அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோவில் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
“COMPASSION ISN’T ABOUT SOLUTIONS. IT’S ABOUT GIVING ALL THE LOVE THAT
YOU’VE GOT.” - CHERYL STRAYED.
******
பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை. ஆதலினால் பயணம் செய்வோம். தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம். இந்திரனின்
தோட்டம் என்ற
தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின்
தோட்டம்.
பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்
*****
எங்கள் குழுவினரைச் சுமந்து சென்ற விஸ்தாரா விமானம் சரியாக
09.45 மணிக்கு Bபாக்டோக்ரா விமான நிலையத்தில் தரை தொட்டது. சிக்கிம், சிலிகுரி, Dடார்ஜிலிங் போன்ற பல
இடங்களுக்குச் செல்ல இருக்கும் ஒரே விமான நிலையம் இந்த Bபாக்டோக்ரா விமான நிலையம்
தான்.
பல விமானங்கள் தினம் தினம் இங்கே வருகின்றன என்றாலும் சிறிய அளவு விமான நிலையம்
தான். போதிய வசதிகளும் இல்லை. ஏதோ பேருந்து நிலையத்தில் இருப்பது போல மிகக்
குறைவான கழிவறை வசதிகள் - அதுவும் பராமரிப்பு சரியாக இல்லாமல்! சென்னை, தில்லி,
கொல்கத்தா போன்ற பெரிய விமான நிலையங்களில் அதிக அளவு வசதிகளோடு விமான நிலையங்களைப்
பார்த்து விட்டு Bபாக்டோக்ரா விமான நிலையம் பார்க்கும் போது, இது விமான நிலையமா
இல்லை பேருந்து நிலையமா என்று யோசிக்கும் அளவே வசதிகள் அங்கே இருந்தன. விமானத்தில்
இருந்து இறங்கி, ஆடுகளம் அடுத்த சில மீட்டர் தொலைவை நடந்து கடந்து விமான
நிலையத்திற்குள் நுழைந்து விட்டோம்.
மொத்தமாகவே ஐந்து நாட்கள் பயணம் என்றாலும்
குழுவினரின் பலரும் நிறைய உடைமைகள் கொண்டு வந்திருந்தார்கள். ஒரே ஆளுக்கு நான்கு உடைமைகள் கொண்டு வந்தவரைப்
பார்த்தால் ஒரேயடியாக அங்கேயே தங்கி விடுவாரோ என எனக்கும் பயம் வந்தது உண்மை!
பிறகு தான் தெரிந்தது - அவர் பெட்டியில் காலணிகளே ஆறு ஜோடி இருந்தது என்று!
பெட்டிகள் அனைத்தும் மெதுவாக Conveyor Belt வழி வந்து சேர, அவரவர் உடைமைகளை
எடுத்துக் கொண்டு விமான நிலையத்தின் வாயிலுக்கு வந்து சேர்ந்தோம். எங்களுடன் பயணம்
முழுவதும் வரப்போகும் KUMAON MANDAL VIKAS NIGAM LIMITED பிரதிநிதி திரு விஷால் அவர்கள், Bபாக்டோக்ரா விமான
நிலையத்திலிருந்து தான் எங்களுடன் வரப்போவதாக இருந்தது. அவரும் அவருடைய அலுவலகம்
இருக்கும் உத்திராகாண்ட் மாநிலத்திலிருந்து விமானம் மூலம் அதே சமயம் வந்து வெளியே
வந்தார்.
அவர் வந்த பிறகு எல்லா ஏற்பாடு வேலைகளும் அவருடையது.
எங்கள் பயணம் இனி அவர் கையில்! முன்னரே திட்டங்கள் எல்லாம் சொல்லி இருந்தாலும்,
பயணத்தின் போது அந்தந்த சமயத்தில் ஏற்படும் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு
பயிற்சியாளர் உடன் பேசி மாற்றங்களும் செய்து கொள்ள முடியும் என்பதை முன்னரே சொல்லி
இருந்தோம். அவர் வந்து சேர்ந்ததும் எங்களுக்கான வண்டிகள் குறித்து பேசினோம். அவரையும் சேர்த்து குழுவில் இப்போது முப்பது பேர். ஒரே வண்டியில் எல்லோரும் செல்ல வேண்டும் என்றால்
பெரிய அளவு பேருந்து தான் சரி. ஆனால் இதில் ஒரு பிரச்சனை உண்டு - மலைப்பிரதேசங்களில்
பெரிய அளவு பேருந்துகள் இயக்குவதில் அசௌகரியங்கள் இருக்கின்றன. அதனால் சிறிய அளவு Tempo Traveller, Innova, Xylo
போன்ற வாகனங்கள் தான் இங்கே அதிகம் இயங்குகின்றன.
கூடுதலாக Bபாக்டோக்ரா இருப்பது மேற்கு வங்கத்தில்!
அங்கிருந்து சிக்கிம் செல்ல வேண்டும் என்றால் மேற்கு வங்கத்தின் வண்டிகளை தான்
பயன்படுத்த வேண்டும்.
ஆனால் சிக்கிம் மாநிலத்திற்கும் நுழைந்து தங்குமிடம் வரை மட்டுமே இந்த வண்டி
பயன்படுத்த முடியும். சிக்கிம் மாநிலத்திற்குள் உலா வர அந்த மாநிலத்தில் பதிவு
செய்யப்பட வண்டிகளையே பயன்படுத்த வேண்டும். இது இரண்டு மாநிலங்களுக்கும் இருக்கும்
ஒப்பந்தம்! 30 பேருக்கும் சேர்த்து ஐந்து Innova, Xylo வகை வண்டிகள் எங்களுக்காக
விமான நிலையத்தின் வாகன நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தன. ஆறு ஆறு பேர்கள் கொண்ட குழுவாக பிரிந்து ஐந்து
வாகனங்களில் புறப்பட்டோம்.
எங்கே செல்ல இருந்தோம் என்றால் மேற்கு வங்கத்தில் இருக்கும் டார்ஜிலிங் நோக்கி!
என்னடா இது “இந்திரனின் தோட்டம்” என்ற தலைப்பு கொடுத்து சிக்கிம் மாநிலப் பயணம்
என்று சொல்லி விட்டு மேற்கு வங்கத்தில் இருக்கும் டார்ஜிலிங் செல்கிறீர்கள் என்று
உங்களுக்குக் குழப்பம் வரலாம்! எங்கள் பயணத் திட்டத்தில் முதல் இரண்டு நாட்கள்
டார்ஜிலிங் தான்! அதன் பிறகு இரண்டு நாட்கள் சிக்கிம் தலைநகர் Gகேங்டாக்!
எங்கள் வாகனத்தின் ஓட்டுநராக வந்தது திரு விஜய்
(dh)தீனாநாத் (ch)சவுஹான் என்பவர் - அவரது அப்பா அமிதாப் Bபச்சன் விசிறி என்பதால்
மகனுக்கு அவர் நடித்த ஒரு படத்தில் இருந்த Character பெயரையே தன மகனுக்குச் சூட்டி
இருக்கிறார்.
வடக்கிலும் சில சினிமா வெறியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை இந்த விஷயம்
எனக்கு உணர்த்தியது! Bபாக்டோக்ராவிலிருந்து டார்ஜிலிங் சுமார் 70 கிலோ மீட்டர்.
ஆனாலும் பெரும்பாலும் மலைப்பாதை என்பதால் குறைந்தது மூன்று மணி நேரம் பயணம்!
ஓட்டுநரிடம் பேசிக்கொண்டே வந்ததில் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
பொதுவாக நான் பயணங்களில் பலருடன் பேசுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறேன். என்னதான் இணையத்தில் நிறைய விஷயங்கள் இருந்தாலும்,
உள்ளூர்வாசிகளிடம் பேசும் போது கிடைக்கும் தகவல்கள் பல பயனுள்ளவையாக இருக்கும்.
எங்கள் பயணம் தொடங்கி சில நிமிடங்கள் கூட ஆகி
இருக்காது! ஐந்து வண்டிகளில் எங்கள் வண்டி தான் முதலாவதாக சென்று கொண்டிருந்தது. எங்கள் ஓட்டுநர் விஜய் Bange Mo(r)de என்ற சாலை
சந்திப்பில் எங்கள் வாகனத்தினை நிறுத்தினார். அவரிடம் கேட்டபோது பயண ஏற்பாடு செய்ப்பவர் இங்கே
தான் நிறுத்தத் சொல்லி இருக்கிறார்! ஐந்து வண்டிகளும் இங்கே சில நிமிடங்கள் நின்று
அதன் பின்னரே செல்லும் என்றார். அந்த இடத்தில் நாங்கள் காத்திருந்தோம். சில நிமிட
இடைவெளியில் வாகனங்கள் ஐந்தும் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன! ஏன் அந்த இடத்தில் ஒரு
நிறுத்தம்? அதுவும் பயணம் தொடங்கி 15-20 நிமிடங்களுக்குள்? இதற்கான காரணமும்,
ஓட்டுனருடன் பேசியதில் கிடைத்த விஷயங்கள் என்ன, சாலைப் பயணத்தில் கிடைத்த
அனுபவங்கள் என்ன போன்றவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
பயணம் பற்றி சுருக்கமாக விஷால் உரையாற்ற அந்த இடத்தைத் தெரிவு செய்திருந்தாரா? இல்லை டீ, ஸ்நாக்ஸ்சா?
பதிலளிநீக்குஅந்த இடம் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் - அடுத்த பகுதியில் சொல்லி விடுகிறேன் ஸ்ரீராம். காத்திருங்கள். தங்கள் அன்பிற்கு நன்றி.
நீக்குஎன்னை அக்னீபத் சில காட்சிகளை மறுபடி பார்க்க வைக்கிறீர்கள்!!!
பதிலளிநீக்குஅக்னிபத் பார்க்க வைக்கிறீர்கள் - ஹாஹா… நானும் பார்த்து ரசித்த படங்களில் ஒன்று. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்கு//இணையத்தில் நிறைய விஷயங்கள் இருந்தாலும், உள்ளூர்வாசிகளிடம் பேசும் போது கிடைக்கும் தகவல்கள் பல பயனுள்ளவையாக இருக்கும். //
பதிலளிநீக்குஆமாம்.
தொடர்கிறேன்.
என் பதிவில் சொன்ன விஷயம் குறித்த தங்கள் கருத்துரை கண்டேன். மகிழ்ச்சி கோமதிம்மா. தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்.
நீக்குபரபரப்பாக தொடர்கிறது... அருமை...
பதிலளிநீக்குபயணத் தொடர் பரபரப்பாக தொடர்ந்து வருவது என்ற தங்கள் கருத்துரை மகிழ்வைத் தந்தது தனபாலன். தொடர்ந்து உடன் பயணிக்க வேண்டுகிறேன்.
நீக்குநக்சல்பாரி என்று ஒரு இடத்தின் பெயரா? எதோ தீவிரவாதி என்று இதுவரை நினைத்திருந்தேன்.
பதிலளிநீக்குஉங்கள் பயனாக கட்டுரைகளை அடிக்கடி படிக்கிறேன். பிரமாதம்.
செல்போனில் படித்தால் பின்னூடடம் தான் சரியாக பதிக்க முடிவதில்லை.
ஒரு முறை சிக்கிம் போக வேண்டும்.
சிக்கிம் போக நிறைய சிக்கல்கள் உண்டு போல. சில இடங்களுக்கு தான் அனுமதி என்கிறார்களே?
எனது பயணக் கட்டுரைகளை நீங்கள் தொடர்ந்து வாசிப்பது அறிந்து மகிழ்ச்சி அப்பாதுரை. சிக்கிம் - சில இடங்களுக்குச் செல்ல அனுமதி வாங்க வேண்டியிருக்கும் என்பது உண்மை - குறிப்பாக எல்லைப் பகுதியான Nathula Pass செல்ல இராணுவத்தினரின் அனுமதி தேவை. நீங்கள் ஒரு பயண ஏற்பாட்டாளர் மூலம் பயணித்தால் அவர்களே எல்லா அனுமதியையும் பெற்றுத் தந்து விடுவார்கள் - உங்களுடைய சில ஆவணங்களின் நகல் தேவையாக இருக்கும்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பயண விவரங்களை அழகாக சொல்லி வருகிறீர்கள். அதனால் உடன் பயணிப்பது போன்ற உணர்வை தருகிறது.
சிக்கிம்மெல்லாம் பள்ளி நாட்களில் படித்ததுதான். அதன் பின் பல வடநாட்டு யாத்திரைகளில் உங்களுடன் தொடர்ந்து வந்திருப்பதால், நிறைய இடங்களைப்பற்றி தெரிந்து கொண்டேன். இப்போதும் இந்தப்பயணத்தில் பலச் செய்திகளை அறிய காத்திருக்கிறேன்.
ஐந்து வண்டிகளும் ஓரிடத்தில் வந்த பின் அங்கு ஏதாவது கடவுள் பிரார்த்தனைகள் இருக்குமோ? எனினும், தாங்கள் அடுத்தப் பகுதியில் சொல்வதற்காக காத்திருக்கிறேன்.
பயணத்தில் நீங்கள் அனைவரிடமும் பேசி பழகுவதால்தான் சுவாரஷ்யமான, பல புதிது, புதிதான தகவல்களை சேமிக்க முடிகிறது. அதற்கு உங்களுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபயணம் குறித்த தகவல்களை முடிந்த அளவு பகிர்ந்து கொள்கிறேன். சிலருக்கேனும் இந்தப் பயணம் குறித்த குறிப்புகள் பயன்பட்டால் மகிழ்ச்சி.
என்னதான் இணையத்தில் நிறைய விஷயங்கள் இருந்தாலும், உள்ளூர்வாசிகளிடம் பேசும் போது கிடைக்கும் தகவல்கள் பல பயனுள்ளவையாக இருக்கும். //
பதிலளிநீக்குஆமாம் ஜி அதே.
சாலைச் சந்திப்பில் நிறுத்தம் - என்னவாக இருக்கும் என்ற யோசனை...ஏதேனும் அனுமதி வேண்டியிருக்குமோ ஆனால் அதே மாநிலம்தானே...பாதை தெரிந்த ஓட்டுநர்களாகத்தான் இருப்பாங்க..இன்னும் யூகம் இருக்கு வேண்டாம்....சரி காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு..Very Interesting!
கீதா
காலை நேர சந்திப்பு - எதற்கு? அடுத்த பகுதியில் சொல்லி விடுகிறேன் கீதா ஜி. பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நீக்குடார்ஜிலிங் அருமையான இடங்கள் காண ஆவலுடன் .....
பதிலளிநீக்குபயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குசிக்கிம் சென்றபோது பாக்டோகரா விமான நிலையத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது் .
நீக்கு