திங்கள், 24 ஏப்ரல், 2023

இந்திரனின் தோட்டம் - பகுதி இரண்டு - விஸ்தாராவில் பயணம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“Life loves to be taken by the lapel and told, ‘I’m with you, kid. Let’s go.’” - Maya Angelou.

 

******

 

பயணங்கள் நம் அனைவருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவை.  ஆதலினால் பயணம் செய்வோம்.  தற்போது எழுதி வரும் இந்திரனின் தோட்டம் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இந்திரனின் தோட்டம் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - அடுத்த பயணத் தொடர் - Indrakil - இந்திரனின் தோட்டம்.  

 

*****

 

இந்தத் தொடரின் முதல் பகுதியில் சொன்னது போல, இந்தப் பயணத்தில் பங்கு கொண்டது மொத்தம் 29 பேர் - எங்கள் பயிற்சியாளரையும் சேர்த்து! பயிற்சியில் மொத்தம் 32 பேர் என்றாலும், நான்கு பேர் குடும்பச் சூழல்கள் காரணமாக பயணத்தில் பங்கு கொள்ளவில்லை. இருப்பதிலேயே மூத்தவர் ஒரு பெண்மணி, அதற்கெடுத்து நான்! மற்றவர்கள் அனைவருமே என்னைவிடச் சிறியவர்கள்.  இளமையான நபர்களுடன் பயணம் செல்வதில் கொஞ்சம் சௌகரியங்களும் உண்டு என்றாலும், சிக்கல்களும் உண்டு. அவற்றை எல்லாம் தாண்டி, பயணத்தினை எப்படி சிறப்பாக திட்டமிட்டு, செயல்படுத்து என்பதும் ஒரு விதப் பயிற்சி தானே - அதாவது குழுக்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வாய்ப்பு தானே! சொன்ன நேரத்திற்கு அனைவரும் வர மாட்டார்கள்! சிலர் தனியாக பிரிந்து சென்று சுற்றுவார்கள், அவர்களையும் கவனிக்க வேண்டும்! சிலர் பயணமே சரக்கடிக்கத்தான் என்பது போல நடந்து கொள்வார்கள்! மொத்தத்தில் பயணம் முழுவதும் யாராவது ஒரு நபர் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும்.  

 

எங்கள் பயணத்தை KUMAON MANDAL VIKAS NIGAM LIMITED மூலமாகவே ஏற்பாடு செய்திருந்தார்கள் பயிற்சி நிறுவத்தினர். விமானச் சீட்டுகள் மட்டும் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்ய மற்ற எல்லா விஷயங்களையும் Kumaon Mandal Vikas Nigam Limited பார்த்துக் கொள்ளும்.  அதற்காகவே பயணத்தில் அவர்களுடைய ஒரு பிரதிநிதி எல்லா இடங்களுக்கும் எங்களுடனேயே வருவார்.  அவரைத் தவிர எங்கள் பயிற்சியாளரும் கூடவே வருவதால் அவர்கள் இருவரும் பயணத்தில் எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொள்வார்கள் - நம் வேலை பயணத்தை சிறப்பாக அனுபவிக்க வேண்டியது மட்டுமே! ஆனாலும், நாம் சும்மா இருந்தாலும், நம் சுழி சும்மா இருக்காதே! சில வேலைகளை நானே இழுத்துப் போட்டுக்கொண்டேன்.  அதாவது அந்த இரண்டு பேருடைய வேலைகளை பகிர்ந்து கொண்டேன்.  பயணக் குழுவில் இருக்கும் அனைவரையும் மூன்று பேராக சமாளிப்பது என்பது பயணத்தின் ஆரம்பத்திலேயே முடிவாகிவிட்டது.  அந்தப் பணி தலைநகர் தில்லியின் விமான நிலையத்திலேயே தொடங்கி விட்டது! 


 

காலை அவரவர் வீட்டிலிருந்து புறப்பட்டு, நேரடியாக புது தில்லி சர்வதேச விமான நிலையம் - முனையம் மூன்று (Terminal 3) செல்ல வேண்டியது அவரவர் பொறுப்பு. அங்கிருந்து தான் புறப்பட இருந்தது எங்களின் விமானம்.  நாங்கள் முன்பதிவு செய்திருந்தது Vistara 725 விமானத்தில்! காலை 07.50 மணிக்கு இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தின் மூன்றாம் முனையத்திலிருந்து புறப்பட்டு காலை 09.45 மணிக்கு Bபாக்டோக்ரா விமான நிலையம் சென்றடையும் விமானம் தான் நாங்கள் பயணிக்க இருந்த விமானம்.  நான் காலை 05.00 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு 05.20 மணிக்கு விமான நிலையம் சென்றடைந்து விட்டேன். வரும் குழுவினர் அனைவரும் தாமாகவே Check-in மற்றும் Security Check ஆகியவை முடித்து நேரடியாக விமானம் புறப்படும் நுழைவாயில் அருகே வந்து விட வேண்டும் என்று முன்னரே அனைவரிடமும் சொல்லி இருந்தோம். நான் சென்று சேர்ந்த போது விமான நிலையத்திற்கு நுழைவதற்கு முன்னர் இருக்கும் பாதுகாப்பு வரிசையிலேயே குழுவினரில் சிலரை பார்த்துவிட்டேன்.  அங்கிருந்தே என்னுடைய ஒருங்கிணைப்பு வேலைகள் தொடங்கி விட்டது.   

 

எங்கள் குழுவில் மொத்தம் 28 பேர் - அதில் 6 பேர் பெண்கள். இந்தக் குழுவில் இன்னுமொரு கூடுதல் விஷயம், குழுவில் எட்டு பேருக்கு மேல் மாற்றுத் திறனாளிகள்.  சிலருக்கு காதில் குறைபாடு என்றால் சிலருக்கு கண்களில் பிரச்னை.  அலுவலகத்தில் பணி புரிவதில் பிரச்சனைகள் ஏதும் இல்லை என்றாலும் சின்னச் சின்னதாக அவர்களுக்கு சில சிக்கல்கள் உண்டு - மாலை நேரத்தில், வெளிச்சம் இல்லா இடங்களில் நடமாடுவது சிலருக்கு கஷ்டம் என்றால், ஒரு சிலருக்கு என்னதான் காதுகளில் கேட்பதற்கான கருவிகளை அணிந்து இருந்தாலும், ஒரே சமயத்தில் பலர் பேசினால் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.  அப்படியான சிலருக்கு முனையத்திற்குள் நுழைவதற்கும், Check-in மற்றும் Security Check என அனைத்திலும் உதவி செய்ய வேண்டியிருந்தது.  இப்படியான அனைவரையும் ஒரு சேர அழைத்துக் கொண்டு எங்களுக்கான விமானத்தின் நுழைவாயில் (44A) அருகே சென்று சேர்ந்த பொது மணி 06.05. குழுவில் இருந்த மற்ற உறுப்பினர்களும் ஒவ்வொருவராக வந்து சேர ஆரம்பித்தார்கள். 

 

காலை நேரம் என்பதால் விமான நிலையத்தில் அதிக அளவு கூட்டம் இருந்தது. இப்போதெல்லாம் தில்லி விமான நிலையத்தின் மூன்று முனையங்களிலுமே அதிக அளவில் கூட்டம் வர ஆரம்பித்து விட்டது. பெரும்பாலானவர்கள் விமானங்களையே பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்பதால் விமான நிலையங்களில் முன்பை விட அதிக அளவில் மக்கள் வருவதைப் பார்க்க முடிகிறது. எங்களுக்கு 07.50 மணிக்கு தான் புறப்படும் என்றாலும் சிறிது நேரம் அமர்ந்திருந்த போது பசிக்க ஆரம்பித்தது.  எங்கள் குழுவில் இருந்த மலையாளப் பெண்மணி (எங்கள் குழுவில் மூத்தவர்) வீட்டிலிருந்து கொண்டு வந்த இட்லிகளை ஆளுக்கு ஒன்று என சாப்பிட்டோம்! மற்ற நண்பர்கள் கொண்டு வந்த தின்பண்டங்களையும் கொஞ்சமாக சாப்பிட்டு நேரத்தைப் போக்கினோம்.  விமானத்தில் ஏறிக்கொள்ள அழைப்பு வரும் வரை ஒரு நபர் வரவில்லை - கடைசி நேரத்தில் ஓடி வந்து ஏறிக்கொண்டார் சுபாஷ் என்ற பெயர் கொண்ட அந்த நபர் - இந்தப் பயணத்தில் இவருக்கும் இன்னுமொரு பெண்ணுக்கும் யார் கடைசியாக வருவது என்று போட்டி இருந்தது! 

 

ஒரு வழியாக இந்திரனின் தோட்டம் செல்லும் எங்கள் பயணம் தொடங்கியது.  நாங்கள் சென்று சேரப்போவது Bபாக்டோக்ரா என்கிற விமான நிலையம்.  சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் Gகேங்டாக் அருகே Pakyong எனும் இடத்தில் ஒரு விமான நிலையம் இருக்கின்றது என்றாலும் இன்னும் சரியான விமான சேவைகள் இந்த விமான நிலையத்தில் தொடங்கப்படவில்லை. முன்பு சோதனை ஓட்டமாக சில விமான சேவைகள் தொடங்கினாலும் இப்போது அங்கே விமான சேவைகள் இல்லை என்று சொல்லும் அளவில் தான் இருக்கிறது.  அதனால் எந்த மாநிலத்திலிருந்தும் நீங்கள் சிக்கிம் செல்ல வேண்டும் என்றால் நீங்கள் இறங்க வேண்டியது Bபாக்டோக்ரா விமான நிலையத்தில் தான்.  இந்த Bபாக்டோக்ரா விமான நிலையம் இருப்பது மேற்கு வங்காளம் மாநிலம். அங்கிருந்து சிக்கிம் மாநிலத் தலைநகர் Gகேங்டாக் கிட்டத்தட்ட 125 கிலோமீட்டர் சாலை வழி பயணத்தில்! விமானப் பயணத்தில் எங்கள் குழுவினரே 29 பேர் என்பதால் வரிசையாக நாங்களே அமர்ந்து இருந்தோம்! எந்தவித சுவாரஸ்யங்களும் இல்லாமல் பயணித்து Bபாக்டோக்ரா விமான நிலையம் சென்றடைந்தோம்.  

 

அங்கிருந்து எங்கே சென்றோம், நிகழ்வுகள் குறித்த தகவல்கள் போன்றவற்றை அடுத்த பகுதியில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  அது வரை காத்திருங்கள் நண்பர்களே. 

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

15 கருத்துகள்:

  1. உங்களை மீறி ஒருங்கிணைப்பில் இறங்கி விட்டீர்கள்.  உங்களை அந்த வேலை அழைத்திருக்கிறது!  இந்த விமானப் பயணம் எவ்வளவு நேரம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை மீறி ஒருங்கிணைப்பில் ஈடுபட்டு விட்டேன் - ஆமாம் ஸ்ரீராம். சில சமயங்களில் நாம் விரும்பாலாமே கூட இப்படி நடந்துவிடுகிறது. தங்கள் கருத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி. தில்லியிலிருந்து பாக்டோக்ரா வரையான பயணம் சுமார் இரண்டு மணி நேரம்.

      நீக்கு
  2. ஒருங்கிணைப்பு பணிக்கு மிகவும் பொறுமை வேண்டும்.

    பயணத்துவக்கம் நன்று தொடர்ந்து வருகிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருங்கிணைப்பு பணிக்கு மிகவும் பொறுமை அவசியம். உண்மை தான் கில்லர்ஜி. பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி. பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. பயணத்தின் தொடக்கம் தங்களுக்கும் பிடித்த விதமாக இருந்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பயணத்தின் தொடக்கம் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனு பிரேம் ஜி.

      நீக்கு
  5. செம டீசர்!!!!! சிக்கிம் கு போக விமான நிலையம் மே வ விலிருந்து 125 கிமீ

    மேற்குவங்கத்தின் கொண்டை உச்சியில் பூவைப் போன்று அமர்ந்திருக்கும் சிக்கிம்!!

    //ஒரே சமயத்தில் பலர் பேசினால் அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. //

    அதே அதே....வெங்கட்ஜி! அனுபவம் உண்டே...தினமுமே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. பதிவின் தொடக்கம் சிறப்பாக அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே. மேற்கு வங்கத்தின் உச்சியில் கொண்டை - ஆஹா. தங்களது வருகைக்கும் பதிவு குறித்த கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இந்தப் பயணத்தில் நானும் தொடர்கிறேன். பயணம் இனிமையானதுதான். நீங்கள் சொல்வது போல் இப்படி குழுவாக செல்பவர்களை வழி நடத்திச் செல்ல நல்ல பக்குவம் வேண்டும். உங்களுக்கு வாழ்த்துகள்.

    நல்ல தகவல்களுடன் பயணம் தொடர்கிறது. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பயணத்தின் தொடக்கத்தில் நீங்களும் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன்.

      நீக்கு
  7. ஒருங்கிணைப்பு பணியில் இணைந்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்ந்து கொண்டதற்கும் நெஞ்சார்ந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  8. 29 பேர் குழு பயணம் என்றால் மிகச் சிறப்பு. கலகலப்பிற்கு பஞ்சமே இருக்காது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....