வெள்ளி, 31 மார்ச், 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி நாற்பத்தி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ப்ரயாக்ராஜ் - திரிவேணி சங்கமம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

"KEEP SMILING, BECAUSE LIFE IS A BEAUTIFUL THING AND THERE'S SO MUCH TO SMILE ABOUT." - MARILYN MONROE.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி நாற்பத்தி ஐந்துவலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ; விதி முப்பத்தி ஒன்று ; விதி முப்பத்தி இரண்டு ; விதி முப்பத்தி மூன்று ; விதி முப்பத்தி நான்கு ; விதி முப்பத்தி ஐந்து ; விதி முப்பத்தி ஆறு ; விதி முப்பத்தி ஏழு ; விதி முப்பத்தி எட்டு ; விதி முப்பத்தி ஒன்பது ; விதி நாற்பது ; விதி நாற்பத்தி ஒன்று ; விதி நாற்பத்தி இரண்டு ; விதி நாற்பத்தி மூன்று ; விதி நாற்பத்தி நான்கு ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 


நாற்பத்தி   ஐந்தாம் விதி சொல்வது, "மாற்றங்கள் குறித்து பிரச்சாரம் செய். இருப்பினும், அவசரகதியில் அவற்றை அமுல்படுத்தாதே".

 

மூல நூலில், இதை "PREACH THE NEED FOR CHANGE, BUT NEVER REFORM TOO MUCH AT ONCE" என்கிறார் எழுத்தாளர்.

 

தம் துன்பங்களை நொடிப் பொழுதில் தீர்க்கும் தலைவனை மக்கள் எதிர்பார்ப்பது இயல்பே.

 

சமூகத்தில் மிகப்பெரும் மாற்றங்களை உருவாக்குபவர் எப்போது வருவார் என எதிர்பார்த்தும், ஓயாமல் அது குறித்து பேசிக்கொண்டும் பொழுதைக் கழிப்பவர்களை எங்கும் காணலாம்.

 

அதை நம்பி, அவர்கள் அன்றாடப் பழக்கங்களும், நம்பிக்கைகளும்  பாதிக்கப்படும் அளவு பெரும் மாற்றங்களை துரிதகதியில் உருவாக்க முயலும் தலைவன், மிக விரைவில் பழிக்கப்பட்டு தூக்கியெறியப்படுவதே வரலாறு முழுதும் நடந்திருக்கிறது.

 

எனவே, சீர்திருத்தங்கள் அவசியமானவை என்றாலும், அவற்றை நம் சுற்றம் ஏற்கும்படி செயல்படுத்தும் நுட்பங்களை அறிந்து கொள்ளலாமா?

 

1. தொன்மையான முறைகளின் மீதான மதிப்பை வெளிப்படுத்துதல்;

 

பெரும்பாலான சூழல்களில், மக்கள் சவுகரியமாக இருப்பதாகவே உணரக் கூடும்.

 

ஆனால், வருங்கால நலனுக்காக முன்னெச்சரிக்கையுடன் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிடும் தலைவன், மக்களின் அதிருப்தியைச் சமாளிக்க இவ்வுத்தியை கையாண்டே தீரவேண்டும்.

 

ஏற்கனவே புழக்கத்தில் உள்ள நடைமுறைகள், நீண்டகால விவாதங்களாலும், போராட்டங்களாலுமே மக்களின் அதீத நம்பிக்கையைச் சம்பாரித்தவை.

 

மாற்றத்தைக் கொண்டு வரும் அவசரத்தில், இருக்கின்ற நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும் பழிப்பவர், ஒட்டுமொத்த மக்களையும் அவமானப்படுத்துபவராகவே கருதப்பட இடம் உண்டு.

 

எனவே, முந்தைய நடைமுறைகளின் மீதான உயர் மதிப்பை வெளிப்படையாகப் புகழ்ந்துகொண்டே, தாம் கொண்டு வரும் மாற்றங்கள், அவற்றின் நீட்சிதான் எனப் பிரச்சாரம் செய்பவராலேயே சிறந்த சீர்திருத்தவாதியாகத் திகழ முடியும்.

 

1977 இல் சீன அதிபராக பொருப்பேற்ற டெங் ஜியோபிங் அவர்கள், சீனப் பொருளாதாரத்தைச் சீரமைக்க, உலகின் வளர்ந்த நாடுகளின் நிறுவனங்களை தம் நாட்டிற்குள் அனுமதிக்க முடிவு செய்தார்.

 

முந்தைய தலைவரான திரு மாவோ அவர்களின் மீதான மரியாதையை, தம் உரைகளில் தொடர்ந்து வெளிப்படுத்தியதும், தாம் விரும்பும் மாற்றங்கள், முந்தைய தலைவர் கண்ட கனவின் தொடர்ச்சியே என்பதையும் மக்கள் உணரச் செய்ததே அவரின் பெரும் வெற்றிக்கு வித்திட்டன.

 

2. சவாலான கால கட்டங்களில் தொன்மையின் குறைகளைச் சுட்டிக்காட்டுதல்;

 

போர்கள், கலவரங்கள், பொருளாதாரச் சுணக்கம் போன்ற சவாலான காலகட்டங்களையே, மாற்றங்களை எளிதில் விதைக்கும் பொற்காலங்களாகச் சிறந்த தலைவர்கள் அனுமானம் செய்வதுண்டு.

 

அக்காலங்களில், ஏற்கனவே தம் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டிருப்பதால், அதற்கான தீர்வை முன்வைப்பவர் கோரும் மாற்றங்கள் எளிதில் ஏற்கப்பட்டுவிடும்.

 

அப்போது, தம் முன்னோர் செய்த தவறுகளை நயமாகவும், தைரியமாகவும் எடுத்துச் சொல்லி, இன்றைய காலத்தின் தேவையை எளிதில் புரியவைக்கவும் இயலும்.

 

1919 இல், ஜாலியன் வாலாபாக் படுகொலையால் உருவாகி இருந்த பெரும் அதிருப்தியே, காந்தியடிகளால் பெரும் போராட்டங்களுக்கு மக்களை உளரீதியாகத் தயாராக்க வழி செய்தது.

 

1929 இல் ஏற்பட்ட பொருளாதார சுணக்கத்தை உபயோகித்தே, அன்றைய அமெரிக்க அதிபர் திரு ரூஸ்வெல்ட் அவர்கள், "நியூடீல்" எனும் திட்டத்தின் கீழ், பல பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகளில் மக்களை ஈடுபடுத்தினார்.

 

தற்போது, பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்ததால், உழைக்கும் மக்களின் எண்ணிக்கையை விட, முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்தல் என்னும் வினோதமான சவாலை ஜப்பான் எதிர்கொண்டு வருகிறது.

 

இதைச் சமாளிக்க, பிற நாட்டுத் தொழிலாளர்களை எளிதில் அனுமதித்தல் போன்ற புரட்சிகரமான திட்டங்களை அந்நாடு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அடிப்படை வேலைகளுக்கு ஆள் கிடைக்காத சூழலில், மக்கள் இதை ஏற்றுக்கொள்வர் எனவும் நம்பப்படுகிறது.

 

இதன் விளைவுகள், இப்பிரச்சனையை வரும் காலங்களில் எதிர்கொள்ளும் இந்தியா, சீனா  போன்ற நாடுகளுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கும்.

 

எனவே, மேற்காட்டப்பட்ட காலச் சூழல்களை உணர்ந்தே, மாற்றங்களை பொறுமையாகவோ, துரிதமாகவோ விதைக்கும் முடிவை எடுக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்ளலாம்.

 

மாற்றங்களைக் குறித்து பிரச்சாரம் செய்பவர், செயல் அளவிலும், தாம் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வது மிக அவசியம்.

 

முன்னுதாரணமாக வாழ முயல்வோரில் பலர், தவறான புரிதலால் செய்யும் ஒரு பெரும் பிழை உள்ளது.

 

தம் சுற்றத்திலிருந்து முற்றிலுமாக அன்னியப்படுத்தவல்ல அப்பெரும் பிழை குறித்தும், அதைத் தவிர்க்கும் எளிமையான வழிகள் குறித்தும் அடுத்த விதியில் சுவைக்கலாமா? 


நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

12 கருத்துகள்:

 1. மாற்றங்கள் மட்டுமே நிரந்தரமானவை என்ற வகையில் மாற்றங்களை சமயம் பார்த்து சாமர்த்தியமாக உள்நுழைத்து விட முடியும்.  பெரிய விஷயங்களை யோசிப்பவர்களுக்கு இது சாத்தியம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகச்சரி ஐய்யா.
   தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

   நீக்கு
 2. சிறப்பான ஆய்வு.
  தொடர்ந்து வருகிறேன்....

  பதிலளிநீக்கு
 3. பதிவு நன்றாக இருக்கிறது மாற்றங்களை ,ஏற்றுக் கொள்வது, மாற்றங்களை கொண்டு வருவதும் அவசியம் என சொல்கிறது.

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

   நீக்கு
 5. அவ்வப்போது மாற்றங்கள் கண்டிப்பாகத் தேவை. இல்லைனா போரடித்துவிடாது?!!!

  நாம அடிக்கடி சொல்வதுதான். மாற்றம் ஒன்றே மாறாதது. சரியான சமயத்தில் நல்ல முறையில் கொண்டு வந்தால் கண்டிப்பாக ஏற்கப்படும்.

  முதல் உத்தியை நம்ம அரசியல்வாதிகள் கடைபிடித்தால் எவ்வளவு மாற்றங்கள் வந்திருக்கும். முந்தையவரைக் குற்றம் சொல்வதே வழக்கமாகிவிட்டது. இதில் சொல்லப்பட்டிருப்பது போல் புகழ்ந்து கொண்டே அதன் தொடர்ச்சிதான் இது என்று மாற்றங்களை அறிமுகப்படுத்தினால் எவ்வளவு ஓர் ஆரோக்கியமான ஆட்சியும் சமுதாயமும் உருவாகும்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 6. வாசகம் அருமை, ஜி

  கீதா

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....