வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி இருபத்தி இரண்டு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட Bபேல் PபThத்தர் மற்றும் இரவு உணவு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

WE ALWAYS FEEL THAT LIFE OF OTHERS IS BETTER THAN US; BUT WE ALWAYS FORGET THAT WE ARE ALSO OTHERS FOR SOMEONE ELSE!

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி இருபத்தி இரண்டு 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

இருபத்தி இரண்டாம் விதி சொல்வது, "சரணாகதி மூலம் உன் பலவீனத்தை பலமாக மாற்றிவிடு". 

 

மூல நூலில், இதை "USE THE SURRENDER TACTIC: TRANSFORM WEAKNESS INTO POWER" என்கிறார் எழுத்தாளர். 

 

வாழ்வின் சில கணங்களில் நமக்கு நேரம் சரியில்லாமல் அனைத்தும் நமக்கு எதிராக நடக்கக் கூடும். 

 

உடல் நலன் சரி இல்லாமலோ, உற்ற தோழர்களும் நம்மைக் கடுமையாக விமர்சிக்கவோ கூடும். 

 

அச்சமயங்களில், நம்மை மீட்பதற்கான சிறிது நேரத்தை சம்பாரித்துக் கொள்ள, இவ்விதி சொல்லும் உத்திகள் மிகவும் பயன்படும். 

 

நம்மால் சரி செய்ய முடியாத பலவீனங்களைக் கையாண்டு, நமக்குச் சாதகமான இடங்களை நோக்கி போட்டியாளர்களை ஈர்க்கவும் இந்தச் சரணாகதி உத்தி மிகவும் உறுதுணையாக இருக்கும். 

 

1980 களின் இறுதி முதல், தொண்ணூறுகள்  வரை உலக டென்னிசையே தன் ஆளுகைக்கு உட்படுத்திய வீராங்கனை திருமதி ஸ்டெஃபி கிராஃப் அவர்களுக்கு, ஒரு பலவீனம் இருந்ததை டென்னிஸ் ரசிகர்கள் அறிந்திருப்பர். 

 

டென்னிஸ் விளையாட்டுகளில் "ஃபோர் ஹேண்ட்" வகைத் தாக்குதல்களைச் சிறப்பாக உபயோகித்த இவருக்கு, "Rallies" என அழைக்கப்படும் அதிக கவனத்தைக் கோரும் நீண்டகால ஆட்டப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் "பேக் ஹேண்ட்" வகைத் தாக்குதல்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமம் இருந்தது. 

 

அப்பலவீனத்தைச் சரி செய்ய முடியாததை ஒப்புக்கொண்டு, அந்நிலையிலிருந்து ஆட்டத்தை தம் பலத்தை வெளிக்காட்டும் "ஃபோர்ஹேண்ட்" பகுதிக்குத் திருப்பும் உத்திகளைப் பயிற்சி செய்யத் தொடங்கினார். 

 

ஆட்டத்தை அவ்வாறு திருப்ப உருவாகும் சமயத்தைக் கையாள, "பேக் ஹாண்ட் ஸ்லைஸ்" என்ற எதிராளிகளைக் குழப்பும் உத்தியை, தம் இயல்பான அசாத்திய ஓட்டத் திறமையுடன் உபயோகித்ததை இன்றும் வலையொலியில் காண முடியும். 

 

இதனால், தம் பலவீனமான ஆட்ட நிலைகளிலிருந்து வெளிவந்து அவர் நிகழ்த்திய சாதனைகளுள் தலையாயதே, 1988 இல் அவர் சாதித்த "Golden slam" என்னும் தொடர் வெற்றி. 

 

அவரைப் போலவே, தம் பலவீனத்திடம் சரணடைந்து, தம் உயரிய நோக்கத்தை நோக்கி கூரிய கவனத்துடன் செயலாற்றிய மற்றொரு உதாரணம், 1991 இல் நம் நாட்டிலேயே நடந்தது. 

 

அப்போது நம் நாடு சிக்கியிருந்த பெரும் பொருளியல் சிக்கல்கள் மற்றும் அறிஞர்கள் ஊகித்திருந்த தீர்வுகள் குறித்து, முந்தைய விதியிலேயே சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். 

 

அத்தகைய தீர்வுகள், நான்கு உறுப்பினர்களின் கையொப்பத்துடன் ஒரு ஆவணமாகத் தயாரிக்கப்பட்டு, அதன் நகல்கள் ஜூலை மாதம் ஆரம்பத்தில் மாநிலங்கள் அவையிலும் மக்களவையிலும் உறுப்பினர்களிடமும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

 

அரசாங்கத்தின் ஒப்புதல் இன்றி, அந்த ஆவணம் அலட்சியமாகப் பகிரப்பட்டது தொடர்பாக ஜூலை 11 அன்று முதல் இரு அவைகளிலும் பெரும் அமளி கிளம்பி நாடே அதிர்ந்தது. 

 

நான்கு நாட்களுக்குப் பின், அதற்காக நிதி அமைச்சர் திரு மன்மோஹன் சிங் அவர்கள் சார்பாக ஒரு மன்னிப்புக் கடிதம் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்பட்டு நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

 

இதன்மூலம், தாம் சரணாகதி அடைந்தபோதிலும், நாட்டை மீட்பதற்கான ஆலோசனைகள் நிறைந்த அந்த ஆவணத்தின் கருத்துகளை, அனைவரிடமும் சென்று சேர்ப்பதில் அன்றைய நிதியமைச்சர் ஒரு அமளி மூலம் வெற்றிபெற்றே விட்டார். 

 

இத்தோடு, தம் அரசாங்கத்தின் சீர்த்திருத்த நடவடிக்கைகள், தம் முன்னோடிகளான பண்டித நேரு அவர் தம் சிந்தனைகளின் தொடர்ச்சியே என பலமுறை உரையாற்றிய பிரதமர் திரு நரசிம்மராவ் அவர்களின் வாக்குச் சாதுரியமும், எதிராளிகளைச் சமாளிக்கப் பெரிதும் துணைபுரிந்தது.  

 

இவை போல், அன்றைய நாட்களில் கையாளப்பட்ட பல உத்திகளை அறிந்துகொள்ள, அன்று பிரதமர் உரைகளை வடிவமைத்த திரு ஜெய்ராம் ரமேஷ் அவர்களின் "To the Brink and Back_ India’s 1991 Story" நூல் வாசகர்களுக்குப் பெரிதும் பயன்படும். 

 

தமிழில் இவை அனைத்தையும் வாசித்து அனுபவிக்க விரும்புவோருக்கு, திரு வினை சீத்தாபதி அவர்கள் எழுதி, தமிழில் திரு ஜெ. ராம்கி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட "நரசிம்ம ராவ்_ இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி" எனும் நூல் மிகவும் பயனளிக்கும். 

 

இவ்வாறு அன்றைய அரசியல்வாதிகள், ஒருவருக்கொருவர் சிறப்பான புரிதலுடன் நடந்துகொண்டதாலேயே, இன்று 44 நாட்களிலேயே பதவியிழந்த இங்கிலாந்து பிரதமர் லிஸ் ஸ்டிரெஸுக்கு நேர்ந்ததைப் போன்ற பெரும் தோல்வி, நம் நாட்டிற்கு நேரவில்லை. 

 

இவ்விதியின் விதிவிலக்காக, நம் பலவீனமான காலத்திலும், எதிரியை நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு வீரமரணம் அடையலாமே என்ற வாதம் குறித்தும் நூலில் விவாதிக்கப்பட்டுள்ளது. 

 

அத்தகைய வீர மரணத்தால் நமக்குப் பெரும் பலமும் புகழும் கிடைத்தாலும், அவற்றையெல்லாம் அனுபவிக்க நாம் இருக்கமாட்டோமே? 

 

எனவே, சரணாகதி என்பது முழு தோல்வி அல்ல என்பதையும், நம் நல் வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் பொறுமையின் அவசியத்தையே இவ்விதி வலியுறுத்துவதாகவும் புரிந்துகொள்ளலாம். 

 

அத்தகைய நல் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள, நம் பலவீனமான நாட்களில் கையாளவேண்டிய மற்றொரு மிக முக்கிய உத்தி ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா? 

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

11 கருத்துகள்:

 1. டென்னிஸ் வீராங்கனை ஸ்டெப்பி கிராப் பற்றிய தகவல் நான் அறியாதது.  முதலில் புரியாதது போல இருந்த விதியை நரசிம்மராவ் உதாரணம் மூலம் எளிதாக புரிய வைத்து விட்டீர்கள் அரவிந்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பொருமையான வாசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

   நீக்கு
 2. அலசல் சிறப்பாக இருக்கிறது தொடர்ந்து வருகிறேன்....

  பதிலளிநீக்கு
 3. இது ஒரு நல்ல விதி அரவிந்த். தகுந்த இடத்தில், வேண்டிய இடத்தில் (இதுதான் முக்கியம்) சரணாகதி!

  கீதா

  பதிலளிநீக்கு
 4. நாட்டிற்கு மட்டுமில்லை, குடும்பம், சுற்றத்திலும் உதவும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக மேடம். வாழ்வின் அனைத்து இடங்களிலும் இது பயனளிக்கும்.
   தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா மேடம்.

   நீக்கு
 5. உதாரணங்களுடன் 'சரணாகதி ' நல்ல விளக்கம்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....