புதன், 2 நவம்பர், 2022

யாரிவள் - 98 சுகந்தமான சூழல்!





 

மனதில் மகிழ்ச்சி கொள்ள பெரிதாக ஏதேனும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை! சின்னச் சின்ன விஷயங்களும் கூட மனதில் மாற்றத்தை உருவாக்கும்! திடீரென ஒரு உற்சாகமும், சந்தோஷமும் ஏற்பட்டு விடும்! அது மற்றவர்களுக்கு மிகவும் சாதாரணமாகக் கூடத் தோன்றலாம்!

 

அவளுக்கும் அப்படித்தான் இருந்தது. புதிய ஒரு சூழலில் முன் அறிமுகமே இல்லாமல் புதிதாக சந்திக்கும் மனிதர்கள், அவர்களிடம் ஏற்படும் நட்பு, புத்தம் புதிதான வீட்டை அழுக்கு ஏற்படாமல் பராமரிக்கும் வேலை என்று தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்டாள். அதனால் அவளின் மனதில் மகிழ்ச்சியும், உற்சாகமும் உண்டாயிற்று!

 

வீட்டை விட்டு இறங்கி கீழே வந்தால் அப்படியொரு சுகந்தமான மணம்! வீசும் காற்றில் அந்தச் சூழலையே சுகந்தமாக்கியது. காரணம் அருகில் பெரிய நாகலிங்க மரம் அமைந்திருந்தது! பல சிறப்புகள் பெற்றது இந்த மரம்! இதன் பூ லிங்கத்திற்கு நாகர் குடைபிடித்தது போன்ற அமைப்புக் கொண்டது! சிவ வழிபாட்டிற்கு உகந்தது!

 

சுற்றுப்புறத்தில் உள்ள மாசுக்களை சுத்தம் செய்யும் வல்லமை பெற்றது இந்த மரம்! இந்த மரத்தின் இலை, பட்டை இவை கூட சித்த வைத்தியத்திற்கு பயன்படுகிறது! இந்த மரத்தில் உள்ள பூக்களும் எட்டிப் பறிக்கும் உயரத்திலேயே இருந்ததால் அவ்வப்போது தோழியுடன் சேர்ந்து சென்று பறித்து வந்து வீட்டு பூஜைக்கும், கோவிலுக்கும் எடுத்துச் சென்று தரும் வழக்கத்தை வைத்திருந்தாள்!

 

இந்தப் பூவை பார்க்கும் போது கோவையில் பள்ளிநாட்களில் பள்ளி விட்டு வீடு திரும்பும் வழியில் குறிப்பிட்ட சாலையில் விழுந்து கிடக்கும் பூக்களை அம்மாவிடம் கொண்டு கொடுத்த ஞாபகம் ஏற்பட்டது. வியாழனன்று பள்ளிக்கு கிளம்பும் போது ஒரு கவர் எடுத்துச் சென்று வீடு திரும்பும் போது அரளி மொட்டுகளும், செம்பருத்தி மொட்டுகளும் எடுத்து வந்து அம்மாவிடம் தருவாள்!

 

அம்மா அதைத் தண்ணீரில் போட்டு வைத்து மறுநாள் மலர்ந்த பிறகு பூஜைக்கு பயன்படுத்திக் கொள்வாள். இந்த சுகந்தமான மணமும், அழகிய பூவும் அம்மாவுடனான நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்து விட்டது! அம்மா எனும் அருமையான மனுஷியால் எத்தனை விதமான அழகிய உணர்வுகளையும், அனுபவங்களையும் பெற்றோம் என்று நினைத்தாள்!!

 

அதிவேகமாக குடியிருப்புகள் புதிது புதிதாக தோன்றிக் கொண்டிருக்கும் இந்த நாளில் இந்த மரம் இன்னும் எத்தனை நாட்கள் நம்மருகில் இருக்குமோ! சுகந்தத்தை பரப்புமோ! என் அம்மாவைப் போன்று நீயும் என்னை விட்டு சென்று விடுவாயா!! போன்ற எண்ணங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தது அவளுக்கு!

 

இந்த உயர்ந்த மரமும் சிறிது காலத்துக்குப் பின் பட்டுப் போய் மீண்டும் ஒரு மழையில் துளிர்த்தது! அருகில் புதிதாக ஒரு மரமும் வந்தது! ஆனால் ஏனோ முன்பு போல் அந்த சுகந்தத்தை இப்போது உணர முடியவில்லை! காரணம் பெருகி விட்ட வீடுகளும், மனிதர்களும் என புரிந்து கொள்ள முடிந்தது!

 

இதுவும் கடந்து போகும்!

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

திருவரங்கம்.

 

#யாரிவள்

11 கருத்துகள்:

  1. மீண்டும் தொடர்வதில் மகிழ்ச்சி. வருக.. வருக..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. அழகிய மலர் தொடரட்டும் அனுபவங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. தொடர் முடிந்து விட்டதோ என்று நினைத்தேன்... தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே இடைவெளியாகி விட்டது சகோ. முடித்து விடலாம் என்று தான் தோன்றுகிறது.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. முகநூலில் படித்தேன், இங்கு மீண்டும் தொடர்வது மகிழ்ச்சி. மீண்டும் மரம் துளிர்த்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. 'அருகில் புதிதாக ஒரு மரமும் வந்தது! ஆனால் ஏனோ முன்பு போல் அந்த சுகந்தத்தை இப்போது உணர முடியவில்லை! காரணம் பெருகி விட்ட வீடுகளும், மனிதர்களும் என புரிந்து கொள்ள முடிந்தது! '
    மனித பெருக்கத்தினால் இயற்கையையும் மரங்களும் பலவாறு பாதிக்கப்படுகின்றன .

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....