திங்கள், 3 ஏப்ரல், 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி நாற்பத்தி ஆறு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ப்ரயாக்ராஜ் - அக்ஷய் வட் மற்றும் பாதாள் புரி மந்திர் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“LEARN TO ENJOY EVERY MINUTE OF YOUR LIFE. BE HAPPY NOW. DON’T WAIT FOR SOMETHING OUTSIDE OF YOURSELF TO MAKE YOU HAPPY IN THE FUTURE. THINK HOW REALLY PRECIOUS IS THE TIME YOU HAVE TO SPEND, WHETHER IT’S AT WORK OR WITH YOUR FAMILY. EVERY MINUTE SHOULD BE ENJOYED AND SAVOURED.”- EARL NIGHTINGALE.


******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி நாற்பத்தி ஆறு


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ; விதி முப்பத்தி ஒன்று ; விதி முப்பத்தி இரண்டு ; விதி முப்பத்தி மூன்று ; விதி முப்பத்தி நான்கு ; விதி முப்பத்தி ஐந்து ; விதி முப்பத்தி ஆறு ; விதி முப்பத்தி ஏழு ; விதி முப்பத்தி எட்டு ; விதி முப்பத்தி ஒன்பது ; விதி நாற்பது ; விதி நாற்பத்தி ஒன்று ; விதி நாற்பத்தி இரண்டு ; விதி நாற்பத்தி மூன்று ; விதி நாற்பத்தி நான்கு ; விதி நாற்பத்தி ஐந்து ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 


நாற்பத்தி ஆறாம் விதி சொல்வது, "பரிபூரணவாதியாக உன்னை என்றும் வெளிப்படுத்திக்கொள்ளாதே".

 

மூல நூலில், இதை "NEVER APPEAR TOO PERFECT" என்கிறார் எழுத்தாளர்.

 

பிறர் முன், ஒரு முன்னுதாரணமாகச் செயலளவில் திகழும் அவசியம் குறித்து முந்தைய விதியின் இறுதிப் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம்.

 

முன்னுதாரணம் என்றவுடன், தன்னை ஒரு குறையே அற்றவராக வெளியில் காட்டிக் கொள்ளும் ஆர்வம் பலருக்கும் ஏற்படுவதுண்டு.

 

நம்மை நம் சுற்றத்திடமிருந்து முழுவதுமாக அன்னியப்படுத்தும் ஒரு விஷப் பரீட்சையே இம்முயற்சி என்பதை பலர் உணர்வதே இல்லை.

 

பலரை விடச் சிறந்தவராக நம்மை வெளிப்படுத்துவதே, சிலர் மனதில் வெறுப்புணர்வைத் தூண்டக்கூடும் என்ற போதிலும், அதைத் தவிர்ப்பது அசாத்தியமே.

 

இந்நிலையில், அனைவரையும் விடத் தம்மை உயர்ந்தவராகக் காட்டும் முயற்சி, பொறாமை நிறைந்த ஒரு பெரிய கூட்டத்தையே உருவாக்கி நம்மை தனிமையில் தள்ள வல்லது.

 

எனவே, முன்னுதாரணமாகத் திகழ்ந்து கொண்டே, நம் சுற்றத்தினருடன் இணக்கமாக இயைந்து வாழும் உத்திகளை அறிந்து கொள்ளலாமா?

 

1. பேராசைக்காரருக்கும் பொறாமைக்காரருக்கும் இடையிலான வேறுபாட்டை உணர்தல்;

 

மூல நூலில் கூறப்பட்டுள்ள பின் வரும் ஒரு வேடிக்கையான உதாரணம் இதைத் தெளிவு படுத்தும்.

 

ஒரு நாட்டின் அரசர், பேராசை மிக்க ஒரு பணியாளரையும், பொறாமை மிக்க ஒரு பணியாளரையும் தம் அறைக்கு அழைத்து, தங்களுக்கு வேண்டிய பரிசை கேட்டுப் பெறலாம் என்று கூறி ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

 

முதலில் கேட்பவர் கேட்டவற்றை விட இரண்டாம் நபருக்கு இரு மடங்கு அதே பரிசு கொடுக்கப்படும் என்பதே அந்நிபந்தனை.

 

தாம் முதலில் கேட்டால், குறைவாக கிடைக்குமே என இருவரும் தயங்கியபோதிலும், பொறாமைக்காரரே தயக்கத்திலிருந்து முதலில் வெளிவந்து ஒரு பரிசைக் கேட்டார்.

தம்முடைய ஒரு கண் அகற்றப்பட வேண்டும் என்பதே அவர் தம் தயாள குணத்தால் கேட்ட அருமையான பரிசு.

 

இது போலத்தான், பொறாமை குணத்தவர், தாம் அழிந்தாலும், தாம் வெறுப்பவருக்கு அதை விடக் குறைந்தது இரு மடங்காவது இழப்பு வர வேண்டும் என்னும் எண்ணத்தை மிக இரகசியமாக மனதில் வைத்து செயல்படுவதுண்டு.

 

நம்முடன் இணைந்து பணியாற்றுவதால், இருவருக்கும் ஏற்படும் நன்மையை கோடிட்டுக் காட்டி, பேராசைக்காரர்களின் திறன்களை அனைவருக்கும் பயன்படுமாறு  செயல்பட வைத்துவிட முடியும்.

 

தமக்கு எது கிடைத்தாலும், அதில் ஒரு குறையைச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பவரை, பொறாமை உணர்வின் சிறந்த விளை நிலமாக எளிதில் அடையாளம் கண்டுவிடலாம்.

 

அத்தகையோரால் ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்தும் வழி ஒன்றை கீழே காணலாம்.

 

2. சுய எள்ளல்;   

 

தம்முடைய  பலவீனங்களில், மிகச் சிறியனவற்றை சுய எள்ளலாக வெளிப்படுத்தும் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்வதே, பொறாமையைக் கையாளும் தலைசிறந்த வழி ஆகும்.

 

இதனால், நம் பெரிய பலவீனங்கள் கவனம் பெறாமல் போவதும், நாம் தலைக்கனமற்றவர்களாகக் காட்சியளித்து பலர் ஆதரவைப் பெறுவதும் நடக்கும்.

 

அத்தகைய ஆதரவு காரணமாக, நாம் சிறு தவற்றை இழைக்கும் காலத்திற்காகக் காத்திருக்கும் பொறாமையுணர்வு நிறைந்தவர்களாலும், நம்மை வீழ்த்தும் அளவு பேராதரவைத் திரட்டிவிட முடியாது.

 

திரைப்படங்களிலும், பிறரை இழிவுபடுத்தும் நகைச்சுவைக் காட்சிகளை விட, பெரும்பாலும், தம்மையே சுய எள்ளல் செய்யும் நகைச்சுவைக் காட்சிகளைப் படைத்த திரு நாகேஷ், திரு வடிவேல் போன்றோர் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றதற்கும் பின்னால் இவ்வுத்தியே ஒளிந்துள்ளது.

 

3. விட்டுக் கொடுத்தல்;

 

ஒன்றை இழந்துதான் மற்றொன்றைப் பெற முடியும் என்பதே இயற்கையின் நியதி.

 

எதை விட்டுக் கொடுத்து எதைப் பெறுகிறோம் என்பதை சரியாக முடிவு செய்பவர், நீண்டகால அளவில் பல வெற்றிகளைக் குவித்து வாழ்வாங்கு வாழ்வார்.

 

அமெரிக்க விடுதலைப் போர் முடிந்தவுடன், திரு ஜார்ஜ் வாஷிங்டன் அவர்கள், தமக்கு எப்பதவியும் வேண்டாம் எனக் கூறிவிட்டு விவசாயம் செய்ய கிளம்பிவிட்டார்.

 

பின்னர், அதிபர் பதவி, பலர் ஆதரவுடன் அவரைத் தேடி ஓடி வந்ததை அறிவோம்.

 

அதனால், தாம் பதவிக்காகவே விடுதலைப் போரில் போரிட்டதாக, பொறாமைக்காரர்களால் வாஷிங்டன் அவர்களின் மீது அவதூறு பரப்ப முடியாமல் போனது.

 

அப்படியே அதிபர் பதவி உடனே வராமல் போயிருந்தாலும், அடிப்படையில் ஒரு விவசாயப் பண்ணையாரான அவருக்கு பெரிய இழப்பு ஒன்றும் நேர்ந்திருக்காது.

 

4. உதவி தேவைப்படுவோரைக் கை கொடுத்துத் தூக்கி விடுதல்;

 

'வாழ்வதற்காக நடத்தும் போராட்டமும், வெறுப்பும்தான் மக்களை ஒன்று சேர்க்கிறது' என்பது, உலகப் புகழ் இலக்கியமான அன்னா கரீனினா மூலம், ரஷ்ய எழுத்தாளர் திரு டால்ஸ்டாய் அவர்கள் உரைத்த உண்மை.

 

நம் திறன்கள், பிறருக்கு பயனளித்தால் மட்டுமே, அவற்றிற்கான தேவையும், நம் சொற்களுக்கான மதிப்பும் கூடும்.

 

எனவே, தகுதியுள்ளோரை அடையாளம் கண்டு, அவர்கள் வளர்ச்சிக்குச் சிறிதளவாவது உதவுவதன் மூலம், நம் வலிமையும், தொடர்பு எல்லையும் பன்மடங்காகப் பெருகும்.

 

அதை உணர்ந்ததால்தான், பெரு நிறுவனத் தலைவர்கள், தங்கள் வளர்ச்சிக்குக் காரணமான சமூகத்திற்கு உதவும் வண்ணம் அறக்கட்டளைகளை நடத்துவதைக் காணலாம்.

 

இங்கனம், சுற்றத்தினருடன் இயைந்து வாழும் யோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம், தேவையில்லாமல் எழும் பொறாமை குணத்தைக் கட்டுப்படுத்திவிடலாம்.

 

குறையே அற்றவர்களாகக் காட்சியளிப்பதைத் தவிர்த்தலும், நம் பெரிய குறைகளைத் தனிமையில் இடித்துரைக்கும் உற்ற நண்பர்களை அருகில் வைத்திருத்தலும் மிகவும் அவசியம்.

 

அவ்வாறு, நம் குறைபாடுகளை அடையாளம் கண்டு வெற்றி கொள்ளும் தொடர் முயற்சியில், நாம் மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றைக் குறித்து அடுத்த விதியில் விவாதிக்கலாம். 


நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,


இரா. அரவிந்த்

16 கருத்துகள்:

  1. அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் அவர்களின் ஒப்பீடு சிறப்பான கருத்து.

    தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுதலுக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  2. அருமையான ஒப்பீடுகள்.  நல்ல விதி.  ஓரளவு இதை நாம் கடைபிடித்தே வருகிறோம் என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐய்யா. எனக்கு மிகவும் பிடித்த விதிகளில் ஒன்று இவ்விதி. நடிகர் விமல் கூட, ஒரு படத்தில், நம் மைனஸ் பாய்ண்ட் தான் நம் பிளஸ் என நகைச்சுவையாக கூறியிருக்கிறார். பலர் பின்பற்றும் உக்திதான் இது.
      தங்கள் கருத்த்ுகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  3. உதாரணங்கள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப அருமையான விதி இது. பொதுவாகப் பலரும் கையாளும் ஒன்று. இந்த விதியை அறிந்தோ அறியாமலோ.

    இதற்கான உத்திகளும் செம. இதுவும் நாம் கையாள்பவையே.

    //தன்னை ஒரு குறையே அற்றவராக வெளியில் காட்டிக் கொள்ளும் ஆர்வம் பலருக்கும் ஏற்படுவதுண்டு.//

    இதனால் Personality disorder வருவது உறுதி. இது ஒரு வகையான obsession க்கு உட்படுத்தும். ஆர்வம் இருந்தாலும் அதைச் செயல்படுத்துவோருக்குக் கண்டிப்பாக attitude பிரச்சனை மற்றும் மனம் கொஞ்சம் பிறழும் அல்லது அவரை மற்றவர்கள் ஒதுக்கும் நிலை வரும். நீங்க அடுத்த வரியில் சொல்லியிருக்கீங்க.

    நல்ல தெளிவான விளக்கம், உதாரணங்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றி கீதா மேடம்

      நீக்கு
  5. வாழ்க்கைக்கு தேவையான அருமையான விதிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ராமசாமி ஐய்யா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....