வெள்ளி, 28 ஏப்ரல், 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி நான்கு - காலை உணவு - வழியெங்கும் தேயிலைத் தோட்டம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட நாகேஸ்வரர் கோவில், கும்பகோணம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

HOPE IS ONE OF GOD’S GREATEST GIFTS TO ALL OF US, BECAUSE IT’S THE MAGIC THAT INSPIRES US TO KEEP TRYING, LEARNING, LOVING AND LIVING.

 

******

 

பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  

 

பகுதி இரண்டு - இந்திரனின் தோட்டம் - விஸ்தாராவில் பயணம்

 

பகுதி மூன்று - இந்திரனின் தோட்டம் - Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்

 

*****



டார்ஜிலிங் நோக்கிய பயணத்தில்…



செல்லும் பாதையின் ஓரங்களில் தேயிலைத் தோட்டங்கள்…
 

Bange Mode என்ற இடத்தில் எங்கள் வாகனங்கள் ஏன் நின்றன? பெரிதாக ஒன்றும் விஷயம் இல்லை! விமானத்தில் கொஞ்சமாக உணவு: இரண்டு மினி இட்லி, உப்புமா, Bபன், வெண்ணை, காஃபி….. கண்றாவியாய் ஒரு காப்பி…… என ஏதோ சாப்பிடக் கிடைத்தாலும், மீண்டும் கொஞ்சம் காலை உணவு தேவை என பலரும் சொன்னதால் எங்கள் பயண ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்ட திரு விஷால் அவர்கள் அந்த இடத்தில் இருந்த கடை ஒன்றில் Packed உணவு, தேநீர், வாழைப்பழம் என ஏற்பாடு செய்திருந்தார். அந்த இடம் மட்டுமல்லாது வழியெங்கும் தேயிலைத் தோட்டங்கள் தான்.  அந்தக் கடைக்கு பின்புறமும் ஒரு பெரிய தேயிலைத் தோட்டம்.  உணவு packet-இல் இருந்த Sandwich, Cup Cake, Muffin போன்றவை அப்படி ஒன்றும் சுவையானதாக இல்லை. வாழைப்பழம் நிறைய இருக்கவே இரண்டு, மூன்று வாழைப்பழங்களை உண்டு இளைப்பாறினோம். பயணத்தில் முதல் உணவே இப்படி இருந்ததால், பலருக்கும் சந்தேகம் - பயணம் முழுவதும் உணவு இப்படித்தான் ஏற்பாடு செய்திருப்பாரோ? இருந்தாலும் அப்படி அனுபவங்கள் இல்லாமல் இருந்தது! 



வழியெங்கும் தேயிலைத் தோட்டங்கள்….

அந்த இடத்தில் இருந்த தேயிலைத் தோட்டம் அருகே நிறைய நிழற்படங்களை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டோம்.  வழியெங்கும் தேயிலைத் தோட்டங்கள் காணவே அத்தனை அழகாக இருந்தது.   ஓட்டுனரிடம் பேசிக்கொண்டு வந்ததில் இங்கே கிடைக்கும் தேயிலை அனைத்தும் Thadai (தடாய்) மற்றும் Dhanedhar (dhதானே(dh)தார் வகையைச் சேர்ந்தவை என்றும் சொல்லிக் கொண்டு வந்தார். இங்கே இருக்கும் தேயிலை பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள் என்றும் சொல்லிக் கொண்டு வந்தார்.  வழியில் சில தேயிலைத் தோட்டங்களிலேயே தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலைகளும் இருந்தன. அவற்றுக்குள் சென்று பார்த்து வர ஆசை இருந்தாலும், குழுவாக பயணிக்கும் சமயத்தில் பயண ஏற்பாடு செய்தவர் எப்படி திட்டமிட்டு இருக்கிறாரோ அதன்படியே பயணிக்க வேண்டியிருக்கிறது என்பதால் என்னுடைய ஆசைகளை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து தொடர்ந்து பயணித்தேன்.  



நட்ட நடுச் சாலையில் நண்பர்களுடன் ஒரு நிழற்படம்…


நாங்கள் சென்ற பாதை - ஒரு சிறு காணொளியாக….

அடர்த்தியான காட்டுப்பகுதி என்பதால் யானைகள் நடமாட்டம் இருக்கும் என வழியில் பதாகைகள் இருந்தன. இலைகள் காய்ந்த பிறகு யானைகள் நடமாட்டம் இருக்கும் என்று ஓட்டுநர் சொல்லிக்கொண்டு வந்தார். மலைப்பாதையில் பயணம் செய்வது மிகவும் இரசனையானது. சற்றே குளிரான காற்று. கூடவே சுளீரென அடிக்கும்  வெயிலும்….. வழியெங்கிலும் தேனீர் தோட்டங்கள் பார்க்கப் பார்க்க, பரவசம். வழியில் Makaibari என்று ஒரு இடம். உலகப் புகழ் பெற்ற தேனீர் இலைகள் இங்கே இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு தேயிலை உற்பத்தி ஆலையின் முங்கில்களால் ஆன நுழை வாயில் மிக அழகாக இருந்தது ஆனால் பயணித்துக்கொண்டருந்த போது படம் எடுக்க முடியவில்லை.  



தேயிலைத் தோட்டம் - மற்றொரு பார்வை…

 

Kurseong பகுதிகள் கான்கிரீட் காடுகள் போல காட்சி தருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை அன்னையின் அழகினை சிதைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் ஓட்டுநர் பெங்காலி, ஹிந்தி, நேபாளி என மூன்று மொழிகளிலும் பேசினார். ஒரே ஒரு மொழி தெரிந்து கொள்வதை விடுத்து பல மொழிகள் தெரிந்து கொள்வது பல விதங்களில் வசதி. மொத்தமாக அவருக்கு ஐந்து மொழிகள் தெரியுமாம். மேலே சொன்னது தவிர ஆங்கிலம் மற்றும் Sadhri எனும் ஆதிவாசி மொழியும் தெரியுமாம். ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய அவர்கள் அழைத்துவந்த ஜார்கண்ட் மாநிலத்தின் ஆதிவாசிகள் பேசிய மொழி அது. 


பூச்செடிகள்….


நாங்கள் தங்கிய இடம்…


நாங்கள் தங்கிய இடம்… இன்னுமொரு படம்…


வழியில் குறுகிய இரயில் பாதைகளை பார்க்க முடிந்தது. தினமும் ஒன்றிரண்டு இரயில்கள் இப்பாதையில் பயணிக்கும் என ஓட்டுநர் சொல்லிக்கொண்டு வந்தார். சுமார் 01.45 அளவில் Ghum எனும் இடத்தில் (8 kms before Darjeeling) அமைந்து இருக்கும் Sterling Resorts வந்து சேர்ந்தோம். மிக அழகான இடத்தில் எங்கும் மலைகள் சூழ, ஒரு மேட்டுப் பகுதியில் அமைந்து இருந்தது இந்த தங்குமிடம். என்ன ஒரே ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் சுற்றிப் பார்க்க வந்த டார்ஜிலிங்-கிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் முன்னரே இருந்தது! அதனால் நிறைய முறை இங்கும் அங்கும் பயணிக்க வேண்டியிருந்தது.  தங்குமிடத்திற்கு ஒவ்வொரு வாகனமாக வந்து சேர, அனைவருக்கும் ஒரு வெள்ளை சாட்டின் துணியில் மாலை போல போட்டு வரவேற்பு கிடைத்தது! அதனுடன் எல்லோரும் நிழற்படம் எடுத்துக் கொண்டோம். அறையும் மிகவும் நன்றாகவே இருந்தது.  



தேயிலைத் தோட்டத்தின் நடுவே ஒரு மரமும் அதன் உச்சியில் பறவைகளும்…


பாதையின் இரு மருங்கிலும் மாறி மாறி வரும் இருப்புப் பாதை…


தங்குமிடத்தில் வரவேற்பு!

ஒரு அறையில் இரண்டு பேர் என எண்கள் குழுவினர் அனைவருக்கும் இப்படி ஏற்பாடு செய்திருந்தார்கள். பயிற்சியாளருக்கு ஒரு தனி அறை, மற்றும் பயண ஏற்பாட்டாளர் விஷால் அவர்களுக்கு ஒரு தனி அறை. மொத்தமாக 16 அறைகள்! மே மாதத்தில் இரண்டு பேர் ஒரு நாள் தங்குவதற்கான அறைக்கு எவ்வளவு வாடகை (இந்தப் பதிவினை தட்டச்சு செய்தபோது) பார்த்த போது ரூபாய் 9225 மற்றும் ரூபாய் 1661/- வரிகள் எனக் காண்பித்தது ஒரு முன்பதிவு செய்ய உதவும் தளம்.  ஆனால் நாம் பயப்படத் தேவையில்லை.  Bulk Booking என்பதால் இன்னும் குறைவாகவே கிடைத்திருக்கும்.  அது பற்றிய கவலையும் நமக்குத் தேவையில்லை - ஏனெனில் எல்லாமே பயண ஏற்பாடு செய்யும் நிறுவனம் கவனித்துக் கொள்ளும். அவர்கள் கொடுத்த Tender படி எல்லா விஷயங்களையும் செய்து தரவேண்டியது அவர்கள் பொறுப்பு. 



டார்ஜிலிங் செல்லும் பாதை ஒரு காணொளியாக….

இருப்புப்பாதையை இந்தக் காணொளியில் பார்க்க முடியும்…

 

இங்கே இன்னும் ஒரு விஷயத்தினையும் தெளிவுபடுத்தி விடுவது நல்லது. நாம் நம் குடும்பத்தினருடன் பயணிக்கிறோம், இவ்வளவு பணம் கொடுத்து தங்குமிடம் தேடமுடியாது என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை - நமக்குத் தகுந்தமாதிரி தங்குமிடங்கள் நிறையவே டார்ஜிலிங் பகுதியில் உண்டு.  முன்னதாகவே பதிவு செய்து கொண்டால் ஒரு அறை ஆயிரம் ரூபாய் வரை கூடக் கிடைக்கிறது. Homestay என்று சொல்லக்கூடிய தங்குமிடங்களும் நிறையவே உண்டு.  நாங்கள் தங்கிய இடத்தில் Breakfast Complimentary! (அதற்கும் கட்டணத்தில் சேர்த்திருப்பார்கள் என்பது தனிக்கதை! இலவசம் என்றால் எல்லோருக்கும் பிடித்தது என்பதாலேயே இப்படியெல்லாம் தூண்டில் போட்டு இழுப்பார்கள் அல்லவா?) அது தவிர, மதியம் மற்றும் இரவு உணவும் எங்களுக்கு அங்கேயே ஏற்பாடு செய்திருந்தார் திரு விஷால் - Buffet வகை தான்.  வரிசையாக விதம் விதமான உணவு வகைகள் இருக்க, நமக்குத் தேவையானதை எடுத்துச் சாப்பிடலாம்.  உணவு குறித்து பிறகு விவரமாகப் பார்க்கலாம்.  

 

அதன் பிறகு என்ன? என்ன அனுபவங்கள் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே.

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

13 கருத்துகள்:

  1. உதகை, முடிஸ் போன்ற மலைபபகுதிகளில் மலைச்சரிவுகளில் கண்டா தேயிலைத்தோட்டங்கள் சமவெளியில் காண்பது வியப்பு.  என்றாலே சரிவில்தான் இருக்கவேண்டும் என்று மனதில் படிந்து விட்டது போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேயிலைக்குத் தண்ணீர் தேங்கக் கூடாது ஸ்ரீராம் வடிந்துவிட வேண்டும்னு சரிவான இடங்களில் தான்.

      கீதா



      நீக்கு
  2. படங்கள் காணொளி எடுக்கவும் டிரைவரை பேட்டி காணவும் முன் இருக்கையை பிடித்து விட்டீர்கள் என்று தெரிகிறது.  அதுசரி, யானைகள் ஏன் இலைகள் காய்ந்தபின் வரவேண்டும்?  என்ன காரணம்?

    பதிலளிநீக்கு
  3. உங்களுக்கும் ஹிந்தி தெரியும், தெரியும்.  நேபாளியும் பெங்காலியும் கூட அறிவீர்களா?

    பதிலளிநீக்கு
  4. அதென்ன அந்த தண்டவாளங்கள் மீட்டர்கேஜைவிட சிறிதாகத் தெரிகின்றன..?  விளையாட்டு ரயில் போல...

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வாகனங்கள் ஒன்று சேர வந்திருக்க காத்திருந்ததின் காரணத்தைப் புரிந்து கொண்டேன்.

    படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. தேயிலை தோட்ட்ட படங்கள் அருமை. அதன் நடுவில் உள்ள மரம். அதன் உச்சியில் வெள்ளை நிற பறவைகள் படம் மிக அழகாக இருக்கிறது.

    ஒரு நாளைக்கு தங்குமிடத்திற்கு இவ்வளவு பணம் அதிகந்தானே என்று நினைக்கும் போது, குறைவான பணத்திலும் அங்கு தங்குமிடங்கள் உள்ளனவென்று தெரிந்து கொண்டேன். ஆனாலும் பணத்திற்கு தகுந்த வசதிகள் வேறுபடும். முக்கால்வாசி களைப்பை பொருட்படுத்தாமல், வெளியிலேயே சுற்றுபவர்களுக்கு அந்த வேறுபாடுகள் சற்று தெரியாமல் இருக்கும்.

    அருமையான தங்களுடைய பயணத்தில் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. பயண விவரங்களும், படங்களும் அருமை.
    மரத்தில் பறவைகள் அமர்ந்து இருக்கும் படம் மிகவும் பிடித்தது.
    காணொளிகள் அருமை.

    பதிலளிநீக்கு
  7. காணொளிகளும் படங்களும் அருமை... அழகான பயணம்...

    பதிலளிநீக்கு
  8. சுவாரசியமாக செல்கிறது சார்.
    மலைப்பகுதிகளில் உணவு சுமாராக இருப்பது ஒரு விதத்தில் நல்லதே.
    செறிமானம் பலவீனமாக இருக்கும் இடங்களில் பழங்கள் சாப்பிட்டு பயணம் செய்வதே நலம்.

    பதிலளிநீக்கு
  9. செம சுவாரசியம் ஜி. போகும் பாதை தேயிலைத்தோட்டங்கள் எனக்கு மூணாறு, ஊட்டி, வால்பாறை ப்குதிகளை நினைவூட்டியது. காணொளிகளை ரசித்துப் பார்த்தேன். பயணம் வண்டி என்றதுமே நினைத்தேன் நீங்கள் முன்னிருக்கையில் இருப்பீங்கன்னு....நானும் விரும்புவது முன்னிருக்கை. அதுவும் இப்படியான மலை, காட்டுப் பகுதி என்றால் கண்டிப்பாக.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வால்பாறை... இந்தப் பெயர் காலை எனக்கு நினைவுக்கு வரவில்லை!

      நீக்கு
  10. இருப்புப் பாதை குடியிருப்பு? கடைகள் உள்ள சாலை வழியும் போகிறதே. தாய்லாந்தோ இல்லை அப்பகுதியில் உள்ள நாட்டில் சந்தைப்பகுதியிக் இப்படி ரயில் செல்லும் காணொளி பார்த்திருக்கிறேன். அது வரும் சமயம் எல்லாக் க்டைக்காரர்களும் தங்கள் கடைகளின் முன் பகுதியை உள்ளெ இழுத்துக் கொண்டுவிடுவர். ரயில் சென்ற பிறகு மீண்டும் முன்பகுதியை வெளியே நீட்டுவார்கள்.

    தங்குமிடம் வெளிநாட்டு இடம் போல இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. அழகிய இடம். தேயிலை தோட்டம், மலைபாதைகள் என நன்றாக இருக்கிறது.

    என்ன ஒற்றுமை இன்று நாங்களும் மலைநாட்டு பயணத்தில் உள்ளோம் மிகவும் ரசனையான இடங்கள் எத்தனைமுறை பார்த்தாலும் அலுப்பதில்லை.எனது சகோதர்கள் , உறவினர்கள் இங்கு இருக்கிறார்கள் அவர்களை பார்ப்பதற்கான விசிட் இது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....