வெள்ளி, 23 டிசம்பர், 2022

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி நான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட தஷாஷ்வமேத் Gகாட் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

கற்றுக்கொள்வதில், குழந்தை மனதுடன்(ஆர்வத்துடன்) இருங்கள் கற்றுக்கொடுப்பதில், தாயாகவும் தந்தையாகவும் இருங்கள்...

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி நான்கு


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம்விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

நான்காம் விதி சொல்வது, "எப்போதும் தேவைக்குக் குறைவாகவே பேசு". 

 

மூல நூலில், இதை "ALWAYS SAY LESS THAN NECESSARY" என்கிறார் எழுத்தாளர். 

 

தேவைக்கு அதிகமாகப் பேசுபவர், மிகச் சாதாரண மனிதராகவோ, முட்டாளாகவோ மட்டுமே மக்களால் எடைபோடப்படுவார். 

 

எனவே, வலிமையான மனிதராக மாறுவோரின் உரையாடல்கள், தேவைக்குக் குறைவான சொற்களோடு இருப்பதோடு, குறைந்த  சொற்களால் பற்பல அர்த்தங்கள் விளங்கும்படியும், இன்னும் பல அர்த்தங்கள் பொதிந்திருக்குமோ என்னும் சிந்தையை உருவாக்கும்படியும் இருப்பதை நூல் சில உதாரணங்களோடு விளக்கியுள்ளது. 

 

சென்ற விதியில், நம் நோக்கங்களை மறைக்க, நீண்ட பேச்சால் மக்களை திசை திருப்பச் சொல்லிய எழுத்தாளர், அடுத்த விதியிலேயே குறைவாகப் பேசச் சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துகிறது அல்லவா? 

 

பேச்சாற்றல் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதை, தொலைக்காட்சியில் நாம் அடிக்கடி காணும் பின்வரும் காட்பரீஸ் டெய்ரி மில்க் விளம்பரம் குறித்த விவாதத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். 

 

அவ்விளம்பரத்தில், துணி துவைக்கும் பெண் ஒருவர், சட்டைப்பையில் எதையோ தவர விட்டிருப்பதைக் கண்டு உரிமையாளரை "சீனு தம்பி" என உரிமையுடன் அழைத்துக் கண்டிப்பார். 

 

அதற்கு சீனு தம்பியோ, "அதை நான் மறக்கலை ஸ்ரத்தா அக்கா" எனவும், "அத உங்களுக்காகத் தான் வச்சிருக்கேன்" எனவும் சொல்ல, காட்பரீஸ் டெய்ரி மில்க்கை சுவைத்து மகிழ்வதோடு விளம்பரம் முடியும். 

 

இதில், தம் தொழிலாளியின் நேர்மையிலும், நேர்த்தியான சேவையிலும் தாம் கொண்டுள்ள நம்பிக்கையை, உரிமையாளர் சீனுத் தம்பி, சில சொற்களிலேயே, மறைமுகமாகவும், நயமாகவும் புரியவைத்துள்ளார். 

 

இப்படிப்பட்ட சுருக்கமான சொல்லாடல்கள் மூலம் வழங்கப்படும் சிறிய பரிசு கூட, தொழிலாளிகளிடம், ஆழ்ந்த பாதிப்பையும், விசுவாசத்தையும் ஏற்படுத்தும். 

மாறாக, இதை அவர் நேராகவும் விரிவாகவும் விளக்கியிருந்தால், அத்தொழிலாளிக்கோ "இவனுக்கு என்ன திடீரென பைத்தியம் பிடித்துவிட்டதோ" என்றுதான் தோன்றியிருக்கும். 

 

காட்பரீஸ் டெய்ரி மில்க் விளம்பரம் தயாரித்தோரோ, தம் தயாரிப்புகள் மக்களால் வாங்கப்படவே  இவ்விளம்பரம் எனும் நோக்கத்தை, தொழிலாளர்-உரிமையாளர் உறவை மேம்படுத்தும் உக்தியாகத் திசை திருப்பியதன் மூலம், சிறு ஊக்கப் பரிசு என்றால் காட்பரீஸையே நாம் நினைக்கவும் வைத்துள்ளனர். 

 

இப்படித்தான், தொடர்ச்சியான கவனத்துடன், நம் உரையாடல்கள் மேலே காட்டப்பட்டதுபோல் வடிவமைக்கப்பட வேண்டும்  என நூல் சில வரலாற்று உதாரணங்களுடன் விளக்கியுள்ளது. 

 

சொல்ல வருவனவற்றை, விரிவாக எடுத்துரைக்கவேண்டிய எழுத்தாளர்கள் போன்றோருக்கு இவ்விதி எப்படி பொருந்தும்? என்னும் கேள்வி எழுவது இயல்பே. 

 

தற்கால தலைசிறந்த செவ்விலக்கியங்களில் ஒன்றான எழுத்தாளர் திரு ஜெயமோஹன் அவர்களின் வெண்முரசு நூல் தொடரின் 22 ஆம் நூலில், கலியுகத்தில் அறத்தின் இடம் குறித்து பின்வருமாறு ஒரு மேற்கோள் உள்ளது. 

 

"கலியுகம் அறமழியும் யுகமென்று எண்ணவேண்டாம். கலியுகமே அறம் தன் முடிவிலா ஆற்றலைத் தானே கண்டுகொள்ளும் யுகம்". 

 

இவ்வரியை வாசிப்போர் ஒவ்வோருவருக்கும், தம் அனுபவங்கள் அடிப்படையில் தனித்தனி புரிதல்கள் ஏற்படுவதை உணர்ந்து வியந்திருக்கிறேன். 

 

இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களாக விரிந்துள்ள இந்நூல் தொடர், மேற்சொன்ன வரியின் விரிவான சித்திரமாகவே என்னால் என் வாழ்வோடு பொருத்தி உணர முடிந்தது. 

 

உலகில் வெற்றிபெற்ற எழுத்துக்களிலோ, திரைப்பட  வசனங்களிலோ, உயிரோட்டம் இருப்பதாக விமர்சகர்கள் வியப்பதில் மேற்சொன்ன வரியில் உள்ளது போன்ற குணாதிசயங்கள் இருப்பதைக் காணலாம். 

 

இவ்விதியின் விதிவிலக்காக, பேச வேண்டிய இடத்தில் அமைதி காப்பதோ,  அரைகுறையாகப் பேசுவதோ, நம் வலிமையைக் குன்றச் செய்துவிடும் என நூல் உதாரணங்களுடன் கூறுகிறது. 

 

இரண்டிற்கும் இடையிலான சமநிலையை எய்துவதிலேயே இவ்விதியின் சவால் இருக்கிறது எனலாம். 

 

குறைவாக, ஆழப் பொருள் படும்படி பேசினாலும், அதை மக்கள் மதிப்பதே இல்லை எனும் வறுத்தம் பலருக்கு இருப்பதும் உண்டு. 

 

அதைக் கையாளும் வழிகளை, நூலின் அடுத்த விதி குறித்த விவாதத்தில் விவாதிக்கலாம். 

 

நூல் குறித்த விவாதம் தொடரும். 

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

14 கருத்துகள்:

  1. செய்வதை திருந்தச் செய். 
    சொல்வதை சுருங்கச் சொல்.

    //கலியுகம் அறமழியும் யுகமென்று எண்ணவேண்டாம். கலியுகமே அறம் தன் முடிவிலா ஆற்றலைத் தானே கண்டுகொள்ளும் யுகம்". //

    அதாவது அறத்தின் ஆற்றலை வியந்து தானே  தன் முடிவை தேடிக்கொள்ளும் கலியுகம் என்று இனியும் சுருக்கலாம் அல்லவா? 

    சுருங்க சொல்லி விளங்க வெண்முரசு அல்லாது வேறு (திருக்குறள் போன்று) உதாரணம் காட்டியிருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. ஆம் ஐய்யா.
    திருக்குறள் உதாரணங்களும் அடுத்த சில விதிகளில் எடுத்துக்காட்டப்படும்.
    தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐய்யா.

    பதிலளிநீக்கு
  3. சில உளவியல் ரீதியான கருத்துக்கள் ஆச்சரியம் அளிக்கிறது தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐய்யா.
      மானுட உளவியல் குறித்தே அடுத்தடுத்த விதிகள் எளிய மொழியில் பேசும்.
      தொடர்வதற்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  4. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச்சரி திண்டுக்கல் தனபாலன் ஐய்யா.
      சொல்லுக சொல்லைப் பிரிதோர்சொல் அச்சொல்லை
      வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
      எனக்குள் இக்குறளும் விதி குறித்து எழுதுகையில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

      நீக்கு
  5. படிப்பவர்கள் ஒவ்வொரு விதமாய் புரிந்து கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.  இதில் நான் புரிந்துகொண்டு நடக்க நினைப்பது வேறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சார்.
      ஒவ்வொருவருக்கும் ொவ்வொரு புரிதல் ஏர்ப்படும்.
      அதுவே ஒரு நூலின் ஆற்றல்.
      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  6. வாசகம் அருமை.
    வாசிப்பனுபவம் அருமை.

    காட்பரீஸ் டெய்ரி மில்க் விளம்பரம் எனக்கு பிடித்த விளம்பரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் ரசித்ததற்கும் மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.

      நீக்கு
  7. இது நல்ல விதி. எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய விதி. எழுத்தில் கூடச் சிக்கனமாக வார்த்தைகளைக் கையாண்டு அழகாகச் சொல்லும் விதம் பலருக்கும் வருகிறது...!!!

    சில பிரச்சனைகளில் வார்த்தைகள் கூடத் தேவையில்லை. மௌனம். அது கொண்டுவரும் தீர்வுகள் தனி.
    ஆனால் தேவையான இடத்தில் பேசுவதைக் கூட நறுக்கென்று பேசத்தான் வேண்டும்.

    பொதுவாக எல்லார் வீட்டிலும் சொல்லப்படும் ஒன்று இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஆம் மேடம், வார்த்தைச் சிக்கனம் மிக அவசியம்.
    தங்கள் வருகைக்கும் சிந்தனைகளைப் பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி கீதா மேடம்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....