சனி, 17 டிசம்பர், 2022

காஃபி வித் கிட்டு - 158 - திராவகம் - தாடி - சாலையோர உணவுத் திருவிழா - உயரவாகு - ஹர்சில் - ஷாப்பிங்க் திருவிழா - நிலைத்தகவல்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

TAKE A MOMENT TO BE THANKFUL AND YOU WILL SOON FIND A REASON TO SMILE.

 

******

 

இந்த வாரத்தின் பதைக்க வைக்கும் நிகழ்வு - திராவகம் :  

 

தலைநகர் தில்லியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் 17 வயது பெண் மீது விரோதம் காரணமாக திராவகத்தினை வீசியிருக்கிறார் ஒரு இளைஞர்.  சில மாதங்களுக்கு முன் வரை அந்தப் பெண்ணுக்கு இளைஞர் மீதான பிடிப்பு இருந்திருக்கிறது - பின்னர் இருவருக்கும் இடையே Break up! அதனால் கோபம் கொண்ட இளைஞர் தற்போது திராவகத்தினை வீசி தனது எதிர்ப்பினை தெரிவித்திருக்கிறார்.  பெண் உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்றாலும் நிரந்தரமாக முகத்தில் தழும்பு இருக்கும் என்பதோடு எத்தனை மன உளைச்சல்.  இந்த நிகழ்விலிருந்து தப்பிப்பதற்காக, இணைய வழி திராவகம் வாங்கியதோடு, தனது அலைபேசி மூலம் தன் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும் என்பதற்காக, சம்பவத்தின் போது தன் அலைபேசியினை நண்பரிடம் கொடுத்து அவரை வேறு இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார் அந்த இளைஞர்.  பலமான திட்டமிடுதலை இந்த திராவக வீச்சில் நடத்திய இளைஞர், நல்ல விஷயங்களில் பயன்படுத்தி இருக்கலாம். இப்போது பிடிபட்டு விட்டாலும், நடந்தது நடந்தது தானே.  இரண்டு பேரின் வாழ்க்கையும் பாழ்பட்டு விட்டதே! எந்த விதத்திலும் தோல்வியையோ, பிடித்தது கிடைக்கவில்லை என்பதையோ இப்போதைய இளைஞர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை என்பது வேதனையான உண்மை.  

 

******

 

இந்த வாரத்தின் எண்ணங்கள்: தாடி
வெளி நாடுகளில் “NO SHAVE NOVEMBER” என்று ஒரு concept உண்டு.  நவம்பர் மாதங்களில் தாடியை மழிக்காமல் முகத்தில் புதர் போல தாடியை வைத்துக் கொண்டு அலைவார்கள்.  இந்த விஷயம் தெரிந்த போது, நானும் ஒன்றிரண்டு வருடங்கள் அப்படி இருந்ததுண்டு.  சில வருடங்களுக்குப் பிறகு இந்த வருடமும் நவம்பர் மாதத்தின் மூன்றாம் வாரத்திலிருந்து மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் என்று நானும் முகச்சவரம் செய்யாமல் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.  வீட்டினர் இருந்திருந்தால், இப்படி தாடியுடன் சுற்ற முடிந்திருக்காது.  வீட்டினர் தான் இல்லையே தாடி வளர்க்கலாம் என்று பார்த்தால், அலுவலகத்திலும் வீட்டின் அருகே இருக்கும் அக்கம்பக்கத்தினரும் தாடி குறித்தே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  சென்ற வாரத்தில் ஒரு நாள் காலை நேரம் பரபரப்பாக இயங்கி, வீட்டை பூட்டிக் கொண்டு இருந்தபோது பக்கத்து வீட்டில் இருக்கும் நபர் படியேறி வந்து கொண்டிருந்தார்.  என்னைப் பார்த்தவர் - முகச் சவரம் செய்து கொள்ளலாமே! இப்படி இருக்காதே! என்கிறார்.  சிரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.  என் முகம், என் தாடி, உனக்கென்ன? என்று கேட்க நினைத்தாலும் கேட்கவில்லை!

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி : சாலையோர உணவுத் திருவிழா

 

2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - சாலையோர உணவுத் திருவிழா- அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


 

பஞ்சாப் மாநிலத்தின் கடைகளில் மக்கி தா ரொட்டி-சர்சோன் கா சாக் விற்பனை அமோகமாக இருந்தது. என்னப்பா இது புரியாத ஐட்டமா இருக்கே என்பவர்களுக்கு, சோள மாவில் செய்யும் சப்பாத்தியும் தொட்டுக்கொள்ள கடுகுக் கீரை சப்ஜியும் தான்.  இது குளிர்காலத்தில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. உடலுக்கு சூடு கொடுக்கும் உணவு என்பதால் பெரும்பாலான வட இந்தியர்களில் வாரத்திற்கு ஒரு முறையாவது இதை சாப்பிடுவார்கள். அதிக கும்பல் இருந்ததால் சாப்பிட வில்லை.  மூன்று நான்கு மாநில ஸ்டால்களில் உண்டதே சற்று அதிகமாகத் தோன்றியதால், தில்லியின் ஒரு ஸ்டாலில் மீட்டா பான் [15 ரூபாய்] வாங்கி சுவைத்து வீடு திரும்பினோம். நாரியல் பான் கூட விற்றார்கள்பான் மேல் தேங்காய் பொடி தூவி இருந்தது!

 

நேற்று சென்று வந்ததை பத்மநாபன் அண்ணாச்சியிடம் இன்று சொன்னபோது, இன்றும் செல்லலாம் வாங்க என்று சொல்லவே இன்றும் சென்றோம்.  இன்றே கடைசி என்பதால், நாங்கள் சென்றபோதே தமிழகத்திலிருந்து வந்திருந்தவர்கள் கிளம்பிச் சென்று விட்டார்கள்.  கேரளத்தின் கடைகளில் கப்பா, மீன்வருவல், என்றெல்லாம் வைத்திருந்தார்கள்.  கர்நாடக கடைகளில் எலுமிச்சை சாதம், புளி சாதம் என்றெல்லாம் வைத்திருந்தார்கள். ஆந்திராவின் கடையில் ஹைதை பிரியாணி! இதையெல்லாம் தான் எப்போதும் சாப்பிடுகிறோமே என நினைத்து சற்றே வித்தியாசமாக சாப்பிடலாம் என முடிவு செய்தோம்.

 

ஒடிசாவின் ஒரு ஸ்டால் இருந்தது. அங்கே ஒரு பெண்மணி எதையோ விற்றுக் கொண்டிருந்தார். இது சைவமா, அசைவமா என்று கேட்கவே Pure bej”  என்றார்.  சரி இதன் பெயர் என்ன என்றோம்? மூங் தால் கா ரஸ்பரா என்று சொல்லவே, சரி பயத்தம்பருப்பு கொண்டு செய்த உணவு என்று புரிந்தது.  ஏதோ காரம் என நினைத்தால் இனிப்பு! ஒரு பீஸ் ரூபாய் 15/-.

 

இனிமையான நினைவுகள்…  முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாம்!

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த கவிதை - உயரவாகு :
எங்கள் குடும்பத்தில் மூன்று பேருமே நல்ல உயரம்! உயரமாக இருப்பதில் சில சௌகர்யங்கள் இருந்தாலும் தொல்லைகளும் உண்டு.  சராசரி உயரத்தினை விட அதிகமாக இருந்தால் இன்னும் பிரச்சனைகள் அதிகம்.  அப்படி உயரவாகு படைத்த ஒருவர் குறித்த கவிதை ஒன்றினை சொல்வனம் பக்கத்தில் படிக்க நேர்ந்தது. கனகா பாலன் என்பவர் எழுதி இருக்கிறார்.  தேர்ந்தெடுத்த படமும் சிறப்பு.  கவிதையின் சில வரிகள் கீழே!  முழுக்கவிதையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாம்!

 

அழுக்குப்பாசியடைந்த

மொட்டைமாடி

நீர்த்தொட்டியினுள்

வெளுப்புக் காரமிட்டு

தேய்த்துக் கழுவிவிடவும்

தேடப்படுகிறேன்

 

ஆயத்த உடை

அளவு பொருந்தாமை

பாதணிகளின் நீட்டுப் பத்தாமை

முழங்கால் இடிக்கும்

முன்னிருக்கையென

ஒன்றிரெண்டு இம்சைகள் எனக்கு மட்டும்தான்

 

உதவிக்கு நேர்ந்துவிட்டதுபோல்

என் உயரவாகு

எத்தனை தோதாயிருக்கிறது

பிறருக்கு.

 

******

 

இந்த வாரத்தின் பயணம் குறித்த தகவல் - ஹர்சில்:

 

உத்திராகண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு இடம் ஹர்சில் எனும் சமவெளிப்பகுதி. மிகவும் அழகான இடம்.  எனது அலுவலத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர். அங்கே அவரது உறவினர் தங்குமிடம் ஒன்றை நடத்தி வருகிறார்.  அழகான மலைப்பிரதேசங்கள், பாகீரதி நதி, கங்கோத்ரி என மிகவும் ரசிக்கக் கூடிய இடம்.  இந்த மாதக் கடைசியில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் சமயத்தில் சென்று வரலாம் என்று அலுவலகத்தில் அதிகாரி பேசிக் கொண்டிருக்கிறார்.  ஆனால் என்னுடைய சூழல் காரணமாக தற்போது எங்கும் பயணிக்க இயலாது என்பதால் ஒப்புக்கொள்ளவில்லை.  அந்தப் பகுதி குறித்து இணையத்தில் நிறைய காணொளிகள் உண்டு.  முடிந்தால் பாருங்களேன். ஒரு காணொளிக்கான சுட்டி இங்கே. கீழேயும் காணொளி இணைத்திருக்கிறேன். 


  

******

 

இந்த வாரத்தின் தகவல் - தில்லி ஷாப்பிங்க் திருவிழா :


 

வரும் வருடத்தின் ஜனவரி 28 முதல் ஃபிப்ரவரி 26 வரை தலைநகர் தில்லியில் 30 நாட்கள் Shopping Festival நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  இந்தத் திருவிழா எப்படி ஏற்பாடு செய்வார்கள், என்னென்ன வசதிகள் இருக்கும் என்பதை எல்லாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  துபாய் ஷாப்பிங்க் திருவிழா குறித்து அடிக்கடி படித்திருக்கிறேன் என்றாலும் சென்றதில்லை.  தலைநகர் தில்லியில் நடக்கப்போகிறது என்பதால் பார்க்கலாம்!  மேலதிகத் தகவல்கள் கிடைத்தால் வரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன். 

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த வாட்ஸப் நிலைத்தகவல் - செல் தத்துவங்கள் :

 

சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு வாட்ஸப் நிலைத்தகவல். நீங்களும் பாருங்களேன். 


 

******

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

23 கருத்துகள்:

 1. நீண்ட நாட்களுக்குப் பிறகு படித்த காஃபி வித் கிட்டு ரசித்துச் சுவைக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு - நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியிட்டது உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. தாடியோ, மீசையோ அதிகம் வளர்ந்து விட்டால் எடுக்க ஆண்களுக்கு மனம் வருவதில்லைதான்.  ஆனால் பார்ப்பவர்களுக்கு 'சுத்தமாக' இருப்பது தான் பிடிக்கிறது என்று தெரிகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாடியோ, மீசையோ வளர்ந்து விட்டால் எடுக்க பிடிப்பதில்லை - உண்மை. தாடி/மீசை இல்லாமல் சுத்தமாக இருப்பது பலருக்கு பிடிக்கத்தான் செய்கிறது.

   தங்கள் கருத்திற்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. இன்றைய காபி வித் கிட்டு... பல மாதங்கள் கழித்து வந்திருக்கிறது. சுவையாகவும் இருக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன் அழகிய காஷ்மீர் இளைஞியின் முகத்தில் ஆத்திரத்தில் காதல் தோல்வி அடைந்தவன் வீசிய ஆசிட் நினைவுக்கு வந்தது. என்ன கொடுமை இது. பூவை யாராவது கசக்குவாங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல மாதங்கள் கழித்து வந்த காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   பூவை யாராவது கசக்குவாங்களா? இப்படி கசக்கும் பலர் இருப்பது நிதர்சனமான வேதனை. தங்களது கருத்திற்கு நன்றி.

   நீக்கு
 4. உயரத்தில் பிரச்சனை, விமானம், பஸ்ஸில் அமர்ந்து வருவதுதான். கூட நடப்பவர்களுக்குக் கஷ்டம்.

  பத்மநாபன் அண்ணாச்சிக்கு ஒரு நல்வரவு சொல்லிடுங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விமானத்தில் பிரச்சனை - உண்மை. கூட நடப்பவர்களுக்கும் கஷ்டம் - சென்ற வாரம் கூட ஒருவர் சொல்லிக் கொண்டு இருந்தார்.

   பத்மநாபன் அண்ணாச்சி - சென்ற வாரம் கூட அவரிடம் எழுதச் சொல்லி கேட்டு இருக்கிறேன். பார்க்கலாம். தங்கள் கருத்திற்கு நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. நீண்ட நாட்களுக்கு பின் வந்திருக்கும் காஃபி வித் கிட்டு பதிவை ரசித்து படித்தேன்.
  உயரமானவர்களுக்கான கவிதை அருமை. அத்தனை பகுதிகளுமே படிக்க ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. தொடர்ந்து இந்தப் பதிவை எழுத என் மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 7. காஃபி வித் கிட்டு ரொம்ப நாள் கழித்து சுவைத்தேன் வெங்கட்ஜி!

  திராவகம் - செய்தி வாசித்தேன் ஜி. என்ன சொல்ல? ரொம்ப மோசம்.

  தாடி - சிரித்துவிட்டேன்

  உயரம் - உயரமானவங்களுக்கு உயரம் பிரச்சனை என்றால் நாலடியார் எனக்கு அதுவே பிரச்சனை. எனக்கு ஏற்ற செருப்பு கிடைப்பது ரொம்பக் கஷ்டம. ரெடிமேட் டிரெஸ் கிடைப்பது கஷ்டம்!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு - பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 8. ஹர்சில் - வாவ்! என்ன அழகு! முப்பரிமாணக் காட்சிதானோ வீடியோ அப்ப்டித்தான் தோன்றுகிறது.

  சாலையோர உணவுத் திருவிழா பழைய பதிவு வாசித்த நினைவு இருக்கு.

  நிலைத்தகவல் - அருமை. இது போன்று வேறு ஒன்று கழுகு பாம்புடன் உள்ள படம்...அதுவும் அருமையான மெசேஜுடன்..

  கவிதையை ரசித்தேன். யாராச்சும் குள்ளமானவங்களுக்கான கவிதை எழுதியிருக்காங்களான்னு பார்க்க வேண்டும்!!!!!!!

  அனைத்தும் ரசித்தேன் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹர்சில் மிக அழகான இடம் தான் கீதா ஜி. சென்று வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது - பார்க்கலாம் எப்போது வாய்ப்பு அமையும் என்று. தங்கள் கருத்திற்கு நன்றி கீதா ஜி.

   நீக்கு
 9. துபாய் ஷாப்பிங் திருவிழாவில் விலையில் ஏமாற்ற முடியாது. அதாவது இப்போ இருக்கும் விற்பனை விலை, எவ்வளவு குறைக்கிறோம்னு போட்டு அதிகாரிகளின் அனுமதி தேவை. நம்ம ஊர்ல எம் ஆர் பியே ஏமாற்றுவித்தை. அதில் டிஸ்கவுன்ட் என்று ஏமாற்றுவார்கள். சென்று பாரத்துவிட்டு எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துபாய் ஷாப்பிங் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு நன்றி நெல்லைத் தமிழன். இங்கே ஏமாற்றுக்காரர்கள் அதிகம் தான். தங்கள் கருத்திற்கு நன்றி.

   நீக்கு
 10. ' இக்கால இளைஞர்கள் தோல்வியை ஏற்கும் மனநிலையில் இல்லை '' விட்டுக்கொடுக்கும் பழக்கமும் இல்லை என்பது பல இடங்களிலும் நடக்கும் சம்பவங்களிலிருந்து தெரிகிறது .

  ஹர்சில் மிகவும் அழகான இடம். கண்டு மகிழ்ந்தோம்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....