திங்கள், 7 நவம்பர், 2022

யாரிவள் - 102 - அம்மாவாக…! - ஆதி வெங்கட்

 










உயரிய பதவியும், பொறுப்பும் கொண்டதால் எந்நேரமும் குடும்பத்தைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் மட்டுமே சிந்தனைகள் அவளுக்கு இருக்கும்! இந்தப் பதவி அவளுக்கு கிடைத்த பிறகு அந்தப் பதவியே அவளுக்கு உலகம் என்றாகி விடும்! அவளுக்கென்று தனிப்பட்ட நேரங்கள் என்பதே இல்லாமல் போய்விடும்! அவள் அதைப் பற்றி ஒருநாளும் கவலைப்பட்டதும் இல்லை! அவளே நம் அம்மா!!!


வருடங்கள் கடந்து செல்ல இவளின் மகளும் வளர்ந்து இப்போது பதின்ம பருவத்துக்கு வந்திருந்தாள்! ஒவ்வொரு பருவத்திலும் அவளுக்குத் தேவையான சிந்தனைகளை சொல்லி வளர்ப்பதும், இந்த சமுதாயத்தில் அவள் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கை முறைகளையும் நல்லது கெட்டது என்று எல்லாவற்றையும் சொல்லித் தந்தாள்!


அம்மாவாக அவளை எப்போதும் பாதுகாக்கவே நினைத்தாள்! மகள் பள்ளியிலிருந்து வர சற்றே தாமதமானாலும் மனது படபடக்கத் துவங்கி விடும் இவளுக்கு! கடிகாரத்தைப் பார்ப்பதும், வாசலையே பார்த்துக் கொண்டிருப்பதும், பள்ளிக்கு அழைத்து விசாரிப்பதும், இல்லையென்றால் இவளே பள்ளிக்குச் சென்று பார்க்க இறங்குவதுமாக இருப்பாள்!


அப்போது இவளுக்கு வேறு எந்த வேலையிலுமே கவனம் செல்லாது! மனதில் குழப்பங்களும், கவலையும் சூழ்ந்து கொள்ள சொல்ல இயலாத வண்ணம் இருப்பாள்! அன்றாடம் ஏதேதோ செய்திகளை பார்க்கிறோமே! கேட்கிறோமே! கடவுளே இந்தக் குழந்தைக்கு எந்தக் கெடுதலும் வந்துவிடக்கூடாதே! என்று பரிதவிப்பாள்!


இவளின் சிறுபிராயத்தில் இவளது அம்மாவும் இப்படித்தானே பரிதவித்திருப்பாள்! திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை! என்று சொல்வது போல் அம்மா எப்போதுமே தன் துயரங்களை தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரிடம் தான் முறையிடுவாள்! சண்டையிடுவாள்! புலம்புவாள்!


எல்லாவற்றுக்கும் காணிக்கை எடுத்து வைத்து பிரார்த்தித்துக் கொள்வாள்! இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் இவள், 'எதற்கெல்லாம் தான் பாவம் அந்தப் பிள்ளையார் ஹெல்ப் பண்ணுவார்' 'வடாம் போட்டிருக்கிறதால இன்னைக்கு மழை வேண்டாம்னு பிரார்த்தனை பண்ற! இது உனக்கே ஓவரா இல்லயாம்மா! என்பாள்!


அப்பா வர லேட்டானா கரண்டிய தண்ணில போடற! என்னம்மா இதெல்லாம்! நீ ரொம்ப பயப்படற! வெளில போனா வர வேண்டாமா! முன்ன பின்ன தான் ஆகும்னு தெரியாதா! என்றெல்லாம் அப்போது இவள் அம்மாவை கேலி செய்ததுண்டு! அப்போதெல்லாம் அம்மா சொல்வாள், 'என்ன மாதிரி நீயும் ஒருநாள் அம்மாவா ஆனா தான் தெரியும்டீ! என்று!


இதோ அம்மாவின் நிலை தான் இவளுக்கு இப்போது ஏற்படுகிறது! அம்மாவின் நிலையை, அவளின் பரிதவிப்பை இப்போது உணர முடிந்தது! ஆமாம்மா! இது ரொம்பவே கஷ்டமா இருக்கு! அப்போ நீ எப்படி ஃபீல் பண்ணிருப்பன்னு இப்போ நான் புரிஞ்சுண்டேன்! என்று அம்மாவிடம் மானசீகமாய் பேசிக் கொண்டாள்! ஆனால் இவளைப் போல் அம்மா கேலி செய்ய மாட்டாள்!


நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

5 கருத்துகள்:

  1. சிறுவயதில் நாம் விளையாட்டாய் எண்ணிய விஷயங்களை நாமே அந்த வயது வந்ததும் செய்வது காலத்தின் கோலம்தான்!

    பதிலளிநீக்கு
  2. அனுபவம்தான் பாடத்தை தருகிறது...

    பதிலளிநீக்கு
  3. என்ன மாதிரி நீயும் ஒருநாள் அம்மாவா ஆனா தான் தெரியும்டீ! என்று!/

    ஆமாம், நமக்கு என்று வரும் போதுதான் எல்லாம் தெரியும்.
    அனுபவம் அருமை.

    பதிலளிநீக்கு
  4. குழந்தைகள் வர தாமதமானால் அனைவருக்கும் உள்ள ஏக்கம்தான்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....