சனி, 25 பிப்ரவரி, 2023

முகநூல் இற்றைகள் - பூமிநாதசுவாமி திருக்கோவில், மண்ணச்சநல்லூர், திருச்சி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

TO BE KIND IS MORE IMPORTANT THAN TO BE RIGHT. MANY TIMES, WHAT PEOPLE NEED IS NOT A BRILLIANT MIND THAT SPEAKS BUT A SPECIAL HEART THAT LISTENS.

 

******


முகநூல் இற்றைகள் - நிலம்/வீடு வாங்கும் ஆசை யாருக்குத் தான் இல்லை - 23 ஜனவரி 2023 

கொள்ளிடம் ஆற்றின் மறுகரையில் இருக்கும் மண்ணச்சநல்லூர் நெல் வயல்களுக்கும் நெல் அரவை இயந்திரங்களுக்கும் பெயர்பெற்றது. அதே மண்ணச்சநல்லூரில் அருள்மிகு பூமிநாதசுவாமி திருக்கோவில் இருக்கிறது என்று சமீபத்தில் இணையத்தில் உலா வரும் போது பார்க்க நேர்ந்தது.  சரி இந்த முறை நேரம் கிடைத்தால் சென்று பார்த்து விடலாம் என மனதில் முடிச்சு போட்டு வைத்துக் கொண்டேன்.  நமக்கான நேரத்தை நாமாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.  இல்லையென்றால் எப்போதும் இருக்கவே இருக்கிறது வேலைகள்! இன்றைக்கு காலை விரைவில் எழுந்து வேலைகளை முடித்துக் கொண்டு 06.45 மணிக்கே வீட்டை விட்டு புறப்பட்டு விட்டேன்.  எங்கள் வீட்டிலிருந்து வழக்கம் போல, கொள்ளிடம் பாலம் வரை நடை.  அங்கிருந்து மண்ணச்சநல்லூர் வரை பேருந்து.  கோவில் சமீபத்திலேயே பேருந்து நிறுத்தம்.  இறங்கிக் கொண்டு பார்த்தால் தமிழக அரசின் பெரிய பதாகை - அருள்மிகு பூமிநாதசுவாமி திருக்கோவில் என! 

 

சில அடிகள் நடந்து சென்றால் கோவிலின் முன்பக்கம் வந்து விடுகிறது.  வெளியே கோபுரத்தின் கீழே இருக்கும் அறிவிப்பு பலகையை பார்த்து உள்ளே சென்றால் நல்ல பெரிய கோவில்.  காலை நேரத்திலேயே பக்தர்கள் வரிசையாக வந்த வண்ணமே இருக்கிறார்கள்.  காரணம் இங்கே நடக்கும் பரிகார பூஜைகள்.  பூமி, நிலம், வீடு போன்றவை வாங்க யாருக்குத்தான் ஆசை இருக்காது?  அப்படி வாங்க நினைக்கும் போது எத்தனையோ சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.  அப்படியான பிரச்சனைகள் எல்லாவற்றையும் இங்கே பூமிநாதசுவாமி சன்னதியில் நடத்தும் வழிபாட்டு முறைகளால் நிவர்த்தி செய்ய முடியும் என்பது ஒரு நம்பிக்கை.  அதனால் தினம் தினம் இங்கே இப்படியான வழிபாடு செய்பவர்கள் வந்த வண்ணமே இருக்கிறார்கள்.  கோவில் பற்றிய தகவல்கள், இருக்கும் மற்ற சன்னதிகள் என அனைத்தும் இணையத்தில் நிறையவே இருக்கிறது என்பதால் இங்கே குறிப்பிடவில்லை. 

 

ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும் - நான் சென்ற போதும் நிறைய பக்தர்கள் தங்கள் நிலம்/வீடு சம்பந்தமான பிரச்சனைகளுக்காக பூஜை செய்ய வந்திருந்தார்கள்.  நிலம் வாங்க வேண்டிய ஆசையுடன் வருபவர்களை தாங்களாக தரும் தட்சணை தவிர கோவிலில் இருப்பவர்களும் அவர்களாக இவ்வளவு காசு கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்வதை பார்க்க முடிந்தது.  ஏதோ வியாபார ஸ்தலம் போல எனக்கு ஒரு உணர்வு தோன்றியது உண்மை. ஆனால் இன்னுமொரு பார்வையும் இதற்கு உண்டு - அவர்களுக்கான சம்பளம் சரியாக வழங்கப்படுவதும் இல்லை என்பதால் இப்படி செய்ய வேண்டியதாக இருக்கிறது என்பதையும் பல கோவில்களில் பார்க்க முடிகிறது. இந்தக் கோவிலிலும் அப்படி இருக்கலாம்! கோவில் வளாகத்தில் அம்மனுக்கும் தனி சன்னதி உண்டு - அம்பிகையின் பெயர் அறம் வளர்த்த நாயகி எனும் தர்மசவர்த்தினி.   அம்பிகைக்கு கீழேயே மஹாமேருவும் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.  கோவிலில் இரண்டு ஸ்தலவிருக்ஷங்கள் - வன்னி மற்றும் வில்வம்.  பொதுவாக ஒரு ஸ்தலவிருக்ஷம் மட்டுமே பார்த்திருக்கிறேன்.  

 

திருச்சி வந்தால் பார்க்க வேண்டிய கோவில்களின் பட்டியலில் இந்தக் கோவிலையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.  கோவில் வளாகத்திற்குள் படம் எடுக்கவில்லை - ஒரே ஒரு படம் தவிர! வெளியே எடுத்த சில படங்களை சேர்த்திருக்கிறேன்.  உள்ளே எடுத்த படத்தில் சிவாலய வழிபாடு செய்யும் விதம் குறித்து எழுதி இருந்தது - அதில் உள்ள குறிப்பு - ஆலயத்தில் கைலி, நைட்டி, செல்போன் போன்றவை தவிர்த்தல் நலம்! சரியாக அதை படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நைட்டி அணிந்த பெண், “அப்பா குரங்கு வந்துடுச்சு!” என்று கத்தியபடியே உள்ளே ஓடினார்! 

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

18 கருத்துகள்:

 1. நல்லதொரு அறிமுகம்.  நம் ஆறுதலுக்காகத்தான் பிரார்தித்துக் கொள்கிறோம்.  நமக்கு என்ன விதித்திருகிறதோ அதை அனுபவித்துத்தானே ஆகவேண்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்கு விதித்தது நடந்தே தீரும் என்பது சரிதான். பதிவு குறித்த கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஶ்ரீராம.

   நீக்கு
 2. அறம் வளர்த்த நாயகி இருக்கும் கோவிலிலே வியாபாரம்!🤔
  நானும் அந்த கோவில் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் சென்று வரவேண்டும் 👍

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரைவில் உங்களுக்கு இக்கோவில் செல்லும் வாய்ப்பு அமையட்டும். தங்கள் கருத்திற்கு நன்றி.

   நீக்கு
 3. அர்ச்சகர்களுக்கு சம்பளம் கிடைக்காதபோது பக்தர்கள் தங்களது காணிக்கையை இவர்களுக்கும், வெளியே தர்மம் கேட்பவர்களுக்கும் கொடுக்கலாம் ஆனால் உண்டியலில் பணம் போடக்கூடாது.

  அது அரசியல்வாதிகளுக்கு போகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாகச் சொன்னீர்கள் கில்லர்ஜி. தங்கள் கருத்திற்கு நன்றி.

   நீக்கு
 4. நமக்கான நேரத்தை நாமாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் எப்போதும் இருக்கவே இருக்கிறது வேலைகள்! //

  அதைச் சொல்லுங்க ஜி!! யதார்த்தத்தில் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறதுதான்...

  அருமையான கோயில். கோயில் பற்றி கேள்விப்பட்டதுண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரம் குறித்த சிந்தனை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

   நீக்கு
 5. பூமிநாதசுவாமி திருக்கோவில் பெயரே நன்றாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 6. நமக்கான நேரத்தை நாமாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் எப்போதும் இருக்கவே இருக்கிறது வேலைகள்! //
  உண்மை.

  பூமிநாதசுவாமி அனைவரின் நியாமான ஆசைகளை பூர்த்தி செய்யட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 7. விவரங்கள் அருமை.. பயனுள்ளவை..

  பதிவு சிறப்பு..

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....