செவ்வாய், 8 நவம்பர், 2022

பசுமை காப்போம்! - சிறுகதை - ஆதி வெங்கட்

 



அப்பாவும் மகனுமா எங்க தான் போனீங்க?


காய்கறி வாங்கிட்டு வரதுக்கு  இவ்வளவு நேரமா? என்றாள் கோதை.


அது ஒண்ணும் இல்லம்மா! இன்னிக்கு லீவு நாளாச்சே! வண்டிய எடுக்காம ஒரு வாக்கிங் மாதிரி போயிட்டு வரலாமேன்னு ஹரீஷையும் அழைச்சிட்டு பொறுமையா போயிட்டு வந்தேன். என்றார் கேசவன்!


அப்பாவும் நானும் அப்படியே பேசிட்டு வந்தோமா! அதான் நேரம் போனதே தெரியலம்மா! என்றான் ஹரீஷ்!


சரி! சரி! நேரமாயிட்டே இருக்கு! ரெண்டு பேரும் போய் சீக்கிரமா குளிச்சிட்டு வாங்க! டிஃபன் எடுத்து வெக்கறேன் என்ன!


இருவரும் இதோ வந்துடறோம் என்று சொல்லிச் சென்றார்கள்!


குளித்து விட்டு வந்த இருவருக்கும் டைனிங் டேபிளில் டிஃபனை எடுத்து வைத்து பரிமாறத் துவங்கினாள் கோதை!


ஆமா..! அப்படி என்ன நேரம் போனதே தெரியாம ரெண்டு பேரும் பேசிட்டு வந்தீங்க? சொன்னா நானும் தெரிஞ்சிப்பேனே! 


இட்லியை பரிமாறிக் கொண்டே பேச்சைத் துவக்கினாள் கோதை!


பாருடா ஹரீஷ்! உங்கம்மாக்கு நாம என்ன பேசிட்டு வந்தோம்னு தெரிஞ்சுக்காம மண்ட வெடிச்சுப் போயிடும் போலிருக்கு…:)) என்று சொல்லி சிரித்தார் கேசவன்.


கணவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே, "கலாட்டா செஞ்சது போதும்! முதல்ல என்ன விஷயம்னு சொல்லுங்க!" என்றாள்.


அது வேற ஒண்ணுமில்ல கோத! எதிர்காலத்துல இப்படியெல்லாம் கூட நடக்கலாம்னு சில விஷயங்கள இவன் கிட்ட சொல்லிட்டு வந்தேன்! என்றார்.


கொஞ்சம் புரியறா மாதிரி தான் சொல்லுங்களேன்! என்றாள் கோதை.


சரி! நீயும் எங்களோட உட்காந்து சாப்பிடு!! சாப்ட்டுட்டே கேளேன்! என்றார் கேசவன்.


கோதையும் இவர்களோடு அமர்ந்து சாப்பிடத் துவங்கினாள்!


கேசவன் விஷயத்தை ஆரம்பித்தார்! "அதாவது எல்லாரும் இடம் வாங்கி வீடு கட்டியோ இல்லன்னா அபார்ட்மெண்ட் வீடாகவோ வாங்கிக் கொண்டே வராங்க இல்லையா!  ஏன்னா எல்லாருக்கும் தனக்குன்னு வசிக்க ஒரு வீடு வேணும்!


இப்படி வீடுகள் நிறைய வர ஆரம்பிக்கும் போது அதுக்கான இடத்துக்காக வயல்வெளிகளும் தோப்புகளும் அழிஞ்சிட்டே வருதா? என்று கேட்டார் கேசவன்!


ஆமாங்க! அது தான் தெரியுமே! இதில என்ன புதுசா சொல்லப் போறீங்க? என்று சொன்னாள் கோதை!


"கொஞ்சம் பொறுமையா கேளேன் மா"! என்று நிதானத்துடன் சொல்லத் துவங்கினார் கேசவன்!


அப்படி வயல்வெளிகளும், தோப்புகளும் அழிஞ்சுட்டு வரதால இன்னும் வரப்போகிற காலத்துல பயிரிட இடமும் கூட இருக்காது! இந்த விஷயம் மனுஷங்கள மட்டும் பாதிக்கப் போறது இல்ல! நம்மளோட சேர்ந்து ஆடு மாடு மாதிரி ஜீவராசிகளும் தான் கஷ்டப்படும்! 


என்று கேசவன் சொன்னதும்…


நம்ம சரிங்க! ஆடு மாடுங்களுக்கு என்ன பாதிப்பு வரும்னு சொல்றீங்க? என்று குழப்பத்துடன் வினா எழுப்பினாள் கோதை.


அப்பா! இதப்பத்தி நான் வேணா அம்மாட்ட சொல்றேன்ப்பா! என்று முன் வந்தான் ஹரீஷ்!


சரி! சொல்லுடா! உன்ன மாதிரி சின்ன பசங்களுக்கு தான் இந்த விஷயத்தோட தீவிரத்தை பத்தி முழுசாப் புரியணும்! என்றார் கேசவன்!


அது வந்தும்மா! பயிரிட இடம் கூட இல்லன்னா நாம சாப்பாட்டுக்கு என்ன பண்றது? அதே மாதிரி ஆடு மாடுங்களெல்லாம் மேய்ச்சலுக்கு எங்க போகும்? இலை தழையெல்லாம் கூட கிடைக்காமயே போகலாம்! அப்புறம் அதுங்க சாப்பாட்டுக்கு என்ன வழி?? என்றான் ஹரீஷ்!


என்னங்க ரெண்டு பேரும் என்னென்னவோ சொல்றீங்க! பயமா இருக்கேங்க? என்று பரிதவித்தாள் கோதை!


ஆமாம்மா! இயற்கைய அழிச்சிட்டே வரதால ஒன்றுடன் ஒன்று சார்ந்து இருக்கிற நம்ம வாழ்க்கை முறையும் கூட இல்ல மாறிப் போயிடும்!


அப்புறம் சாப்பாட்டுக்கு பதில் மூணு வேளையும் டேப்லட் தான் சாப்பிட வேண்டியிருக்கும்! என்றார் கேசவன்!


இதுக்கு நாம என்ன தாங்க செய்ய முடியும்?? என்று கேட்டாள் கோதை!


இதை தனி மனுஷனால் ஒண்ணும் செய்ய முடியாதும்மா! ஒவ்வொருத்தரும் தன் வீட்டை சுத்தி கட்டாயமா தோட்டம் போடணும்! இல்லைன்னா மாடித் தோட்டம் கூட போடலாம்! வீட்டை சுத்தி மரங்களை நட்டு வெக்கலாம்! 


நம்ம இளைய தலைமுறைக்கு விவசாயம் கத்துக் குடுக்கணும்! விழிப்புணர்வு ஏற்படுத்தணும்! இப்படி ஒவ்வொருத்தரும் கொஞ்சம் பொதுநலத்த மனசுல வெச்சுப் பார்த்து தான் செயல்படணும்மா! அப்போ தான் வரும் தலைமுறைகளுக்கு நாம எதையாவது விட்டுட்டுப் போகலாம்! என்று சொல்லி முடித்தார் கேசவன்!


ஆமாங்க! நீங்க சொல்றது வாஸ்தவம் தான்! எல்லாரும் இப்படி நினைக்க ஆரம்பிக்கணும்! என்றாள் கோதை!


பசுமை காப்போம்! 

பயிரிட்டு வளர்ப்போம்!


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.

7 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    நல்ல பயனுள்ள கதை.

    /இதை தனி மனுஷனால் ஒண்ணும் செய்ய முடியாதும்மா! ஒவ்வொருத்தரும் தன் வீட்டை சுத்தி கட்டாயமா தோட்டம் போடணும்! இல்லைன்னா மாடித் தோட்டம் கூட போடலாம்! வீட்டை சுத்தி மரங்களை நட்டு வெக்கலாம்! /

    அருமையான கருத்துள்ள சிந்தனை. மனிதர்கள் ஒவ்வொருவரும் இப்படித்தான் யோசிக்க வேண்டும். தங்களால் பசுமைக்கு அழிவு வந்ததற்கு பரிகாரமாக இப்படித்தான் சரி செய்து மீட்டெடுக்க வேண்டும். கதையை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. இயல்பான கதை..
    நன்றாக இருக்கிறது..

    அருமை..

    பதிலளிநீக்கு
  3. இன்றைய சூழலுக்கு மிகவும் அவசியமான வியடம்.

    பதிலளிநீக்கு
  4. எல்லோருடைய மனதிலும் உள்ளே உறைந்திருக்கும் பயம்!

    பதிலளிநீக்கு
  5. காலத்தின் தேவையில் வீட்டுத்தோட்டம் அவசியம் என்பதை உணர்த்தும் கதை.

    பதிலளிநீக்கு
  6. கதை நன்றாக இருக்கு ஆதி. உங்களின் முந்தைய பதிவுகளும் வாசித்தேன். யாரிவள் தொடர் உட்பட. அனைத்தும் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....