புதன், 8 மார்ச், 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி முப்பத்தி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட சங்கடங்கள் தீர்க்கும் ஹனுமன் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“EACH DAY IS A NEW BEGINNING, THE CHANCE TO DO WITH IT WHAT SHOULD BE DONE AND NOT TO BE SEEN AS SIMPLY ANOTHER DAY TO PUT IN TIME.” – CATHERINE PULSIFER. 

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி முப்பத்தி ஐந்து 


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ; விதி இருபத்தி நான்கு ; விதி இருபத்தி ஐந்து ; விதி இருபத்தி ஆறு ; விதி இருபத்தி ஏழு ; விதி இருபத்தி எட்டு ; விதி இருபத்தி ஒன்பது ; விதி முப்பது ; விதி முப்பத்தி ஒன்று ; விதி முப்பத்தி இரண்டு ; விதி முப்பத்தி மூன்று ; விதி முப்பத்தி நான்கு ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

முப்பத்தி ஐந்தாம்  விதி சொல்வது, "காலம் அறிந்து செயலாற்றும் கலையில் நிபுணன் ஆகு".

 

மூல நூலில், இதை "MASTER THE ART OF TIMING" என்கிறார் எழுத்தாளர்.

 

நம்மிடம் எவ்வளவு திறமைகள் உள்ளன என்பது முக்கியமே அல்ல. இருக்கின்ற திறன்களை, எங்கனம் காலச் சூழலுக்கேற்ப பயன்படுத்துகிறோம் என்பதிலேயே வெற்றிக்கான சூத்திரம் ஒளிந்துள்ளது. 

அதிலும், சரியான தருணம் அமையும் வரை, உறுமீன் வரும் வரை வாடியிருக்கும் கொக்கு போல் பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம்.

அத்தகைய ஆழ்ந்த பொறுமைக்கான மதிப்பு, உரிய காலம் வந்தவுடன், துரிதமாகச் செயலாற்றி நம்மை நிரூபிப்பதிலேயே உள்ளது என்பதையும் மறக்கக் கூடாது.

 

இவ்விதி எதிர்பார்க்கும் குணநலன்களை சில உதாரணங்கள் மூலம் புரிந்துகொள்ளலாமா?

 

காலமறிதல் என்னும் இக்கலையில் தேர்ந்தவர்கள், தங்களுக்கு எப்போதும் மிக அதிக நேரம் இருப்பது போல, மிகச் சாந்தமான முகத்துடன் காட்சியளிப்பர்.

 

விஷயங்கள் தங்கள் கைமீறிச் செல்வதாகத் தோன்றும் போதும், எவ்வித சலனமும் இன்றி தங்களால் இயன்றதைச் செய்துகொண்டே இருப்பர்.

 

"Captain cool" என்னும் புகழைப் பெற்ற இந்தியக் கிரிக்கெட்டின் முன்னாள் அணித்தலைவர் திரு மஹேந்திரசிங் தோனி அவர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

 

எவ்வளவு சவாலான ஆட்டச் சூழலிலும், அவசரப்படாமல் ஆட்டத்தின் இறுதிக் கட்டம்  வரை நிதானமாக நிலைத்து ஆழம் பார்த்தவர் அவர்.

 

அதனால்தான், எதிரியின் இறுதிக் கட்ட சிறு தவறையும் சரியாகப் பயன்படுத்தி, தோல்வியை பலமுறை வெற்றியாக மாற்றி "Best finisher" என்னும் பட்டத்தையும் பெற்றார்.

 

விளையாட்டில் மட்டும் அல்லாமல், எந்த ஒரு பெரும் பணித் திட்டத்திலும், தொடங்குபவரை விட, சரியான வழிகாட்டுதலுடன் முடிப்பவரே பெரும் புகழ் பெறுவது இயல்பு.

 

மிகப்பெரும் சீர்குலைவுகள் விளையும் காலங்களே, வாக்குவங்கி அரசியலையும் கடந்து வெற்றிகரமான பொருளாதாரச் சீர்திருத்தங்களைப் புகுத்தும் சந்தர்ப்பங்கள் என்பது அரசியலின் அடிப்படைப் பாடம்.

 

இந்திய அரசியலில் பணியாற்றி, பொருளியல் சீர்திருத்தங்களை மேற்கொண்ட திரு மன்மோஹன் சிங், மாண்டெக்சிங் அலுவாலியா போன்றோரின் சில அனுபவங்களை முன்பே குறிப்பிட்டிருந்தோம்.

 

1970-களிலேயே, நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லவல்ல பொருளாதார நடவடிக்கைகளை வலியுறுத்தத் தொடங்கிய இவர்கள், வெகுகாலமாக மிகப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியிருந்தது.

 

1991-இல், பொருளாதாரச் சீரழிவு என்னும் வாய்ப்பைப் பயன்படுத்தி, அரசியல் ரீதியாக மாபெரும் சீர்திருத்தங்களை மேற்கொண்டதை எவராலும் மறக்க முடியாது.

 

சமீபத்திய 2022-ஆம் ஆண்டு இறுதியில், அமெரிக்க டாலர் தட்டுப்பாட்டால் பொருளியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட இலங்கையோடு, இந்திய ரூபாய் அடிப்படையிலான வர்த்தக ஒப்பந்தத்தை  நிறைவேற்றியதும் ஒரு சிறந்த காலம் சார்ந்த நடவடிக்கையே.

 

இதனால், டாலர் மீதான நம் சார்பு குறைவதோடு, வெளிநாட்டு வாழ் இலங்கை மக்களின் பணப் பரிவர்த்தனையால் நம் அன்னியச் செலவாணியும் உயரும் வாய்ப்பும் உள்ளது.

 

பொறுமை என்ற பெயரில், சரியான சந்தர்ப்பங்களை நழுவவிடுவதும் பெரும் கேட்டையே விளைவிக்கும் என இவ்விதி தெளிவாக எச்சரிக்கிறது.

 

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், தனது முதல் பயணியர் மகிழ்வுந்தான டாட்டா இண்டிகா மக்கள் வரவேற்பைப் பெறாமல் தோல்வியடைந்ததால், உலகப் புகழ் ஃபோர்டு நிறுவனத்திடம் முழு நிறுவனத்தையும் விற்றுவிட தீர்மானித்தது.

 

1999-இல் ஒப்பந்தம் போடும் சமயத்தில், ஃபோர்டு நிறுவனம், திரு ரத்தன் டாட்டா அவர்களின் பயணியர் வாகனத் தயாரிப்பில் உள்ள குறுகிய அனுபவத்தைச் சுட்டிக்காட்டி எள்ளி நகையாடியதால், ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

 

அப்பொன்னான வாய்ப்பை தவறவிட்ட ஃபோர்டு நிறுவனத்திற்கு, வெறும் ஒன்பது ஆண்டுகளிலேயே, தனது "JLR" வாகன உற்பத்திச் சங்கிலியை ரத்தன் டாட்டா அவர்களிடம் விற்கவேண்டிய பரிதாப நிலை நேர்ந்தது.

 

2022-இல், இந்தியாவிலிருந்து முற்றிலுமாக வெளியேறும் அளவு, ஃபோர்டு நிறுவனம் பெரும் சரிவையும் சந்தித்துவிட்டது.

 

கடினமான காலங்களில் பொறுமையோடு இருப்பதோடு, வருங்கால வாய்ப்புகளைக் கணித்து அதற்கான முன் தயாரிப்புடன் இருக்கவேண்டிய அவசியத்தையும் இவ்விதி வலியுறுத்துகிறது.

 

மேற்சொன்ன டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், தற்போது திடீரென மின் ஊர்திகள் "Electric cars" உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தலாம்.

 

அதற்கு, 2017 ஆம் ஆண்டில் அவர்கள் கையாளத் தொடங்கிய பொது அடித்தள உக்தியே "platform strategy" முக்கிய காரணமாகும்.

 

அவ்வுத்தியை, "எரிபொருள் வாகனங்களையும், மின்சார ஊர்திகளையும் தயாரிக்க ஒரே விதமான அடிப்படை உலோகங்களை உபயோகிக்கும் தொழில் நுட்பம்" என எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.

 

இதுபோல, டாட்டா மோட்டார்ஸ் வரலாற்றில் நிகழ்ந்த பல சுவாரசியமான சம்பவங்களை கீழ்காணும் சுட்டி மூலம் அறிந்துகொள்ளுங்கள்.

 

திருப்பி கொடுத்த ரத்தன் டாடா!!! வாழ்க்கை ஒரு வட்டம் டா!!!!  | Anand Srinivasan |    

 

இவ்வாறே, சரியான காலமறிந்து செயலாற்றுவதால், பெரும் வெற்றிகளைக் குவிக்கும் உத்தியைப் பின்பற்றுவோம்.

 

சில சமயங்களில், வெகு காலம் கழிந்தபின்பே, தவறான புரிதலுடன் காத்திருந்தோம் எனத் தோன்றவும் கூடும்.

 

அத்தகைய பெரும் தோல்வியிலிருந்து மீள்வதற்கான சிறந்த வழியை அடுத்த விதியில் சுவைக்கலாமா?

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

9 கருத்துகள்:

  1. தோனி, டாட்டா நல்ல உதாரணங்கள்.  

    பொறுமையுடன் காத்திருப்பது கூட கைவந்துவிடுகிறது.  மைசூர்பாகு பதம் போல சரியான நேரத்தில் செயலாற்றுவதுதான் சமயங்களில் சொதப்பி விடுகிறது.  சில விஷயங்களில், சில சமயங்களில் மனம் அனாவசிய சென்டிமென்டுக்கு இடம் கொடுத்து சிறிது தயங்கி விடுகிறது!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐய்யா. இது ஒரு சிக்கலான விதி.
      தோனி அவர்களும் தம் கிரிக்கெட் வாழ்வின் பிற்பகுதியில் சில தவறுகளைச் செய்து பெயரை கெடுத்துக்கொண்டதுண்டு.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. தனது திறமையை சரியான நேரத்தில் பயன்படுத்துபவரே புத்திசாலி மிகச் சரியான கருத்து.

    பதிலளிநீக்கு
  3. அருவினை என்ப உளவோ?கருவியான்
    காலம் அறிந்து செயின்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகப் பொருத்தமான குறளை அளித்தமைக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
  4. நல்ல விதி, அரவிந்த். உங்கள் விளக்கமும், உதாரணங்களும் அருமை....

    காலம் அறிந்து அதாவது குறிப்பறிந்து செய்தல். இதையும் சொல்லலாமோ? இது ஒரு கலை. Timely help, Timely action என்று சொல்வோமே.....மருத்துவமனையில் நாம் ஒரு நோயாளியை எமர்ஜென்சியில் கொண்டு செல்லும் போது மருத்துவர் சொல்வாரே...சரியான நேரத்துக்குக் கொண்டு வந்திட்டீங்க இல்லைனா காப்பாத்தியிருக்க முடியாதுன்னு....
    ஒரு சில விஷயங்களில் காலம் வரும் வரை காத்திருக்கவும் முடியாது அப்படியான வகைகள் நான் இங்கு மேலே சொல்லியிருப்பது...

    சில சமயம் காத்திருக்குமாம் கொக்கு போன்று சரியான தருணம் வரும் வரைக் காத்திருத்தல்... சில சமயங்களில் டக்கென்றும் செய்ய வேண்டிய நிர்பந்தங்கள் தள்ளிப் போட முடியாத சூழல்களும் வரும் எனவே காலம், குறிப்பு அறிந்து என்று பொருள் கொள்லலாமோ...என்றும் தோன்றுகிறது

    இது பற்றி நிறைய சொல்லலாம்..

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நாம் நம் வாழ்க்கையில் சொல்வதுண்டே.....காலம் வரும் காத்திருன்னு....பொறுமை வேண்டும்....ஒவ்வொன்ண்ணுக்கும் நேரம் அது நடப்பதற்குன்னு நேரம் உண்டு அப்பதான் நடக்கும் என்றும்....நமக்குப் பொறுமை வேண்டுமே...

    இது கொஞ்சம் யோசிக்க வைக்கும் ஒன்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறிப்பறிந்து என்றும் சொல்லலாம் மேடம்.
      உயர் அதிகாரிகளிடம் பேசும் முறையில் குறிப்பறிதல் மிகவும் வேலை செய்யும்.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு
  6. //காலமறிந்து செயலாற்றுவதால், பெரும் வெற்றிகளைக் குவிக்கும் //
    உண்மை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....