புதன், 22 மார்ச், 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி நாற்பத்தி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அனைவருக்கும் உணவளிக்கும் அன்னபூரணி பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

"ACCEPT YOURSELF, LOVE YOURSELF, AND KEEP MOVING FORWARD. IF YOU WANT TO FLY, YOU HAVE TO GIVE UP WHAT WEIGHS YOU DOWN.” - ROY T. BENNETT.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி நாற்பத்தி ஒன்று


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ; விதி முப்பத்தி ஒன்று ; விதி முப்பத்தி இரண்டு ; விதி முப்பத்தி மூன்று ; விதி முப்பத்தி நான்கு ; விதி முப்பத்தி ஐந்து ; விதி முப்பத்தி ஆறு ; விதி முப்பத்தி ஏழு ; விதி முப்பத்தி எட்டு ; விதி முப்பத்தி ஒன்பது ; விதி நாற்பது ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

நாற்பத்தி ஒன்றாம் விதி சொல்வது, "பெரும் சாதனையாளர்களை பிரதி எடுப்பதைத் தவிர்த்துவிடு".

 

மூல நூலில், இதை "AVOID STEPPING INTO A GREAT MAN'S SHOES" என்கிறார் எழுத்தாளர்.

 

"பெரிய சாதனை படைத்தோரின் உத்திகளைப் பின் தொடருமாறு அனைவரும் அறிவுறுத்திக் கொண்டிருக்க, இவர் என்ன தலைகீழாகக் கூறுகிறார்?" என்னும் வினா எழுவது இயற்கையே.

 

ஒவ்வொருவரின் வாழ்வும், சூழலும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் நிச்சயமாக மற்றவர் அனுபவங்களிலிருந்து தனித்துவமாகவே இருக்கும் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

 

இந்நிலையில், முந்தைய சாதனையாளர்கள் எதிர்கொண்ட சவால்களையும், அவர்கள் காலத்தைய உலகின் தேவைகளையும் புரிந்துகொள்ளாமல், அவர்கள் மேற்கொண்ட உத்திகளை அப்படியே பிரதி எடுப்பது மிகவும் ஆபத்தானதே.

 

ஒருவேளை, சரியான புரிதலுடனே அவர்களின் உத்திகளை அப்படியே செய்து ஒருவர் சாதித்துவிட்டாலும், முதலில் அதைக் கையாண்டவருக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் பாதி கூட அதை நகலெடுத்தவருக்குக் கிடைக்காது.

உதாரணமாக, 2023 ஆரம்பத்தில், இந்திய சுழற்பந்து மைதானங்களில் ஆடும் சிக்கலை எதிர்கொள்ள, ஆஸ்திரேலிய அணியினர், மூத்த வீரரான திரு ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களைப் போலவே பந்து வீசும் பரோடாவைச் சேர்ந்த திரு மஹேஸ் பித்யா என்ற இளைஞரை தம் வலைப் பயிர்ச்சியில் உபயோகித்தனர்.

 

ஆரம்பத்தில் அந்த இளைஞருக்குப் பெரும் ஊடகக் கவர்ச்சியும், ஆதரவும் கிடைத்தபோதிலும், திரு அஸ்வின் அவர்களை விட, குறைந்தது இரு மடங்கு சிறப்பாகச் செயல்படாவிட்டால், அனைத்துக் கவர்ச்சியும் மாயமாய் மறைந்தே போகும் என்பதில் சந்தேகமே இல்லை.

 

இப்படிப்பட்ட சவாலின் இரு ஆபத்தான வடிவங்களையும், அவற்றை சாதனைகளாக மாற்றவல்ல உத்திகளையும் அறிந்துகொள்ளலாமா?

 

பலர், தாம் வசதியான அல்லது படித்த குடும்பத்தில் பிறக்கவில்லை எனவும், அதனால்தான் தாம் ஆசைப்பட்ட படிப்பைப் பெறவோ, சிறந்த வழிகாட்டுதல்கள் வழங்கும் பெற்றோர்கள் அமையாமல் பெரும் சாதனைகளைப் புரியவோ முடியவில்லை எனவும் புலம்புவதுண்டு.

 

அளப்பரிய சாதனைகளைப் படைத்தவர்களோ, செல்வந்தர்களோ, பெற்றோர்களாக அமைவது ஒரு புறத்தில் வரமாகத் தெரிந்தாலும், உள்ளே அது பெரும் சுமையாக மாறிவிடுவதே இச்சவாலின் முதல் ஆபத்தான வடிவம்.

 

அப்படிப்பட்ட பெற்றோரின் நிழலில் வளர்பவர்களுக்கு, ஏற்கனவே ஈட்டப்பட்ட நற்பெயரைக் காப்பதோடு, தத்தம் திறமைக்கேற்ற புதிய களங்களையும் கண்டறியவேண்டும் எனும் இரட்டைச் சுமை உண்டு.

 

அதனால்தான், தொண்ணூறு சதவிகித கிரேக்கத்தை ஆண்டுகொண்டிருந்த ஃபிலிப்ஸ் என்னும் அரசனின் மகனான மாவீரர் அலெக்சாண்டருக்கு, ஆசியா வரையிலான பெரும் பகுதிகளை வென்று தம்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும்; இராஜராஜனின் மகன் திரு ராஜேந்திர சோழருக்கு, இமயம் வரை வென்று புது தலைநகரை உருவாக்கும் அவசியமும் நேர்ந்தது.

 

மேற்குறிப்பிட்ட சவாலில் சிக்காத பெரும்பாலோர் கூட,  அதன் மற்றொரு வடிவமான, தாம் பணிபுரியும் இடத்தில், முன்னால் பணியாற்றியவர்கள் ஈட்டிய நற்பெயர் எனும் சிக்கலில் அகப்பட்டுக் கொள்வதுண்டு.

 

முன்னோர்கள் பணியாற்றிய முறையில் செயல்பட்டுக்கொண்டே, அவர்களை விட மேலானவர்களாகவும் தம்மை நிரூபித்தால் மட்டுமே, அப்பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனும் பெரும் ஆபத்தில் வசமாக மாட்டிக்கொள்வர்.

 

இவ்விரு வடிவ ஆபத்துகளிலும் ஒரே நேரத்தில் சிக்கிய ஒருவர் கையாண்ட தலையாய உத்திகளை அறிந்துகொள்ளலாமா?

’Western India Vegetable Products Limited’ எனும் நிறுவனத்தை அறியாதோருக்குக் கூட, அதன் சுருக்கமான ’Wipro’ என்னும் நிறுவனத்தின் மென்பொருள் சாதனைகள் குறித்து தெரியும்.

 

வனஸ்பதி எனும் தாவர எண்ணெயையும், அதன் உப பொருளாகக் சலவை சோப்புகளையும் விற்கும் நிறுவனமாக, திரு M H (முஹம்மத் ஹுஸைன் ஹஷம்) ப்ரேம்ஜி அவர்களால் 1945 இல், மஹாராஷ்டிர மாநிலம் அமல்நேரில் தொடங்கப்பட்டதே இந்நிறுவனம்.

 

அவரது மகன் திரு அஜிம் பிரேம்ஜி அவர்கள், 1966 ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று கொண்டிருந்த போது, 51 வயதே ஆன தம் தந்தையின் திடீர் மரணச்செய்தி வந்தது.

 

அவசர அவசரமாக இந்தியா திரும்பியவர் மேல், குருவி தலையில் பனங்காய் வைத்ததுபோல, இப்பெரும் நிறுவனத்தை தலைமை தாங்கும் பெரும் பொறுப்பும் சுமத்தப்பட்டது.

 

அவ்வதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், கரன் வாடியா உள்ளிட்ட நிறுவனத்தின் முதலீட்டாளர்களிடமிருந்து ஏளனச் சொற்களும், நிறுவன பங்குகளை விற்றுவிட்டு ஓடிவிடுமாறு அழுத்தமும் தரப்பட்டது.

 

இவற்றால் நெஞ்சுறுதி கொண்ட திரு அஜிம் பிரேம்ஜி அவர்கள், தன் தந்தையுடன் பணிபுரிந்த அனுபவஸ்தர்கள் உதவியுடன், நிறுவனம் இயங்கும் முறையை பகலில் பட்டறிவாகப் பெற்றார்.

 

தமக்கு நெருக்கமான பேராசிரியர் பரிந்துரைத்த மேலாண்மை தொடர்பான நூல்களை இரவோடு இரவாகப் படித்து, அவற்றுள் சொல்லப்பட்ட மேலாண்மை முறைகளுள், தம் நிறுவனத்திற்குப் பொருத்தமானவற்றைத் தம் அனுபவ அறிவால் ஊகித்துச் செயலாக்கப்படுத்தினார்.

 

நிறுவனத்தின் முக்கிய பதவிகளுக்கான அடுத்த தலைமுறையை உருவாக்குதல், வேலைகள் செய்யப்படும் முறையை ஆவணப்படுத்துதல், பணியாளர்களுக்குள் ஆக்கப்பூர்வமான போட்டியை ஊக்குவித்தல், எண்ணெயை சாஷேக்களில் அடைத்து வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்றல் போன்ற புதிய உத்திகள் மூலம், நிறுவனத்தை முதலில் சரிவிலிருந்து மீட்டார்.

 

அடுத்தபடியாகக் குளியல் சோப்புகள், குழந்தைகளுக்கான பொருள்கள், மின்சார உபகரணங்கள், இயந்திரங்கள், மருத்துவக் கருவிகள் ஆகிய புது தயாரிப்புப் பிரிவுகள் உருவாகி விப்ரோ ஒரு தொழில் குழுமம் ஆனது.

 

இதன் அடுத்த பெரும் பாய்ச்சல் தான், 1977 இல் ஐபிஎம் இந்தியாவை விட்டு வெளியேறியவுடன், இவர் மேற்கொண்ட கணினி தயாரித்தல் முதல், அனைவரும் அறிந்த இணையம் வழியிலான மென்பொருள் சேவை வரையிலான புதிய தொழிலின் வெற்றி.

 

இந்த சாதனை குறித்த மேலும் பல சுவாரசியமான தகவல்களை, திரு என். சொக்கன் அவர்களின் ‘விப்ரோ அஜிம் ப்ரேம்ஜி’ என்னும் நூலை கீழ்காணும் சுட்டியில் வாசித்து அறிந்துகொள்ளலாம்.

 

'விப்ரோ' அஜிம் ப்ரேம்ஜி: ஓர் எளிய அறிமுகம் (தொழில் நிறுவனங்களின் கதைகள் Book 2) (Tamil Edition) eBook

 

எனவே, செல்வத்தைப் பெற்றிருப்பது பொருளாதார சுதந்திரம் அல்ல; செல்வத்தை உருவாக்குவதற்கான ஆற்றலைப் பெற்றிருப்பதுதான் உண்மையான பொருளாதார சுதந்திரம் என உணர்வோம்.

 

நம் முன்னோர்களின் தோளில் ஏறி ஒரு புது உலகைப் பார்க்கும் நாம், அவர்களின் அனுபவப் பாடங்களை அவர்கள் வாழ்ந்த சூழலோடு பொருத்தி புரிந்து கொள்வோம்.

 

திரு அஜிம் பிரேம்ஜியைப் போல, முன்னோர் ஆற்றிய தவறுகளிலிருந்தும் பாடம் கற்று, காலத்திற்கேற்ற நமக்கான புது வழியை உருவாக்குவோம்.

 

நிச்சயமற்ற நம் வாழ்வில், நாம் பணியாற்றும் முறையை சரியாக ஆவணப்படுத்தியும், குடும்பத்துடன் பகிர்ந்தும், அடுத்த தலைமுறையினருக்கான சிறந்த வழிகாட்டியாக மாறுவோம்.

 

இதுதான், முந்தைய சாதனையாளர்களைப் பிரதியெடுக்கும் சிறப்பான முறையாகும்.

 

இவ்விதி சொல்லும் புதுவழியைப் படைக்கும் பாதையில் எழும் எண்ணற்ற எதிர்ப்புகளைக் களைய பயன்படும் சிறந்த உத்தியை அடுத்த விதியில் சுவைக்கலாமா?

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

13 கருத்துகள்:

 1. நல்லதொரு விதி. பொருத்தமான உதாரணங்கள் அரவிந்த்.

  பதிலளிநீக்கு
 2. உதாரணங்கள் அருமையாக சொல்லி இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. நல்ல விதி.

  நல்ல பல உதாரணங்கள். குறிப்பாக அப்பா அம்மா மிகவும் திறமையான வர்களாக இருக்கும் இடத்தில் பிள்ளைகளுக்கு உள்ள மனச் சுமையை நன்றாக எடுத்துக்.காட்டியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. விதியை பார்த்ததுமே சில விதிகளுக்குத் தோன்றியது போல அதாவது, என்ன இப்படிச் சொல்கிறார் என்ற ரீதியில் இல்லாமல் இதனை உடனே புரிந்து கொள்ள முடிகிறது அரவிந்த். ஏனென்றால் நம் வீட்டிலும் நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான் சொல்வதுண்டு. ஒவ்வொரது சாதனையாளர், வெற்றியாளரின் அனுபவங்கள் வெவ்வேறு என்பதோடு, அவர்கள் பயன்படுத்திய உபாயங்கள் எல்லோருக்கும் செல்லுபடியாகுமா என்பதும் யோசிக்க வேண்டும். அதே போன்று அவர் பயன்படுத்திய உத்தியைக் கையாண்ட விதம் என்று ஒன்று இருக்கு இல்லையா....உத்தி மட்டுமல்ல அதைக் கையாளும் நுணுக்கங்கள் சூழல்கள் என்று எவ்வளவோ...

  நீங்க சூப்பரா சொல்லியிருக்கீங்க அரவிந்த். தகுந்த உதாரணங்களுடன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 5. சிறந்த வழிகாட்டுதல்கள் வழங்கும் பெற்றோர்கள் அமையாமல் பெரும் சாதனைகளைப் புரியவோ முடியவில்லை எனவும் புலம்புவதுண்டு//

  அரவிந்த் இதைப் புலம்பல் என்று சொல்ல முடியாது. அது ஒரு மன வேதனை. பெற்றோர்களின் வழிகாட்டுதல் இல்லாமல், சரியாக அமையாமல்தானே பல பையன்களும் பெண்களும், தடுமாறி பாதை மாறுகிறார்கள். அவர்களிடம் எவ்வளவோ திறமைகள் இருக்கும். அதில் ஒரு சிலர் மட்டுமே முன்னுக்கு வர இயலுகிறது.

  அடுத்தாற்போல் சொல்லியிருப்பதை வழி மொழிகிறேன் அதாவது பெயர்காப்பாற்றுவது எல்லாம்....அது ஒரு பெரிய சுமைதான்..

  அப்பா கணக்கு வாத்தியாராக இருந்து, அவரது வாரிசு கணக்கில் கொஞ்சம் குறைவாக இருந்தால் அதைச் சொல்லியே அக்குழந்தையின் தன்னம்பிக்கையைக் குறைக்கும் சமுதாயம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் தங்களுக்கு பிடித்தது மிக்க மகிழ்ச்சி மேடம்.
   தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா மேடம்.
   ஜெயம் ரவி அவர்களின் சந்தோஶ் சுப்பிரமனியம் படம் பார்த்த ஞாபகம் தான் இவ்விதி குறித்து எழுதுகையில் என் மனதில் ஓடியது.
   பெற்றோர் வழிகாட்டுதல் தேவை எனினும், அதன் எல்லை குறித்து கலகலப்பாக பேசிய படம் தான் அது. அதீத அச்சத்தில், குழந்தைகளின் தனித்தன்மையை சிதைக்கும் அளவு பெற்றோர்களின் வழிகாட்டுதல் செல்லக் கூடாது என்பதாகவும் இவ்விதி சொல்வதாக புரிந்துகொள்ளலாம்.

   நீக்கு
 6. இன்றைய வாசகம் சூப்பர், ஜி

  கீதா

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....