன்றியது என்ன என்று பின்னூட்டம் வழி சொல்லலாமே!

 

******

 

இந்த வாரத்தின் தகவல் - மத்யமர் குழு - சவுக்காரம் :

 

முகநூலில் இயங்கும் பல குழுக்களில் ஒன்று மத்யமர் குழு.  நமது வலைப்பூ நண்பர்கள் பலரும் அந்தக் குழுவில் இருக்கிறார்கள்.  சில மாதங்கள் முன்னர் என்னையும் அந்தக் குழுவில் சேர்ந்து கொள்ள அழைப்பு வந்திருந்தது. சேர்ந்து கொண்டாலும் இது வரை அங்கே நான் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. தினமும் நிறைய பதிவுகள் அங்கே வெளிவந்தாலும், பெரும்பாலும் இணையத்தில் உலா வருவதே இல்லை என்பதால் எந்தப் பதிவுகளையும் படிப்பதில்லை.  சமீபத்தில் ஒன்றிரண்டு பதிவுகளை படித்தேன்.  ஸ்வாரஸ்யமாகவே எழுதுகிறார்கள்.   சவுக்காரம் குறித்து திரு ஏகாம்பரம் அவர்கள் எழுதிய இடுகை பிடித்திருந்தது. நீங்களும் படித்துப் பாருங்களேன். 



 

1960 களில் எங்கள் பகுதியில்

 

சவுக்காரம் எனப்படும்  பவர்லைட் சோப் துணி துவைக்க பயன்பட்டது.

 

பெரும்பாலும் பலர் ஆறு, குளத்தின் படிக்கரைகளில் துணிகளை துவைப்பார்கள்..சிலர் வீடு கிணற்றங்கரை சாய்வாய் கட்டபட்ட துணிதுவைக்கும் கல்லில்  துவைப்பார்கள்.

 

காதி மற்றும் வீல் நீண்ட பார் சோப்புகள் கடைகளில் விற்கும்.

 

நானறிந்து அதன் விலை 0.10 காசு..கடைகாரர் நூல் அல்லது ஒற்றைப்பிரி சணலால் அதனை வாகாக அறுத்து தருவார்..சிலபெரிய மளிகை கடைகளில் சவுக்காரம் வெட்டித்தர தனி கட்டர் வைத்திருப்பார்கள்..

 

ஒரு கட்டி 4,6 துணிகளுக்கு சோப்பு போட்டுவிட்டு, அந்த மீதமான தேய்சல் - இன்னும் பிடித்து தேய்த்தால் விரல் நுனிநகாக்க படிகரையில் தேயும்.. அந்நிலையில் அதனை குளம் ஆறு படியில் அழுத்தி தேய்த்து இத்யாதி உள்துணிகளை அதில் கொத்தி கொத்தி தேய்த்து  பின் தன் அடி கால்பாதத்தினை அந்த படியில் ஓட்டியிருக்கும் தேய்சலில் தேய்க்க பெரும்பாலும் பித்தவெடிப்பு வருவதில்லை.. 

 

பின்பு, மஞ்சள் மாறி நீல பார் ஆனது.

 

டினோபால் பின் ராணிபால் என நீலப்பவுடராய்..அசாத்திய பளபள வெண்மைக்கு வந்தது. டாட்டா கம்பெனி சோப் வர, சவுக்காரம் துணிசோப்பாகி, பாமரனும் சுத்ததமிழாய் பேசும் டிடெர்ஜண்ட் ஆனது.. 1980 களில் கார்பரேட் கம்பெனிகளை ஓரம் கட்டிய பொன்வண்டு அரசன் சேலஞ்ச் என மாவட்டத்திற்க்கு ஒன்றாய் அரசாண்டது. காலங்கள் மாற.. காட்சிகளும் மாற.. டிட்டெர்ஜெண்ட்-ம்  பவுடராகி, இப்போது லிக்யூட் வரிசையில்.. வாஷிங்மிஷின், இன்றி யாருண்டு?

 

******

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

25 கருத்துகள்:

  1. சீக்கிரம் ஒருமுறை டெல்லி வரவேண்டும், வெங்கட் உபசரிப்பில் நனைய வேண்டும்!

    உட்கார்ந்து யோசித்திருக்கிறார் பாருங்கள் நண்பர்...   சூப்பர்.

    படம்பார்த்தப் போது எனக்குத் தோன்றிய சிந்தனை "நிலையில்லாத வாழ்க்கை"  எதுவுமே நிலையில்லை!

    சவுக்காரம் அவ்வளவு எளிதில் கரையாது.  மஞ்சளாக துணியில் படிந்து அடித்துத் துவைக்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் இருக்கும். நேரம் இருக்கவேண்டும். வருபவர்கள் வார இறுதியில் வந்தால் அழைத்துச் செல்வார். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சில உணவகங்கள் ஃபுட் ஜாயின்டுகளைக் குறிப்பிடச் சொல்வேன்.

      நீக்கு
    2. ”சீக்கிரம் ஒரு முறை டெல்லி வர வேண்டும்” - முடிந்த போது வாருங்கள் - தில்லியில் உலா வரலாம்! பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
    3. மனம், நேரம் இரண்டுமே அமையும். உங்களுக்கு முடிந்த போது வாருங்கள் நெல்லைத் தமிழன். தில்லியில் ஒரு உலா வருவோம்.

      நீக்கு
  2. இன்றைய கதம்பம் என்னைக் கவர்ந்தது. சுட்டி வழி சென்று படிக்கவேண்டும்.

    அந்த வயது முதிர்ந்தவள் சிறு வயதில் நல்ல அழகுடன் இருந்திருக்கணும். பேரன் அல்லது கொள்ளுப் பேரனுடனானாஞ்சையுடன் கூடிய, அசூயை இல்லாத, வெள்ளைமனத்துடன் கூடிய படமாக இது திகழ்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். வெள்ளை மனதுடன் கூடிய படம் - மகிழ்ச்சி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இந்த வார காஃபி வித் கிட்டு அருமையாக உள்ளது. சுற்றுலா பகுதியில் தலைநகர் காணொளியும், படங்களும் நன்றாக உள்ளது அனைவருக்கும் தங்கள் வேலை பளுவிலும், அவர்களுடன் சென்று உதவிகள் செய்து வரும் தங்களது செயலுக்கு வாழ்த்துகள்.

    திருச்சி திருப்பைஞ்சீவி கோவில் பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். நீங்கள் தந்த சுட்டி வழிச்சென்று அந்தக்கோவில் பற்றிய முழுப்பதிவையும் படித்து வந்தேன். நன்றாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    வாழ்நாட்களில் சில கவலைகளை நாம் வீணாக தேடித்தான் போகிறோமோ என எனக்கும் தோன்றும். கட்டுரை நன்றாக உள்ளது.

    முதுமையிலும் மிக அழகாக இருக்கிறார் அந்தப் பெண்மணி. பாசம் மிகுந்த அந்தப்படம் என்னையும் கவர்ந்தது.

    சவுக்காரம் விபரங்கள் அருமை. இதுபோல் பித்த வெடிப்புக்களை போக்கிய காலங்கள் எனக்கும் உண்டு. இப்போது வீட்டுக்கு வீடு வாஷிங்மெஷின் போன்ற இயந்திரங்கள் நம் வாழ்நாட்களையும் ஒரு இயந்திரமாக்கி விட்டது. அந்தக் கட்டுரையும் என்னைக் கவர்ந்தது. அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  4. கதம்பம் அருமை ஜி

    //கவலை கொள்ள விஷயங்கள் எதுவுமே இல்லை என்று கூட சிலர் கவலைப் படுவதுண்டு//

    ஹா.. ஹா.. இப்படியும் மனிதர்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. மனதை விட்டு நீங்காத படம் தான் தனபாலன். தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  6. கதம்பம் அருமை சார்.
    துணி துவைக்கும் பவுடர்களின் பழைய வடிவம் எனக்கு புது செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  7. கதம்பம் அருமை.
    காதி சோப் கோவையில் மூன்று சக்கர வண்டியில் மணி அடித்து கொண்டு வந்து கொடுப்பார்கள்.
    முதுமை படம் மனதை, கண்களை விட்டு அகலாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதி சோப் குறித்த மேலதிகத் தகவல் சிறப்பு கோமதிம்மா. தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  8. //யோசித்துப் பார்த்தால் வாழ்க்கையில் கவலைப்பட என்று ஒன்றுமே இல்லை, வாழத்தான் ஏதேதோ இருக்கிறது, அந்தக் கவலை உட்பட!//

    ஆமாம். கவலைக்கு கவலை கொடுக்க வேண்டும் என்பார் மகரிஷி.
    அது அது நடக்க வேண்டியது நடந்து கொண்டுதான் இருக்கும்.
    நாம்தான் கவலை பட்டு கொண்டு இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலைக்குக் கவலை கொடுக்க வேண்டும் - சிறப்பு. தங்கள் கருத்திற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. ரசித்து வாசித்தேன் ஜி. தில்லி காணொளி சூப்பர்

    கவலையை நாமே தானே ஏற்படுத்திக் கொள்கிறோம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் நம் ஜனா சார் சொல்லியிருக்கிறார்!!! என்று நினைக்கிறேன்

    முதுமை - நிழற்படம் அந்தச் சுருக்கங்கள் உட்பட வெகு அழகாக வரைந்திருக்கிறார். சுருக்கங்களில் தான் எத்தனை அனுபவங்கள் கதைகள் மறைந்திருக்கின்றன. மனதை என்னவோ செய்யும் நிழற்படம்.

    சவுக்காரம் - சொல்லபப்ட்டிருக்கும் சோப்கள் எல்லாம் பயன்படுத்தியதுண்டு. சவுக்காரமுக்ம். நாங்கள் ஊரில் சோப் சின்னதானதும் அல்லது கொஞ்சம் வெட்டி எடுத்து கல்லில் நன்றாக அழுத்தி விடுவோம். அதில் துணிகளை வைத்து எடுப்பது வழக்கம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  10. டினோபாலும் பயன்படுத்தியதுண்டு. வெள்ளைத் துணி என்றால் கண்டிப்பாக நீலம் போடுவதுண்டு அப்போது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டிலும் டினோபால் வாங்கியதுண்டு. தங்கள் கருத்திற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  11. கதம்பம் அருமை. டில்லி காணொளி அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      நீக்கு
  12. டெல்லி காணொளி அழகாக இருக்கிறது.
    சோப் விளம்பரம் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்தது இங்கும் .

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....