வெள்ளி, 27 ஜனவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி பத்தொன்பது


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட இராம ஜென்ம பூமி பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

EVERYTHING IN ITS OWN PACE HAPPENS; THE GARDENER MAY WATER WITH A HUNDRED BUCKETS; FRUIT ARRIVES ONLY IN ITS SEASON - KABIR.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி பத்தொன்பது


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

பத்தொன்பதாம் விதி சொல்வது, "எதிராளியை முதலில் அறிந்துகொள், தவறான மனிதரை எதிர்த்து மாட்டிக்கொள்ளாதே". 

 

மூல நூலில், இதை "KNOW WHO YOU'RE DEALING WITH DO NOT OFFEND THE WRONG PERSON" என்கிறார் எழுத்தாளர். 

 

இவ்விதியை அனைவரும் ஏற்கனவே அறிந்திருப்பதோடு, முடிந்தவரை பின்பற்றிக்கொண்டும் இருப்போம். 

 

இருப்பினும், அவ்வப்போது உற்சாகத்தால் நாவடக்கத்தை இழந்து, அவசியமில்லாமலேயே சிலரை எதிரிகளாக மாற்றிவிடுவதும் நடந்துவிடுகிறது. 

 

அது குறித்து பின்னால் வருந்திப் பயன் இல்லை என்பதோடு, தவற்றைச் சரி செய்ய ஆண்டுகளும் பிடிக்கலாம். 

 

இந்நிலையைத் தவிர்க்கவே,  ஆபத்து விளைவிக்கக் கூடிய மனிதர்களை, ஐந்து வகைகளாகப் பிரித்து, அவர்களைக் கையாளும் முறைகளை சுவாரசிய நடையில் நூல் விளக்குகிறது. 

 

அடாவடியான தற்பெருமை நிறைந்த மனிதர்களே முதல் வகை மனிதர்கள். 

தாம் அரைகுறையாக அறிந்தவற்றை முழுமையாக அறிந்தவராக பீற்றிக்கொளுதல், தேவையற்ற வம்பு வழக்குகளைப் பேசி காலத்தை வீணடித்தல், பிறர் கூற்றுகளை முழுமையாகக் கேட்காமல் அரைகுறை புரிதல்களால் சண்டைகளை உருவாக்குதல் உள்ளிட்ட கல்யாண குணங்களே, இவர்களை எளிதில் அடையாளம் காட்டுபவை. 

 

இவர்களிடமிருந்து முடிந்தவரை விலகி இருத்தலும், முடியவில்லையெனில் தொழில் நிமித்தமாக மட்டும் மேலோட்டமாகப் பேசி சுமூகமாக இருப்பதுமே நமக்கு நல்லது. 

 

எவரையும் நம்பத் தயாராகாத எதிர்மறை மனிதர்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள். 

 

உலகமே தமக்கு எதிராக செயல்படுவதாகக் குறைப்பட்டுக்கொள்ளும்  இவர்களின் பேச்சு, எப்போதும் தம் மீது பரிதாபம் ஏர்ப்படும் வண்ணமே அமையும். 

 

ஓரளவு நம்மால் முடிந்தவரை உதவினாலும், மீண்டும் மீண்டும் புதுப்புது பிரச்சனைகளைக் கொண்டு வந்துகொண்டே இருந்தால், இவர்களிடமிருந்து நயமாக விலகிவிடுவதே நலம் பயக்கும். 

 

இல்லையெனில், நம்மைப் பற்றியும் பிறரிடம் இல்லாததையும் பொல்லாததையும் கூறி, நம் நற்பெயரை நாசம் செய்துவிடும் அபாயம் காலப்போக்கில் ஏற்பட்டே தீரும். 

 

"திருவாளர் சந்தேகம்" என அழைக்கப்படும் மூன்றாம் வகை மனிதர்கள், இரண்டாம் வகை மனிதரைப் போல் அதிகம் புலம்பாதவராக இருப்பவராயினும், அனைவரும் தம்மை அழிக்கவே முயல்வதாகப் பெரும் அச்சத்திலேயே இருப்பர். 

 

இப்படிப்பட்டோர் உயர் அதிகாரியாக அமைந்துவிட்டால், தம் பணியாளரிடையே ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொள்ளுமாறு பிளவுகளை ஏற்படுத்திவிடுவர். 

 

அடுத்தவரைக் குறித்து தம்மிடம் இழிவாகப் பேசுபவருக்கே பெரும் சலுகைகளையும் பணி உயர்வையும் அளிக்கும் இவர்களால், நிர்வாகம் முழுவதும் ஊக்கமிழந்து கிடக்கும். 

 

இத்தகைய உயர் அதிகாரிகளின் சில நற்குணங்களை சமயம் பார்த்து உயர்த்திப் பேசி, அவர் மாற்றல் ஆகும் வரை காத்திருப்பதோ, அல்லது நாம் வேறு வேலை பார்த்துக் கொள்வதோ மிகவும் நல்லது. 

 

மாறாக, அவர் விரும்பும்படி பிறர் குறித்த எதிர்மறைச் செய்திகளை அளித்து நற்பெயரை சம்பாதிக்கும் அபாயச் சுழலில் சிக்கினால், பெரும் பகைவர் கூட்டத்தையே நாமும் சம்பாதித்துவிடுவோம். 

 

பாம்பு போன்ற நீண்டகால நினைவாற்றல் கொண்டவரும், எளிதில் உணர்ச்சிவசப்படாதவருமான பெருந்தன்மை மிக்கவர்களே நான்காம் வகை மனிதர்கள். 

 

இத்தகைய அறிவாளிகளிடம் பழகும் சூழலில், நட்புரீதியாக, இயல்பாக அவர்களின் உருவத்தையோ, பதவியையோ, குடும்பத்தையோ குறித்த எளிய நகைச்சுவைச் சீண்டல்கள் கூட அவர்களின் மனநிலையைப் பாதிக்கவல்லதாக அமையும். 

 

தம் உணர்ச்சிகளை முற்றிலுமாக மறைத்துக்கொண்டு, நீண்டகாலம் கணக்கிட்டு நமக்கு தீங்கிழைக்கும் பேராற்றல்  இவர்களிடம் இருப்பதை நாம் என்றும் மறந்துவிடக் கூடாது. 

 

எனவே, இவர்களின் ஞானம் நமக்கு மிகவும் பயனளிப்பதாயினும், மிக எச்சரிக்கையுடனே இவர்களுடன் நம் உரையாடல்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். 

 

மிகச் சாதாரணமான புத்திக் கூர்மையற்ற மனிதர்கள் ஐந்தாம் வகையைச் சேர்ந்தவர்கள். 

 

இவர்கள் நாம் சொல்பவர்களுக்கெல்லாம் ஆமாஞ்சாமி போடுபவர்களாகவும், ஆரோக்கியமான எதிர்விவாதமே எழுப்பாதவர்களாகவும், புதிதகக் கற்கும் ஆர்வமே இல்லாதவர்களாகவும் இருப்பர். 

 

முதல் நால்வகை மனிதர்களைக் குறித்துப் படிக்கும்போதே, பேசாமல் இந்த ஐந்தாம் வகை மனிதர்களுடனேயே நம் காலத்தைக் கழித்துவிடலாம் எனும் எண்ணம் சிலருக்கு எழவும் கூடும் என்பதாலேயே இவர்கள் குறித்தும் ஆசிரியர் எச்சரித்திருக்கிறார் போலும். 

 

ஆரம்பத்தில் இவர்களோடு காலம் மகிழ்ச்சியாகச் செல்லும் என்றாலும், நம் விலை மதிப்பற்ற நேரமும், திறமையும் வீணடிக்கப்பட்டிருப்பதை நீண்டகாலம் கழித்தே உணர்ந்து வருந்துவோம். 

 

எனவே, இத்தகையோரிடம் முடிந்தவரை மிகக் குறைந்த நேரத்தைச் செலவிட்டு அவர்களிடமிருந்து நயமாக விலகியிருத்தலே மிகவும் பயன் தரும்.  

 

இங்கனம், மனிதர்களை வகைப்படுத்தி அறிவதன் மூலம், தற்காலிக வம்பு வளர்க்கும் விவாதங்களில் வெல்லும் முனைப்பில், நீண்டகால எதிரிகளை உருவாக்குவதைத் தவிர்க்கலாம். 

 

நம் குற்றங்குறைகளைக் கூட  உலகம் மன்னிக்கும், ஆனால் நாம் செய்யும் புண்படுத்தல்களை மன்னிக்காது என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம். 

 

இவ்விதிக்கு விதி விலக்கே இல்லை என்பதையும் மனதில் கொண்டு, மனிதர்களை அடையாளம் காணும் அவசியத்தை உணர்வோம். 

 

இவ்வாறு மனிதர்களை அடையாளம் காண சற்று அதிக நேரம் தேவைப்படும் சூழலில், நாம் கடைபிடிக்க வேண்டிய அத்தியாவசிய உத்தி ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா? 

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

12 கருத்துகள்:

  1. இதுவரை நீங்கள் கொடுத்த விளக்கங்களில் இந்த விதிக்கான விளக்கம் முதல் இடத்தைப் பெறுகிறது.  சிறந்த அவதானிப்பு, தயாரிப்பு.   அருமை அரவிந்.  நீங்கள் சொல்லி இருக்கும் உதாரண மனிதர்கள் யாவரையும் நாம் எல்லோரும் நிச்சயம் சந்தித்திருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துகளுக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. மனித குணங்களின் வகைகளை பிரித்து எடுத்து வைத்தது மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. அரவிந்த், இன்றைய விதி மற்றும் விதியின் விளக்கம் Very practical!!!!! ரொம்ப்வே யதார்த்தம். எனக்கு அனுபவமும் உண்டு,. அதிலும் விதியின் இரண்டாவது பகுதியை நான் ரொம்பவே பின்பற்றுகிறேன்.

    //அடாவடியான தற்பெருமை நிறைந்த மனிதர்களே முதல் வகை மனிதர்கள்.

    தாம் அரைகுறையாக அறிந்தவற்றை முழுமையாக அறிந்தவராக பீற்றிக்கொளுதல், தேவையற்ற வம்பு வழக்குகளைப் பேசி காலத்தை வீணடித்தல், பிறர் கூற்றுகளை முழுமையாகக் கேட்காமல் அரைகுறை புரிதல்களால் சண்டைகளை உருவாக்குதல் உள்ளிட்ட கல்யாண குணங்களே, இவர்களை எளிதில் அடையாளம் காட்டுபவை. //

    அதே அதே...இதிலும் அந்தச் சூழலுக்கு அது நல்லது என்று நினைத்து சொல்லப் போக அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு ...அப்படியே நான்காவது வகைக்கு வாங்க....இந்த முதல் வகையோடு தொடர்புண்டு....// பாம்பு போல.... நினைவாற்றல்....தம் உணர்ச்சிகளை முற்றிலுமாக மறைத்துக்கொண்டு, நீண்டகாலம் கணக்கிட்டு நமக்கு தீங்கிழைக்கும் பேராற்றல் இவர்களிடம் இருப்பதை நாம் என்றும் மறந்துவிடக் கூடாது. //

    டிட்டோ டிட்டோ....இதுதான். பட்டபின் தான் தெரிந்தது. இப்படி முன்னெச்சரிக்கை தெரியாமல் போக ...வருடங்கள் போயாச்சு...

    இது மிக மிக அருமையான விதி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மேடம், இது போன்ற விதிகளாலேயே, இந்நூல் என்னை மிகவும் ஈர்த்தது.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு
  4. இன்றைய வாசகம் நல்ல உதாரணத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  5. 'மனிதர்களை அடையாளம் காணும் அவசியத்தை உணரவேண்டும் ' அருமையான விதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி மாதேவி மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....