வெள்ளி, 9 டிசம்பர், 2022

யாரிவள் தொடரின் பயணங்கள் - பகுதி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ஒவ்வொரு சூர்யோதயமும் நமக்கு ஒரு விஷயத்தினை தெளிவாக்குகிறது - எத்தனை தான் கும்மிருட்டாக இருந்தாலும், சில வினாடிகளில் வெளிச்சம் வந்தே தீரும் - அதே போல நம் வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதற்கான தீர்வும், தெளிவும் வந்தே தீரும்.

 

******


யாரிவள் தொடரின் பகுதிகள் அனைத்தும் இந்தச் சுட்டி வழி படிக்கலாம்.


 

எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் துவக்கிய தொடர் இது! உங்கள் எல்லோரின் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அவரும் நானும்' தொடரை நிறைவு செய்த போது அடுத்து என்ன எழுதுவது என்ற தேடல் என்னுள் இருந்து கொண்டே இருந்தது!

 

அப்போது தான் Shana Shana ஸாதிகா அக்காவும், தோழி Bhuvana Govind புவனா கோவிந்தும் கோவையைப் பற்றியும், பெற்றோரைப் பற்றியும் எழுதலாமே என்று சொன்னார்கள்! எனக்கும் அந்த எண்ணம் இருந்ததால் சரி எழுதலாமே என்று தான் துவக்கினேன்!

 

எல்லோரையும் போல கவலைகளோ, பொறுப்புகளோ இல்லாத சிறுபிராயம் எனக்கு கிட்டவில்லை! சிறுவயதிலேயே நிறைய அனுபவங்கள் கிடைத்து விட்டது! வீட்டில் மூத்த பெண்ணாக பிறந்ததால் காலத்தின் கோலத்தில் பொறுப்புகளும் தன்னால் வந்துவிட்டது!

 

சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட பெரிய பெரிய முடிவுகளை எடுக்கக்கூடிய இன்றைய இளைய தலைமுறையினருக்கு இந்தத் தொடர் மூலம் ஏதேனும் சொல்ல முயற்சிக்கலாம் என்றே துவக்கினேன்! தொடரின் மத்தியில் எல்லோரையும் வருத்தப்பட வைப்பதாகத் தோன்றவே முடித்து விடலாம் என்று நினைத்து பதிவில் சொல்லியிருந்தேன்!

 

அப்போது தான் தெரிந்தது இந்தத் தொடரை எல்லோரும் எத்தனை ஆர்வத்துடன் வாசிக்கிறார்கள் என்று! தயவு செய்து தொடரை நிறுத்த வேண்டாம்! தொடருங்கள்! என்று அன்புக் கட்டளைகள் வந்த வண்ணம் இருக்கவே மீண்டும் தொடர்ந்தேன்! ஒவ்வொரு பகுதிக்கும் கிடைத்த ஆதரவும், கருத்துகளும், எழுப்பிய வினாக்களுமே என்னைத் தொடர்ந்து எழுத வைத்தது!

 

ஃபிப்ரவரி 2022 இல் துவக்கிய போது இத்தனை பகுதிகள் வரை எழுதுவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை! கடந்த ஒன்பது மாதங்களாக இந்தத் தொடரோடு பயணம் செய்ததில் என்னுள்ளும் நிறைய மாற்றங்களை உணர்ந்தேன்!

(தொடரும்)

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

7 கருத்துகள்:

  1. அனுபவங்களை பகிர்ந்து கொண்டது  உங்களுக்கும் கொஞ்சம் பாரத்தை இறக்கி வைத்தது போலிருந்திருக்கும்.  தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. தொடர்ந்ததை இறுதிப்பகுதிவரை சுபமாக்குங்கள்...

    பதிலளிநீக்கு
  3. உங்கள் அனுபவம், இன்றைய இளைய தலைமுறைக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

    பதிலளிநீக்கு
  4. ஆதிஉங்கள் சிறு வயது கஷ்டங்கள் அனுபவங்கள் அதன் பின்னானவை எல்லாம் வருத்தமான விஷயம். எல்லாம் மாற வேண்டும். இனியேனும் மகிழ்ச்சி நிலவ வேண்டும்.

    உங்கள் வருடங்கள் வரை பெரும்பான்மையான எல்லோருமே சிறு வயதில் ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பாங்கதான். பொறுப்புகள், வறுமை, இன்னும் எத்தனையோ சாலஞ்சஸ். அனுபவங்கள், கற்றல்கள் என்று இருக்கும் இருந்திருக்கும்.

    நாம் நம் அனுபவங்களை எழுதினால் இந்தத் தலைமுறைக்கு உதவியாக இருக்கும் என்று நாம் நினைக்கிறோம். நானும் நினைப்பதுண்டு. ஆனால் அவர்களின் மன நிலையே வேறாக இருக்கிறது. வாழ்க்கையைக் குறித்த கண்ணோட்டம் உட்பட வேறாக இருக்கிறது.

    இருந்தாலும் ஓரிருவருக்குப் பயனுள்ளதாக இருந்தாலே நல்ல விஷயம். தொடர்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இந்தத் தொடரோடு பயணம் செய்ததில் என்னுள்ளும் நிறைய மாற்றங்களை உணர்ந்தேன்!//

    சூப்பர் ஆதி!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது எனக்கும் மகிழ்ச்சியே.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....