புதன், 22 பிப்ரவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி இருபத்தி ஒன்பது


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட Khகாந்தானி DHதவா Khகானா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

LIFE IS EASIER WHEN YOU DON’T CONCERN YOURSELF WITH WHAT EVERYBODY ELSE IS DOING.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி இருபத்தி ஒன்பது


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

இருபத்தி ஒன்பதாம் விதி சொல்வது, "இலக்கை நோக்கிய இறுதிப் படிநிலை வரை தெளிவாகத் திட்டமிட்டே செயலாற்று".

 

மூல நூலில், இதை "PLAN ALL THE WAY TO THE END" என்கிறார் எழுத்தாளர்.

 

"திட்டமிடத் தவறுபவன் தோல்வியுறத் திட்டமிடுகிறான்" என்றொரு பொன்மொழி உண்டு.

 

நம் தினசரி செயல்பாடுகள் சீரான ஒழுங்குடன் இருக்க, தெளிவான இலக்கும், அதை அடையும் தெளிவான செயல் திட்டமும் வகுப்பது மிக அவசியம்.

 

அத்தகைய செயல்திட்டம், நம் முன் வரக்கூடிய அனைத்து வகைப் பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டதாகவும், அவற்றை எதிர்கொள்ளும் தெளிவான வழிவகைகளை அறிந்ததாகவும் இருத்தல் மிக அவசியம்.

 

இல்லையேல், சென்ற விதியில் காட்டப்பட்ட துணிச்சல், நமக்கும் நம் சுற்றத்திற்கும், பெரும் ஆபத்தையே கொண்டுவரும் என்பதைப் பின்வரும் நடைமுறை உதாரணம் உணர்த்தும்.

 

சமீபத்தில், டுவிட்டர் நிறுவனத்தை, டெஸ்லா புகழ் எலான் மஸ்க் வாங்கினார் என்று சொல்வதை விட, சட்ட சிக்கலால் வாங்கும் கட்டாயத்திற்குள்ளானார் என்றுதான் சொல்ல முடியும்.

 

ஏப்ரல் மாதம், அது சம்மந்தமான ஒப்பந்தம் போடும்போதே, விலைவாசியைக் கட்டுப்படுத்த மத்தியவங்கிகள் மேற்கொள்ளும் பணக்கொள்கையின் பின்விளைவுகள் பற்றி சிந்திக்காதது திட்டத்தின் முதல் கோணல் ஆனது.

 

அப்பணக் கொள்கையால், பங்குச்சந்தைகள் சரிந்து தம் சொத்துமதிப்பு அடிவாங்கியதோடு, டுவிட்டரை வாங்குவதற்கான நிதியை ஏற்பாடு செய்வதிலும் பெரும் சிக்கல் உருவானது.

 

அதை மறைக்க, டுவிட்டரில் உள்ள போலிக் கணக்குகளை நொண்டிச்சாக்காகக் காரணம் காட்டி, ஒப்பந்தத்திலிருந்து வெளியேற முனைந்தார்.

 

அது சட்டச் சிக்கலாக உருமாற, நிறுவனத்தை பெரும் கடன் தொகை கொண்டும், தம் டெஸ்லாவின் பங்குகளை விற்றும் வாங்கும் கட்டாயம் ஏற்பட்டு திட்டம் முழுதும் கோணல் ஆகிவிட்டது.

 

இதனால் பெரும் நிதிச் சுமையில் சிக்கிய இவர், டுவிட்டரை உடனடியாக அதீத லாபம் ஈட்டச்செய்ய, ஆட்குறைப்பு செய்ததோடு, நீலக் குறியீட்டை "Blue tick" அவசரகதியில் கட்டணச் சேவை ஆக்கினார்.

 

அதிலுள்ள பாதுகாப்புக் குறைகளை உபயோகித்த விஷமிகளால், போலி நீல அடையாளங்கள் உருவாகி, இன்சுலின் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் பெருத்த இழப்பைச் சந்தித்தன.

 

இங்கனம், நிறுவனத்தின் முக்கிய சொத்தான மக்கள் நம்பிக்கையை இழந்து பெரும் சிக்கலில் மாட்டியிருக்கிறார்.

 

இதுபோலத்தான், தெளிவான திட்டமிடாத துணிச்சலான நடவடிக்கைகள், சேற்றில் சிக்கிய யானையை மேலும் ஆழ அமிழ்த்துவது போல நம்மை வீழ்த்திவிடும் என்பதை மறவாதீர்கள்.

 

நம் இலக்கையும் திட்டத்தையும் வகுக்கும்போது, நம் பலத்தையும், பலவீனங்களையும், நம் ஆற்றலின் எல்லைகளையும் தெளிவாகக் கணக்கில் கொள்ளவேண்டும்.

 

இலக்கை எட்டிய பின்னும், பேராசையால் அதீத இலாப வெறியோடு செயல்படுவதைக் கட்டுப்படுத்துவதும் மிகவும் அவசியம்.

 

கடந்த பத்து ஆண்டுகளாக, மக்களின் பேராசையைத் தூண்டி விளையாடிக் கொண்டிருப்பது "கிரிப்டோ கரன்சி" எனும் தனியார் பண முதலீட்டு முறை.

 

அதில் முதலீடு செய்வோரில் ஏறக்குறைய 99 சதவிகித மக்களுக்கு அரசாங்கத்தின் பணநிர்வாக முறை பற்றிய அடிப்படைகளோ, பணம் உருவாக்கும் வலிமை, உரிமை மற்றும் செல்வாக்கு பற்றியோ தெரிவதில்லை.

 

அதனால், இந்தப் பணம் அச்சடிக்கும் தன் உரிமையை, வலிமையை அரசாங்கம் எப்படி விட்டுக் கொடுக்கும் எனவும் சிந்திப்பதில்லை.

 

ஒரு பங்குச்சந்தையின் பங்கு மதிப்பிற்குப் பின்னால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செயல்திறன் இருக்க, கிரிப்டோவிற்குப் பின்னால், ஊகத்தைத் தவிர என்ன இருக்கிறது எனவும் சிந்திப்பதில்லை.

 

மனிதன் உருவாக்கிய எந்த அமைப்பிலும் குறைகள் இருப்பதையும், அவற்றைத் தொடர்ச்சியாக மேம்படுத்தும் முயற்சியிலேயே, சமூக முன்னேற்றம் ஏற்படுவதையும் அறிவோம்.

 

அப்படி இருக்க, தொகுதிச் சங்கிலி என்ற "Block chain" தொழில்நுட்பம் மட்டும் எப்படி எவரும் ஊடுருவ முடியாத பாதுகாப்பை வழங்கும் எனப் பலர் சிந்திக்க மறந்துள்ளனர்.

 

2008 இல் முகமறியா ஒரு ஜப்பானியரால் உருவாக்கப்பட்ட பிட்காயினைப் போல, ஆயிரக்கணக்கான தனியார் கிரிப்டோ கரன்சிகள் உருவாகிய பின்னும், இம்முறை பாதுகாப்பானதாக எப்படி நம்புகிறார்கள் எனவும் தெரியவில்லை.

 

எல்லாவற்றிற்கும் மேல்,  பாதுகாப்பில் சமரசங்கள் நிகழ்ந்தால், மக்களைக் காக்கும் ஒழுங்குமுறை அமைப்புகளே இவ்வமைப்பில் இல்லாதபோது, தம் முதலுக்கு எங்கே பாதுகாப்பு எனவும் பெரும்பாலோர் தமக்குள்ளாவது கேட்டுக்கொள்ளவில்லை.

 

மேற்குறிப்பிட்டவற்றுள், ஒரே ஒரு கேள்வியையாவது எழுப்பி சிந்தித்திருந்தால் கூட, பொருளியல் சார்ந்த அறிவின் வாசல் திறக்கப்பட்டு "FTX" நிறுவன திவால் போன்ற சிக்கல்களில் சிக்காமல் பலரின் பணம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

 

எனவே, தற்பெருமை இன்றி தொடர்ந்து கற்கும் ஆர்வத்தோடு, எதையும் தெளிவாக ஆய்ந்து திட்டமிடும் பக்குவத்தை வளர்த்துக்கொள்வோம்.

 

இத்தகைய செயல்பாட்டால், எதிர்பாராத தடைகள் ஏற்பட்டாலும், நெகிழ்வுத்தன்மையுடன் துரிதமாகவும், துணிவுடனும் செயலாற்ற முடியும்.

 

இங்கனம் சாதிப்போரின் செயல்முறையில் காணப்படும் உயர் அழகியலை அடுத்த விதியில் ருசிக்கலாமா? 

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

10 கருத்துகள்:

  1. நல்ல உதாரணங்களுடன் வந்திருக்கிறீர்கள் அரவிந்த்.  நீங்கள் வங்கியில் வேலை செய்வதாலும், சொந்த ஆர்வத்திலும் நிறைய விஷயங்கள் தெரிந்து அதை இணைத்திருக்கிறீர்கள்.  இந்தத் தொடர் உங்கள் அழகான முயற்சிகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.  முடிந்ததும் புத்தகமாகவே கொண்டு வரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் ஊக்கமிகு பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.
      வங்கி வேலை, உலக நடப்புகள் குறித்து பல தரப்பினருடன் விவாதித்து நம் அறிவை விசாலமாக்கும் பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.
      விரைவில், இதை ஒரு நூளாக கொண்டுவரும் முயர்ச்சியில் இறங்குவேன்.
      தங்கள் அனைவரின் பின்னூட்டங்களே, நூலை மேலும் சரியாக செப்பனிட வழிகோலும்.

      நீக்கு
    2. ஸ்ரீராம், நீங்கள் சொல்வதைத்தான் நான் அரவிந்திடம் அவ்வப்போது சொல்வது. வேறு ஒன்றும் கூட அவரை முயற்சி செய்யச் சொல்லியிருக்கிறேன். நல்ல உதாரணமாக இருப்பார் என்பதால்...

      கீதா

      நீக்கு
    3. தங்கள் ஊக்கத்திற்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா மேடம்.
      தாங்கள் என்னப்படி அடுத்தகட்ட முயர்ச்சியையும் விரைவில் மேற்கொள்ளலாம்.

      நீக்கு
    4. நூலாக வரும்போது பலரும் பயன் அடையக் கூடியதாக இருக்கும்.

      நீக்கு
  2. திட்டமிடுதலையே முதல் ஆசையாக வைத்துக் கொள்ள வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சார்.
      தங்கள் மேலான கருத்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
  3. அரவிந்த், இன்றைய விதியும் மிகவும் அருமையான ஒன்று நாம் பின்பற்ற வேண்டிய ஒன்று என்பதும்...

    திட்டமிடத் தவறுபவன் தோல்வியுறத் திட்டமிடுகிறான்"//

    நல்ல உதாரணப் பொன்மொழி.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நாளாந்த வாழ்க்கையிலேயே திட்டமிட்டு செயலாற்றும்போது இலகுவாக வேலைகள் இருக்கும்போது ,

    முக்கியமான பணிகளில் நீங்கள் கூறிய திட்டமிடல் வெற்றியை தரும் என்பதில் ஐயமில்லை. நல்ல விதி அனைவருக்கும் வேண்டியதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி மாதேவி மேடம்.
      சீக்கிரம் நூலாகவும் வெளியிட முயர்ச்சிக்கிறோம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....