திங்கள், 20 மார்ச், 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி நாற்பது


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அய்யர் மலையில் சந்தித்த பஞ்சாபி குடும்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

"PERFECTION IS NOT ATTAINABLE. BUT IF WE CHASE PERFECTION WE CAN CATCH EXCELLENCE." - VINCE LOMBARDI.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி நாற்பது


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ; விதி முப்பத்தி ஒன்று ; விதி முப்பத்தி இரண்டு ; விதி முப்பத்தி மூன்று ; விதி முப்பத்தி நான்கு ; விதி முப்பத்தி ஐந்து ; விதி முப்பத்தி ஆறு ; விதி முப்பத்தி ஏழு ; விதி முப்பத்தி எட்டு ; விதி முப்பத்தி ஒன்பது ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

நாற்பதாம்  விதி சொல்வது, "இலவசம் என்னும் மாயையில் சிக்கிவிடாதே".

 

மூல நூலில், இதை "DESPISE THE FREE LUNCH" என்கிறார் எழுத்தாளர்.

 

இலவசமாகத் தோன்றும் எதுவும், ஆபத்தின் மாற்று வடிவங்களே.

 

ஏழைகள் மட்டுமே இலவசம் என்னும் மாயையில் சிக்குவதில்லை.

 

மென்பொருள்களின் போலி மாதிரிகளை உபயோகிப்போர், கணினி வைரஸ்களால் பெரும் இழப்பைச் சந்திக்கும் ஆபத்தில் எப்போதும் இருக்கின்றனர்.

 

பொருளை உரிய விலைகொடுத்து வாங்காதவர்கள், தாமே விற்பனைப் பொருள் ஆகிறார்கள்.

 

விளம்பர நிறுவனங்களுக்குத் தேவையான தகவல்களை, சமூக ஊடக பயனாளர்களான நாம் கொடுக்கிறோம்.

 

வாக்குரிமையை இலவச பணத்திற்கு விற்போர், ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் தகுதியை இழந்துவிடுகின்றனர்.

 

இங்கனம், வாழ்வின் பல நிலைகளிலும், இலவசம் என்னும் மாயையில் சிக்குண்ட மனிதர்களின் இயல்புகளை அறிந்துகொள்ளலாமா?

 

1. பேராசைத் தூண்டிலில் சிக்குண்ட மீன்கள்;

 

இவர்கள், பணம்தான் எல்லாம் எனும் தவறான புரிதலால், எவரையும் பணத்தால் விலை கொடுத்து வாங்கிவிடலாம் எனும் ஆபத்தான எண்ணம் கொண்டிருப்பர்.

 

வெறும் தற்செயலால் திடீர் பணக்காரர்கள் ஆனவர்களாகவோ, செல்வம் ஈட்டுவதன் பின்னுள்ள சிரமங்களை அறியாதவர்களாகவோ இவர்கள் இருப்பர்.

 

மனிதர்களின் மதிப்பை அறியாத இவர்களுக்குக் காலப்போக்கில் ஈட்டிய பணத்தையும், நெருங்கிய சொந்தங்களையும், நண்பர்களையும் இழக்கும் அவலமே நிகழும்.

 

இதைத் தவிர்க்கவே, டாடா குழுமம் போன்ற நிறுவனங்கள், தத்தம் வாரிசுகளை, சரியான கல்வியுடன், தொழில் அனுபவத்தையும் பெற்ற பின்பே, நிறுவனத்தின் பெரிய பொறுப்புக்களை ஏற்கச் செய்கின்றன.

 

2. பேரம் பேசும் பேய்கள்;

 

பொருட்களை உரிய விலையில் வாங்குவதற்காகப் பேரம் பேசுவதில் தவறே இல்லை.

 

அதற்காக, விலை ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு அதிக தள்ளுபடியை தேடிக்கொண்டே நேரத்தை விரையம் செய்வதால், பொருட்களின் தரம் குறித்தும், வாங்கிய பின் தேவைப்படும் சேவைகள் குறித்தும், தேவையான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் யோசிக்க மறந்துவிடுவர்.

 

சில சமயங்களில், தள்ளுபடியில் கிடைக்கிறது எனும் ஒரே காரணத்திற்காகத் தமக்குத் தேவையே இல்லாத பொருட்களையும் சேர்த்து வாங்கிவிடுவர்.

 

அதிகப் பணம் கொடுக்கும் கட்சிக்கு வாக்களித்தல், முழு விவரம் அறியாமல் கடன் அட்டைகளை வாங்கிக் குவித்தல், தரம் குறைந்த துரித உணவகங்களை நாடிச் செல்லுதல் போன்ற பல வழிகளில் இவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருப்பர்.

 

பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், சேவை அளிப்பவரின் நம்பகத்தன்மை, வாடிக்கையாளர்கள் மற்றும் சொந்தத் தொழிலாளர்களை நடத்தும் முறை போன்றவையே, விலையை விட மதிப்பு வாய்ந்தவை என உணர்ந்தவர், தரமான சேவையை, சரியான விலையிலும், தன்மதிப்போடும் பெறுவார்.

 

3. எல்லோரையும் பணத்தால் அளத்தல்;

 

இத்தகையோர், தாம் பணம் கொடுக்கும் ஒரே காரணத்தால், மனிதர்களை இழிவுபடுத்துதல், அலைக்கழித்தல், கொடுமைப்படுத்துதல் போன்ற செயல்களால், தம் ஆணவத்தைப் பூர்த்தி செய்வர்.

 

இவர்களுடன், திறமைசாலிகள் வெகுகாலம் இணைந்து பணியாற்றுதல் சாத்தியமே இல்லை.

 

எனவே, இப்படிப்பட்ட மனிதர்களின் கூட்டணியை தவிர்த்தலும், இவர்களின் பொருட்கள் மற்றும் சேவைகள் பெரும்  தள்ளுபடியில் கிடைத்தாலும், அவற்றை உபயோகிக்காமலும் இருப்பதே நமக்குப் பாதுகாப்பானது.

 

4. வேறுபாடற்ற தாராளவாதிகள்;

 

தேவைப்படுவோருக்கு நிதி வடிவிலும், உளவியல் ரீதியாகவும், தாராளமாக உதவுவதில் தவறொன்றும் இல்லை.

 

அதையே, வெறும் விளம்பரத்திற்காகவும், புகழுக்காகவுமே அனைவரும் அறியும் வண்ணம் தானம் செய்பவர், தன்னோடு தம் சுற்றத்தையும் கெடுக்கிறார்.

 

செல்வத்தை உருவாக்குவதற்கான அளவில்லா ஆர்வத்தையும், தொடர்ந்து கற்கும் தணியா தாகத்தையும் கொண்டோருக்குத் தாராளமாக உதவுவதே, பணத்திற்கும், மனிதர்களுக்கும் உரிய மதிப்பை அளித்து, வலிமையான தலைவனாக உருப்பெரும் சிறந்த வழியாகும்.

 

அவ்வாறு செலவிடப்படும் பணமே, மிகச் சிறந்த முதலீடாக மாறி, நம் நலனுக்காக இரவு பகலாக உழைக்கும் அதிசயத்தையே, வாரன் பஃபெட் போன்ற முதலீட்டாளர்கள் ஆண்டாண்டுகளாக நிகழ்த்திக் காட்டுகிறார்கள்.

 

“இவ்வுலகில் வாழ்வதற்கு நாம் செலுத்தும் வாடகைதான் சேவை,” என்று எல்டன் டேனர் கூறியுள்ளார்.

 

நாம் விடும் மூச்சு கூட, உலகிற்குத் தேவையான கரியமிலவாயுவைக் கொடுப்பதாலேயே பெறுகிறோம் என்பதால், உலகில் எதுவும் இலவசம் கிடையாது என்பதை உணர்வோம்.

 

அதனால், நாம் பொருள் ஈட்டுவதற்குத் துணைபுரியும் சமூக அமைப்பிற்கும், மனிதர்களுக்கும் உரிய மரியாதையையும், இயன்ற சேவையையும் அளிப்போம்.

 

இலவசத்தின் பல்வேறு வடிவங்களில், நாம் பெரிதும் விரும்பும் மற்றொரு ஆபத்தான வடிவம் குறித்து அடுத்த விதியில் விரிவாக விவாதிக்கலாமா? 

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

11 கருத்துகள்:

 1. அரசு கொடுக்கும் இலவசங்களுக்கு வேறு ரூபத்தில் நம்மிடமிருந்தே பணம் எடுக்கப்படுகிறது.  இலவசமாக கிடைக்கும் மென்பொருட்கள் நம்மைப்ப் பற்றிய அந்தரங்கத் தகவல்களை உறிஞ்சத் தேவையான உட்பொருள் இணைக்கப்பட்டே வருகின்றன.  நல்ல விதி.  ஆனால் 90 சதவிகிதம் யாரும் பின்பற்றுவதில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐய்யா. பலர் பின்பற்றுவதில்லை.
   இலவசத்தின் வெவ்வேறு வடிவங்களை அறிந்தவர் விரைவில் செல்வந்தர் ஆகிவிடுவார்.
   தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

   நீக்கு
 2. //உலகில் எதுவும் இலவசம் கிடையாது என்பதை உணர்வோம்.//

  ஆமாம்.

  //நாம் பொருள் ஈட்டுவதற்குத் துணைபுரியும் சமூக அமைப்பிற்கும், மனிதர்களுக்கும் உரிய மரியாதையையும், இயன்ற சேவையையும் அளிப்போம்.//

  நன்றாக சொன்னீர்கள். வீட்டுக்கு கொண்டு வந்து பொருள் கொடுப்பவரிடம் , தெருவோரம விற்பவர்களிடம் பேரம் பேசுவார்கள். பெரிய கடைகளில் சொன்ன விலையை கொடுத்து வாங்கி வருவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகச்சரி மேடம்.
   தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கோமதியரசு மேடம்.

   நீக்கு
 3. ஒருவனை ஏமாற்ற வேண்டுமென்றால் முதலில் "இலவசமாக" ஆசையைத் தூண்டனும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அதுதான் நடக்கிறது சார்.
   தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

   நீக்கு
 4. இலவசத்திற்கு மயங்குபவரின் நிலையை விவரித்த விதம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

   நீக்கு
 5. நல்ல அறிவுரை. இலவசத்தை கண்டு ஏமாறுபவர்கள் பலர்.

  பதிலளிநீக்கு
 6. வாக்குரிமையை இலவச பணத்திற்கு விற்போர், ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் தகுதியை இழந்துவிடுகின்றனர்.//

  சூப்பர் கருத்து அரவிந்த்.

  ஆமாம் எதுவுமே இலவசம் கிடையாது. காத்து தண்ணீர் எல்லாமே நமக்கு இயற்கை அளித்திருக்கும் இலவசம், ஆனா பாருங்க இலவசமா கிடைச்சதுக்கான மதிப்பை! எவ்வளவு சீரழிக்கிறோம். ஆனால் அதுக்கான விலையும் கொடுக்கிறோம் மருத்துவமனைகளில். தண்ணீர் காசானது ஏற்கனவே பல வருடங்களாக நடப்பது இப்ப பல இடங்களில் ஆக்சிஜன் பார்லர்கள் இருக்கு பாருங்க...

  //அதனால், நாம் பொருள் ஈட்டுவதற்குத் துணைபுரியும் சமூக அமைப்பிற்கும், மனிதர்களுக்கும் உரிய மரியாதையையும், இயன்ற சேவையையும் அளிப்போம்.//

  அருமையான கருத்து....இதைத்தான் நான் இயற்கை பற்றி இதற்கு முந்தைய வரிகளில் சொல்லியிருக்கிறேன். முதலில் இயற்கைக்கு மரியாதை செலுத்த வேண்டும். அதன் பின் தான் மற்றவை. இயற்கை அளிப்பதால்தானே இங்கு எல்லாரும் உயிர் வாழ்கிறோம்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் உயரிய கருத்துகளுக்கு மிக்க நன்றி கீதா மேடம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....